
சமீபத்தில் எப்போதாவது ராம்குமாரைப் பார்த்தீர்களா? பார்த்திருந்தால் ஒரு கறுப்பு ஆட்டுடன்தான் பார்த்திருப்பீர்கள். நான் சொல்ல வருகிற ராம்குமார் தவிர வேறு யாரேனும் ராம் குமார்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்கள் உங்களால் ராம்கி, ராம் குமார், ராமு எனப் பலவிதங்களில் அழைக்கப்படக் கூடும். இந்த ராம்குமார் எனக்கு நண்பன் தூரத்து உறவினன். தூரம் என்றால் எங்கள் ஊரிலிருந்து 12 கி.மீ. தொலைவு. நாளை சாகப் போகும் கிழங்களைக் கேட்டால் பழைய கணக்குக்கு அந்த ஊர் ஐந்து மைல் என்று கூறுவார்கள்.
ஊரின் பெயர் மூக்குத் தரிச்சாம் பாளையம். பெயரில் உள்ள வன்முறை ஊரில் இல்லை. ராம்குமாரின் அம்மா அவன் தூரத்திலிருக்கும் போது ‘ராம்குமாரு’ என்றும் அருகிலிருக்கும்போது ‘ராமுக்குட்டீ’ என்றும் அழைப்பாள். கிராம நண்பர்கள் ‘ராமா’ என்று கூப்பிடு வார்கள். கோவை நகரத்துக் கல்லூரி நண்பர்கள் – அது எப்பவோ ஒரு காலத்தில் பி.காம். படித்தபோது – ராம்குமார் என உள்ளது உள்ளபடி அழைத்தனர். பொதுவாக பெயரில் ‘ச’ வகைகள் எழுத்தாக இல்லாவிட்டால் அப்பெயரை அழகாக உச்சரிப்பது கஷ்டம். ஸ்ரமம். ராமுக்குட்டியின் வாழ்வில் ஒர் ஆட்டுக்குட்டி அவன் கல்லூரிப் படிப்பு முடிந்த கையோடு வந்து சேர்ந்தது. அவனை அது வந்த நாள் முதல் இந்த நாள் வரை ‘ம்மே’ என்றே அழைத்து வருகிறது. படிப்பு முடிந்து ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவனது மாபெரும் கல்வியைப் பதிவு செய்துவிட்டு வந்த மறுநாள் முதல் அவனது அப்பா கருப்புசாமி மூலனூர் யூனியன் ஆஃபீசிலோ தாராபுரம் தாலுக்கா ஆபிசிலோ
வேலையில் அமர்ந்துவிடுவான் அல்லது எங்கேயாவது வங்கியில் அமர்ந்துவிடுவான் என்று நம்ப ஆரம்பித்தார். கருப்புசாமி பருகிய மனப்பாலில் மகனது நாற்காலிகள் ‘கருவேல மரத்தால்’ கடைந்து செய்யப்பட்டவை. இங்கு தான் தலைமுறை இடைவெளி வேலை செய்கிறது. ராம்குமாரின் மனப்பால் எல்லாம் ‘எஸ்’ – டைப் சேர்கள். நெருக்கமாகவும் இறுக்கமாகவும் பின்னப்பட்ட செயற்கை நாரினால் ஆனவை. ஒரு வட்டத்தை வெட்டியெடுத்து மட்டையில் பொருத்தினால் பேட் மிண்டன், ஷட்டில்காக், ஏன் டென்னிஸ் கூட விளையாடலாம்.
கடைந்து பின்னப்பட்ட இந்தப் பன்னாடைகளுக்கு ‘காம்படீஷன் எக்ஸாம்’ என்று கூறப்படும் போட்டித் தேர்வு எழுதலாம் என்ற அறிதல் இல்லாமல் போயிற்று.
இது அவர்களது தனித்த குற்றமும் அல்ல. இயேசு சிலுவையில் மரித்து இந்த 1975 ஆண்டுகள் கழிந்த நிலை வரை அந்த ஊரின் 12 கி.மீ. வட்டத்துக்குள் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதினவன் எவனுமில்லை.
அப்படியொரு ஆளைக்கண்டுபிடிக்க மூலனூர் யூனியன் ஆபீசுக்கு போக வேண்டும். மூலனூரில் புதன்கிழமை சந்தை கூடுகிறது. மூக்குத் தரிச்சாம் பாளையத்திலிருந்து மூலனூருக்கு முருங்கைக்காய் கொண்டு சென்ற ராம்குமாரும் அவனது அம்மாவும் நூறு ரூபாய் கொடுத்து ஆட்டுக்குட்டி வாங்கினார்கள்.
காடு தோட்டங்கள் அந்நாட்களில் பசுமையாக இருந்தன. அம்மா ஓர் ஆட்டுக்குட்டி வாங்குகிறாள் என்கிற அளவில்தான் அப்போது ராமு நினைத்தான். அம்மாவின் கொலைத் திட்டம் அவன் அறியவில்லை.
ஆட்டுக்குட்டியின் கழுத்திணைத்த கயிற்றை கையில் வாங்கிய மறுவினாடி அவள் அவர்களது குலச்சாமியான ‘பில்லங் கூட்ட’த்துத் தெய்வம் ‘நாட்ராயன் கோயில்’ ஊர் மிசை, ஊஞ்சல் வனத்திடை உறையும் தெய்வம் நாச்சி முத்தய்யனுக்கு நேர்ந்து கொண்டாள். ராம்குமாருக்கு வேலை கிடைத்த இரண்டாம் செவ்வாய்க்கிழமை கிடாவெட்டுவதாக.
குளங்களின் கரையில் கொக்குகள் அலையும் விதம் நிலம் செழித்திருந்தால் ஆட்டுக்குட்டி புதன்கிழமையானாலும் இதர கிழமைகள் ஆனாலும் புல்தின்று நீரருந்தி நாளொருமேனியும் பொழுதொரு கறுப்புமாக வளர்ந்து வந்தது.
கிளுவை வேலிகளும் அது சார்ந்த பிரதேசமும் வெள்ளாடுகளுக்கானவை. அடர்ந்து கொடி படர்ந்து கொவ்வையும் பொட்லிக் காயும் பிரட்டைகளும் வேறு வேறு லயமான பச்சைகளில் பசுத்து, கொடியிற் கொஞ்சமும் அடியிற் கொஞ்சமுமாய் குன்றிமணிகள் கிடந்து, விரிதலா கூம்புதலா என விடை காண முடியாதபடி செங்காந்தள் மலர் சிவந்து ஊடேயும் கீழேயும் நத்தைகளும் வெல்வெட் பாப்பாக்களும் ஊரும் காலத்தில் சில ஆடுகள் வேலிகள் மீதே கால் பர்லாங் அரை பர்லாங் நடந்து விடும். (முன்பொரு காலத்தில் அப்படியானதோர் ஆடு, மேட்டுக்காட்டய்யனிடம் உண்டாயிருந்தது).
ராம்குமாரின் ஆடு வேலியில் நடக்கும் சாகசத்தில் தேர்ச்சி பெற வில்லை. ஆனால் அதனது சக்திக்கு மீறியது என நாம் நினைக்கும் வேலியின் எட்டாத உயரங்கள் வரை தொத்துக் கால் போட்டு மேய்ந்து விடக்கூடியது. அதிகாலையிலும் அந்தியிலும் அதன் மேய்ச்சல் விளிம்பின் நேரங்களின் எல்லைக்குட்பட்டு பூத்து வரும் மங்கி வரும் விண்மீன்கள் நீங்கலாக அது யாவற்றையும் மென்று வந்தது. ஒரு தடவை உப்புச் சுவைக்காக ராம்குமாரின் டி- ஷர்ட்டை சுவைக்க முயன்று விட்டு, பின்பு துணிகளுடனான சங்காத்தத்தை அறுத்துக் கொண்டுவிட்டது.
முன்பு தோட்டத்துக்கு அதிகமாகப் போகவில்லையாதலால் ஆட்டிடம் அவனுக்கும் நேச உறவு ஏற்பட்டிருக்கவில்லை. ஒருமுறை போனபோது அண்டி வந்த அதற்குப் பெயர் வைக்க முனைந்து தோற்றுப் போனான். ஆட்டுக்கும் அவனுக்கும் சொந்தம் ஏற்பட்ட நாள் குளிரானது. மழைச்சாரற் பகல் அது.
கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த அவனது காலருகே வந்து படுத்தது. மேகங்களூடே சூரியன் எட்டிப் பார்த்தபோது, அதன் சுருள முயலும் கறுப்பு ரோமங்களின் மீது நூறு நூறுவான வில்கள் பொடிந்து பிரகாசித்தன. அதன் இளமேனியில் புழுதி பரவலாயும் புழுக்கைகள் ஆங்காங்கேயும் ஒட்டியிருந்தன. மேகம் சூரியனை மறைந்து கருக்குக் கவிந்த போது அதன் நீள் வட்டக் கண்கள் அயல் கிரகத்திலிருந்து வந்த காதலியின் கண்கள் போலிருந்தன. அவனது வலது காலை கட்டிலின் கீழாகவும் காற்றுவெளிக் கீழாகவும் இருமுறை சுற்றிவந்து இடது காலை உரசி நின்றது. அதன் புழுதியைத் தடவித் தட்டிவிட்டான். செம்மண் படலம் மங்கலாகக் காற்றில் கலந்தது. அன்று பெருமழை பெய்யவில்லை. ஆட்டுக்குட்டியை உடன் நடத்தி வேலியோரம் கூட்டிப் போனான் மேய்ச்சலுக்கு முதன்முதலாக,
அப்பா கருப்புசாமி விவசாய வேலைகளில் ராம்குமாரைஅனுமதித் திருக்கவில்லை. கைச் சாத்திட வேண்டிய கைகள் ஜில்லாவைப் பரிபாலிக்க வேண்டிய கைகள் கேவலம் மூக்குத் தரிச்சாம் பாளையத்து வானம் பார்த்த பூமியில் மண்வெட்டி
பிடிக்க ஏலாது.
ஆட்டுக்குட்டி ஆடாக மாற ஆரம்பித்தபோது வேலிகளில் பசுமை குறைய ஆரம்பித்தது. கார்மழையும் இல்லை. கோடை மழையும் இல்லை. பருவத்தில் தூற்றல் இல்லாத காட்டில் பனி மாத்திரம் ஆளை அடிக்கும் திடகாத்திரமாய்ப் பெய்தது.
ராம்குமாரின் அம்மா மூலனூருக்கும் ஒட்டன் சத்திரத்துக்கும் கட்டடச் சித்தாள் வேலைக்கோ மார்க்கெட் வேலைக்கோ போனாள். கருப்புசாமி புளியமரத்தடிக் கும்பலில் ஐக்கியமாக, ஆடு முழு முற்றாக ராம்குமாரின் தலையில் விடிந்தது. முன்பே பட்டாங்கில் எழுதினது போல் இக்காட்சி மிக இயல்பாக நடந்தது. செம்மறி என்றாலாவது வறல்களைக் கொறித்து வாழ்ந்துவிடும். மேய்ச்சல் குறைந்த காலங்களில் மனிதனைச் சீப்படுத்துவதில் வெள்ளாடுகள் தன்னிகரற்றவை. ஆனால் நம் ஆடு நல்ல ஆடு. ராம்குமாருடன் நல்லுறவும் அணுக்கமும் கொண்டு ‘இணை’ போல வாழ்ந்து வந்தது.
ஆட்டுத் தேவைக்கும் வீட்டுத் தேவைக்குமாக அடிபைப்பில் ராம்குமார் தண்ணீர் கொண்டு வருவான். வெள்ளோட்டமாக நாற்பது ஐம்பது முறை அடித்த பின்புதான் தண்ணீர் மேலேறி வரும். அப்புறமாக ஒவ்வொரு அடிக்கும் அரைச் சொம்பு தண்ணீர் வரும்.
இந்தப் பயிற்சியாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையாலும் ராம்குமாருக்கு புஜங்கள் திரண்டும் கைகள் மெலிந்தும் வந்தன.
பெயரின் இளமை பறிபோகுமாறு கன்னம் ஒடுங்கி வந்தது. கன்னம் ஒடுங்கிக் கண்கள் இடுங்கிய ஒருவனை ‘ராம்குமார்’ என்றழைப்பது கடினமான காரியம்தான்.
காலை எட்டு மணிக்குப் பிறகு வெந்ததையோ இரவு மீந்து நைந்ததையோ தின்றுவிட்டு ஆட்டைப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் பச்சையெஞ்சிய பரப்புகளை நாடிப் போவான்.
கைப்பிடிக்கக் கயிறுமுள்ள ஒற்றையாடு ஆகையால் யாருடைய பண்ணையிலும் தாழியிலும் அதற்குத் தண்ணீர் காட்ட அனுமதியுண்டு. தப்புக் கொட்டை போலத் தவறி விழுந்த வேலாங்காய்களையும் அது கொறிக்கும். அந்த வேலா மரங்களில் நண்பகல் வேளையில் சுவர்க் கோழிகள் ரீங்கரிக்கும் அனாதிச் சுடுபகலில் தான் அவன் ஆட்டுடன் பேச ஆரம்பித்தது. கற்ற கல்வியின் அலமாரியில் ‘ஆடம் ஸ்மித்’ தியரியிலிருந்து ஏதோ ஒன்றைச் சொல்ல அது கேட்டுக் கொண்டது. தனிமையை வெல்லக் குரலை உயர்த்தி காற்று வழியாக தொடர்ந்து பேசத் தலைப்பட்டு இப்போது ஜாடை மாடையாக ஆடு இல்லாத இடத்தும் பேசும் ‘தனி அறு வடையை’ ஆரம்பித்துவிட்டான்.
ஊர்ச்சனங்கள், “கருப்புசாமி மவனுக்கு லேசா தடுமாத்தந் தொடங்கிட்டாப்புல இருக்குதப்போ” என்கின்றனர். ராம்குமாரின் அம்மா அவனது வேலை பற்றிய சங்கதியை மறந்து விட்டு ‘பயலுக்குக் கல்யாணம் கூடிட்டாலாவது இந்தக் கிடாய வெட்டிப் புடறஞ்சாமி எனக்கொரு நிவிர்த்தியக்காமி’ என குலச்சாமியை வேண்டிக் கொண்டதன் மூலம் ஆட்டின் மரண வாய்ப்பை அதிகரித்திருக்கிறாள். ஆட்டின் சராசரி வாழ்நாள் எவ்வளவெனத் தெரியவில்லை. ஆடு வெட்டப்படாமலே இயற்கை எய்திவிட்டால் அதற்குப் பிறகு ராம்குமாரின் கதியை நினைக்கவே பயமாக இருக்கிறது. ராம்குமாரின் அம்மா, அப்பாவி; தனது நாச்சி முத்தய்யனிடம்,
“ஆட்டின் ஆயுளை அதிகப்படுத்து” என்று கேட்கத் தெரியாதவள்.
செம்மலர்
