நாறும்பூநாதன்
இணையம், KYC எல்லாம் வராத காலம் அது. வங்கியில் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களோடு உரையாடுவதில் திளைத்த நாட்கள் அவை. வங்கிக் கணக்கு திறக்க வருபவர்கள், என் முன்னே அமர்ந்து விபரங்களைச் சொல்லும் தினுசே தனி.
“ ஒங்க பேரைச் சொல்லுங்கம்மா” –நான்
“ பேச்சியம்மை” பேச்சியம்மாள் என எழுதிக்கொண்டேன்.
“வீட்டுக்காரரு பேரு”
“அந்தக் கரிமுடிஞ்சுபோவாம்பேரெல்லாம் என்னத்துக்கு” கோபமாக அந்த அம்மா சொல்லும்.
“ஏம்மா..பேரைத்தான கேட்டேன்..அவுரு பேரைச் சொல்லுங்க”
“எய்யா..எனக்கு கணக்கு தொறக்கத்தான வந்துருக்கேன்..அந்தாளு பேரு என்னத்துக்கு” நிதானமாக கேட்டார்.”
பேங்குல அந்த விபரமெல்லாம் கேக்கத்தான் செய்வாக” என்றேன். “ கட்டைல போகந்தண்ணியும் விடாதுபோல” என தனக்குள் புலம்பினார். “ எம்மா..மொத மொத கணக்குத் தொறக்கப்போற நேரத்துல அபசகுனமா பேசாதீங்க..அவரு கூட என்ன சண்டையா..சரி வுடுங்க…வயசை சொல்லுங்க” “ சண்டை என்ன சண்டை ..வுட்டுட்டுப் போயிட்டாம்யா..என்னத்த சொல்ல.” கண்களை துடைத்தபடியே “எங்கய்யா பேர வேணும்னா போட்டுக்கங்கய்யா..சுடலை தாம் அவரு பேரு..”
“ஓ..உங்க அய்யா பேரையே போட்டுக்கறேன்” D/o சுடலை என எழுதிக்கொண்டேன். “ஒங்க வயசைச் சொல்லுங்க”
“வயசா..ஒரு அம்பது போட்டுக்கங்க” திடுக்கிட்டு நிமிர்ந்தேன். எப்படி கூடச் சொன்னாலும் நாப்பது, நாப்பத்தொன்னைத் தாண்டாத தோற்றம்தான். வயசைக்கூட்டிச் சொல்லும் கிராமத்துப் பெண்கள்! துரத்தும் வாழ்க்கை. சீக்கிரம் வாழ்ந்து முடிச்சிரணும் என்ற சலிப்பு.
“பொறந்த தேதி ஞாபகம் இருக்கா”
“எங்க ஊருக்குத் தண்டவாளம் போட்டப்ப பொறந்தேன்னு எங்கம்மா சொல்லுவா..பொறந்த வருசமே அயத்துப்போச்சு…தேதியா நெனவுக்கு வரும்..காந்தித் தாத்தா பொறந்த நாளைப் போட்டுக்குங்க..”
நான் ஆச்சரியமாக நிமிர்ந்தேன். இது நல்லா இருக்கே.. அக்டோபர் 2, 1955 என எழுதினேன். X குறியிட்ட இடங்களில் பேச்சியம்மை பயபக்தியோடு கையெழுத்திட்டார். அதன்பிறகு, பிறந்த தேதி சொல்லத் தெரியாத வாடிக்கையாளர்களின் இடத்தில் அக்டோபர் 2 என்றே போடத் துவங்கினேன். அக்டோபர் 2 வரும்போதெல்லாம், அன்று “ பிறந்த” பேச்சியம்மை, காளியம்மை, ஈஸ்வரிகளை நினைத்துக்கொள்வேன். நூற்றுக்கு மேலே இருப்பாங்க.. ஆதாராவது, மண்ணாங்கட்டியாவது!
1
