
“உலகத்திலே சகஜமாகப் பணக்காரர்களைப் பற்றி யாருமே குறை கூறுவது கிடையாது” என்று ஆரம்பித்தாள் சுந்தாப்பாட்டி. “ஏழைமைப் பட்டவன்தான் எப்போதுமே உலகத்தின் நிந்தனைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டியிருக்கிறது.”
”ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி தானே?” என்றேன் நான்.
“தானாகப் பணம் சம்பாதிக்கவும், யாராவது சம்பாதித்துத் தந்திருப்பதை வைத்துக் கொள்ளவும் அறியாதவனுக்கு உலகம் வெகு கலபமாகவே அசட்டுப் பட்டம் கட்டிவிடுகிறது. அவன் மற்றபடி எவ்வளவு கெட்டிக்காரனானாலும் சரிதான்: அசடு என்ற பட்டம் அவனுக்கு நிலைத்து விடும்.”
“எனக்குத் தெரிந்து, பணக்காரர்களில் எத்தனையோ பேர் அசடர்கள் இருக்கிறார்களே?” என்றேன். பாட்டி ஏதோ கதைக்குப் பீடிகைபோடுகிறாள்; கேட்கலாம் என்ற ஆவலுடன், தூண்டுதலாக இருக்கட்டும் என்று, நானும் நடுநடுவே ஒவ்வொரு வார்த்தை சொல்லி வைத்தேன்.
பாட்டி சொன்னாள்: “பணக்காரர்கள் அசடாகவே இருக்கலாம். உண்மையில் பணக்காரர்கள் அசடாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாவிட்டால் பணம் ஒருநாளும் அவர்களிடம் சேராது. ஆனால் இந்த அசட்டுத்தனம் வேறு; நான் முதலில் சொன்ன அசட்டுத்தனம் வேறு. லக்ஷ்மி கடாக்ஷத்துக்கு அவசியமான அசட்டுத் தனத்தை உலகம் அசட்டுத்தனம் என்று மதிப்பதே கிடையாது. பணக்காரன் அசடு என்று தெரிந்திருந்தாலும், அப்படிச் சொல்லுவதற்குப் பதிலாக, அதிருஷ்டசாலி என்று கௌரவமாகச் சொல்லிவிடுவதுதான் உலக வழக்கம்.”
“உம்….”
“ஆம்: நான் முதலில் சொன்னது போன்ற அசட்டுத்தனம் படைத்தவனை உலகம் வெறுக்கிறது. அந்த அசட்டுத்தனதைப் பாவமாகவும், ஒரு ரோகமாகவும், மீளா நரகமாகவும் உலகம் மதிக்கிறது.’
“அதிருக்கட்டும் பாட்டி! நாங்கள்ளாம் தூங்கியானப் புறம் நீ மாமாவோடே இதை எல்லாம் பேசிக்கோ. இப்போ கதையைச் சொல்லு” என்றாள் சரோஜா. அவள் பாட்டியின் பெண் வயிற்றுப் பேத்தி; இன்னும் ஏழு வயது நிரம்பாதவள். பாட்டிக்கு மிகவும் செல்லம். மற்றக் குழந்தைகளும் பாட்டியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு “கதை, ஒரு கதை” என்று கூச்சலிட்டன.
பாட்டி சொன்னாள்: “பணம் தானாகச் சேர்க்கவும் அறியாமல், தகப்பனார் சேர்த்து வைத்திருந்தது பூராவையும் விரயம் செய்து விட்டு ஊரை விட்டு ஓடிப் போனவரைப் பற்றி இன்று நான் கதை சொல்லுகிறேன். என் கண்முன் நிஜமாகவே இதெல்லாம் நடந்தது தான். அவரை உங்களில் பலருக்கு தெரியும். தாடி வளர்த்துக் கொண்டு, காவேரிக்குப் போற வழியிலே….’
தாடி மாமா கதையா? சொல்லு, சொல்லு!” என்று குழந்தைகள் ஏககாலத்தில் கூச்சலிட்டன.
“சாம்பமூர்த்தி ராயரைப் பற்றியா? சொல்லு” என்றேன்
நானும்.
நான்கு மாதங்களுக்கு முன் ஓட்டாண்டியாக, கட்டியிருந்த ஒரே வஸ்திரத்துடன், பண்டரீபுரத்தில் பண்டரிநாதனை பஜித்துக் கொண்டு உயிர்விட வேண்டுமென்று, ஊரில் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிய சாம்பமூர்த்திராயர் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் சாத்தனூருக்குள், தெருவுக்குள், குதிரை மேல் சவாரி செய்து கொண்டு வந்தார். கல்யாணமாகி மாப்பிள்ளை அழைக்கும்போது மாப்பிள்ளையை குதிரைமேல் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்வது மராட்டியர்கள் வழக்கம். அந்த வழக்கப்படியே சாம்பமூர்த்திராயரும் ஜரிகைத் தலைப்பாகையுட னும், கறுப்புக் கோட்டுடனும், ஜரிகை அங்கவஸ்திரத்துடனும், கம்பீரமாகக் குதிரைமேல் அமர்ந்து நகரப் பிரவேசம், தெருப் பிரவேசம், கிருஹப் பிரவேசம் எல்லாம் செய்தார்.
அவர் தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தகப்பனார் நானூறு ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் ஏதோ சர்க்கார் உத்தியோகத்தில் இருந்தவர். குடும்பத்துடன் சாத்தனூருக்குக் குடிவந்தபோது அவர் உத்தியோகத்திலிருந்து விலகி உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டு விட்டார். அவருடைய ஒரே பிள்ளை தான் சாம்பமூர்த்தி. அவரை பீ.ஏ. வரையில் படிக்க வைத்திருந்தார். சாம்பமூர்த்தியும் நன்றாகப் படித்து, ராஜதானியிலேயே பீ.ஏ.யில் முதலாவதாகத் தேறியிருந்தார். பீ.ஏ. பாஸ் செய்ததற்கு மறு வருஷம் சாம்பமூர்த்திக்குக் கல்யாணம் ஆயிற்று. தம் அத்தையின் ஒரே பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். தகப்பனாருடைய ஆஸ்தியுடன், அத்தையின் ஆஸ்தியும் சேர்ந்து கொண்டது.
எல்லாமாகச் சேர்ந்து அவருக்கு எவ்வளவு ஆஸ்தியிருந்தது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும் நிறைய இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். தெருவிலே நான்கு வீடுகள் இருந்தன; நிச்சயமாக நாலாயிரமாவது பெறும். சர்வமானிய நிலம் ஐந்தாறு வேலியிருந்தது. ரொக்கமாகப் பணமும் கையில் நிறைய இருந்ததாகத்தான் சொல்லுகிறார்கள்.
அப்போதெல்லாம் பார்ப்பதற்கு, சாம்பமூர்த்தி ராஜகுமாரன் மாதிரி இருப்பாராம். வாட்டசாட்டமான ஆசாமி; சிவந்த மேனி; எடுப்பான மூக்கு; பரந்த கண்கள். அவருடைய அகத்தின் அழகு முகத்தில் நன்கு தெரியும். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே எல்லோருக்கும் “இவர் உத்தமர்; மனிதர்களிலே சிறந்தவர்” என்று தெரிந்துவிடும்.
அவருக்குப் பெண்டாட்டியாக வந்து வாய்த்தவளோ எல்லா விதத்திலும் அவரையும்விடச் சிறந்தவள். அழகிலும் சரி, உள்ளத்திலும் சரி-இருவரும் போட்டி போடுவது போல இருந்தது.
அவர்கள் வீட்டிற்கு யாராவது விருந்து என்று போய் விட்டாலோ ராஜோபசாரம்தான்; லேசில் விட்டு விடமாட்டார்கள். தர்மம் கேட்டு யார் போனாலும் யாரும் எதிர்பார்க்காத அளவு பெற்றுக் கொண்டுதான் திரும்ப முடியும். பிச்சைக்காரர்களுக்குப் போடுவதில் மட்டும் தினசரி பதக்கு அரிசி செலவாகும் என்று ஊரில் சொல்லிக் கொள்வார்கள். இது தவிர தினசரி வீட்டில் நாலைந்து பேருக்காவது, சாப்பாடு நடக்கும். ஒரு நாளாவது மரக்கால் அரிசிக்குக் குறைந்து உலை கிடையாது.
தகப்பனார்க் கிழவரும், அத்தைக் கிழவியும் இருக்கும் வரையில்தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று ஊரார் எதிர் பார்த்தார்கள். அவர்கள் போன பிறகும் கூட அப்படியே நடந்து வருவது கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.
பணவிஷயத்தில் கணவனைப் போலவே மனைவியும் ‘அசடாக இருந்ததைத்தான் விதி என்று சொல்ல வேண்டும் போலிருக்கிறது.
நடுவில் கொஞ்ச நாள் சாம்பமூர்த்திராயர் சர்க்கார் உத்தியோகமும் பார்த்தார்-போலீஸ் இலாகாவில்.
மாதம் நூறு,நூற்றிருபது சம்பளம் வந்ததே தவிர அவருக்கு மனத்தில் நிம்மதி யில்லை. தினசரி பூஜை புனஸ்காரத்தையும், தர்மம், விருந்துபச ரணை முதலியவற்றையும் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று
வேலையை விட்டு விட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார்.
அவர் வேலையை ராஜீநாமாக் கொடுத்து விட்டு வந்ததற்குப் பிற்காலத்தில் யாராவது காரணம் கேட்டால் பின்வருமாறு சொல்லுவார்: “ஒரு தரம் கிராமத்துக்கு லீவில் வந்திருந்தபோது என்னைப் பலமாகச் சீட்டாட்டப் பைத்தியம் பிடித்துக் கொண்டது. இரண்டு மாதம் இரவு பகல் ஓயாமல் சீட்டாடிக் கொண்டே இருந்தேன். லீவு முடிந்தும் சீட்டாட்டப் பைத்தியம் ஓய்ந்த பாடில்லை. இன்னும் இரண்டு மாதம் லீவுக்கு எழுதிப் போட்டு விட்டுச் சீட்டாடினேன். பிறகு ஒன்றன் பின் ஒன்றாக அரைச் சம்பள லீவு, டாக்டர் சர்டிபிகேட் லீவு, சம்பளமே இல்லாமல் லீவு என்று ஒரு வருஷத்துக்குமேல் ஆகிவிட்டது. இனிமேல் உத்தியோகத்துக்குத்தான் போவானேன் என்று ராஜீநாமா எழுதிப் போட்டு விட்டேன்.”
அவர் உத்தியோகத்தை ராஜீநாமாச் செய்து விட்டு வந்து சில நாளைக்கெல்லாம் அவருடைய மனைவி நோய்வாய்ப்பட்டுப் படுத்து விட்டாள். ஒரு வருஷம் படுத்த படுக்கையாகவே கிடந்தாள். அப்போது அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தன; மூத்ததற்கு வயது ஐந்து; இரண்டாவதற்கு இரண்டிருக்கும். குழந்தைகளையும் வீட்டையும் பார்த்துக் கொள்ளத் தாதிகளையும் வேலைக்காரர்களையும் அமர்த்தி விட்டு, சாம்பமூர்த்திராயர் தாமே தம் மனைவிக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை எல்லாம் செய்தார். புனர்ப்பாகம் செய்வது முதல், ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கி வருவது வரையில், தம் மனைவி சம்பந்தப்பட்ட எல்லாக்காரியங்களையும் சாம்பமூர்த்தியே செய்தார். வேறு யாராவது செய்கிறேன் என்று சொன்னால்கூட அவருக்குக் கோபம் வந்து விடும். தம் கையாலேயே எல்லாம் செய்தால் யமன் கருணை கூர்ந்து அவளை விட்டு விட்டுப் போய் விடுவான் என்று அவர் எண்ணினார் போலும்.
அவருடைய மனைவி படுக்கையில் சீக்காகக் கிடக்கும்போது வீட்டில் பூஜையும், மந்திர கோஷமும் முன்னிலும் நான்கு மடங்காக அதிகரித்தது. தான தருமங்கள் முந்திய எல்லைகளை எல்லாம் மீறி விட்டன. பிரதி வெள்ளிக்கிழமையும் ஒரு சுமங்கலிக்குச் சாதம் போட்டு, மஞ்சள் புடவை வாங்கித் தரவேண்டுமென்று அவர் மனைவி வேண்டிக் கொண்டாள். அதன்படியே செய்தார் சாம்பமூர்த்தி. புடவை வாங்குவதும் நாலைந்து ரூபாய்க்கு வாங்காமல், தாராளமாக இருபது முப்பதுக்கு வாங்கினார். ஏழரை நாட்டுச் சனி படுத்தும் என்று யாரோ ஒரு ஜோசியன் சொன்னானே என்று ராயர் பிரதி சனிக்கிழமையும் ஒரு பிராமணனுக்கு அன்னம் போட்டு, சோமன் ஜோடி வாங்கித் தந்தார்.
ஒரு வருஷம் பூராவும் படுக்கையிலேயே கிடந்தாள் அவர் மனைவி; பிறகு கடைசிச் சிவிகை ஏறிப்போய் விட்டாள். இம்மாதிரியான விஷயங்களில் சாதாரண மனிதர்களுக்குள்ள கருணைகூட, தெய்வத்துக்கு இல்லை என்றே தோன்றுகிறது. இளஞ் சிசுக்கள் இரண்டு அனாதரவாக விடப்பட்டுத் தவிக்குமே என்றோ, வீணாக ஒரு பாவமும் அறியாத இளந்தம்பதிகளைப் பிரித்து வைக்கிறோமே என்றோ தெய்வம் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒரு வருஷம் இரவு பகலாக மனைவியை விட்டு நகராமல் சிசுரூஷை செய்ததனால் சாம்பமூர்த்திராயர் தம் உடம்பையும் கெடுத்துக் கொண்டுவிட்டார். அவ்வளவுதான் அவர் கண்ட பலன்.
வாழ்க்கையிலே ஒரு விதமான கசப்பும் லேசகாக அவருக்குத் தட்டிவிட்டது. அந்த லேசான கசப்பை மறக்க அவர் இன்னும் அதிகக் கசப்பான காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தார். கையில் ஏராளமான பணத்துடன் தஞ்சாவூர் சென்று, அதற்கேற்ற கோஷ்டியுடன் கலந்து கொண்டு, குடிக்கவும் தாசிகளுடன் சல்லாபிக்கவும் ஆரம்பித்தார். . , ஆனால் இதிலே அவர் மனது செல்லவில்லை. இந்த அசட்டுக் காரியங்கள் அவர் உள்ளத்தையும் பரிசுத்தமான ஆத்மாவையும் எவ்விதத்திலும் தொடவில்லை. ஆறு மாதத்துக்குமேல் இந்த வாழ்க்கை அவருக்குத் தாளவில்லை; கிராமத்துக்குத் திரும்பி விட்டார். அவர் குணங்களும், சுபாவமும் புடத்திலிட்ட ஸ்வர்ணம் போல அந்த நாளைய அனுபவங்களால் அதிகமாகவே பிரகாசித்தன.
அந்த நாளைய அனுபவங்கள் அவருக்கு ஒரு விதத்தில் நல்ல பயன் அளித்தன என்றுகூடச் சொல்லலாம்.பட்டும் படாமலும் இருப்பவனே யோகி என்று சொல்லுவார்களே; அதுபோல அவர் அன்று முதல் உலக விவகாரங்களில் பட்டும் படாமலுமே இருக்கத்
தலைப்பட்டார்.
தெருவிலுள்ள ‘மைனர்கள்’ சிலருக்கு நல்லுபதேசம் செய்து நல்வழியில் திருப்பவும் அவருடைய அனுபவங்கள் பயன்பட்டன. அந்த நாளைய அனுபவங்களைப் பற்றிச் சாம்பமூர்த்திராயர்
அதிகமாக யாருடனும் பேசமாட்டார். ஊரார் தெரிந்து கொண்ட தெல்லாம் பராபரியாகக் காதில் விழுந்ததுதான்.
ஆனால் அந்த மாதிரி வாழ்க்கையில் தனக்குக் கசப்புத் தட்டியதைப் பற்றி ஒரு நாள் அவராகவே தம் நண்பர்களான சில அவர் வாழ்க்கையில் பெரிய வாலிபர்களுக்குச் சொன்னார். மாறுதல்களைச் செய்ததெல்லாம் அல்பவிஷயங்கள்தான். அதே போலக் குடியும் கூத்தியும் அவரை விட்டு அகன்றதற்குக் காரணமும் மிகவும் அல்பமான ஒரு விஷயம்; அதை நம்பவே மனது வராது. எனினும் அவர் சொன்னது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்பது சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.
ஒரு நாள் வழக்கம் போல ஸ்டேஷனில் குடித்து விட்டு, சாம்பமூர்த்திராயருடன் அவருடைய நண்பர்களும் ஒரு ஜட்கா வண்டியில் நகருக்கு, நாயகி வீடு தேடிப் போய்க் கொண்டிருந்தார்கள். காமாக்ஷிபாயி ஸாஹேபாவின் மணிக் கூண்டு கட்டி முடிந்திருந்த சமயம் அது. ஜட்கா வண்டி மணிக்கூண்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தபோது, வண்டியின் கோடியில், கம்பி மேல் சாய்ந்து கொண்டு, குடித்தவனுக்கே உள்ள ரீதியில் சிந்தனை செய்து கொண்டிருந்த சாம்பமூர்த்திராயரின் கண்களுக்கு அந்த மணிக்கூண்டு இருந்த இடத்திலிருந்து பெயர்ந்து ஒற்றைக் காலால் நடந்து தம்மை நோக்கி வருவதைப் போலத் தோன்றிற்று. நாக்குளற அவர் “மணிக் கூண்டு நடக்குது டோய்!” என்றார். அவரைப் போலவே குடிவெறியிலிருந்த அவருடைய தோழர்கள் அவர் சொன்னதைப் பாராட்டவில்லை. “மணிக் கூண்டு நம்மைத் துரத்தறதுடோய்!” என்றார் சாம்பமூர்த்திராயர் சில வினாடிகள் கழித்து. அச்சமயம் அந்த மணிக்கூண்டின் முகம் (கடிகாரம்) அவர் கண்ணில் பட்டது. அதிலே ரௌத்திரமும் ஆத்திரமும் குடியிருப்பது போல அவர் கண்களுக்குப் பட்டதாம். தம்மிடம் தனியாக அது வஞ்சம் தீர்த்துக் கொள்ள விரும்பியது; அதனால்தான் அது தம் வண்டியைத் தொடர்ந்து வந்தது என்று அவர் முடிவு கட்டிக் கொண்டார். குடியால் ஏற்கெனவே குளறிய குரல், இப்போது பயத்தால் குளறியது.
“ஹோ!” என்ற கூச்சலுடன் அவர், வண்டிக்கம்பியைக் கழற்றாமலே, வண்டியிலிருந்து கீழே குதித்துவிட முயன்றார். அதே சமயம் தெய்வாதீனமாக வண்டியும் இறிசு முறிந்து கீழே சாய்ந்து விட்டது. ஜனங்கள்கூடி வண்டியை நிமிர்த்தி அதில் சிறைப் பட்டிருந்தவர்களை விடுவித்தார்கள். நல்ல வேளையாக சாம்ப மூர்த்திராயருக்குக் காயம் ஒன்றும் இல்லை. விடுபட்டதும் சித்தம் தெளிந்து, அங்கிருந்து ஓடியே போய்விட்டார். பைத்தியக்காரன், குடிகாரன் என்று அங்கிருந்தவர்கள் அவர் நடத்தையைப் பற்றி எண்ணினார்கள்.
ஆனால் அதற்கப்புறம் சாம்பமூர்த்திராயர் குடியைத் தொட்ட தில்லை; தாசிகளையும் அணுகியதில்லை.
அந்த நாளைய அம்சங்களில் அவருக்கு மிஞ்சியது சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒன்றுதான். ஓயாமல் ஒன்றன்பின் ஒன்றாகச் சிகரெட்டுகளைப் பற்ற வைத்துக் கொண்டு, தோட்டத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் சிந்தனையில் ஆழ்ந்தவராக உட்கார்ந்திருப்பார்.
இந்த சிகரெட் பழக்கத்தால் வெகு நாளைக்குப் பிறகு- அதாவது சாம்பமூர்த்திராயர் ஏழ்மை வாய்ப்பட்டபின்-ஒரு சம்பவம் நடந்தது.
ஊரில் பெரியவர் ஒருவர். மஹா பெரியவர்; எல்லா விதங்களிலும் பெரியவர்; படாடோபத்திலும், வாய் அரட்டையிலும் தெருவிலே முதல் மனிதர்; தெருப் பொதுப் பணத்தை மண்டையில் மயிர் முளைத்த நாளாய்க் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்ட பெரியவர்; கூசாமல் பொய்ச் சாட்சி சொல்லியும் பொய்க் கையெழுத்துக்கள் போட்டும் ‘மானசா’கக் காலந் தள்ளுபவர். அவர் ஒரு நாள் அக்கிரஹாரத்தில் சாம்பமூர்த்தி ராயர் சுருட்டுப் பிடிப்பதைப் பற்றிக் கண்டித்துப் பேசினார். ராயர் பரம ஸாது, பாவம்; அவருக்குச் சாதாரணமாகக் கோபமே வராது.
அந்தப் பெரிய மனிதரின் யோக்கியமான பேச்சால் கிளறி விடப்பட்டு மூண்ட அவருடைய கோபம் அந்தப் பெரிய மனிதரையே எரித்து விட்டது. .அந்தப் பெரிய மனிதரின் வண்டவாளங்களை எல்லாம், அது வரையில் தெருவில் யாரும் பகிரங்கமாகப் பேசத் துணியாத விஷயங்களை எல்லாம், பகிரங்கப் படுத்திவிட்டார். தெருவில் பெரிய மனிதரின் செல்வாக்கு அத்துடன் அழிந்துவிட்டது.
இந்தச் சிறிய வஞ்சத்துடன் திருப்தி அடைந்துவிடவில்லை சாம்பமூர்த்திராயர். அந்தப் பெரியமனிதர் வீட்டுப் பிள்ளைகளில் ஆரம்பித்துத் தெருப்பிள்ளைகள் எல்லோருக்குமே புகை பிடிக்கும் வழக்கத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டார். அவருக்கு உதவி செய்யப் பட்டினத்துக் காலேஜிலிருந்து இரண்டு பட்டதாரிகளும் வந்து சேர்ந்து கொண்டார்கள். அவர் எடுத்துக்கொண்ட இந்தக் காரியத்தில் அடைந்ததைப் போன்ற வெற்றியை அவரால் வேறு எதிலும் அடைய முடியவில்லை.
பெண்டாட்டி இறந்து, வழி தடுமாறித் தஞ்சை சென்று அல்லாடி விட்டுத் திரும்பியபின் சாம்பமூர்த்திராயரின் மனம் முன்னிலும் அதிகமாகவே தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டது. வெகு நாளாக அவருடைய குடும்பத்தில் பூஜையில் இருந்து வந்த பாண்டுரங்க விக்கிரகத்துக்கு இல்லாத ஆர்ப்பாட்டங்களுடன் பூஜைகள் செய்ய ஆரம்பித்தார். அந்தப் பாண்டுரங்கனைத் தவிர உலகில் மற்றவர்களை எல்லாம் அந்தக் காலத்தில் அவர் மறந்து விட முயன்றார் என்றே சொல்ல வேண்டும். அவருடைய முயற்சி அவ்வளவாகக் கைகூடவில்லை.
அந்த நாட்களில் அவர் வாரத்தில் நான்கு நாட்கள் முழுப் பட்டினியாகவே இருந்து விடுவாராம். மற்ற நாட்களிலும் சில நாள் பூஜை திருப்திகரமாக நடைபெறாவிட்டால் அவர் தாம் பாண்டுரங்கனுக்கு இழைத்துவிட்ட அபசாரத்தை எண்ணி அதற்குப் பிராயச்சித்தமாக அறுபது நாழிகை நேரம் ஜலங்கூட அருந்தாமல் இருந்து விடுவாராம்.
அவருடைய பூஜை வேகத்தின் உற்சாகத்தைக் குறிக்கும் சம்பவம் ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். முதல் நாள் முழுவதும் ஏதோ காரணமாக அவர் பட்டினி கிடந்திருக்கிறார். மறுநாள் விடிய இரண்டு நாழிகைஇருக்கும்போது பூஜையை ஆரம்பித்தார். விடிந்து எட்டு நாழிகைக்குப் பூஜை ஒரு வழியாக முடிந்தது. விக்கிரகத்துக்குப் பதினாறு சேர் பசும்பால் அபிஷேகம் செய்திருந்தார். பூஜையை முடித்துக் கொண்டு அவர் உணவருந்த உட்காரப்போகும் சமயம் அவர் மனத்தில் ஏதோ அதிருப்தி தட்டியது. பால் அபிஷேகம் பூர்ண திருப்திகரமாக நடக்கவில்லை என்று அவர் மனத்தில் பட்டுவிட்டது. அவ்வளவுதான்; சாப்பாட்டை மறந்து விட்டு மறுபடியும் இந்தத் தடவை திருப்திகரமாகப் பூஜை செய்ய உட்கார்ந்து விட்டார். ஆனால் அப்போது மற்றோர் இடையூறு குறுக்கிட்டது. பசும்பால் பதினாறு சேர் கிராமத்தில் கிடைக்கவில்லை. என்ன பண்ணுவது?
அன்றுமாலை பால் கிடைத்தது அபிஷேகம் நடந்து பூஜை அன்று முடியும் வரையில் சாம்பமூர்த்தி ராயர் பட்டினிதான். இரவு ஒன்பது மணிக்குத்தான் உணவருந்தினாராம்.
அவருடைய பிள்ளைகள் இரண்டையும் அவருடைய மனைவி வழியில் தூரத்து பந்துவான ஸ்திரீ ஒருத்தி எடுத்து வளர்த்தாள். அவர்களைப் பற்றிய எந்தக் கவலையிலும் ஈடுபட்டுத் தம் காலத்தை வீணாக்க, சாம்பமூர்த்தி ராயர் தயாராக இல்லை. தவிரவும் தாம் கவலைப்பட்டுக் கவனிக்கும் இடங்களில் எல்லாம் யமன் காலடி வைத்து விடுகிறான் என்று ஓர் எண்ணம் அவர் மனத்தில் தோன்றி விட்டது. அதனாலேதான் அவர் ஒரு யோகியைப் போல எதிலும் பட்டும் படாமலும் இருப்பது சாத்தியமாயிற்று.
தம் பிள்ளைகளைத் தம்முடன்கூட அவர் வைத்துக் கொள்ள வில்லை. பட்டினத்துக்கு அனுப்பிவிட்டார். மாதா மாதம் ஐம்பது அறுபது என்று பணம் அனுப்பி விடுவார்.
மூத்தபிள்ளை பத்தாவது வயதிலே அல்பாயுஸாகப் போய் விட்டான். இரண்டாவது பிள்ளை ஒரு நோஞ்சான்தான். எனினும் அவன் பள்ளியில் நன்கு படித்துப் பெரியவனாகிக் காலேஜிலும் சேர்ந்து பி.ஏ. வரையில் எட்டினான்.
சாம்பமூர்த்திராயரின் ஆஸ்திகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டு வந்தன. தான தர்மங்கள், மனைவிக்கு வைத்தியம், அப்புறம் குடி, கூத்தி இத்யாதிகள், இப்படியாக தெருவில் இருந்த முக்கால் வாசிக்குமேல் மறைந்து விட்டது. நான்கு வீடுகளில் எஞ்சி இருந்தது ஒன்றுதான்; நிலத்திலும் ஒன்றிரண்டு வேலிதான். பணம் தேவையானபோது கொஞ்சங் கொஞ்சமாக ராயர் வீடுகளையும் நிலத்தையும் விற்றுத் அவருக்குக் கடன் வாங்குவதில் நம்பிக்கை கிடையாது. “இந்திய விவசாயி கெட்டுப்போவது சுமக்கமாட்டாத. கடனால்தானே?” என்பவர் அவர். “நிலத்தின்மேல் கடன் வாங்குவதைவிட நிலத்தை விற்றுவிடுவது மேலல்லவா?” என்பார் அவர். எது மேலோ, எது கீழோ -அது எப்படியானாலும் சரி, அவருடைய ஆஸ்திகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிட்டன.
சாம்பமூர்த்திராயர் கிராமத்தில் நடத்திய வாழ்க்கையைப் பற்றி உதாரணமாக இங்கு இரண்டொரு விஷயங்கள் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
கையில் பணம் இருந்த காலத்தில் அவரும் விரும்பாமலே அவர் லேவாதேவி செய்ய நேர்ந்துவிடும். பணம் இருப்பதைத் தெரிந்துகொண்டு முடைதாங்காமல் சிபார்சுடன் வந்து விடுவார்கள் பலர். லேவாதேவி செய்வது கடவுளுக்கு அடுக்காது, அநியாயம் என்பதுதான் சாம்பமூர்த்திராயரின் நம்பிக்கை. ஆனால் அதிலிருந்து தப்பமுடியாது. அதற்காக இரண்டு வட்டி, மூன்று வட்டி கொடுத்தால் தான் பணம் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பார். அப்படியாவது அவர்கள் தம்மிடம் கடன் வாங்காமல் இருந்துவிட மாட்டார்களா என்பது அவருடைய ஆசை. சாம்பமூர்த்தியின் மனது ஊரில் பச்சைக்குழந்தை உள்பட எல்லோருக்குமே தெரியும். ஆகவே பத்திரத்தில் மூன்று வட்டி என்று எழுதிக் கையழுத்திட்டுக் கடன் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். பணம் திருப்பித் தரும்போது அரை வட்டி, கால் வட்டி கணக்குப்போட்டு வாங்கிக் கொண்டு ராயர் பத்திரத்தின் காதைக்கிழித்துக் கொடுத்து விடுவார்.
பத்திரம் காலாவதியாகும் தேதி அவருக்கு ஞாபகமே இராது. கடன்காரன் அவனாக வந்து ஞாபகப்படுத்தினால் தான் உண்டு. அவருடைய தாராளத்தையும், ஞாபக மறதியையும் சுய நலத்துக்காக உபயோகப்படுத்திக் கொண்டவர்கள்-ஏற்கெனவே சொன்ன தெருப் பெரிய மனிதர் உள்பட பலர் உண்டு.
நிலம் விற்கும்போதுகூட ராயர் யார் நமக்கு அதிகப் பணம் தருவார்கள் என்று கவனிக்கமாட்டார். யாரிடம் போனால் அந்த நிலம் சரியானபடி உபயோகப்படுத்தப்படும் என்று பார்த்துத் தாமே போய்க்கேட்டு, ஊர் விலைக்குக் கொஞ்சம் தள்ளியே கொடுத்து விடுவார். ஊரில் சிறந்த மிராசுதாரிடம் தம் நிலம் போவதால் அது ஊருக்கு இன்னும் அதிகமாகவே பலன்தரும் என்பது அவருடைய நம்பிக்கை. அவர் வீடுகளை விற்றதும் இப்படித்தான்.
ஆனால் ஒரே ஒரு சமயம் அவர் இந்த விதிக்கு விலக்குச் செய்ய நேர்ந்தது. அவருடைய இரண்டாவது பிள்ளை படித்து முடித்துவிட்டு, தான் ஒரு நண்பனுடன் கூட்டாக வியாபாரம் ஆரம்பிக்கப் போவதாகவும், நல்ல லாபம் வரும் என்றும் அதற்கு ஆயிரத்தைந்நூறு ரூபாய் வேண்டுமெனறும் கடிதம் எழுதியிருந்தான். ராயர் கையில் பணமில்லை; ஆஸ்தியும் இல்லை. எஞ்சியிருந்தது அவர் வசித்துக் கொண்டிருந்த ஒரே வீடும், ஆற்றங்கரைக்குப் போகும் பாதையில் ஒரு தோட்டமும் தான்.
ஒரு வாரத்தில் பணம் அனுப்புவதாகத் தம் பையனுக்கு எழுதி விட்டு, தம் வீட்டை விற்க முனைந்தார். தமக்குத் தோட்டத்தில் ஆற்றங்கரையில் சொற்பச் செலவில் ஒரு சவுக்கண்டி அமைத்துக் கொண்டார்.
ஆனால் அவருடைய வீடு அப்போதைய மதிப்புக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய்தான் பெறும். அதை ஆயிரத்தைந்நூறுக்கு வாங்க யாரும் தயாராக இல்லை. அவருடைய நிலங்களை ஏராளமான லாபத்துக்கு வாங்கியிருந்த மிராசுதார் கூட அந்த முந்நூறு ரூபாய் எதற்காக அதிகம் கொடுக்கவேண்டும், சற்றுத் தாமதித்தால் வீடு ஆயிரத்துக்கே கிடைத்துவிடுமே என்று தயங்கினார். பையனுக்கோ அவசரமாக ஆயிரத்தைந்நூறு வேண்டும். பார்த்தார் ராயர்.
அக்கிரஹாரத்தின் நடு மத்தியிலிருந்த அந்த வீட்டை ஒரு முஸ்லிம் மிராசுதாருக்கு ஆயிரத்து அறுநூறுக்கு விற்றுவிடுவதாக ஏற்பாடு செய்துவிட்டார். அவ்வளவுதான்; தெரு அபிப்பிராயத்துக்குத் தலை குனிந்து ஒருவர் ஆயிரத்தைந்நூறுக்கு வீட்டை ராயரிடம் வாங்கிக் கொண்டார்.
வீடு கிரயமானதுடன் இச்சம்பவம் முடிந்துவிடவில்லை. ஒரு வருஷங் கழித்துச் சாம்பமூர்த்திராயரின் பிள்ளை வியாபாரத்தில் ‘ஏதாவது பணம் நல்ல லாபமடைந்து தன் அப்பாவுக்கு அனுப்பட்டுமா, வேண்டுமா?” என்று கடிதம் எழுதியிருந்தான். அவனை ஒரு நானூறு ரூபாய் அனுப்பச் சொல்லி அதைக் கொண்டு போய்த் தம் வீட்டை வாங்கினவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். பணத்தை வாங்கிக்கொண்டவர், கண்களில் நீர் துளிக்க ராயரின் மேன்மையான குணங்களைச் சமயம் வாய்த்த போதெல்லாம் புகழ்ந்து கூறிக் கொண்டிருப்பார்.
நிலபுலன்கள் எல்லாம் கைவசம் இருந்தபோது ராயர் எல்லா விதமாகவும் மிராக பண்ணிப்பார்த்தார். கொஞ்ச நாள் சொந்தப் பண்ணை வைத்துப் பார்த்தார்; நிலத்தைக் குத்தகைக்கு விட்டுப் பார்த்தார். எதுவும் அவருக்கேற்ற மாதிரி சங்கடமில்லாத வழியாகக்
காணவில்லை.
ராயர் வயலுக்கு அறுவடைக்குப் போகிறார் என்றால் அவருக்கு முன்னால் ஓர் ஈஸி சேரும், ஒரு பெரிய தர்மாஸ் பிளாஸ்க் நிறையக் காபியும் போய்ச் சேர்ந்து விடும். படிப்பதற்குக் கையில் இரண்டொரு புஸ்தகங்களுடன் ராயர் பின்தொடர்வார்.
“வருஷா வருஷம் நெல்லே சாகுபடி பண்ணுவானேன்? நான் புதுசாக இந்த வருஷம் என் நிலத்தில் வெங்காயம் விதைக்கப் போகிறேன். என்ன லாபம் வருகிறது பார்!” என்று ஒரு வருஷம் அவர் ஆரம்பித்து விட்டார். நல்லவேளையாக நெல் வயல்களில் முக்கால்வாசியில் நாத்து விட்டாகிவிட்டது. மற்றதில் வெங்காயம் விதைத்தார் ராயர். வெங்காயம் நிறையத்தான் விளைந்தது. ஆனால் விளைந்த வெங்காயத்தைச் சந்தை சந்தையாகக் கொண்டுபோய் விற்கப் போதிய போக்குவரத்து சாதனங்கள் அகப்படவில்லை. முக்கால்வாசிக்கு மேல் ஈரத்தில் அழுகிவிட்டது. அதுமுதல் ஊரில் சாம்பமூர்த்தி ராயருக்கு வெங்காய ராயர் என்று கேலியாகப் பெயர் வைத்து விட்டார்கள்.
நிலத்தில் முக்கால்வாசிக்கு மேல் கரைந்த பின் ராயர் வீணாகச் சிரமப்படுவானேன் என்று இருந்ததைக் குத்தகைக்கே விட்டுவிட்டார். சாதாரணமாக வருஷத்தில் நூறு கலத்துக்குமேல் நெல் குத்தகை வரவேண்டிய நிலத்தை, “எனக்கு வேண்டியது வருஷம் அறுபது கலம் நெல்லு; அதைக் கொண்டுவந்து போட்டுவிடு” என்று சொல்லி ஒரு குடியானவனிடம் கொடுத்து விட்டார். அந்த அறுபது கலத்தில்கூட ஏதாவது மீதம் பிடிக்கப் பார்ப்பான் அவருடைய குத்தகைக்காரன். அவ்வளவு குறைந்த குத்தகைக்கு நிலத்தை விட்டது தவறு என்று யாராவது சொன்னால் கோபம் வந்துவிடும் ராயருக்கு. “பிள்ளை குட்டிக்காரன், பிழைத்துப் போறான். எனக்கென்னத்துக்கு அதற்குமேலே? நான் ஒண்டி தானே?” என்பார். இன்னும் வற்புறுத்தி ஏதாவது சொன்னால் ‘என் நிலம்; நீ யார் சொல்லுவதற்கு?” என்று சண்டைக்கே வந்து விடுவார்.
இந்தத் தாராளம் இரண்டாவது பிள்ளை தலையெடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தவுடனே அதிகரித்து விட்டது. அவன் பணம் அனுப்பினால் அதை எல்லாம் கண்டவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தாம் பழைய மாதிரியே காலங்கழித்து விடுவார்.
தெருவோருக்கெல்லாம் நெடுநாளாகவே அவரைப்பற்றி இது ஒரு புகார். கொல்லை கொத்துகிறவன், கூலி வேலை செய்கிறவன் இவர்களுக்கெல்லாம் அவர் அதிகமாகக் கூலி கொடுத்துப் பழக்கி விட்டார். தெருவில் குறைந்த கூலிக்கு ஆள் அகப்படுவதில்லை. வேறு இடங்களில் ஐந்தரை அணாக்கொடுத்தால், ராயர் ஏழரை அணாவாகக் கொடுப்பார்.
ஆனால் அவரிடம் வேலைசெய்வது சிரமம். வணங்கி, அவர் சொல்லுவதைக் காதில் வாங்கி வேலைசெய்தால் தான் செய்யலாம். இல்லாவிட்டால் ஒருநாளைக் கூலியைக் காலையிலேயே கையில் கொடுத்து விட்டு “செய்தது போதும்; இனிமேல் இந்தப்பக்கம் வேலை செய்கிறேன் என்று வராதே!” என்று விரட்டி விடுவார்.
பரியாரி வந்து பாதி க்ஷவரம் செய்துகொண்டிருக்கும் போது, ராயரைத் தேங்காய் பறிப்பவன் வந்து கூப்பிடுவான். “சற்று இரு, வறேன்” என்று பரியாரியை உட்காரவைத்து விட்டுப் பாதி க்ஷவரம் அங்கே ஆன தலையுடன் தென்னந்தோப்புக்குப் போவார்.
போனதும் பரியாரி காத்திருப்பது அவருக்கு மறந்துவிடும். ஒன்பது மணிக்குப் போனவர் பன்னிரண்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார். பாதி க்ஷவரந்தான் ஆயிற்று என்று அப்போது தான் ஞாபகத்தில் தட்டும். ஆனால் பரியாரி அவ்வளவு நேரம் காத்திருப்பானா? அவன் வீட்டுக்குப் போயிருப்பான். “படவா! அம்பட்டப் பயல் பாதி க்ஷவரம் செய்துவிட்டுப் போய்விட்டான்!” என்று அவனைத் திட்டிக்கொண்டே அவன் கொட்டகையைத்தேடிக் கொண்டு போவார். இப்படியாக அவர் வீட்டுத் திண்ணையில் பாதி க்ஷவரமும், பரியாரியின் கொட்டகையில் மற்றப் பாதியும் நடப்பதுதான் வழக்கம்.
கடைசியில் அவர் தாடி வளர்க்கத் தீர்மானித்தது பற்றி ஊர்ப் பரியாரிக்குத்தான் ரொம்பவும் சந்தோஷம்.
தேங்காய் பறிப்பவன் மரத்தின்மேல் ஏறிக் கொண்டிருக்கும் போது யாராவது வந்து ராயரிடம் சொல்லுவார்கள். ‘இந்த மரமேறுகிறவன் அயோக்கியப் பயல் சார்! இவன் தாயோடும் தகப்பலோடும் சண்டை போட்டுக் கொண்டு வீட்டைவிட்டு ஓடி குடிக்கிறான். எங்கேயோ திருடி விட்டான் கூடக் கேள்வி.”
அவ்வளவுதான். ராயர் மரத்தின் உச்சாணிக் கிளையை எட்டிய அவசரம் அவசரமாகக் “கீழே இறங்கு! இறங்கு!” என்று உத்தரவிடுவார். ஒரு தேங்காய்கூட அவன் பிடுங்கியிருக்க மாட்டான். என்னமோ ஏதோ என்று அலறிப் புடைத்துக் கொண்டு கீழே வந்தவுடன் ராயர் அவனுக்கு ஒரு மரம் ஏறியதற்கு இரட்டிப்புக் கூலியைக் கொடுத்து “இனிமேல் இங்கே வேலை செய்ய வராதே’ என்று சொல்லி அனுப்பி விடுவார்.
மூங்கில் புதரில் முள் வெட்டவரும் குறவர்களுக்காக அவர் நான்கு ஜதை செருப்பு வாங்கி வைத்திருந்தார். “வேண்டாம் சாமி” என்று அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார். “முள்ளுக் குத்துண்டா, பயலே!” என்பார். “செருப்புப் போட்டுக்கொண்டு வேலை செய்வதானால் செய்; இல்லாவிட்டால் ஓடு” என்பார்.
தாடியை வளர்த்துக்கொண்டு அவர் வீடு, வாசல், நிலம், தோப்பு எல்லாவற்றையும் விற்றுவிட்டு, ஆற்றங்கரை ஓரமாக இருந்த தோப்பில் சவுக்கண்டி போட்டுக் கொண்டு இரண்டு மூன்று வருஷங்கள் வசித்தார். அவருக்கு ஒருவிதமான தொல்லையும் கிடையாது. தாமே ஒரு வேளை பொங்கித் தின்பார். ஒவ்வொரு நாள் அதுகூடக் கிடையாது; முழுப் பட்டினியே கிடந்து விடுவார். அவருக்கிருந்த ஒரு பிள்ளை பட்டினத்தில் கல்யாணம் செய்து கொண்டு, நிறையப் பணமும் சம்பாதித்துக் கொண்டு சௌக்கியமாக இருந்தான். அவரைத் தன்னுடன் வந்து வசிக்க வேண்டுமென்று அவன் எவ்வளவோ வற்புறுத்திக் கடிதம் எழுதினான்; நேரிலே வந்து இரண்டொரு தரம் கூப்பிடவும் கூப்பிட்டான். அவர் போக மறுத்துவிட்டார். தாம் தொட்டதில் எதுவுமே துலங்கவில்லை என்றும், அவனுடன் தாம் போய் வசித்தால் அவனுடைய அதிர்ஷ்டமும் மாறினாலும் மாறிவிடலாம் என்றும் பயந்துதான் அவர் போகவில்லை.
நிறையப் படிப்பார். அகப்பட்டவர்களுடன் ஓயாமல் பேசுவார். வேதாந்த விஷயமாக மட்டுமல்ல; எல்லா விஷயங் களையும்பற்றி அவர் வெகு தெளிவாக, ஆழ்ந்த சிந்தனை செய்து பேசுவார். அவருடன் பேசிக் கொண்டிருப்பதே ஆனந்தமாக இருக்கும்.
சாம்பலுர்த்தி
பள்ளியிலும் காதலையிலுமாகப் பதினைந்து வருஷங்கள் படித்து நான் அறிந்துகொண்ட விஷாங்களளட அதிகமாகவே அவருடன் பழகிய பதினைத்து மாதங்களின் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நான் ஈதர் அவருடன் பேசுப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துச் சில பெரியவர்கள் “ஓயாமல் அந்த அசட்டு ராயருடன் என்னடா பேச்சு உலக்குத் என்று சேட்பார்கள். நான் என்ன பதில் சொல்லுவது.
ஏழைமைவாய்ப்பட்டு அவர் ஆற்றங்கரைக்குப் போகும் வழியில் சவுக்கண்டியில் வசித்துக் கொண்டிருக்கும்போதுதான் எனக்குப் பரிசயமானார்.
அவருடைய தெளிந்த சிந்தனைகளும், எளிமையான வாழ்க்கையும், மேலான லக்ஷியங்களும், எல்லாத் துன்பங்களையும் ஓட்டும் தெய்வ பக்தியும் என் மளந்தைப் பெரிதும் கவர்ந்தன. உலகத்துப் பசி தாகங்களை எல்லாம் மீறிய லக்ஷிய புருஷராக அவர் எனக்குக் காட்சியளித்தார்.
அவரை முதல் நாள் நான் சந்தித்த அன்று அவர் சொன்ன ஒரு வாக்கியம் எனக்கு மிகவும் வியப்பதைத் தருவதாக இருந்தது. “இன்று ஸ்டேஷனுக்குப் போயிருந்தேன்” என்றார் அவர். “அரசலாற்றில் கணைக்கால் மட்டும் ஜலம் இருந்தது. நீந்திப்போய் அக்கரை சேர்ந்தேன்
கணைக்கால் மட்டும் இருந்த ஜலத்தில் அவர் எப்படி நீந்தினார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். விஷயம் வேறு ஒன்று மில்லை. அவர் மராட்டியர்; தமிழ் அவ்வளவாகச் சரியாக வராது. ஜலத்தைக் கடப்பதற்கு மிகவும் கொச்சையாகவே பேசுவார். நீந்துவது என்பதுதான் தமிழ் வார்த்தை என்று அவர் ஞாபகம். கணைக்கால் மட்டுமிருந்த ஜலத்தில் அவர் நீந்தியது அதனால்தான்.
உலகம் பிறந்த நாள் முதல் இன்றுவரை தோன்றி மறைந்து விட்ட எல்லாத் தத்துவாசிரியர்களையும் பற்றி அவர் என்னுடன் விவாதிப்பார். எல்லா விவாதங்களுக்கும் முடிவு ஒன்றேதான்- திலகரின் ‘கீதா ரகசிய’த்திலிருந்து ஏதாவது ஒரு வாக்கியத்தைச் சொல்லிச் சந்தேகங்களை எல்லாம் தீர்த்து விடுவார்.
‘கீதா ரகசியம்’ என்றவுடன் எனக்கு ஞாபகம் வருகிறது. அவருடைய சவுக்கண்டிக்குக் கதவு, தாழ்ப்பாள் ஒன்றும் கிடையாது; எல்லாம் திறந்தேதான் கிடக்கும். ஒரு சிறு பெட்டியில் ஏழெட்டுப் புஸ்தகங்களை வைத்து மூடியிருந்தார்; அவைதான் அவருக்கு அப்போதிருந்த ஆஸ்தி.
உள்ளூர்க்காரர்களுக்குச் சாம்பமூர்த்திராயரின் பெட்டியில் என்ன இருந்தது என்பது நன்கு தெரியும். ஆனால் அகஸ்மாத்தாக அந்தத் தோட்டத்துப் பக்க்ம போன வெளியூர்க்காரன் ஒருவன் சவுக்கண்டி திறந்து கிடப்பதையும், அதில் பெட்டி இருப்பதையும் பார்த்து விட்டு, பெட்டியில் ஏதாவது இருக்கும் என்று எண்ணி அதைத் திருடிக்கொண்டு ஓடிவிட்டான். ராயர் இந்தத் திருட்டைக் கண்டு பிடிக்கும்போது இரவு எட்டு மணி இருக்கும்.
கோயிலுக்குப் போயிருந்தபோது அந்தத் திருட்டு நடந்து விட்டது.
“ஐயோ பாவம்!” என்றார் ராயர். “தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டுபோய் அவன் திறந்து பார்த்து, பெட்டியில் புஸ்தகங்களைத் -தவிர வேறு எதையுங் காணாமல் மிகவும் வருத்தப் படுவானே?
என்று கஷ்டப்பட்டார் அவர்.
“புஸ்தகங்கள் தான் உங்களுக்காக இருந்தன. அதுவும் போய் விட்டனவே!” என்றேன் நான்.
“எங்கே போகும்?” என்றார் ராயர். “ஆற்றங்கரையோடு போனால், திருடன் பெட்டியைத் திறந்து பார்த்த இடத்திலேயே புஸ்தகங்களைப் போட்டுவிட்டுப் போயிருக்கப் போகிறான். காலையில் நான் தேடிக் கொண்டுவந்து விடமாட்டேனா?” என்றார்.
அவர் சொன்னபடியும் செய்தார். திருட்டுப் போன தம் புஸ்தகங்களைத் தேடிக்கொண்டு காலையில் கிளம்பினார். மாலைக்குள் எல்லாப் புஸ்தகங்களையும், பெட்டியுடன் கொண்டு வந்து சேர்த்துவிட்டார். கிராமத்து எல்லைக்கு வெளியே இரண்டு பர்லாங்கு போவதன் முன்னரே திருடன் பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறான். அதில் ‘கீதா ரகசியம்’ முதலிய உபயோகமற்ற புஸ்தகங்களைத் தவிர வேறு எதையும் காணாமல் போட்டு விட்டுப் போய்விட்டான். ராயர் திருப்பி அவற்றை எடுத்துக் கொண்டு
வந்து விட்டார்.
“தனியாக இருக்கிறீர்களே, இரவில் உங்களுக்குப் பயமாக இருப்பதில்லையா?” என்றேன் நான் ஒரு சமயம்.
“என்ன பயம்? தவிரவும் நான் எப்போதுமே இரவில் தனியாக இருப்பதில்லை.
சில சமயம் வலை வீசி வௌவால் பிடிப்பவன் வந்து என்னுடன் இரவு முழுவதும் அளவளாவிக் கொண்டிருப்பான்,”
“யார் அது, வலைவீசி வௌவால் பிடிப்பவன்?”
”அவனா? அவனுக்கு இவ்வுலகில் எத்தனையோ பெயர்கள் உண்டு. சாத்தான் என்றும் கடவுள் என்றும் யமன் என்றும் பிசாசு என்றும் பலவிதமாக அவனைச் சொல்லுவார்கள். சில சமயம் அவன் ஸர்ப்பரூபமாக எனக்கருகே ஊர்ந்து செல்லுவான்” என்றார் சாம்பமூர்த்தி ராயர் புன்சிரிப்புடன்.
அவர் ஊரைவிட்டுப் போனதில் எனக்குத்தான் மிகவும் வருத்தம். கடைசியாக எஞ்சியிருந்த அந்தத் தோட்டத்தையும் அதில் எழுப்பியிருந்த சவுக்கண்டியையும் அவருடைய புஸ்தகங்களையும், ஊரில் ஓர் இலவச வாசகசாலை ஸ்தாபிப்பதற்கென்று சாஸனம் பண்ணிக்கொடுத்துவிட்டு அவர் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியுடன் பண்டரிநாதனைத் தரிசிக்கக் கிளம்பி விட்டார். கால்நடையாகவேதான் செல்லுவதாக அவர் உத்தேசித்திருந்தார்.
பட்டினத்தில் அவருடைய பிள்ளை, மருமகள், பேரக் குழந்தைகள் முதலியவர்களுடன் மூன்றே நாட்கள் தங்கினாராம். மேலும் நடந்தே இடையிலுள்ள க்ஷேத்திரங்களை எல்லாம் தரிசித்துக் கொண்டு அவர் பண்டரீபுரம் போய்ச் சேர இரண்டு மாதங்களுக்கு மேல் பிடித்தது. நான் கேட்டுக் கொண்டிருந்தபடி அவர் பண்டரீபுரம் போய்ச் சேர்ந்ததும் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். நானும் பண்டரீபுரம் போவது, அவருடன் சில நாள் தங்குவது என்று தீர்மானித்திருந்தேன்.
அதற்குள் அவருடைய மரணச் செய்தி வந்துவிட்டது. பண்டரீபுரம் போய்ச் சேர்ந்து நாற்பது நாளைக்குள் அவர் இறந்து விட்டார்.
அவருடைய வாழ்க்கையின் அர்த்தத்தைப்பற்றி நான் சிந்தித்துப் பார்க்கிறேன். அவருடைய கதையைக் குழந்தைகளுக்குச் சுந்தாப்பாட்டி சொன்னாள்.

One Comment on “க.நா.சு. / சாம்பமூர்த்தி”
Comments are closed.