ப.மதியழகன்/யானை

குடியிருப்புப் பகுதியில்
யானையின் கால்த்தடம்
கோவில் யானை போலல்ல
காட்டு யானைகள் மூர்க்கமானவை
யானையைக் குறித்த வதந்தி
அப்பகுதி முழுவதும்
தீயாய்ப் பரவியது
தினந்தோறும் விதவிதமான
புரளிகள்
காத்திருந்த வனத்துறையினரின்
கண்ணில் விரலை
விட்டு ஆட்டியது
அக்காட்டு யானை
எதைத் தேடி வந்திருக்கும் என
அவர்களால் யூகிக்க
முடியவில்லை
மாநிலத்தின் மொத்த
கவனமும் அவ்வூரின்
பக்கம் திரும்பியது
பெண் யானைக்கு
மதம் பிடிக்காது
என்ற செய்தி சற்று
ஆறுதலாய் இருந்தது
இரவில் நடமாட வேண்டாம்
என காவல் துறையினர்
எச்சரித்திருந்தும்
வீட்டிலிருந்து இறங்கி
தோப்பு பக்கமாய் நடந்தேன்
சற்று தூரத்தில்
யானையின் கால்த்தடம்
அதில் எனது கால்களை
வைத்தேன் அது
காட்டின் ஆதிகாலத்திற்கு
என்னை அழைத்துச் சென்றது
அங்கு வீடில்லை
நாடு, நகரமில்லை
காடு மட்டுமே இருந்தது!

விருட்சம் இன்றைய(19.7.24) கவிதை வாசிப்பு நிகழ்வில் நான் வாசித்த எனது இரு கவிதைகள்