ஜெ.பாஸ்கரன்/ டொராண்டோ டைரி 2

டொராண்டோ வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. வந்த காரியமும் ஓரளவுக்கு நலமாகவே முடிந்தது. இறைவனுக்கு நன்றி!
முகநூல் நண்பர்களின் ‘பிறந்தநாள் வாழ்த்து’ மழையில் நனைந்து, போன ஜலதோஷம் திரும்ப வந்துவிட்டது. தனிப் பதிவுகளாகப் போட்டு, தன் அன்பைப் பகிர்ந்துகொண்ட நட்புகளுக்கும், டைம் லைனில் வாழ்த்துச் சொன்ன அன்புள்ளங்களுக்கும், வாட்ஸ் ஆப், மெஸெஞ்சர் என வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கிடைத்தற்கரிய பெருஞ்செல்வமாக இவர்களுடைய வாழ்த்துகளைப் போற்றி என் நெஞ்சில் பதுக்கி வைத்துக்கொள்கிறேன்! வாழ்த்திய ஒவ்வொருவரைப் பற்றியும், தனித் தனியாகப் பதிவு போட விருப்பம்தான் – நேரமும் காலமும் கூடி வரும்போது அதனைச் செவ்வனே செய்யவேண்டும் என நினைத்துக்கொள்கிறேன்! மீண்டும் நன்றி!!
பிறந்தநாள் மாலை இங்கு ‘கேக்’ வெட்டி, ஹாப்பி பர்த்டே சொன்னார்கள். மறுநாள் மதியம் அன்னபூர்ணாவில் லஞ்ச்! சுவற்றில் மகாபலிபுரக் கடற்கரைக் கோவில் ஓவியம், முன் கால்களைத் தூக்கியபடி குதிரை சிற்பங்கள், தமிழ் பேசும் பணியாளர்கள், தட்டுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் முறுகலான நெய் தோசை, உடன் சாம்பார், மூன்று நிற சட்னி, கலந்த சாதம், வடையுடன் மினி லஞ்ச், ரெகுலர் லஞ்ச், சப்பாத்தி, பூரி, சப்ஜி என வட இந்திய உணவு வகைகள் – எல்லாம் இங்கு நம்ம ஊர்போலக் கிடைக்கின்றன! சூடிதாரில் பெண்கள், அரை நிஜார் மாமாக்கள், பேரன் பெயர்த்திகளுடன் தாத்தா, பாட்டிகள் – யாதும் ஊரே யாவரும் கேளீர், எல்லாம் நம்ம ஊர் சாப்பாடுதான் என சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மொழி வாரி பிரிவினைகள் இல்லை – எல்லோரும் இந்தியரே!
விசாலமான சாலைகளும், ஒழுங்கான போக்குவரத்தும், எங்கும் பச்சைப் புல்வெளிகளும் எப்போதும் வியப்புதான்! பிறந்தநாள் – கவனிக்கவும், இது வேறு வகை, குழந்தைக்கானது – விழா ஒன்று பெரிய புல்வெளியில் நடந்தது. பெரிய புல்வெளி மைதானம், வளைந்து வளைந்து செல்லும் சிமெண்ட் பாதைகள், ஆங்காங்கே வாலி பால், பாஸ்கெட் பால் கோர்ட்டுகள், குழந்தைகளுக்கான சறுக்கு மரம், சீஸா, ஊஞ்சல் போன்ற விளையாடும் இடங்கள்! சம்மர் என்பதால், குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி விளையாடிக்கொண்டிருந்தனர். (நம்ம ஊர் பனகல் பார்க்கைக் கூட, ஏதோ ரயிலுக்காக அழித்துக்கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது). இரவு எட்டு மணி வரையிலும் சூரிய பகவான் ஓவர் டைம் வேலை பார்துக்கொண்டிருந்தார். ஒரு கூல் டிரிங்க், பீட்ஸா, பிஸ்கட்ஸ் உடன், பிறந்தநாள் கேக் எல்லாம் கையில் பேப்பர் தட்டுகளில்! விளையாடுபவர்களை வேடிக்கைப் பார்த்தவாறு, மாலை நடைப் பயிற்சி செய்தது, மனதுக்கு இதமாக இருந்தது! (சம்மரில் இங்கு குறைவான உடை என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது!)
Daவுன் Taவுனுக்கு, இங்கிருக்கும் ரயிலில் பயணித்தோம். இரவில் நம்ம ஊரில் குல்ஃபி விற்பவர் அடிக்கும் மணியோசையுடன் ரயில்கள் வருகின்றன. உள்ளே அலுங்காமல், குலுங்காமல் வண்டி செல்ல, கண்ணாடிக்கு வெளியே ஊமைப் படமாய் ஜனங்களும், கார்களும், வானுயரக் கட்டடங்களும்!
Great Clips – பயப்படாதீர்கள், நம்ம ஊர் மாடர்ன் சலூன் பெயர்தான்! 17 நிமிடம் காத்திருக்கவும் என்றது, ஆன் லைனில் புக் செய்தபோது! என் பெயர் டைப்பிய மானிடர், உள்ளே நுழைந்தவுடன், 7 நிமிடத்தில் எனக்கு நேரம் குறித்திருந்தது. வேறொன்றுமில்லை – முடிவெட்டிக்கொள்வதற்குத்தான் இத்தனை ஆர்பாட்டம்! குந்தியபடி, மரத்தடியில், தலையில் தண்ணீர் தடவி, மெஷின் போட்டு, கத்தியைக் கையில் தீட்டி, மேல் கன்னம் வழித்து, கைக் கண்ணாடியில் தலையலங்காரம் காட்டிய கோவாலு நினைவுக்கு வந்தார்! கழுத்தில் டிஷ்யூ பேப்பர் பட்டி கட்டி, கருப்புத் துணியில் போர்வை போர்த்தி, எலெக்ட்ரிக் மெஷினில் 4 என்ற அளவில் ஐந்து நிமிடத்தில் கட்டிங் முடித்து, ஹேர் ப்ளோயரில், ஒட்டியிருந்த முடிகளை உதிர்த்து, பின் தலையழகை கைக் கண்ணாடியில் காண்பிக்க மொத்தமாக 9 நிமிடம் 50 வினாடிகள் ஆயிற்று. “சவுத் இண்டியா சார்?” “யெஸ், சென்னை…. யூ?” “பஞ்சாப் சார்” !
‘கல்கி’ படம் சினிமா காம்ப்ளக்ஸிலும், ‘லபாத்தா லேடீஸ்’ ஓடிடி யிலும் பார்த்த விபரம் மற்றும் விமர்சனம்……..
பார்க்கலாம்……..
.

One Comment on “ஜெ.பாஸ்கரன்/ டொராண்டோ டைரி 2”

Comments are closed.