கலில் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்

தமிழில் : தங்கேஸ்

                             அத்தியாயம் 3

                          புனிதக்கோவிலில்

சில நாட்களில் தனிமை என்னைச் சூழ்ந்தது
புத்தகங்களில்விழித்து விழித்துச் சலித்தேன்
ஓர் நாள் ஒரு குதிரை வண்டியை வாடகைக்கு
அமர்த்திக்கொண்டு
பாரிஸ் எபாண்டியின் வீட்டை நோக்கி
விரைந்தேன்

நாங்கள் பைன் மரக்காடுகளை நெருங்கிய போது
மக்கள் இன்பச்சுற்றுலாவில் திளைத்திருந்தார்கள்
வண்டியோட்டியோ வில்லா மரக்காடுகள்
நிறைந்திருந்த வேறொரு பாதையில்
பிரிந்து சென்றார்ர்
பச்சைப்புல் வெளிகளின் பேரெழில் கடந்து
அற்புதமான திராட்சைத்தோட்டங்களையும் கடந்து
சென்று கொண்டிருந்தபோது
நிசான் மலர்கள் எங்கும் மலர்ந்து
கொண்டிருந்தன

அழகிய தோட்டத்திற்குள் அமைதியில்
ஆழ்ந்திருந்த அந்ததோட்டத்திற்குள்
அமைதியில் ஆழ்ந்திருந்தஅந்த வீட்டின் முன்பு
வண்டி நின்றது.
ரோஜா மல்லிகை மற்றும் கார்டினியா மலர்களின்
வாசம் காற்றில் நிறைந்திருந்தது

நான் அந்த தோட்டத்திற்குள் நுழைந்த போது
பாரிஸ் எபாண்டி எதிர்கொண்டு
என்னை அன்போடு அழைத்துச் சென்றார்.

அப்பப்பா என்ன ஆத்மார்த்தமான உபசரிப்பு
என்னை அமரவைத்து அருகே அவர்
அமர்ந்து கொண்டார்.

ஒரு தந்தை மகனிடம் கேட்பது போல
அத்தனை வாஞ்சையாய்
என்னிடம் கேள்விகள் கேட்ட வண்ணமிருந்தார்.

என்எதிர்காலம் கல்வி
ஏனைய விசயங்கள்
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார்
நான் மைந்தனைப்போலவே
பதிலளித்துக்கொண்டிருந்தேன்
அப்போரு வெல்வெட் திரை அசைந்தது
அதன் பின்னே ஒரு கதவு திறந்தது.
உயர்ந்த அழகிய வெண்ணிற ஆடை உடுத்திய செல்மா
என்னை நோக்கி வரக்கண்டேன்.

பாரிஸ் எபாண்டியும் நானும் மரியாதை நிமித்தம்
எழுந்து நின்றோம்
‘’ இது என்மகள் செல்மா ‘’ என்று
எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அவளிடமோ என்னை’’ விதியே என் நன்பனையே
மீண்டும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
அவரின் மகன் உருவில்’ என்று
அறிமுகப்படுத்தினார்.

செல்மாவின் பார்வை என்மீது நிலைகுத்தி நின்றது.
அந்தப்பார்வைக்குத்தான் பொருள் என்ன?
அந்நியன் ஒருவன் எப்படி இந்த வீட்டிற்குள்
நுழைந்து விடமுடிந்தது என்ற ஆச்சரியமா?

அறிமுகத்தில் அவள் கரங்களை நான் ஸ்பரிசித்தபோது
அடடா எனக்குள் என்ன நிகழ்கிறது?
சொல்ல முடியாத வேதனை எனக்குள் ஊடுருவுகிறதே !

அந்த அறையில் தான் எத்தனை
அடர்த்தியான மௌனம் நிரம்பியிருக்கிறது.
விண்ணிலிருந்து இந்த அபூர்வமான மௌனத்தை
தன் தூய ஆன்மாவின் சன்மானமாய்
செல்மா இந்த அறைக்குள் எடுத்து வந்துவிட்டாளா?

அமைதியாய் அமர்ந்திருந்தோம்
அமைதியை உணர்ந்த பேரமைதியாய்
அவள் என்னைப்பார்த்து புன்னகைத்தாள்.

‘’ அப்பா அவரது இளமைக்காலத்தை அடிக்கடி என்னிடம்
நினைவு கூர்வார்.
அதில் உங்கள் தந்தையே முழுவதும் நிரம்பியிருந்தார்.
அவரது இனிமையான இளமைக் காலம் என்பது முழுவதும்
உங்கள் தந்தையுடன் அவர் செலவளித்த நாட்களே ‘’

உங்கள் தந்தையும் அதுபோலவே உங்களிடம்
அவரின் கடந்தகாலத்தை நினைவு கூர்ந்திருந்தால்
இது ஒன்றும் நமது முதல் சந்திப்பு அல்லவே ?
என்றாள் உணர்ச்சிகரமாக
அந்த முதியவர் மகளின் வார்த்தைகளைக்கேட்டு
மிகவும் அகமகிழ்ந்து
‘’ செல்மா மிகவும் உணர்வு பூர்வமானவள்.
அவள் ஆன்மாவின் விழிகளின் வழியே தான்
எதையும் நோக்குவாள் ‘’ என்றார்.

அவரது விழிகளையே பார்த்திருந்தேன்
அத்தனை வாஞ்சை அதில் மிதந்து கொண்டிருந்தது.

புயல் மழை கடந்து நிற்கும் முதிய மரமொன்று ,
இளங்காலைப்பனியில் படபடத்துக்கொண்டிருக்கும்
சின்னஞ் சிறிய கன்று ஒன்றை கிளைகள் பரப்பி அ
ரவணைத்துக்கொள்வது போல்
அத்தனை பேரன்பை என் மீது
படரவிட்டுக்கொண்டிருந்தார்.அவர்

செல்மா அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
அவ்வப்போது அப்பாவின் முகத்தையும்
என் முகத்தையும் நோக்கிய வண்ணமேயிருந்தாள்.
வாழ்க்கை நாடகம் என்ற புத்தகத்தின்
முதல் அத்தியாயத்தையும்
இறுதி அத்தியாயத்தையும்
ஒருசேர வாசித்துக்கொண்டிருக்கிறாளோ என்னவோ?

ஒரு நாள் முழுவதும் அத்தனை சீக்கிரம்
கரைந்தோடி விட்டது தோட்டத்திலேயே
நான் சன்னல் வழியே வானை நோக்கினேன்
சூரியன் மறைந்து கொண்டிருந்தது.
மஞ்சள் முகில்கள் லெபனான் மலைகளை
உச்சி முகர்ந்து முத்தமிட்டுக்கொண்டிருந்தன.

பாரிஸ் எபாண்டி கடந்த காலத்தில்
லயித்து மிதந்து கொண்டிருந்தார்.
நிகழின் துன்பங்களை இன்பமாய் மாற்றும்
இரசவதமோ ஒரு சந்திப்பு ?

செல்மா சன்னலருகே அமர்ந்திருந்தாள்.
வாய் வார்த்தைகளற்றவளாய்
விழிகளில் சோகம் கனத்தது.
அவளின் பேரழகே அவளுக்கு
ஒரு சோபையான தேவமொழியை
தந்து கொண்டிருந்தது.
வார்த்தைகளை விடவும்
அத்தனை அர்த்தச் செறிவு
மௌனத்தின் மொழிக்கு.
இதுதான் மனிதகுலத்தின்
பொதுவான மொழியோ என்னவோ ?

அமைதி நிரம்பிய பெரும் ஏரி
ஏதேதோ முனுமுனுத்தபடி ஓடிக்கொண்டிருக்கும்
சிற்றோடையை உள்ளிழுத்து
அந்தகாரத்திற்குள் அமிழ்த்திக்கொண்டிருப்பது போல்
அத்தனை
அடர்த்தியாய் நிரம்பியிருந்தது
அந்தப் பேரமைதி.

மனதிற்குப் புரியாது இதன் பொருள்
ஆன்மாவிற்கு மட்டுமே புரியும் போலும்

ஆம் எங்கள் இருவரின் ஆன்மாவும்
வார்த்தைகளால் விவரிக்க இயலாத
அந்த ஏகாந்தத்தில் திளைத்து மிதந்து கொண்டிருந்தன.

அது ஒரு ஆழமான உணர்வு
பார்வைக்கும் அப்பால் பரந்திருந்தது.
பரவசத்திற்கும் அப்பால் இருந்தது.
மௌனத்தின் உச்சத்தின் மகோன்னதம் அது.

புனிதத்தின் புனிதமான ஆன்மாவிலிருந்து தோன்றி
உடலையும் மனதையும் ஆக்ரமித்திருந்து.

மண்ணின் அடியாழத்திலிருந்து தோன்றும் உயிர்சக்தி
எவ்விதம்
வண்ணங்களையும் வாசனைகளையும்
மலர்களுக்கு அளிக்கின்றதோ
அது போலவே அது
எங்களுக்கு அளவற்ற பேரின்பத்தை
தந்து கொண்டிருந்தது.

என்ன மாயம் இது?
என் ஆன்மாவும் செல்மாவின் ஆன்மாவும்
ஒன்று மற்றொன்றிற்குள் புகுந்துவிட்டனவோ
முதல் சந்திப்பிலேயே?

என் அடங்காத ஆவலே
இந்த சூரியனுக்கு கீழேதோன்றிய
அத்தனை அழகுகளிலும்
சிறந்த பேரழகாய்
செல்மாவை கண்டு இன்புறுகிறதோ?

இல்லை இளமை என்னும் மதுவை அருந்தி
மதுமயக்கத்தில் கிடக்கும் நான்
இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்கிறேனோ?

அல்லது என் இளமைதான் என் கண்களை
முற்றாக மறைத்துவிட்டதோ?

அவளின் சுடர்மிகும் கண்களையும்
இனிக்கும் இதழையும்
ஒளிவீசும் உருவத்தையும்
கற்பனை செய்துதான் பிதற்றுகிறதோ?

அல்லது
செல்மாவின் சுடர் மிகும் கண்கள்
இனிக்கும் இதழ்கள் ஒளிவீசும் உருவம்
யாவும் ஒன்றாய் சேர்ந்து தான்
என் கண்களை திறந்தனவா?

அதுதான் மகிழ்ச்சியையும் துயரத்தையும்
மாறி மாறி எனக்குத் தந்து கொண்டிருக்கிறதோ என்னவோ?

பதில் சொல்வது எனக்கு கடினமானது தான்
ஆனால் அந்த நேரத்தில் தோன்றிய உணர்வு
அதற்கு முன்பு நான் வாழ்க்கையில் கண்டிராதது.

புதிய பந்தம் ஒன்று என் நெஞ்சில் பூத்து விட்டது
பூமியைப்படைத்த நாளில் புனித ஆத்மா
எப்படி நீருக்கும் மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்ததோ
அது போலவே என் ஆன்மாவும்
அங்கே வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

மகிழ்ச்சியும் துயரமும் மாறி மாறிப்பொங்கி வழிந்ததன.
இவ்விதமே செல்மாவுடன் என் முதல் சந்திப்பு முடிவு பெற்றது.
அந்த கணத்தில் தான் சொர்கத்திலிருந்த
ஒரு இனிய சக்தி என்னை
என் தனிமையின் துயரிலிருந்தும்
,இளமைச்சிறையிலிருந்தும் விடுவித்தது.
அந்த சக்திதான் காதல் என்னும் ஊர்வலத்தில்
என்னை வழிநடத்திக்கொண்டு சென்றது.

காதல் என்பது மட்டுமே
இந்த உலகத்தில் உண்மையான சுதந்திரம்
என்பதை நான் கண்டு கொண்டேன்.
அதுவே நம் ஆன்மாவை
மனித சட்டங்களிலிருந்தும்
இயற்கையின் தளைகளிலிருந்தும்
முற்றாக விடுவித்து
சமரசமற்ற சுதந்திரத்தில்
விண்ணில் மிதக்கச் செய்கிறது.

நான் விடைபெற்ற போது
பாரிஸ்எப்பாண்டி என்னிடம் நெருங்கி
வந்து பாசத்துடன் சொன்னார்.
என் மைந்தனே இந்த வீட்டிற்கு வரும் வழி
இப்போது உனக்குத் தெரிந்துவிட்டதல்லவா?

உன் தந்தையின் வீட்டிற்கு உரிமையுடன்
வருவது போலவே நீ அடிக்கடி இங்கு வரவேண்டும் ..
‘’ என்னை உன் தந்தையாக நினைத்துக் கொள்
செல்மாவை உன் சகோதரியாக நினைத்துக்கொள் ‘’

இவ்விதம் சொல்லி விட்டு
செல்மாவின் பக்கம் திரும்பினார்
அவளின் சம்மதத்தை எதிர்நோக்கியவராக

அவள் சம்மதமாக தலையசைத்து விட்டு
என்னை ஒரு பார்வை பார்த்தாள்

நெடுநாள் பழகிய நண்பனைப்பார்க்கும்
பழகிய பார்வை
பாரிஸ் எப்பாண்டியின் வார்த்தைகள்
என்னையும் செல்மாவையும்
காதலின்பீடத்தில் அருகருகே
அன்யோன்யமாக நிற்கவைத்திருந்தன
பின்பு மிக இனிமையான
ஒரு தேவகீதம்போல்
அவ்விடம் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

உற்சாகத்தில் ஆரம்பித்து
துயரத்தில் முடிந்த பாடல் அது
ஒளியின் உயரத்திற்கு உயர்த்தி
சுடரின் அருகில் நிறுத்திய பாடல் அது
அந்த கோப்பையிலிருந்து
மகிழ்ச்சியையும் துயரத்தையும் நாங்கள்
மாறி மாறிப் பருகினோம்

நான்வீட்டைவிட்டு கிளம்பினேன்
அந்த முதியவர் தோட்டத்தின் விளிம்பு வரை வந்து
விடை கொடுத்தார்.
அப்போது என்னுடைய இதயத்திலோ
சீரற்ற துடிப்பு
தாகத்தில் தவித்துக்கொண்டிருக்கும்
ஒரு மனிதனின் உதடுகள் போல
அது நடுங்கிக் கொண்டிருந்தது..

( தொடரும் )

கலில் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)