ஸ்ரீதர் சாமா /யோகி ராம் – ஒரு ஆன்மிகச் சிந்தனை

ஒரு பக்தரின் பல வருடத்திற்கு முந்தைய அனுபவம். அவர் ஸ்ரீ ஞானானந்த கிரி தபோவனம் அடிக்கடி வருவார்.
ஒருமுறை வந்து தங்கி விடை பெற்றுச்செல்ல ஸ்ரீ ஞானானந்தரிடம் வந்த போது “இன்னும் ஒரு நாள் தங்கிச் செல்லலாமே,. சாயங்காலம் விசேஷ ஹனுமான் பூஜை இருக்கிறது’ என்று சொல்ல, இவரும் தங்கினார். பூஜையின்போது யோகி ராம் சுரத் குமாரும் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தார். தபோவனப் பரிசாரகர் வெளியூர் போயிருந்ததால் அர்ச்சகர் தனக்குத் தெரிந்த வெண் பொங்கல் நிவேதனத்திற்குச் செய்திருந்தார். பக்தர் கேட்க “சர்க்கரைப் பொங்கல், எள் சாதம், புளியோதரை போன்ற மற்ற நிவேதனங்கள் செய்ய முடியவில்லை. ஆகையால் அவற்றின் பெயரையும் ஸ்வாமிக்கு வெறுமனே அறிவித்து வெண்பொங்கல் படைத்தேன்” என்று சொன்னார் அர்ச்சகர். அது எப்படிச் சரியாகும் என்று பக்தர் வியக்கும் போதே யோகி பெற்றுக்கொண்ட வெண்பொங்கலின் உச்சிஷ்டம் அவரையும் வந்தடைந்தது. அதில் ஒவ்வொரு கொட்டைப்பாக்கு பிரசாதமும் ஒவ்வொரு நிவேதனமாகச் சுவைத்ததாம். யோகி ஒரு வார்த்தை பேசாமல் பக்தர் குறையை நீக்கியிருக்கிறார் !
ஒரு யோகியின் ஜெயந்தியாக காஞ்சி மஹா ஸ்வாமிகள் விசேஷ ஹோமம் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் செய்து அந்த ரக்ஷை, காமாட்சி பிரசாதம், மடத்துப் பிரசாதம் எல்லாவற்றையும் சந்திர மௌலி என்ற நண்பரிடம் கொடுத்து திருவருணை சென்று யோகியிடம் கொடுக்க ஏற்பாடு செய்தார். யோகி அந்தப் ப்ரசாதத்தை பக்தியுடன் பெற்றுக்கொண்டு உடனடி அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்று வந்திருந்த பக்தர்களிடம் கொடுத்து காஞ்சி மஹாஸ்வாமிகள் பிரசாதம்' என்று சொல்லி ஆனந்தப்பட்டார் . நம் பிறந்த நாள் கொண்டாடும் மகிழ்ச்சி எதில் இருக்கிறது என்று யோகி அங்கே பாமரர்களுக்குப் பாடம் எடுத்திருக்கிறார் ! இந்தப் பிச்சைக்காரனிடம் எந்த எண்ணமும் திட்டமிடலும் இல்லை. அவனிடம் சுய நினைவு இல்லை. சரி, தவறு, நல்லது கெட்டது இல்லை. அனைத்தும் துடைக்கப்பட்டுவிட்டன ‘ என்று சொல்லும் யோகி தொடர்ந்து “தந்தை ஸ்ரீ அரவிந்தருக்கும் பகவான் ரமண மஹர்ஷிக்கும் சுவாமி ராமதாசுக்கும் மக்களுக்கு போதிக்கும் வேலை கொடுத்தார். எனக்கு அவர்கள் துன்பம் களையும் வேலை தான் கொடுத்திருக்கிறார்” என்கிறார்.
காஞ்சி ஸ்வாமிகள் அவர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்' என்பார்.குமார்’ என்று முடியும் பேருக்கு ஏற்றவாறு தெய்வக்குழந்தையாக இருந்தார். அன்புப் பிச்சையையும் அகந்தை பலியையும் கேட்கும் பிச்சைக்காரனாகவும் இருந்தார்.
ஒரு சம்பவம். ஒரு அன்பர் திருப்பதி தரிசனம் போகும் வழியில் திருவண்ணாமலை வந்து யோகியை சந்திக்கிறார். விடை பெறும் சமயம் யோகி “திருப்பதிக்குப் போகணுமா?” என்று கேட்க இவர் “ஆம் ஸ்வாமி. ஆசீர்வதியுங்கள்” என்கிறார். “சரி திருப்பதி பாலாஜியிடம் திருவண்ணாமலையில் உள்ள அந்தப் பிச்சைக்காரன் யார்? என்று கேளுங்கள்” என்கிறார். பக்தர் இருமுறை பாலாஜி கருவறையைப் பார்த்துக் கேட்க இரு முறையும் “நேனே நேனே ” (நான் தான், நான் தான் ) என்று கருவறை பதிலளித்தது ” என்று சொல்வார்கள். இதை யோகியிடம் சொன்ன போது உடம்பு குலுங்கச் சிரித்தாராம்..