
ஸிந்துஜா
“சீனா ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கியா?” என்று சிவகாமியின் குரல் அடுப்படியிலிருந்து கேட்டது.
“முடிச்சிட்டேம்மா” என்றபடி சீனா அவளைத் தேடி வந்தான்.
“இன்னிக்கி டிபன் பொங்கல் வடை. கொஞ்சம் சாந்தினி கடைக்குப் போயி ஒரு லிட்டர் சனோலா வாங்கிட்டு வரியா?” என்று கேட்டபடி பணத்தை எடுத்துத் தந்தாள்.
“இன்னிக்கி என்னம்மா விசேஷம்?” என்று சீனா கேட்டான்.
“நீ சாப்பிடறதுதான் விசேஷம். உனக்குப் பொங்கல் வடைன்னா ரொம்பப் பிடிக்குமில்லே!” என்று அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
சாந்தினி ஸ்டோர்ஸ் மீனாட்சி அம்மன் கோயில் பக்கத்து சந்தில் இருந்தது. அங்குதான் அவர்கள் வீட்டு மளிகை எல்லாம் வாங்குவது. சீனா கடையை நெருங்கும் போது மாரிமுத்துவுடன் இரண்டு மூன்று சிறுவர்களும் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
சீனாவைப் பார்த்ததும் “டேய் சீனா! என்னடா மஜ்னு மட்டும் தனியா வந்திருக்கே? லைலா எங்கேடா?” என்றான் கிண்டலாக. அதைக் கேட்டு மற்ற பையன்கள் சிரித்தார்கள்.
சீனா கடையின் உள்ளே பார்த்தான். கடை முதலாளி தங்கமணி கல்லாவில் இல்லை. அதனால்தான் மாரிமுத்து ஆட்டம் போடுகிறான்.
“இவன் மஜ்னுவா? என்று சிறுவர்களில் ஒருவன் கேட்டான் சிரித்துக் கொண்டே. அவன் மாரிமுத்துவின் தெருவில்தான் இருக்கிறான்.
இன்னொருவன் “அது யார்ரா லைலா?” என்று சிரித்தான். அவனை சீனா இதற்கு முன்னால் பார்த்ததில்லை.
“காலேலே ஜோடியா பள்ளிக்கூடத்துக்குப் போவாங்களே, நீ பாத்த
தில்லையா?” என்று மாரிமுத்து கேட்டான்.
“ஓ அந்த ரெட்டச் சடைப் பிள்ளையா?” என்று மாரியப்பனின் தெருவில் இருப்பவன் கேட்டான்.
“ஆமா. எங்க போனாலும் இவரு ஜோடியாதான் போவாரு. இல்லியாடா
சீனா?” என்று மாரிமுத்து கேட்டான்.
“மாரி, வம்புக்கு வராதே” என்றான் சீனா.
“வந்தா அடிச்சிருவீங்களோ? எங்க அடி பாப்போம்” என்று மாரி அவனை நோக்கி வந்தான்.
மாரிமுத்து சீனாவை விட இரண்டு மூன்று வயது பெரியவன். பலசாலி. கடைக்கு வரும் அரிசி. பருப்பு மூட்டைகளை வண்டியிலிருந்து ஒரே
ஆளாகத் தூக்கிக் கடைக்குள் கொண்டு போய் வைப்பான்.
அப்போது கடையில் சாமான்கள் வாங்க ஒருவர் வந்தார். மாரிமுத்து சீனாவை விட்டு விட்டுப் படியேறிக் கடைக்குள் சென்றான். “என்ன
சார் வேணும்?” என்று வந்தவரைப் பார்த்துக் கேட்டான்.
“இந்தப் பையன் எனக்கு முன்னாலியே வந்துட்டான்ல? அவனுக்கு முதல்லே கொடுத்தனுப்பு” என்றார் சீனாவைக் காட்டி.
மாரியின் நண்பர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள்.
சீனா சனோலா பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். மாரிமுத்து இப்படித்தான் அவனை அடிக்கடி தொந்திரவு செய்கிறான். சீனாவின் பக்கத்து வீட்டில் இருக்கும் கனகாவைத்தான் மாரிமுத்து லைலா என்கிறான். கனகாவும் அவனும் சிறு வயதிலிருந்தே தோழர்கள். எப்போதும் அவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஸ்கூலுக்குச் செல்லுவார்கள். அதைத்
தான் மாரி கேலி செய்கிறான்.
போன வாரமும் மாரி இப்படித்தான் அவனை வம்புக்கு இழுத்தான். அப்போது சாயங்காலம். அவன் விளையாடி விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். எதிர்த்தாற் போல வந்து கொண்டிருந்த மாரி கையை உயர்த்தியபடி “என்னடா சீனா, பொம்பளைப் பிள்ளைங்களோடே பாண்டி ஆடிட்டு வரியா?” என்று சிரித்தான். அவன் புஜத்தில் கண்டு சதை இறுகி நின்றதை சீனா பார்த்தான். முகத்தைத் திருப்பிக் கொண்டு எதிர்ப்பக்கம் போய் வீட்டை நோக்கி நடந்தான்.
மாரி அவனை வெறுப்பேத்துவது சீனாவுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்க
வில்லை. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.
அவன் வீட்டுக்குள் நுழைந்த போது பஞ்சநதம் அவனைப் பார்த்தார். “என்னடா என்னமோ போல இருக்கே? உங்கம்மா உன்னை ரொம்ப வேலை வாங்கிட்டாளா?” என்று அவன் கையில் இருந்த பாக்கெட்டைப் பார்த்தார்.
“அப்பா அவன் கேலி பண்ணிகிட்டே இருக்காம்ப்பா” என்று முறையிட்டுக் கொண்டே அவரருகே வந்தான் சீனா.
“அது யார்றா உன் கிட்டே வாலாட்டுறது?” என்று கேட்டார் பஞ்சநதம்.
“அந்த மாரிமுத்துதாம்ப்பா” என்றான் சீனா. “அம்மா என்னயக் கடைக்குப் போயி சனோலா வாங்கிட்டு வரச் சொன்னாங்க. அதான் சாந்தினி
கடைக்குப் போனேன். அப்போ அவன் டேய், எங்கேடா உன் ஜோடின்னு
கேட்டு சிரிக்கறான்.”
“என்னது, ரொம்ப காவாலித்தனமால்லே இருக்கு?” என்றார் பஞ்சநதம்.
“ஆமாப்பா. எப்பவும் அப்படிதான் என்னைப் பாத்துக் கேலி பண்ணுறான். மத்த பசங்களும் அதைக் கேட்டு சிரிக்கிறாங்க.”
“ஜோடிங்கிறானா? அப்படீன்னா?”
“நான் தெனமும் ஸ்கூலுக்குக் கனகாவோட போறேன்ல? அதுக்குத்தான் அவன் அப்பிடிக் கேலி பண்ணுறான்.”
“ஓ, அவன் அவ்வளவு பெரிய ரௌடியா? அப்போ தங்கமணி அங்க கடையில இல்லியா?”
“இல்ல. மாரி மட்டும்தான் இருந்தான். அப்புறம் பொம்பிளைப் புள்ளைங்
களோடே போய் பாண்டி விளையாடுடான்னு ஒரு நா கேலி செஞ்சான்.”
“சரி. சாயந்திரமா அஞ்சு மணிக்குப் போவோம்.. தங்கமணி கிட்டே சொல்லி அவனை உதைக்கச் சொல்றேன்” என்றார் பஞ்சநதம்.
அன்று சாயங்காலம் பஞ்சநதம் அவனை சாந்தினி ஸ்டோர்சுக்குக் கூட்டிக்
கொண்டு போனார்..
கடையில் வழக்கம் போலக் கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டு நின்றது.
மாரிமுத்துவுடன் வேலை பார்க்கும் சங்கரலிங்கம் மட்டும் சாமான்களைக் கட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். பஞ்சநதம் சுற்றிப் பார்த்த போது மாரிமுத்து தங்கமணியின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு குனிந்து நின்றிருந்தான். கடைக்கு வந்த சிலர் அங்கே வேடிக்கை பார்த்தார்கள்.
‘என்னடே வாயில?” என்று தங்கமணி கேட்டார்.
மாரி நெளிந்து கொண்டே பேசாமல் நின்றான்.
“வாயில என்னா கொழுக்கட்டையா? சொல்லுடே.”
“கருப்பட்டிண்ணே!”
“வாடா இங்கே” என்று சத்தமாகச் சொன்னார்.
மாரிமுத்து நடுங்கிக் கொண்டே இன்னும் நெருங்கி அவரருகில் சென்றான்.
“மண்டி போடுறா” என்றார் தங்கமணி. கரடு முரடாக இருந்த கருங்கல் தரையில் மாரிமுத்து மண்டி போட்டான். வலியில் அவன் முகம் சுருங்கி உதட்டைக் கடித்துக் கொண்டான்.
“யாருடே கொடுத்தாங்க உனக்கு?” என்று தங்கமணி உறுமினார்.
“கீளே கிடந்திச்சிண்ணே.”
“எங்க தெரு முக்குலியா?”
“இல்லண்ணே. இங்கதான் கடைக்குள்ளார. கருப்பட்டி சாக்குக்குக் கீழே.”
“தரையிலே கிடந்தா நீங்க எடுத்து வாயிலே போட்டுக்குவீங்களோ?”
“மன்னிச்சிருங்க அண்ணே. இனிமே செய்ய மாட்டேன்” என்று இறைஞ்
சினான் மாரிமுத்து.
“ஓஹோ, இன்னொரு தடவையும் செய்வீங்களோ? வாயிலேந்து எடுடா” என்றார் தங்கமணி.
அவன் அவசர அவசரமாக வாயிலிருந்த கருப்பட்டியை எடுத்துக் கையில் வைத்தான்.
“அங்கனே தொட்டி இருக்கில்ல. பாத்து அதுக்குள்ளார எறிடா.”
மாரிமுத்து வீதியில் நின்ற குப்பைத் தொட்டியை நோக்கிக் கருப்பட்டித் துண்டை வீசி எறிந்தான். அது தொட்டிக்குப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த சாக்கடையின் முன் குமிந்திருந்த மணல் மேட்டின் மேல் போய்விழுந்தது.
“அதப் போய் எடுடா.”
மண்ணில் விழுந்த கருப்பட்டி.
“அதான்டா கீழே கெடக்குல்ல கருப்பட்டி. போய் அத எடுத்து வாயிலே போட்டுக்க.”
அவன் தயங்கினான்
“செய்ய மாட்டியா? சரி ஓடு. விருதுநகருக்கே ஓடிப் போயிரு.”
மாரிமுத்து மணல் குமியலை அடைந்து கருப்பட்டியை எடுத்தான். ஒட்டிக் கொண்டிருந்த மணலை ஊதித் தள்ள உதடுகளைக் குவித்தான்.
“ஆங். ஊதுற வேலயெல்லாம் வச்சுக்காதே. அப்பிடியே வாயிலே போட்டுட்டு இங்க வா.”
மாரிமுத்து கையிலிருந்ததை வாயில் போடும் முன் சீனா தனது கையைப் பிடித்திருந்த தந்தையின் கையை விட்டு விட்டு மாரிமுத்துவை நோக்கி ஓடினான். அவனை நெருங்கி அவன் கையிலிருந்த கருப்பட்டியைத் தட்டி விட்டான். அது சாக்கடைக்குள் போய் விழுந்தது.
சீனா நேரே தங்கமணியிடம் வந்தான். “அவனை மன்னிச்சிருங்க அண்ணே. பாவம். தெரியாம தப்பு பண்ணிட்டான். வேணும்னா இன்னும் கொஞ்ச நேரம் அவனை மண்டி போடச் சொல்லி பனிஷ்மெண்டு கொடுங்க.அண்ணே” என்றான்.
தங்கமணியின் முகத்தில் எற்பட்ட திகைப்பு விலகவில்லை. அவர் தனக்கு முன்னால் நிற்கும் சிறுவனைப் பார்த்தார். அவர் பார்வை சற்றுத் தள்ளி நின்றிருந்த பஞ்சநதம் மீது விழுந்தது. “கெட்டிக்காரப் பய” என்று அவரைப் பார்த்து உரக்கச் சொன்னார்.
தங்கமணி மாரிமுத்துவைப் பார்த்து “உள்ற வந்து வேலையைப் பாருலே!” என்றார். மாரிமுத்து அவரையோ சீனாவையோ பார்க்காமல் கடைக்குள் நுழைந்து சாமான்கள் கட்டிக் கொடுக்கும் இடத்தில் போய் நின்றான்.
பஞ்சநதம் பையனின் கையைப் பிடித்து “வா வீட்டுக்குப் போகலாம்” என்று வந்த வழியில் போகத் திரும்பினார். தங்கமணியின் குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது.
“என்னங்க அய்யா, நீங்களே கடைக்கு வந்திட்டீங்க? தம்பி ஸ்கூலுக்குப் போறப்போ சாமான் வேணுமின்னு சொல்லி அனுப்பிச்சா கடையாள வீட்டுக்கு அனுப்பிருப்பேன்ல! என்ன வேணும் உங்களுக்கு?” என்று கேட்டார் தங்கமணி.
“இல்ல, வர்ற அவசரத்திலே வீட்டம்மா குடுத்த லிஸ்ட்டே அங்கியே வச்சிட்டு வந்திட்டேன். நாளைக்கி இவங்கிட்டே குடுத்து அனுப்புறேன்” என்று சொன்னார் பஞ்சநதம்,
“இல்ல. நீங்க போங்க. அரை மணிலே இந்தப் பயலை அனுப்புறேன்” என்று மாரிமுத்துவைக் காட்டினார் தங்கமணி.
அப்பாவும் பிள்ளையும் தெருவில் இறங்கி நடந்தார்கள்.
“பாவம்ப்பா மாரி” என்றான் சீனா.

அருமையான கதை. சிறுவர்கள் மனமும், உலகமும் தனிதான் – அன்பு நிறைந்தது!
என்ன அருமையான கதை!!!!. உரையாடல்கள் மூலம் கதை செல்கிறது. இன்னா செய்தாரை ஒருத்தல் எனும் திருக்குறளுக்கு இதை விட அழகாக ஒரு கதை சொல்ல முடியாது. பலம் என்கிற தலைப்பு கதைக்குப் பலம்.
‘பலம்’ கதை பலமான கருத்தை உள்ளடக்கியுள்ளது. முக்கியமாகச் சிறுவர்களால் பெரிதும் விரும்பப்படும்.
மிக அருமையான கதை. நன்றிகள். இயல்பாகவே நம் இதயத்தில் நல்லது உள்ளது. சிறுவயதில் இது பளிச்சென்று தெரியும், வயதாக ஆக இது பகட்டு, தற்பெருமை இவற்றின் புகையால் மங்கலாகத்தான் தெரியும். சீனா மாரிமுத்துவின் கையில் இருந்து தட்டிப் பறித்தது, கடைக்காரரிடம் தார்மீக உரிமையோடு மாரிமுத்துவை வேலையில் தொடர வேண்டியது, இன்னும் சீனாவும் அவன் அப்பாவும் எதற்காக கடைக்கு கந்தது என்பதைக் கூடச் சொல்லாத அந்த பண்புகள், எல்லாமே அருமை சார்.
கடைக்கு கந்தது என்பதை கடைக்கு வந்தது என்று திருத்திப் படிக்கவும்.