எஸ் வி வேணுகோபாலன்/இயற்கை


தன் பிம்பத்தைக்
கண்ணாடியில் அல்ல
நீரருந்தும்
ஓடையில் கூடப்
பார்த்துக் கொள்ளாது
நடந்து போகிறது வேங்கை

யாரும்
அடைமொழிகளோடு
அறிமுகம்
செய்விக்காமல்
பேசத் தொடங்குகிறது கிளி
பாடிக்
கொண்டிருக்கிறது குயில்

அகந்தையோடு அல்ல
இயல்பான
கம்பீரத்தோடு
நடக்கிறது மயில்

தன்னை இன்னுமின்னும்
வியந்து பார்க்கின்றனர் மனிதர்கள்
என்பதறியாது
இயங்கிக் கொண்டே இருக்கின்றன எறும்புகள்

இந்தக் கவிதையை
வாசித்து
ஒன்றும்
ஆகப் போவதில்லை
இந்தக் கணம்
சன்னல் வழி
என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்
வீட்டு மொட்டை மாடியில்
அண்மையில் பிறந்த
பூனைக் குட்டிக்கு!

One Comment on “எஸ் வி வேணுகோபாலன்/இயற்கை”

Comments are closed.