டி வி ராதாகிருஷ்ணன்
வண்ண மய எண்குணத்தான்
–கம்ப இராமாயணத்தில்..கம்பனிடம் தமிழ் பல இடங்களில் கொஞ்சி
விளையாடி உள்ளது.அவற்றில் “வண்ணம்” எனும் சொல்லினை வைத்து விளையாடும்
கம்பனின் தமிழை ரசிப்போம்.
இராமன் வந்த பின்னர் உலகில் எந்தத் துன்பமும் இருக்க முடியாது என்கிறார்
விசுவாமித்திரர்.
இரவெல்லாம் ..இருள் சூழ்ந்திருக்க..சூரியன் வந்ததும் இருள் காணாமல் ஓடி
ஒளிவதைப் போல..இராமன் வந்ததும் துன்பம் காணாமல் போகிறதாம்.
எங்கே..?
இராமனின் பாதத்துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்..
அழகும்..ஆழமான அர்த்தமும் கொண்ட அப்பாடலைப் பார்ப்போம்.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனி..இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்று ஓர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்..
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்
அகலிகை சாப விமோசனம் பெற்ற பின்னர் இனிமேல் இந்த உலகத்திற்கு
எல்லாம்..உய்யும் வழி இன்றி வேறு ஒரு துயரங்கள் நேர்வது
உண்டோ?(கிடையாது)..மை போன்ற கரிய நிறம் கொண்ட அரக்கி (தாடகை) சண்டையில்,
மழைமுகில் போன்ற கரிய நிறம் கொண்ட அண்ணலே!உன்னுடைய கை வண்ணமாகிய வில்லாற்றலை அங்கு கண்டேன்.சாபவிமோசனம் தரும் திருவடியின் வண்ணத்தை இங்கு கண்டேன்..
அடடா..பாடலில் எவ்வளவு வண்ணம்..
இவ் வண்ணம்
நிகந்த வண்ணம்
உய் வண்ணம்
துயர் வண்ணம்
மை வண்ணம்
மழை வண்ணம்
கை வண்ணம்
கால் வண்ணம்
கம்பர் சொல்வது மொத்தம் எட்டு வண்ணம்..
பொதுவாக இறைவனை எண் குணத்தான் என்பர்.வள்ளுவரும் கடவுள்
வாழ்த்தில்..ஒன்பதாவது குறளாக..
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
என்றுள்ளார்.
(வள்ளூவர் கூறும் எண் குணங்கள் இவை எனலாம்
முதல் குறள்- உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்)
குறள் 2 – மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்(அறிவு)
குறள் 3 – அண்டவெளியினைக் கடந்தவன் (பெருமைக் குணம்)
குறள் 4 – விருப்பு, வெறுப்பற்ரவன் (சாராமைக் குணம்)
குறள் 5- நல்வினை..தீவினையற்றவன்(மாறாமைக் குணம்)
குறள் 6- ஐம்பொறிகளையும் அடக்கியவன் (வலிமைக் குணம்)
குறள் 7- உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்)
குறள் 8- அறக்கடலானவன் (எளிமைக் கூணம்) )
அது சரி..கம்பர் “கை வண்ணம்..கால் வண்ணம்..” என்கிறாரே..அது என்ன..
ஒருவர் மீது அன்பு செலுத்துகையில்..நாம் கையை உபயோகிக்கிறோம்.கை
குவிக்கிறோம்,கட்டி அணைக்கிறோம், கை குலுக்குகிறோம்..இவை அன்பின்
வெளிபாடுகள்.
அதேபோன்று அன்புக்குக் கை. வெறுப்புக்கு கால்..
வெறுப்பு ஏற்படின் எட்டி உதைக்கிறோம் இல்லையா..? அதுதான்.
ஆனால் இராமன்..கோபம் கொண்ட அரக்கியின் மேல் கை வண்ணம்
காண்பித்தான்..அன்பு கொண்ட அகலிகை மேல்.கால் வண்ணம் காட்டினான்.
வண்ணம்..வண்ணம் என சொல்லி வந்தவ கம்பர்..அரக்கியையும், இராமரையும்
வண்ணமயாகவே வர்ணிக்கின்றார்.
மை வண்ணத்து அரக்கி..பொய்.சூது..கொலை போன்ற கெட்ட குணங்கள்
நீறைந்திருந்ததால் மை போன்ற கரிய நிற அழகி..
பிறருக்கு கொடுப்பதற்காகவே நீர் கொண்டு கருத்ததால் மழை மேகம்
கருக்கிறது.எனவே அந்த கருமேகம் இராமனின் கருமைக்கு உதாரணம்.
கம்பரின் இப்பாடலின் தாக்கம் கண்ணதாசனையும் ‘”வண்ணம்” கொண்ட ஒரு
திரைப்பாடலை எழுத வைத்தது எனலாம்.அப்பாடல் “பாசம்” எனும்
திரைப்படத்தில்.பாடல்..(வண்ணம்..வண்ணம் என வரிகள் மட்டும்)
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
மஞ்சள் வண்ண வெய்யில் பட்ட
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
!
****
