ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 84/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம்

26.08.2024 – திங்கட்கிழமை


மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : வணக்கம்
அழகியசிங்கர் : இரா முருகனுக்கு விஷ்ணு புரம் விருது இந்த ஆண்டு கிடைத்திருக்கிறதே?
மோகினி : ஆமாம்.
அழகியசிங்கர் : முதலில் அவருக்கு வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.


மோகினி : எழுத்தாளர் சிவசங்கரி ஒரு செய்திக் குறிப்பை அனுப்பி உள்ளார். இந்த ஆண்டிலிருந்து ‘சூர்ய’ ‘அக்ஷர’ என்ற இரு இலக்கிய விருதுகளை வழங்க உள்ளார். அக்டோபர் மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் மேதகு தமிழக ஆளுநர் ரவி, சாகித்திய அகாடமி செயலர் டாக்டர் கே சீனாவாச ராவ், டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்க உள்ளார்கள். இந்த ஆண்டு பரிசு பெறுபவர் மூத்த எழுத்தாளர் அம்பையும், நாகரத்தினம் கிருஷ்ணாவும்..
அழகியசிங்கர் : என் நண்பர் ஒருவர் தமிழுக்கு இது பொற்காலம் என்று சொல்லிக்கொண்டிருப்பார். உண்மையில் பொற்காலம்தான். எல்லோரும் படைப்பாளிகளுக்குப் போட்டிப் போட்டுக்கொண்டு பரிசுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


ஜெகன் : இப்போதெல்லாம் நீங்கள் சுய வரலாறு, வரலாறு புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : ஆமாம். நான் எப்போதுமே வரலாறு அல்லது சுய வரலாறு புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பேன். ஆரம்பத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதிய புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். ஏன் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி மகேஷ் பட் எழுதிய 2 புத்தகங்களைப் படித்திருக்கிறேன். J Krishnamurti as I knew him என்ற Susunaga Weeraperuma எழுதிய புத்தகத்தை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நினைவலைகள் என்ற சூரிய வம்சம் என்ற புத்தகத்தின் 2 பகுதிகளையும் படித்து முடித்து விட்டேன். லக்ஷ்மி எழுதிய கதாசிரியின் கதை என்ற புத்தகத்தைப் படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்.
ஜெகன் : நீங்கள் பத்திரிகைகளில் வருகிற கதைகளை இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு கதை என்று தேர்ந்தெடுத்துப் புத்தகம் போடும் திட்டம் என்னயாயிற்று.


அழகியசிங்கர் : ஆகஸ்ட் மாதம் வரை தேர்ந்தெடுத்து விட்டேன். என்னுடைய நோக்கம் சிறுபத்திரிக்கையிலிருந்து கதைகளை எடுப்பதுதான். அந்த முயற்சியை வெற்றிகரமாக நடத்தி விடுவேனென்று நினைக்கிறேன். நல்ல சிறுகதைகளைப் பிரசுரம் செய்தும் சிறுபத்திரிக்கைகள் கவனம் இல்லாமல் போய்விடுகின்றன என்பதால்.
மோகினி : நீங்கள் ஒருவரே எல்லாக் கதைகளையும் தேர்ந்தெடுக்கிறீர்களா?
அழகியசிங்கர் : ஆமாம். சிறுபத்திரிகைகளின் பங்கு முக்கியம் என்பது என் நோக்கம்.
மோகினி : இன்று பேசியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா?
ஜெகன் : இரவு 8.45 ஆகப் போகிறது. முடித்துக் கொள்ளலாம்.
அழகியசிங்கர். முடித்துக் கொள்ளலாம்.

                                                                                                                                                                                                                                                         (பதிவான நேரம் : இரவு 8.41)