
1
எங்கிருந்தோ வந்தார்; வயது அறுபது அறுபத்தைந்திருக்கும். காவேரி மடத்தில் பத்திருபது நாள் தங்கப் போகிறேன் என்றார். ஊர் எங்கேயோ தெற்குச் சீமை என்றார். ஆனால் அவருடைய பேச்சு பாவனையெல்லாம தெற்குச் சீமையதைப் போலில்லை. மஹாதேவ அய்யரிடம் மடத்தின் சாவியை வாங்கிக்கொண்டு மடிசஞ்சியுந்தானுமாக ஒருநாள் காலை காவேரி காவேரி மடத்தில் குடிபுகுந்தார்.
அவருடைய ஊர் பெயரெல்லாம் விசாரித்தார் மஹாதேவய்யர் ஆனால் நிச்சயமாக அவர் அறிந்து கொண்டது ஒன்றுமில்லை. கிழவர் பிடிவாதமாக மௌனம் சாதித்தாலும் ரொம்ப நல்லவராகக் காணப்பட்டதால், மடத்துச் சாவியை அவரிடம் கொடுப்பதற்கு ஒரு ஆக்ஷேபமும் எழவில்லை. தவிரவும் மடத்தில் திருட்டுப்போசு ஒன்றுமில்லவுமில்லை. அங்குப் பல நாளாக தேளும் பல்லியுந்தான் வசித்து வந்தன.
சாவியைக் கொடுத்துவிட்டு மஹாதேவய்யர் கிழவரைத் தன் வீட்டிலேயே தங்கலாமேயென்று பண்ணாத உபசாரமெல்லாம் பண்ணினார். அவர் வழக்கம் அது. கிழவர் தன்னால் பிறருக்கு அசௌகரியம் நேருவதை விரும்பவில்லையென்றும், தான் எப்பொழுதுமே தனிமையை நாடுகிறவர் என்றும் தெரிவித்துவிட்டு மடத்துக்குப் போய்விட்டார்.
அவர் அப்படி காவேரி மடத்தில் போய்க் குடிபுகுந்ததில் சாமா குரு ஒருவனுக்குத்தான் அதிருப்தி. அவன் இரவுகளை வழக்கமாக அம்மடத்தில்தான் கழித்தான். அது பலவிதங்களில் அவனுக்குச் சௌகரியமாக இருந்தது. ஊருக்கு ஒதுக்குப்புறமாகர்
இருந்த அவ்விடத்தில் யார் என்ன செய்தாலும் கேள்வி முறை சிடையாது. தவிரவும் சாமாவுக்குப் பிறர் படுகை; வாழைத்தார்களில் மோகம் அதிகம்; அவைதான் ருசியானவை என்பது அவன் கொள்கை. ஊர் பேர் தெரியாத ஒரு கிழவனிடம் மடத்துச் சாவியைக் கொடுத்தது தவறு என்று சொன்னான் சாமா. ஆனால் எங்கள் தெருவில் குழந்தை குஞ்சுகள் எல்லாருக்கும் சாமாவைப் பற்றித் தெரியும். அவன் வார்த்தைகளை நாங்கள் காதில் வாங்கவேயில்லை.
2
அன்று மாலை நாங்கள் நாலைந்து பேர்வழிகள் ஆற்று மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தென்னண்டை ஓரமாக அரையாறு ஜலம் ஓடிக்கொண்டிருந்தது.
எங்கள் ஊரும், காவேரி மடமும் ஆற்றின் வடகரையில் இருக்கின்றன. கிழவர் ஆற்றில் ஸ்நானஞ் செய்து ஜபதபங்களை முடித்துக் கொண்டு மடத்துக்குத் திரும்புகையில் எங்களண்டை வந்து நின்றார். வயதால் தளந்த நடை; தளர்ந்த குரல்; தளர்ந்த உள்ளம்; ஏதோ பல கஷ்டங்களுக்குள்ளானவர் என்பது அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிய வந்தது.
நாங்கள் அவரை மௌனமாக வரவேற்றோம். என்ன சொல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் பேசவில்லை. அவர் யாரையோ தேடி அறிந்து கொள்ள விரும்புகிறவர்போல எங்கள் முகத்தையெல்லாம் உன்னிப்பாகக் சுவனித்தார். சாமாவும் அப்போதுதான் எருமை மாட்டை ஓட்டிக் கொண்டு ஆற்றுக்கு வந்தான். கிழவர் அவனையும் உற்றுப் பார்த்தார்.
சாமா நையாண்டியாக “என்ன தாத்தா?” என்றான்- அவன் குரல் எங்களுக்கே பிடிக்கவில்லை.
எங்கள் பக்கம் திரும்பினார் கிழவர். சற்றுநேரம் தயங்கினார். “காலையில் தினம் ஒரு சேர் பால் வேண்டும்” என்றார்.
“என் வீட்டில் மாடு கறக்கிறது. நான் கொண்டு வந்து தருகிறேன்” என்றேன்.
க.நா.சு. சிறுகதைகள்
“எனக்காகச் சிரமப்படுத்திக் கொள்ளவேண்டாம். நானே வந்து வாங்கிக் கொள்ளுகிறேன்” என்றார் கிழவர்.
“சிரமம் ஒன்றுமில்லை. நானே கொண்டு வந்து தருகிறேன்.
காய்ச்சி வேண்டுமானாலும்…”
“வேண்டாம், வேண்டாம். நான் பாலை எப்போதுமே காய்ச்சாமல்தான் சாப்பிடுவது வழக்கம்.”
அதற்கப்புறம் அவர் அங்கு சற்றுநேரம் நின்றிருந்தார். நாங்களாக ஒன்றும் பேச்சுக் கொடுக்கவில்லை. அவர் கண்கள் சாமாவைத் தொடர்ந்தன. அவன் தன் எருமையை ஆற்றில் விரட்டிக் குளிப்பாட்டப் போய்விட்டான். அவருடைய மங்கிய கண்கள் கலங்கின என்று நான் நினைத்தேன். நான் சாமா பக்கம் திரும்பிவிட்டு மறுபடி அவர் பக்கந் திரும்பும்போது அவர் மடத்துக்குள் போய்விட்டார்.
3
நான் காலை மாலை இருவேளையிலும் அவருக்குப் பால் கொண்டுபோய்க் கொடுத்து வந்தேன். முதல் நாள் காசு தருகிறேன் என்று மடிசஞ்சியிலிருந்த ஒரு முடிச்சையெடுத்து அவிழ்க்கத் தொடங்கினார். நான் கண்டிப்பாய் வாங்க மறுத்துவிட்டேன். பால் மட்டுமன்றி சிலநாள் அரிசி, வீட்டில் தின்பண்டம் ஏதாவது பண்ணினால் அது, எல்லாம் கொண்டுபோய்க் கொடுப்பேன்.
அவர் மடத்தில் தானாகவே பொங்கிச் சாப்பிட்டார். சோம்பலாக இருந்த அன்று கடையில் ஏதாவது பழம் வாங்கிச் சாப்பிட்டுப் பாலைக் குடித்துவிட்டுப் படுத்துவிடுவார். எங்கள் தெருவாருடன் அவர் அதிகமாகக் கலக்கவில்லை; கலக்க விரும்பவு மில்லை; யாருடனும் அவர் அதிகமாகப் பேசுவதும் கிடையாது. ஓரிரண்டு வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டனர். வினயமாக மறுத்து விட்டார்.
என்னுடனும் கிட்டத்தட்ட அதேமாதிரிதான் என்று சொல்லலாம். ஆனால் நான் ஊரையும் ஊராரையும்பற்றி ஏதாவது சொன்னால் விருப்பத்துடன் பதில் பேசாமல் கேட்பார். அவர் கண்களில் சதா குடியிருந்த சூன்யப்பார்வை அச்சமயங்களில் சற்று
மறையும். சில சமயங்களில் ஏதோ கேட்க விரும்புகிறவர் போல வாயைத் திறப்பார். சட்டென்று கேட்கக்கூடாது என்று தீர்மானித்தவர் போல வாயை மூடிக்கொண்டு விடுவார்.
பொதுவாக ஊரார் எல்லோரையும் பற்றிப் பேசியிருப்பேன். ஆனால் சாமாவைப் பற்றி ஜாஸ்தி பேசினேன். அவனைக் கண்டால் எங்களில் யாருக்குமே பிடிக்காது. நான் பேசியதில் ஒரு வார்த்தை கூட அவனைச் சிலாகித்து விடாது என்பது நிச்சயம். என் பேச்சின் முக்கிய விஷயங்கள் சாமாவும் என் குடும்பமும்தான். இப்போது தெரிகிறது கிழவர் வெகு சாமர்த்தியமாகப் பேச்சை சதா இந்த இரண்டு விஷயங்களையும் பற்றித் திருப்பியிருக்க வேண்டும் என்று.
அவரிடம் எனக்கு முதல் நாள் ஏற்பட்ட கவர்ச்சி நாள் ஆகஆக அதிகரித்துக் கொண்டே வந்தது. நான் ஒழிந்த நேரத்தையெல்லாம் மடத்தில் அவருடன் கழிக்க ஆரம்பித்தேன். கிழவர் தானாகப் பேசுவதானால் பொதுவாக எந்த விஷயத்தைப் பற்றியும் பேசுவார். எப்போதும் அவர் பேச்சில் ஒருவித வைராக்கியமும், விரக்தியும் தீவளித்தன. ஆனால் தன்னைப் பற்றியோ, அல்லது வேறு தனிப்பட்ட மனிதர் யாரையாவது பற்றியோ அவர் பேசி அறியேன் நான்,
எங்களிடையில் அன்னியனாகவே இருக்க விரும்பினார் போலும் அவர்!
4
ஆனால் அவர் எங்களுக்குப் புதியவராகத் தோன்றவில்லை. தானாகவே யாரிடமும் வழி விசாரிக்காமல் மடத்திலிருந்து கிளம்பி ஏழெட்டு திருப்பங்கள் திரும்பி நேராக, ஊருக்கு வந்த முதல்நாள் கோயிலுக்குப் போய் விட்டு வந்தார். சில சமயம் ஒரு வீட்டிற்கெதிரே, ஒரு மரத்திற்கெதிரே, ஒரு கடைக்கெதிரே, அதையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு யோஜனையிலாழ்ந்தவராய் சால்மணி, அரைமணி நின்று விடுவார்.
இதைக் கவனித்த நான் அவர் ஊருக்குப் புதியவரல்ல என்று தீர்மானித்துக் கொண்டேன். எங்கள் தெருவில் யாரும் அவரை அறிந்து கொள்ளாததால்… அவர் ஊரை விட்டுப்போய் பல
வருஷங்கள் ஆகியிருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். என்ன காரணத்தால் அவர் ஊரை விட்டு வெளியேறினாரோ, யார் கண்டதும? ஒன்றுமட்டும் நிச்சயம்; தன்னை ஊரார் அறிந்து கொள்வதை அவர் விரும்பவில்லை.
5
என் பாட்டி ஒருநாள் தானாகவே அக்கிழவரைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். “அந்தக் காவேரி மடத்துக்கு வந்திருக்கிறாரே அவர்…” என்று ஆரம்பித்தாள்.
அவள் ரொம்ப பழங்காலத்து மனுஷி. வயது எழுபது ஆகிறது. அவள் கிழவர் யாரென்று அடையாளங்கண்டு கொண்டு விட்டாளோ என்று எனக்குச் சந்தேகம் தோன்றிற்று.
“ஏன்? உனக்குத் தெரிந்தவர் யார் மாதிரியாவது இருக்காரோ?” என்றேன்.
“இ…..ல்லை” என்று இழுத்தாள் என் பாட்டி.
“தெற்கத்திக்காரராம்” என்றேன் நான்.
அன்று பாட்டி மேலே ஒன்றும் சொல்லவில்லை. இரண்டு மூன்று நாள் கழித்து என் பாட்டி ஒரு கதை சொன்னாள்.
6.
முப்பத்திரண்டு வருஷங்களுக்கு முந்திய கதை அது.
எதிர்வீட்டுச் சாமாவின் தாயார் பெயர் தர்மி. அவள் பணக்கார வீட்டுப் பெண். ஸ்திரீதனமாக நிறையப் பணமும் நிலமும் கொண்டு வந்தாள். அவள் கணவன் அப்போது கிராம முன்சீப் சீனுவாஸய்யர் என்று பெயர். கன்னங் கரேரென்று தீவட்டித்தடியனாக இருப்பான். சொள்ளை மூஞ்சி; எப்போதும் சிடுசிடுத்த முகம். போதாதற்கு அவன் தொழில் சதா மூச்சு நுழைவதுதான் அவனுக்கும் கொஞ்சம் பணமும் நிலமும் இருந்தது. தர்மி புக்ககம் வரும்போது வயது பதினாலிருக்கும். பார்ப்பதற்கு ஜோராக அழகாக இருப்பாள்.
பக்கத்து வீட்டிலே நாணு, நாணு என்று ஒரு தடிப் பிரம்மச்சாரி விருந்தான். அவனுக்கு ஒரு விதவைத் தாயாரும், ஒரு மூத்த சகோதரியுந்தான் உறவினர்கள். அவனுக்கு அப்போது வயது முப்பதிருக்கும். ஆள் பார்க்க ஜோராக, ‘டாப்பு’ ஜோக்காக இருப்பான். அவன் குடியிருந்த வீட்டைத் தவிர அவனுக்கு வேறு சத்தில்லை. வாசாலகந்தான் சம்பாதிக்க வழி. பலே கைகாரன்; பேச்சுக்காரன்.
சுருங்கச் சொல்லுமிடத்து நாணு வீசிய வலையில் விழுந்து விட்டாள் தர்மி. இது பல மாதங்களுக்கப்புறந்தான் சீனுவாஸய் யருக்குத் தெரிய வந்தது போலும். அன்று நாணு தப்பியது தம்பிரான் புண்ணியந்தான். கிடைத்த அடியெல்லாம் வாங்கிக் கொண்டு சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு இரவோடு இரவாக ஓடிவிட்டான் நாணு.
தர்மியும் நாணுவுடன் ஓடிவிடுவதாகத்தான் ஏற்பாடு செய்திருந்ததாம். ஆனால் அது எப்படியோ கணவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் தர்மியை ஒரு அறையில் போட்டுப் பூட்டிவிட்டான். அவள் அப்போது கர்ப்பமாக இருந்தாள். நாணு ஊரைவிட்டு ஓடியதற்கு எட்டு மாதங்களுக்கப்புறம் சாமா பிறந்தான்.
சீனுவாஸய்யர் தன் மனைவியை அதிகமாகத் துன்புறுத்திய இல்லை. அவள் பணம் அவனுக்கு வேண்டியிருந்தது. அதற்கப்புறம் அவள் ஐந்து வருஷங்கள்தான் உயிருடனிருந்தாள். சாமாவைத் தவிர அவளுக்கு வேறு குழந்தையும் பிறக்கவில்லை. சீறுவாஸய்யர்தான் தன் மனைவிக்கு விஷம் வைத்துவிட்டார் என்று ஊரில் வதந்தி. சீனுவாஸய்யர் வேறு கலியாணம் பண்ணிக் கொள்ளவில்லை. தன் ஆஸ்தியையும், தர்மியின் ஆஸ்தியையும் கூத்திகளுக்குக் கொடுத்தே ஒழித்துவிட்டு தர்மி இறந்து ஐந்து வருஷங்களாவதற்குள் அவனும் இறந்துவிட்டான்.
சாமாவுக்கு மிஞ்சியது அந்த வீடும் ஒரு எருமைமாடுந்தான்.
7
இக்கதையைச் சொல்லிவிட்டு என் பாட்டி “அக்கிழவரைப் பார்த்தால் நாணு மாதிரிதான இருக்கிறது” என்றாள்.
” நிஜமாகவா?” என்றேன்.
“அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது” என்றாள் என் பாட்டி.
8
அன்று சாயங்காலம் நான் கிழவருக்குப் பால் எடுத்துக் கொண்டு போகையில் என்னுடன் சாமாவும் தன் எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு வந்தான். நான் சாமாவைப் பற்றிக் கிழவரிடம் சொன்ன வார்த்தைகளில் ஒன்றாவது அவனைப் போற்றியிருக்குமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
“ஏண்டா சாகமாட்டாத கிழத்துக்கு இந்த உபசாரம்?”
நான் பதில் சொல்லவில்லை.
“பாலில்லாமல் சரிப்படாதாக்கும் கிழத்துக்கு!”
அது அவன் சுபாவம். உண்மையயறிந்தால், கிழவர் தன் தகப்பன் என்றறிந்தால்…! ஹிந்து சமூகத்தில் அந்தப் பிரச்னைக்குப் பதிலில்லை என்று தோன்றிற்று எனக்கு.
அதற்குள் காவேரி மேட்டை அடைந்து விட்டபடியால் நாங்கள் பிரிந்தோம்.
9
மடத்தில், ஸ்நானம் பண்ணிவிட்டு காயத்ரீ ஜபம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் கிழவர். நான் பாலை உள்ளே வைத்து விட்டு, ஜபம் முடியட்டும் என்று வெளித் திண்ணையில் போய் உட்கார்ந்தேன். பத்து நிமிஷத்தில் நியம நிஷ்டைகளை முடித்துக் கொண்டு, பாலைச் சாப்பிட்டுவிட்டு, காலிச் செம்புடன் வெளியே வந்து ஆற்றைப் பார்த்துக்கொண்டு என் பக்கத்தில் உட்கார்ந்தார்.
சந்தேகத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது என்று யோசித்தேன் நான், அச்சமயம் சாமா வேஷ்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு, எருமை மாட்டைக் குளிப்பாட்ட ஆற்றில் இறங்கியது என் கண்ணில் பட்டது. திடீரென்று முன்பின் யோசியாமல்,
“அது உங்கள் பிள்ளை” என்றேன்.
கிழவர் சட்டென்று திரும்பி என்னையே இரண்டு வினாடி தோக்கினார். பின்னர் சாமா பக்கந் திரும்பினார்.
அச்சமயம் சாமாவும் திரும்பி எங்கள் பக்கம் வந்தான்.
‘ம்..ம்..ஷ்’ என்று பெருமூச்சு விட்டார் கிழவர்.
மறுபடி அவர் என் பக்கம் திரும்பியபோது அவருடைய மங்கிய கண்களில் புது ஒளி இருப்பது போலத் தோன்றிற்று எனக்கு. நான் நினைத்தது தவறாக இருக்கலாம். ஆனால் ‘தனக்கு இரண்டு தலைமுறைகளுக்கப்புறம் பிறந்த வாலிபன் ஒருவன் தன்னைக் கண்டு கொண்டான்; ஆனால் அவமதிக்கவில்லை என்ற பெருமை’ அவர் கண்களில் பிரகாசித்ததைக் கண்டேன் நான்.
சாமா சமயம் பார்த்து ஜோராக அவனுடைய ஒப்பற்ற பாணியில் ஒரு தில்லானா பாட ஆரம்பித்தான்.
கிழவர் அதைப்பற்றிப் பேச அப்போது விரும்ப மாட்டார் என்று தோன்றிற்று எனக்கு. நான் மௌனமாக அவரை விட்டு விட்டு வீடு திரும்பினேன்.
மறுநாள் காலை நான் பால் எடுத்துக்கொண்டு போனபோது காவேரி மடம் வெறிச்சென்றிருந்தது. கிழவர் விடியற்காலையிலேயே கிளம்பிப் போய்விட்டார். என் அசட்டுத்தனம் அது. நான் அவரை அறிந்துகொண்டதைக் காட்டிக் கொள்ளாமலிருந்திருந்தேனா அவர் இன்னும் சில நாள் எங்களிடையே தங்கியிருந்திருப்பார்.
என் பாட்டி விஷயத்தை அறிந்துகொண்டு என்னைக் கோபித்தாள்.
“போடா அசடு! என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதோ?” என்றாள்.
“நாணு என் தம்பி”.
1961
க.நா.சு. /சாவித்திரி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “க.நா.சு. /காவேரி மடத்துக் கிழவர்”
Comments are closed.