
21.07.2024 – ஞாயிற்றுக்கிழமை
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : நேற்று ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றேன்.
மோகினி : என்ன கூட்டம்?
அழகியசிங்கர் : ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுக் கூட்டம்.
மோகினி : எத்தனைப் பேர்கள் கலந்து கொண்டார்கள்.
அழகியசிங்கர் : 80 பேர்கள் இருப்பார்கள். அதுவே பெரிய விஷயமாகத் தோன்றியது. பெண் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பாக இருந்ததால் பெண்கள் அதிகம் பேர்கள் கலந்துகொண்டார்கள்.
ஜெகன் : கூட்டம் நன்றாக நடந்ததா?
அழகியசிங்கர் : ஒரு பெண் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை அறிமுகப் படுத்துகிற கூட்டம் அது. ஆனால் பேசியவர்கள் பலர் சிறுகதைகளில் கரை கண்டவர்கள் மாதிரி பேசினார்கள். ஒருவர் ஒரு படி மேலே போய் இனிமேல்தான் இவர் (பெண் எழுத்தாளர்) சிறந்த கதைகளை எழுத வேண்டுமென்று கூறிவிட்டார்.
ஜெகன் : உங்கள் கருத்தென்ன?
அழகியசிங்கர் : ஒரு அறிமுகப் படுத்த வேண்டிய புத்தகத்தை
இப்படி விமர்சனம் செய்வது சரியில்லை என்று தோன்றியது. பேசியவர்கள் சிறுகதைகளைப் பற்றி ஞானம் உள்ளவர்கள் மாதிரி பேசியது வேடிக்ககையாக இருந்தது.
மோகினி : அந்தப் பெண் எழுத்தாளர் சரியான நபர்களைக் கூட்டிக் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.
அழகியசிங்கர் : இப்படித்தான் எழுத்தாளர் சுமதியின் சிறுகதைத் தொகுப்புக்கு நடந்தது. சிறுகதைத் தொகுப்பை விமர்சனம் செய்து அந்த எழுத்தாளர் பேசியபோது அவருடைய கர்வம் தலைக்கேறி போயிருந்தது. உண்மையில் சிறுகதை எப்படி எழுதுவது என்று பாடம் எடுத்தாரென்று தோன்றியது.
மோகினி : இலக்கியக் கூட்டங்களுக்கு நீங்கள் இப்போதெல்லாம் போகிறீர்களா?
அழகியசிங்கர் : என்னைக் கூப்பிட்டால் போவேன். ஆனால் ஒரு கூட்டத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்திருப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கும்.
ஜெகன் : உங்களுக்கு வயதாகி விட்டது.
அழகியசிங்கர் : ஓரளவு உண்மை.
மோகினி : இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
ஜெகன் : இரவு பதினொன்று ஆகிவிட்டது. . முடித்துக் கொள்ளலாம்.
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.
(பதிவான நேரம் : இரவு 11.02)
(இன்று பதிவாகிறது 22.07.2024)
