கலில் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்

ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு
தங்கேஸ்

இரண்டாவது அத்தியாயம் ‘’ விதியின் கரங்கள் ‘’

அற்புதமான வசந்த காலம் நிஸான் மலர்களாய்
பூத்து குலுங்கிக் கொண்டிருந்தது.

அப்போது நான் பெய்ரூட்டில் இருந்தேன்.
தோட்டம் முழுவதும் மலர்களாக நிறைந்திருந்தன.

பச்சைப்புல் வெளி தரை முழுவதும்
பட்டுக்கம்பளம் போர்த்தியிருந்தது.

பூமிக்குள் புதைத்து வைத்திருக்கும் இரகசியத்தை
விண்ணுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டடது போல்
அத்தனை அழகாக இருந்தது பார்வைக்கு.

வசந்தம் எங்கும் அழகுதான்
ஆனால் லெபனானிலோ அது பேரழகாய் இருந்ததது.

அழகின் ஆன்மா பூமியெங்கும் சுற்றி வந்தாலும்
லெபனானைத்தான் எப்போதுமே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

துறவிகளுடனும் அரசர்களுடனும் உரையாடிய படி..

தனிமையின் பாடலை நதியோடு சேர்ந்து இசைத்தபடி..

சிறகடிக்கும் உயரத்தில் அசைந்தாடும் சிதார்
மரங்களுடன் சேர்த்து லெபனானின் பழம் பெருமையை இசைத்தபடி..

வசந்தம் லெபனானில் வட்டமிட்டுக்கொண்டேயிருந்தது.

வசந்தம் நிஸான் மலர்களால் நிறைந்திருந்த ஒரு நாளில்
நகரத்தின் இரைச்சலிலிருந்து சற்று தள்ளியிருந்த
என் நண்பணின் வீட்டிற்குச் சென்றேன்.

நாங்கள் உரையாடலில் லயித்திருந்த போது..
அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க கண்ணியமான
முதியவர் ஒருவர் அங்கே வரக்கண்டேன்

என் நண்பன் இவர் தான் பாரிஸ் எப்பாண்டி என்று
எனக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தான்.

என் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே
அவர் ஆழ்ந்த யோசனையில் விழுந்தார்
ஏதோ போன ஜென்மத்து நினைவுகளை
மீட்டெடுக்கும் மனிதரைப்போல

அவர் விரல்கள் நெற்றியில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தன..
அவர் பார்வைகள் எனக்குள் சென்று ஏதேதோ
விடுபட்டுப்போன உறவை துழாவின

பிறகு ஞாபகம் வந்தவராக ’’
நீ என் நெருங்கிய நண்பரின் மகன் ‘ என்றார் மகிழ்ச்சியில் ..
ஆம் என் நண்பனை நான் உன் உருவில் காண்கிறேன் கண்முன்பு
என்றார் விழிகள் பனிக்க..

புயல் வரும் முன்பே உள்ளுணர்வால்
தன் சின்னஞ்சிறிய கூட்டிற்கு இழுக்கப்படும்
சிறு குருவிக்குஞ்சைப்போல
நான் அவரது வாஞ்சையில் அவரிடம் ஈர்க்கப் பட்டேன்.

அவர் என் தந்தையுடனான அவரது நட்பையும்
அவர்கள் ஒன்றாக சுற்றித்திரிந்த பொழுதுகளையும்
உற்சாகமாக சிலாகித்துக் கொண்டிருந்தார்.

முதியவர் ஒருவர் தன் இளமைக்காலத்திற்கு
நினைவுகளின் வழி பயணிப்பதென்பது ..

அன்னிய தேசத்தில் அல்லாடிக்கொண்டிருக்கும் ஒருவன்
தன் தாய்நாட்டிற்கு திரும்பும் வேட்கையைப் போன்றது..

ஒரு கவிஞன் தன் ஆகச்சிறந்த கவிதையை
மீள் வாசிப்பு செய்வது போன்றது..

அந்த மனிதர் தன் உரையாடலின் வழியே
கடந்த காலத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

நிகழ்காலமோ மின்னலென கடந்து கொண்டிருக்கிறது
எதிர்காலமோ கல்லறைக்கு தூதுவிட்டுக்கொண்டிருந்தது.

புல் வெளியில் விழுந்து மறையும் நிழலென
சட்டென ஒரு மணி நேரம் கடந்து விட்டது.

விடைபெறும் நேரம் அந்த முதியவர் அன்பின் மிகுதியால்
என் தோளை இடது கையால் அரவணைத்து
வலது கையால் என் கரங்களைப் பிணைத்துக்கொண்டார்.

‘உன் தந்தையை நான் இருபது வருடங்களாக காணவில்லை
.உன் வருகையால் ( என் வீட்டில் )
உன் தந்தையின் இடத்தை நீ நிரப்புவாயா ? என்றார்
அத்தனை ஆதுரமாய்.

என் தந்தையின் நண்பரை மகிழ்விப்பது
என் கடமையென்றேன்.. கண்கள் பனிக்க

அவர் விடைபெற்றதும் அவரைப் பற்றி சொல்லுமாறு
என் நண்பனை வேண்டினேன்

இந்தப் பெய்ரூட்டிலேயே இவரைப்போன்ற ஒரு மனிதரை
நீ பார்க்கவே முடியாது.

பணத்தால் கருணை மிக்கவர் ஆனாரா
அல்லது கருணை மிக்கவர் ஆனதால் பணம் மிக்கவர் ஆனாரா
என்று சொல்லவே முடியாது பார்த்துக் கொள்..

இந்த பூமிக்கு நாம் எப்படி கருணைமிக்கவராக வந்தோமோ
அது போலவே இதை விட்டுப் புறப்படும் போதும்
கருணைமிக்கவர்களாகவே போகவேண்டும்
என்று எண்ணும் ஒரு சிலரில் இவரும் ஒருவர் பார்த்துக் கொள்..

நான் வியந்து பார்க்க .. தொடர்ந்தான்
ஆனாலும் இப்படிப்பட்ட மனிதர்கள் தானே
துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

தீமையே வடிவானவர்களின் சாதுர்யமான கண்களிலிருந்து
தங்களை காப்பாற்றி கொள்ளவும் திறனற்ற
அப்பாவிகளாய் இருப்பவர்களும் இவர்கள்.தானே

இவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்
.இவரைப் போலவே இரக்க குணம் மிக்கவள்
அவள் அழகோ வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டது.

ஆனாலும் அவளும் இவரின் துயரால்
பிணைக்கப்பட்ட ஒரு ஜீவனாய் உழன்று கொண்டிருக்கிறாள்..
தன் தந்தையின் செல்வமே
அவளை துயரத்தின் உச்சத்தில் வைத்திருக்கிறது.

அவன் இந்த வார்த்தைகளை சொல்லி முடிக்கும் போது
அவன் முகத்தையும் துயரம் போர்த்தி விட்டது போலவேயிருந்தது.

பாரிஸ் எப்பாண்டி இளகிய மனம் படைத்த உயர்ந்த மனிதர்.
ஆனால் தன்னம்பிக்கையற்றவர்.

அதனால் தான் ஒவ்வொருவரும்
அவரை விழியற்றவராக நினைத்து
வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மகளோ புத்திசாலி புனிதமும் நிறைந்தவள் தான்
ஆனாலும் தந்தைக்கு கீழ் படிந்தவள்
இது தான் இவர்கள் இருவரது வாழ்க்கையையும்
துன்பமும் துயரமும் சூழ்ந்திருப்பதற்கான காரணம்

இவர்கள் இருவரின் ரகசியம்
தீமையே உருவான ஒரு பாதிரிக்கு ( பிஷப்பிற்கு )
நன்றாகத் தெரிந்திருக்கிறது.

அவனோ வேதத்தின் நிழலில் தன் சுயஉருவை
மறைத்துக்கொண்டிருப்பவன்
தான் மேன்மையானவன் என்று
மக்களை நம்பவைக்கத் தெரிந்த ஒரு மதவியாபாரி.

இந்த பகுதிக்கே அவன் தான் மதத் தலைவர்
மக்களும் அவனை அளவு கடந்து நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அவனோ அவர்களை வெறும் செம்மறியாடுகளைப்போலவே
கசாப்புக்கடைக்கு ஓட்டிக்கொண்டு செல்கின்றான்

அவனுக்கு ஒரு மருமகன் இருக்கின்றான்.
ஊழலும் வெறுப்பும் ஒன்றாக இணைந்த உருவத்தினன். அவன்..

ஆனாலும் என்ன நண்பா
ஒரு நாள் வரப்போகிறது பார்
அந்த நாளில்
அந்த நாளில்தான் அந்த பாதிரி
தனது மருமகனை வலது புறம் நிறுத்தி
பாரிஸ் எபாண்டியின் மகளை இடது புறம் நிறுத்தி
இருவரின் கரங்களையும் மணமாலையால் பிணைத்து
அய்யோ அது எப்படி இருக்கும்
கற்பனை செய்து பார்..

ஒரு புனிதத்தை புழுதிக்கு தாரை வார்ப்பது போல
பரிசுத்தமான பகலின் இதயத்தை
இரவின் கரும் மார்பில்
ஒளித்து வைத்து விடுவது போல

இவ்வாறு சொல்லி விட்டு
நண்பா நான் இவ்வளவு தான்
இவர்களைப்பற்றி சொல்ல முடியும்
மேலே எதையுமே என்னிடம் கேட்க வேண்டாம்
என்றான்
சன்னல் வழியே தொலைவில் தெரியும்
வானத்தை வெறித்தபடி

இந்தப் பிரபஞ்சத்தின் பேரெழில்
மனிதர்களின் அத்தனை துன்பத்தையும்
கரைக்க ஆசைப்பட்டவன் போல
அத்தனை ஆழமாக பார்த்துக்கொண்டிருந்தான்
தொலைவில் மிகத் தொலைவில்
அவன் அங்கு இல்லவே இல்லை

நான் விடைபெறும் முன் அவனிடம்
பாரிஸ் எபாண்டியின் வீட்டிற்கு விரைவிலேயே
செல்லவிருக்கிறேன் என்றேன்

என் வாக்குருதியை நிறைவேற்ற மாத்திரமல்ல
என் தந்தைக்கும் அவருக்குமிருந்த புனித நட்பை
புத்துயிர்ப்பு செய்திடவும் தான்

அவன் என்னையே ஆழமாக பார்த்துக்கொண்டிருந்தான்
அப்பப்பா என்ன ஒரு கூர்மையான பார்வை அது

அவன் முகத்தில் எத்தனை ஆயிரம் ஆயிரம் பாவங்கள்
வருங்காலத்தை உணர்ந்து கொண்ட
தீர்க்க தரிசி போலவே தலையசைத்தான்
ஒரு கணம்

அவன் உதடுகள் ஒரு கணம் சலனமுற்று நடுங்கின
ஆனாலும் ஒரு வார்த்தை சொல்லவில்லை
நான் வாசலை கடந்தேன்
தெருவில் இறங்கி நடந்தேன்
அந்தப் பார்வை என்னைப் பின் தொடர்ந்து
வந்து கொண்டேயிருந்ததை என்னால்உணரமுடிந்தது.

அதன் அர்த்தம் எதுவுமே அப்போது
எனக்குத் தோன்றவேயில்லை
ஆனால்அதைப் புரிந்து கொள்ளும்
ஒரு நாளும் வந்தது எனக்கு

அந்த நாளில்
என் இதயம் மற்றொரு
இதயத்தை தன் உள்ளுணர்வால்
அத்தனை ஆதுரமாய்அரவணைத்திருந்தது
அந்த நாளில் என் ஆன்மா
அன்பெனும் பெரு வெளியில் திளைத்து
முதிர்ச்சியுற்றிருந்தது.

தொடரும்

One Comment on “கலில் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்”

Comments are closed.