செ.புனிதஜோதி

நேற்றைத் தினங்களில்
கூடையில் சுமந்துவரும்
பாட்டியிடம் கதைபேசி
வாங்கிய மண்விளக்கை
அம்மா தண்ணீர் தொட்டியில் போட்டு வைப்பாள்….
கார்த்திகைக்கு முதல்நாள்
எடுத்து துடைத்து மஞ்சள்குங்குமம்
வைத்து…
வீட்டுவாசலிலும்,மாடத்திலும்
,கூடத்திலும் ஒளியைஏற்றியப்
பொழுதுகளில்…
பாட்டியின் நிறைந்தமுகமும்
சேர்ந்தே ஒளிரும்
இன்றைப்பொழுதில்…
குவிந்துக்கிடக்கும்
சைனவிளக்குகளின்
ஒரத்தில் மண்விளக்குகள்….
அழகியலால் வா,வாவென
அழைக்கும் சைனவிளக்குகளை
நோக்கித் தாவுகிறது குரங்குமனம்..
அழகியலை இழந்த சாமானியன்
முகமாய் விற்பனையற்று
வெளிறிக் கிடக்கிறது
மண்விளக்குகள்…
அகம் முழுவதும்
செயற்கை இளிக்கிறது
