
ஆபீஸிலிருந்து அன்று வெகு சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன்:
வாசலில், அவருக்கு வழக்கமான நாற்காலியில், அப்பாவைச் காணோம். உள்ளே பானையிலிருந்து தண்ணீர் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்காக நான் புஸ்தகசாலையிலிருந்து கொண்டு வந்த புஸ்தகத்தை அவர் நாற்காலியில் போட்டுவிட்டு, ‘அப்பா…. வ்.வ்!’ என்று குரல் கொடுத்தேன்.
பதிலில்லை. நாங்களிருவரும் ரேழியில் சந்தித்தோம். அவர் உதடுகள் கோணல் கோணலாகத் துடித்துக் கொண்டிருந்தன; சுன் கலங்கியிருந்தது.
என்ன அப்பா?
ஒண்ணுமில்லையே?’ அவர் குரல் சற்று நடுங்கிற்று,
சரி, சட்டையைக் கழற்றிவிட்டு இன்னுங் கொஞ்சம் நாழி கழித்துத் தீவிரமாக விசாரித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து மாடிச் சாவியையெடுத்துவரச் சமையலறைக்குள் புகுந்தேன் அவள் கலக்கத்துக்குக் ராஜியின் கண்களும் கலங்கியிருந்தன.
காரணம் அவள் நறுக்கிக் கொண்டிருந்த வெங்காயமாக இருக்கலாம்! சாவிக் கொத்தைக் கையிலெடுத்தபடியே, ‘அப்பா ஏன் அப்படி என்னவோபோல் இருக்கா?’ என்று விசாரித்தேன்.
“ஏன்? எனக்குத் தெரியாதே!” என்றாள் என் மனைவி
அவள் கண்களின் கலக்கம் அவன் குரலும் சற்று நடுங்கிற்று. வெங்காயத்தால் மட்டுமல்ல என்று தீர்மானித்துக் கொண்டேன் என்ன தகராறு என்று யோசித்தபடியே ‘ஏன்? என்ன விசேஷம்! என்று விசாரித்தேன்.
ஒரு நிமிஷம் மௌனம் சாதித்தாள் என் மனைவி, பின்னர்,
‘எதுத்தாத்திலே, கார்த்தாலை ஒரு புடவை, மத்தியானம் ஒரு புடவை, சாயங்காலம் ஒரு புடவைனு புதுசு புதுசாக் கட்டிக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருக்குமே, அந்தப் பெண் செத்துப் போயிடுத்தாம்….” என்றாள்.
”யாரு?”
“சாவித்திரின்னு அந்த எதுத்தாத்து மாமா பொண், அவ பாட்டி கார்த்தாலை முதல் முட்டிண்டு மோதிண்டு அழறா.’
“எப்போ செத்துப் போச்சாம்?”
‘கார்த்தாலை பத்து மணிக்கு.”
‘எந்தூரிலே?”
“எல்லாம் இந்த ஊரிலேதான். ஏதோ தொண்டையில் ஆபரேஷன்னு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்களாம். டாக்டர் மயக்கம் கொடுத்தானாம்; அந்த மயக்கத்திலிருந்து முழிச்சுக்கவே யில்லை…. பாவம் இப்படித்தான்….
‘எத்தனை…..?”
“கேளுங்களேன். அந்தப் பெண் நாலு மாதமாய் ஸ்நானம் பண்ணாமலிருந்ததாம். பத்து நாள் கொண்டு வந்து வைத்துக் கொள்ளலாம் என்று, அவப்பா முந்தாநாள்தான் அழைச்சுண்டு வந்தார். தொண்டையிலே ஏதோ கஷ்டமாயிருக்குன்னு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போனார்களாம். பாவிகள்! மயக்க மருந்தைக் கொடுத்து ஒரே மயக்கமாய்க் கிடத்திப்புட்டான்கள்…. பாவம்… பார்க்கச் சகிக்கவில்லை. வயசு இன்னும் முழுசா பதினஞ்சு ஆகவில்லை.”
“பதினஞ்சா?”
“போன வருஷந்தான் கலியாணம் ஆச்சாம். ஆம்படையா னுக்குக் கர்நூலில் எண்பது ரூபாய் சம்பளமாம். பாவம்! குழந்தை பிறக்கப் போறது என்று அவன் சந்தோஷமா ஸ்வப்பனங் கண்டு கொண்டிருப்பான். கார்த்தாலையிலேயே அவனுக்குத் தந்தி யடித்தாய்விட்டதாம் நாளைக்கு வந்துவிடுவான்; அவன் . வந்துதானே எல்லாம் ஆகவேணும்… என்ன கஷ்டம்!” இவ்விடத்தில் மறதியாக வெங்காயம் நறுக்கிய கையுடன் கண்ணைத் துடைத்துக் கொண்டுவிட்டாள்; கண்ணீர் பெருகிற்று.
“உலகத்திலே எத்தனையோ கஷ்டம்; நம்ம கஷ்டங்களைச் சகிக்கவே முடியவில்லை, ஏதோ போ… இருந்தாலும் கஷ்டந்தான்.. வயசு பதினஞ்சுகூட ஆகவில்லையென்றால்… அவரவர் பண்ணின் பாவம்!” என்று நான் சமாதானஞ் சொன்னேன். “நான் மாடிக்குப் போகிறேன். காபி கொண்டுவா!” என்று சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டு, சமையலறையை விட்டு வெளியேறினேன்.
மாடிப்படி ஏறும்போதுதான் மறுபடியும் அப்பாவைப் பற்றி ஞாபகம் வந்தது. ‘ஓஹோ! அந்தப் பெண் இறந்தது’ அவருக்குக் தன்னுடைய ஒரே பெண் இருபத்திரண்டாவது வயதில் இறந்தது ஞாபகம் வந்துவிட்டது போலும்! அதான் அந்தக் கண் கலக்கத்தின் அர்த்தம்’ என்று யோசித்தபடியே மாடிக்குப் போகாமல், இறங்கி வாசல் பக்கம் போனேன்.
அப்பா சிமிண்டுத் திண்ணையில் காலைக் கட்டிக் கொண்டு பித்துப் பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்டதும் அவர் கண்களில் பிரகாசித்த பித்து, கொஞ்சம் மறைந்தது. ஒருதரம் கனைத்துக் கொண்டார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.
நானும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
‘எதிராளாத்தில்…. என்று ஆரம்பித்தேன்.
“என்ன கஷ்டம் போ! ஏதோ கஷ்டப்படப் பிறந்தவர்கள் நாமெல்லாரும். வயசு ஆக ஆக நமக்கெல்லாம் கஷ்டந்தான் அதிகரிக்கிறது…”
“யார் பெண்? அந்த ஸ்டோர்ஸ்….
“இல்லை, போலீஸிலிருந்தாரே அவர் பெண். நாலைந்து நாளைக்கு முந்திதான் ரொம்பப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்….”
“பாவம், ஸாதுப் பிராமணன்.’
“இந்தத் தர்ம ஆஸ்பத்திரியிலே அநியாயந்தான் பணக்காரன்னா ஒரு தினுசு; ஏழைன்னா ஒரு தினுசு! அப்பா இந்த ஆஸ்பத்திரிகளுக்கே போகக் கூடாது…
“என்ன வியாதி?” என்றேன் நான்.
“வியாதியுமில்லை; ஒன்றுமில்லை, ஏதோ டான்ஸில்ஸ் ஆஸ்பத்திரியில் கத்துக்குட்டி வைத்தியன்களெல்லாம் சேர்ந்து கொண்டு, குளோரோபாரத்தை நிறையக் கொடுத்து, ஆப்பரேஷன் செய்தான்களாம். ஆப்பரேஷன் சரியாகப் போச்சு. பெண் மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளவேயில்லை”.
”அந்த டாக்டரையெல்லாம் ப்ராசிகியூட் பண்ணினால் என்ன?”
“யார் பண்றது? என்னத்துக்காகப் பண்றது? பெண்ணோ போயிடுத்து. இன்னும் பணத்தைக் கொட்டியழுது கோர்ட்டுக்கு வேறே போகணுமா?”
‘அதுவும் சரிதான். இருந்தாலும்…
“போன வருஷந்தான் கலியாணம் ஆச்சாண்டா! மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கலியாணம் பண்ணினாராம். இன்னும் கடன் முழுவதும் அடைத்தபாடில்லை, அதற்குள் பெண் போயிடுத்து…”
“பெண்ணுக்குப் பதில் அந்தக் கடன்காரனுக்கு நெருப்புப் போடக் கூடாதா என்றிருக்கும் அவருக்கு!”
“என்ன பண்றது? பெண் வந்தது பற்றி எவ்வளவு பெருமைப் பட்டார் தெரியுமோ அவர்! என்னவோ, இந்தப் பெருமையிருந்தால் கடவுளுக்கே பொறுக்காது போலிருக்கு. மனித ஆசையைப் பங்கப்படுத்துவதில் ஈசனுக்கு ஏனோ இந்தப் பிரேமை! அப்பு சாஸ்திரியார் இருந்தாரே-உங்க, தாத்தா அவர் இரண்டு பிள்ளைகளும் மன்மதனாட்டமாயிருக்கும்; ஆனால், ஒரே மக்கு. ஒண்ணுக்காவது மெட்ரிக்குலேஷன் கூடப் பாஸாக மாட்டேனென்றுவிட்டது. ஆனால், அவர்களிடம் சாஸ்திரியாருக்கு என்ன ஆசை! என்ன பெருமை!…. கடவுளுக்கே சகிக்கவில்லை. ஒருத்தன், இருபது வயதிலே போய்ட்டான். இன்னொருத்தன் இருபத்திரண்டாவது வயதில் போய்ட்டான் …. அப்பு சாஸ்திரியாருடைய ஜோரும் அத்துடன் போய்விட்டது. அவர் வாழ்விலே உத்ஸாஹமில்லை… நான் அப்போது இதைப்பற்றி யெண்ணிப் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் என் பெண்ணிடம் எனக்கிருந்த பெருமை…” அவர் கண்கள் நிறைந்தன; உதடு துடித்தது; மேலே பேச முடியாமல் தவித்தார்.
“என்னமோ போ! நமக்கு எட்டாதது எத்தனையோ இவ்வுலகில் இருக்கிறது. சாவையும் பற்றி யோசித்துக்கூட பிரயோஜனமில்லை. ஒரு கோடிகூட நம்மால் காணமுடியாது’ என்று தத்துவம் படித்தேன் நான்.
இரண்டு நிமிஷம் அப்பா ஒன்றும் பேசவில்லை. நாள் மறுபடியும் பேச ஆரம்பித்தேன். “நான் நேற்று ஒரு கதை வாசித்துக் கொண்டிருந்தேன். பாக்தாத் நகரத்தில் ஒரு பணக்காரன் தன் வேலைக்காரனைக் காலையில் சந்தைக்கு ஏதோ வாங்கி வர அனுப்பினான். வேலைக்காரன் பத்து நிமிஷத்தில், உள்ளம் பதை பதைக்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, யஜமானிடம் வந்து, ‘சாமி! சந்தையில் நான் இன்று எமனைக் கண்டேன்! அவன் என்னை ஒருவிதமாக உற்றுப்பார்த்து முகத்தைச் சுளித்தான். நான் பயந்து விட்டேன். இன்று நான் பாக்தாத்தில் தங்கினால் எமன் என்னை அழைத்துப் போய் விடுவான் என்றே தோன்றுகிறது. யஜமானே தாங்களே வழிகாட்ட வேண்டும். நான் ஆயிரம் மைல்களுக்குப் பால் இருக்கும் ஸமாராவுக்குப் போய்விடுகிறேன். எமன் என்னைத் தேடி அவ்வளவு தூரம் வரமாட்டான். தங்கள் லாயத்திலிருக்கும். அதி வேகமான குதிரையொன்றைத் தரவேணும்;’ என்று காலில் விழுந்து கெஞ்சினான்.”
“பைத்தியக்காரன்!” என்றார் எங்கப்பா.
நான் மேலே கதையைச் சொன்னேன். “யஜமானும் வேலைக்காரனிடம் அனுதாபங்கொண்டு தன் குதிரையில் மிகச் சிறந்தது ஒன்றின் மேலேறி அவனை ஸமாரா நோக்கியனுப்பினான். பிள்ளர் யஜமானே சந்தைக்குச் சென்றான். அங்கு அவன் எமனைக் கண்டு ‘நீ ஏன் இன்று காலை என் வேலைக்காரனைப் பயமுறுத்தினாய் என்று கேட்டான். யமன் அதற்கு, ‘நான் அவனைப் பயமுறுத்த வில்லை. நான் இன்று மாலை ஆறுமணிக்கு அவனை ஸ்மாராவில் சந்திப்பதாக ஏற்பாடு செய்திருந்தேன். அவன் இன்று காலை வரையில் பாக்தாத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்!” என்றான்.
அசடன்-வேலைக்காரன்-எமனை ஏமாற்றிவிட்டு ஓடிவிடுவதாக எண்ணிக் கொண்டு அவனைத் தேடிக் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கவே கிளம்பியிருக்கிறான். ஆம், நாம் செய்யும் சாரியங்களில் பல இத்தன்மையானதுதான். விசாரமும் நமக்கு இதை அறிவுறுத்தவே பிரயோசனப் படுகிறது… ஹும், காப்பி சாப்பிட்டாச்சா?”
“இல்லை” யென்று சொல்லிக்கொண்டே எழுந்து மாடிக்குப் போனேன்.
கையில் சூடு ஆறிக்கொண்டிருந்த காப்பியுடன் காத்துக் கொண்டிருந்தாள் ராஜி. ‘சட்டையைக் கூடக் கழட்டாமல் என்ன பேச்சு?’ என்று கோபித்துக் கொண்டாள்.
காப்பியைக் கையில் வாங்கிக் கொண்டே சிரித்தேன்.
எங்கள் மாடி வராந்தாவிலிருந்து பார்த்தால் எதிர்வீடு தெரியும். ராஜி வராந்தாவில் போய் நின்று கொண்டாள். நான் சட்டையைக் சுழட்டிவிட்டுக் கையில் காப்பியுடன் பின் தொடர்ந்தேன். ராஜி அந்தப் பெண்ணைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.
“பாவம் பதினைந்து வயதிலே போறதுன்னா? பாவந்தான். இந்தக் காலத்தில் சுமங்கலிக் கிழவிகள்-எழுபது வயதில் நெற்றியுங் குங்குமமுமாய் மஞ்சள் புடவையுடன் – எவ்வளவு இருக்கிறார்கள்! அது மாதிரி ஒரு கிழவியிருந்தால் வீட்டுக்கே மங்களகரமாயிருக்கு. இப்போதெல்லாம் பூவும் பிஞ்சுமாய்…! வந்து விட்டாளா? வாசல்லே? முண்டை! குடியிருக்கிறாத்திலே கிளியாட்டமா ஒரு பெண் போயிடுத்து. அழகாக தலையை வாரிப் பின்னிண்டு, பொட்டு வைத்துக் கொண்டு, வாசல்லே பூவும் மணமுமாக வந்து நிற்கிறாளே தேவடியாள்!” என்று வசைமாரி பொழிய ஆரம்பித்தாள்.
யாரை என்றறிய நான் அவள் பக்கம் போய் நின்று பார்த்தேன். எதிராளாத்தில் போலீஸ்காரருடன் ஒட்டுக் குடியிருந்த ஸ்டோர்ஸ் காரரின் மனைவி கோமளம் வழக்கம் போலக் காட்சியளித்தாள். அவள் பார்க்கக் கொஞ்சம் அழகாயிருப்பாள். நல்ல சிகப்பு; நீண்டு சுறுத்த கூந்தல்; அழகிய உருண்டையான முகம். மூன்று குழந்தை பெற்றெடுத்தவள் எனினும், பதினாறு வயசுச் சிறுமி போலிருப்பாள், நடப்பாள், நிற்பாள்.
“போறவா போனா இருக்கிறவா நன்னாயிருக்க வேண்டியது தானே!” என்றேன் நான்.
‘லீலா நேற்றுத்தான் சொன்னாள்; அந்த முண்டையைத் தேடி வர ஆளுக்குக் கணக்கு வழக்கில்லையாம்; ஆளுக்கொரு புதுப்புடவை கொண்டுவந்து தரான். கட்டிண்டு மினுக்கிறாள்.
“உங்க லீலா ரொம்ப யோக்யம்தான்.’
“நீங்க கோமளத்துக்குப் பரிந்துண்டுதான் பேசுவேள்? பேச மாட்டேளா; பொம்மனாட்டி கொஞ்சம் அழகாயிருந்தால் புருஷாள்ளாம் பல்லைக் காட்ட மாட்டேளா?”
“அந்தச் சாவித்திரி செத்ததற்காக இவளை என்ன பண்ணச் சொல்றே?
‘எனக்குக்கூட இன்னிக்குத் தலைவாரிப் பூ வச்சுக்க மனசில்லை; அவாத்திலே குடியிருந்துண்டு இப்படிப் பண்றாள். அவள் கட்டேலே போக! ராத்திரிப் பிரேதத்தை எடுத்துண்டு வந்தால் உள்ளே வரக்கூடாது என்றுகூடச் சொல்லுவாள், அவள்.’
“இன்றும் ஆஸ்பத்திரியிலிருந்து எடுத்துண்டு வரலையா?’
‘இல்லை. ராத்திரி எட்டுமணிக்குமேல்தான் கொண்டுவரப் போறாளாம். பிணம் ரேழியில் கிடக்க இந்தத் தேவடியாள் தன்னைத் தேடிவந்த ஆளை அழைச்சுண்டு உள்ளே போனாலும் போயிடுவாள். என்ன வேண்டிக்கிடக்கு?” என்றாள் ராஜி.
‘அவ எப்படியாவது போறா; நமக்கென்ன?” என்றேன் நாள்
“அப்பா, இன்னி சாயங்காலம் காப்பிகூடச் சரியாகச் சாப்பிட வில்லை. பாதி டம்ளர் மீதி வச்சுட்டார்… அடேடே! உள்ளே வாணலியில் கறி கரியாகியிருக்கும்!” என்று சொல்லிக் கொண்டே கீழே ஓடிவிட்டாள்.
அன்று அவருக்கிருந்த மனோநிலையில் அப்பா தாமாக எங்கும் கிளம்பமாட்டார் என்று எண்ணி, நான் அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். அவரைப் பீச்சுப் பக்கம் அனுப்பிவிட்டு, நான் மவுண்ட் ரோட் பக்கம் போய்விட்டு, இரவு எட்டரை மணிக்குத்தான் வீடு திரும்பினேன்: அப்பா நான் வந்ததற்கு அப்புறம், கால்மணி கழித்துதான் வந்தார். தினமணிப் பேப்பர் வாங்கிக் கொண்டு வந்தார். சாப்பிட்டுவிட்டுப் பேப்பர்பார்த்துக் கொண்டிருக்கையில், இரவு ஒன்பதரை மணிக்கு,
எதிராளாத்தில் ஒற்றை மாட்டு வண்டியில் ‘சாவித்திரி’ வந்திறங்கினாள். ரேழியில் கிடத்தப்பட்டாள். அவள் தாயாரும், பாட்டியும் கம்மிய குரலில் துக்கம் தாளாமல், சப்தஞ்-செய்ய முடியாமல் திணறினர். அவள் தகப்பனார் வாய் திறவாமல் தலையைத் தன் கைகளில் தாங்கிக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நான், வாசித்துக் கொண்டிருந்த பேப்பரைக் கீழே வைத்துவிட்டு, வேடிக்கை பார்க்க வெளிக்கேட்டைத் திறந்து கொண்டு தெருவில் போக முயன்றேன்.
அப்பா அழைத்தார், “இங்கே வா ராஜா; பாவம், அதைப் பார்க்கப் போவானேன்?” என்றார். அவருக்குப் பழைய ஞாபகங்கள் மறுபடியும் வந்து மூளாமலிருக்க நான் அருகிலிருந்தால் தேவலை என்று எண்ணினார் போலும்.
‘கிராமத்தில் என்றால்’ தெருவில் யாராவது செத்துக் கிடந்தால் யாரும் சாப்பிடக் கூடாது என்று கட்டுப்பாடு. செத்தவர்களின் ஆப்த சிநேகிதர்கள்தான் பிணத்தைத் தூக்கவேணும். பட்டணத்தில் அதெல்லாங்கிடையாது! நமது சாவிலேகூட நாகரீகம் வந்துவிட்டது!’
என்றார்.
‘ஆஸ்பத்திரியிலேயே வைத்து எடுக்கக் கூடாதோ! வீட்டுக்கு எடுத்து வருவானேன்? கூடக் குடியிருப்பவர்கள் ஆட்சேபணை செய்தால்…’
“கஷ்டந்தான். ஆனால், கூடக் குடியிருப்பவர்கள் இந்தச் சமயத்திலெல்லாம் ஆட்சேபணை சொல்வார்களா! என்ன?”
“அவர்களுக்கு இடஞ்சல்தானே?” என்றேன்.
“ஆமாம் ஏழையாயிருந்தால் எல்லாக் கஷ்டமுந்தான்.”
இந்தச் சமயம் எதிர்வீட்டில் அழுகை இன்னும் பலமாக ஆரம்பித்தது.
அப்பா, “என்னத்துக்கு இப்படி அழறா? இனிமேல் என்ன பிரயோசனம்? பாவம் அந்தப் பிராமணன் காலம்பர முதல் சாப்பிடவில்லை. மத்தியானம் யாராவது தீர்த்தங்கூட வேணுமானால் கொடுப்பாரில்லை. நான் துக்கம் விசாரிக்கலாமோ என்று எண்ணினேன். “ஆனால், நான் விசாரித்து என்ன பிரயோசனம்?” என்று பெருமூச்சு விட்டார்.
“நாளைக்கு அவன் வந்துதான் நெருப்புப் போடணும். எப்போ வரானோ?”
“யார் வந்தா என்ன? எனக்கு என்னவோ அவர் படற துக்கத்தைக் காண ஸஹிக்கவில்லை, அந்தப் பாழும் எமன்னு ஒருவனிருந்தால் அவனுக்கு எப்படித்தான் ஸஹிக்கிறதோ?”
“எமன் இங்கே நின்னால் தானே; வேறு யாரையாவது அழைக்க எங்காவது போயிருப்பான்.’
“இவளுக்குப் பதில் உலகத்தில் பற்றுதல் இல்லாத ஒருவன் எமனிடம், ‘என்னையழைத்துப்போ; நான் வரேன்; இவளை விட்டுவிடு’ என்று சொன்னால் ஏன் அவன் கேட்கக் கூடாது; அவனுக்கென்ன நஷ்டம்?”
“அப்படிச் சொல்லக்கூடியவர்கள் யார்? இதோ எதுத்தாத்தில் அழுதுகொண்டிருக்கிறார்களே அந்தப் பெண்ணுக்காக, அவர்களில் யாராவது தங்கள் உயிரைத் தியாகஞ் செய்யத் தயாராக இருப்பார்களா? அவள் தாயார்? அவள் தகப்பன்? அவள் தம்பி? அவள் கணவன்? யார்?”
“ஒருவன் தியாகஞ் செய்து அவள் பிழைத்துக் கொண்டால் அவனைப் பற்றிய வரையில் லாபமில்லையென்பதற்காகத் தியாகஞ் செய்யத் தயாராக இருப்பதில்லை. கதையில் மனைவியிறக்கக் கணவன் தன் ஆயுளில் பாதியை அவளுக்குத் தத்தஞ் செய்து அவளை மீட்டான் என்று கேட்டதில்லையா? அது யாரும் செய்யத் தயாராக இருப்பான்.”
“நிஜம்தான்.
இறந்தவளுடைய உறவினர்தான் அந்தத் தியாகஞ் செய்ய தயாராக இருக்கணும் என்று என்ன அவசியம் தெருவில் போகிற யாராவது, நம்மைப்போல் அன்னியன், அவர்கள் துக்கங்கண்டு பரிதாபங்கொண்டு தன் வாழ்வில் இன்பங் காணாதவனாய், தன் உயிரை கொடுத்து ஒரு இளம் உயிரை மீட்கத் தயாராக இருக்கலாம்…”
“ஏன் இருக்கக்கூடாது? ஆனால் அபூர்வ மனிதன் என்றே அப்படிப்பட்டவனைச் சொல்லவேணும். எனக்கு வாழ்விலே பிடிப்புக் கிடையாது; நான் உயிருடனிருந்து இனிப் பிரயோசனம் என்ன? ஆனால் என்னை இப்படிப்பட்ட தியாகஞ் செய்யச்சொன்னால் நான் தயங்கத்தான் தயங்குவேன். நான் மஹாத்மா அல்ல?” என்றார் அப்பா.
“நல்ல வேளை!” என்றேன் நான்.
“மாடியில் அவள் தனியாயிருக்காள். பயப்படப்போறா. நானும் படுக்கத்தான் போகிறேன். நீ போ!’
நான் மாடிக்குப் போனேன். ராஜி வராண்டாவில் நின்று கொண்டிருந்தாள்.
‘அப்பாவுக்கு ரொம்ப மனதுக்குக் கஷ்டமாயிருக்கு” என்றேன் நான்.
‘இன்னிக்குச் சரியாச் சாப்பிடவேயில்லை.’
“நாம் என்ன பண்றது போ. போய்ப் படுத்துக்கோ போ. நான் கொஞ்ச நாழி எழுதிவிட்டு வருகிறேன்” என்றேன். நான் உட்கார்ந்தபோது மணி பத்து இருக்கும். நான் இரண்டு மணி நேரம் எழுதிக்கொண்டிருந்தேன். மணி பனிரெண்டு அடிக்கும்போது மாடி வராந்தாவுக்குப் போய்ப் பார்த்தேன். எதிர்வீட்டு ரேழியில் ஹரிக்கேன் லைட் எரிந்து கொண்டிருந்தது. லைட்டுக்கருகில் சாவித்திரியின் அம்மா உட்கார்ந்திருந்தாள். அவன் அப்பா திண்ணையில் சாய்ந்து கொண்டிருந்தார். உருவம் தெரிந்ததே தவிர விழித்துக் கொண்டிருந்தாரா தூங்கினாரா என்று தெரியவில்லை.
ஏதோ யோசனையிலாழ்ந்தவனாகக் கீழே, இறங்கிப் போய், விளக்கைப் போட்டுப் பார்த்தேன். அப்பா பாயில் காலைக் கட்டிக் கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராக உட்கார்ந்திருந்தார். நான் விளக்குப் போட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்.
“ஏன் அப்பா இன்னும் தூங்கவில்லை?”
“தூக்கம் வரவில்லை” -குரல் துக்கத்தாலும் மனோவியா கூலத்தாலும் ஹீனமாக இருந்தது.
‘படுத்துக்கோயேன்” என்றேன்.
“நீயும் போய்ப் படுத்துக்கோ. நாழியாச்சு” என்றார். அவர் படுத்ததும் நான் விளக்கையணைத்துவிட்டு மேலே போய்ப் படுத்தேன். படுத்ததுதான் தாமதம்; தூங்கி விட்டேன்.
அரைமணிதான் தூங்கியிருப்பேன். அப்பா ஒரு மஹாத்மா வாகி விட்டதாகக் கனவு கண்டு, திடுக்கென்று விழித்தெழுந்தேன். மனசைத் திடப்படுத்திக் கொண்டு சந்தடியில்லாமல் கீழே அப்பா இறங்கிப்போய் விளக்கைப் போட்டுப் பார்த்தேன். நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அன்றிரவு எனக்கு அதற்கு மேல் தூக்கம் பிடிக்கவில்லை. ஏதோ எழுத உட்கார்ந்தேன். அன்றிரவு முழுவதும் எழுதிக் கொண்டேயிருந்தேன். பொழுது விடிவதற்குள் அப்பா என்ன பண்ணுகிறார் என்று பார்க்க நான் மூன்று தரம் கீழேயிறங்கிப்போய் வந்தேன்.
விடியற்காலம் வராந்தாவில் ஈஸி சேரில் சாய்ந்து சற்று கண்ணயர்ந்திருப்பேன். எதிர்வீட்டில் அழுகையும் கூக்குரலும் கேட்டு முழித்துக் கொண்டேன். சாவித்திரியின் கணவன் வந்துவிட்டான். .. இருபத்தைந்து வயதிருக்கும். அவன் நடப்பது ஒன்றிலும் பட்டுக் கொள்ளாமல் தூர நின்று கொண்டிருந்தான். யாரோ தெருவில் வேடிக்கை பார்க்க வந்தவன் போல் காணப்பட்டான். அவன் செய்வதற்கு, சொல்வதற்கு, என்ன இருந்தது? ஏதோ அவன் வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது, அவ்வளவுதான்.
கீழே இறங்கிப் போனேன். உட்கார்ந்திருந்ததால் என்னைக் கண்டதும்.
‘அந்தப் பையனை பார்த்திருக்கிறேன்” என்றார்.
‘இருக்கலாம்.’
“நானும் துக்கம் விசாரித்துவிட்டுக் கூடப்போய் ஒரு முழுக்கு போட்டு விட்டு வருகிறேன்” என்றார்.
நான் தடுத்துக் கூறவில்லை.
எதிர்வீட்டில் ஏற்பாடெல்லாம் விமரிசையாக நடந்தது. காலை எட்டு மணிக்குப் பல்லக்குக் கிளம்பிற்று. சாவித்திரியின் கடைசிப் பிரயாணம் ஆரம்பமாயிற்று. சிவிகைக்குப் பின்னால் ஏழெட்டு புருஷர்கள் நடந்தனர். அதில் அப்பாவும் கலந்து கொண்டார். அதற்குப் பின்னால் ஒரு சிறுகோஷ்டி பெண்கள். நானும் ராஜியும் மாடி வராண்டாவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.
“இவரும் எதுக்குப் போகணும்?” என்றாள் ராஜி.
“போயிட்டு வரட்டுமே. அதனாலென்ன?” என்றேன் நான். ஆனால் என் மனசில் இருந்த கலவரம் அப்பா திரும்பி வரும் வரையில் நீங்கியபாடில்லை. அவர் திரும்பி வந்து, மறுபடியும் ஒரு தரம் ஸ்நானஞ் செய்துவிட்டு, வழக்கப்படி சாப்பிட்டான பிறகுதான் எங்கப்பா ஒரு மஹாத்மா இல்லை என்றறிந்து என் மனம் நிம்மதியடைந்தது!
1961
க.நா.சு. / சாம்பமூர்த்தி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “க.நா.சு. /சாவித்திரி”
Comments are closed.