
1
ஜானகி வாய்த் துடுக்குக்காரிதான். யாரையுமே சகஜமாக உதறி எறிந்து பேசும் சுபாவம் உள்ளவள்தான். வெடுக் வெடுக் என்று யாரையும் வெட்டிப் பேசத் தயங்கவே மாட்டாள் அவள்
வீட்டிலே ஒரே பெண். செல்லமாக வளர்த்து வந்தார்கள்; ”பாவம், அறியாதவள். வயசு வந்த பிறகு தானாகவே சரியாகப் போய்விடுகிறது” என்று பெற்றவர்களும் மற்றும் உள்ள பெரியவர்களும் அவளை அவ்வளவாகக் கண்டிக்காமலே வளர்த்து
விட்டார்கள்.
வீட்டுக்குள்ளே பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் அவளுடன் விளையாடிய அவள் வயசுப் பெண்கள் அறியாதவன் அறிந்தவள் என்றும், வயசானவர்கள், ஆகாதவர்கள் என்றும், ஒரே பெண், ஐந்துபேரில் ஒருத்தி என்று கவனிப்பார்களா என்ன? ஜானகி துடுக்காகப் பேசினால் அவர்கள் லகுவில் விட்டு விடுவார்களா? சுடச்சுட இரண்டு திருப்பி விடுவார்கள். தினம் ஒரு சண்டையாவது வளர்க்காமல் விடமாட்டாள் ஜானகி.
ஆனால் ஜானகிகூட இரண்டொரு நாளாக ஏதோ கொஞ்சம் மாறித்தான் போயிருந்தாள். தினம் காபி சாப்பிட்டவுடனும், மத்தியானம் சாப்பாடு ஆனவுடனும் வீட்டில் தரிக்காமல் எதிர்வீடு; அண்டைவீடு, மூன்றாவது வீடு, அடுத்த தெரு என்று பல்லாங் குழியோ, பத்துக்கட்டமோ தன் வயசுப் பெண்களுடன் ஆடி சண்டை வளர்க்கப்போகிற ஜானகி இந்த இரண்டு நாட்களாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். பெற்றோருக்கே ஆச்சரியமாக இருந்தது.
இது அவளுடைய அவளுடன் ஏதாவது விளையாடிப் பேசிச் சண்டைபோடாமல் பொழுது போகாததால் அவளுடைய தோழிகள் அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்கே வந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.
அதிசயம்தான். ஆனால், தனக்குக் கல்யாணம் ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது என்கிற விஷயத்தை அறிந்தது முதலே அவள் மனசில் ஒரு மாறுதல் ஏற்படத் தொடங்கிவிட்டது. எப்படியோ, எங்கிருந்தோ, என்றுமில்லாமல் நாணமும் அச்சமும் வந்து அவளிடம் குடியேறிவிட்டன. அவள் மனசிலே அன்று வரையில் தோன்றியிராத பல புதுச் சிந்தனைகள் தோன்றி ஊசலாடின. அவள் ஸ்திரீயாக மாறிக்கொண்டிருந்தாள்-இந்த மாறுதலை அவள் அறியவும் தொடங்கினாள்.
அப்படி ஒன்றும் அவளுக்கு அதிகமாக வயசாகி விடவில்லை. இன்னும் பதிநாலுகூட முடியவில்லை.
அவள் தகப்பனார் விசுவநாதய்யர் அப்படி ஒன்றும் கர்நாடகமும் அல்ல; வைதீகமும் அல்ல; ரொம்பவும் நவீனமான நாகரிகம் உள்ளவரும் அல்ல. உலகிலே நடமாடும் எவ்வளவோ, இரண்டும் கெட்டான்’களில் அவரும் ஒரு ‘இரண்டும் கெட்டான்’ இந்தக் காலத்திலே பெண்களுக்குப் பதினாலு வயசு ஆவதற்குமுன் கல்யாணம் செய்துதானாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை உணர்ந்தவர்தான். ஆனால் நல்ல வரன் ஒன்று குதிரும் போல இருந்தது.
இருந்தது. தன் ஒரே பெண்ணின் நலனை உத்தேசித்து அந்த இடத்திலே கொடுத்துவிட்டால் தேவலை என்று அவர் எண்ணினார். தானாக வருகிற சமயத்திலே நழுவவிட்டு விட்டால் பின்னால் எப்படியாகுமோ, எவ்வளவு சிரமம் இருக்குமோ என்கிற பயம் வேறு. பதினாலு வயசு நிரம்பாத தன் பெண் ஜானகியின் கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் செய்ய அவர் சம்மதித்திருந்தார்.
அன்று பிள்ளை வீட்டார் ஜானகியைப் பார்க்க வருவதாக ஏற்பாடாகியிருந்தது.
வழக்கமாகக் காலையில் எழுந்தவுடன் “காப்பி ஆயிடுத்தாடி?” என்று ராகத்துடன் கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குள் போகும் விசுவநாதய்யர் அன்று காலையில் சிந்தனையில் ஆழ்ந்தவராகப் படுக்கையைக் கூடச் சுருட்டாமல் உட்கார்ந்திருந்தார். அந்தச் சிந்தனைகளின் கடைசிக் கட்டத்தைத் தானும் அறியாமலே அவர் வாய்விட்டு உரக்கச் சொல்லிவிட்டார். “என்னவோ! இன்றைக்கு வந்து பார்க்கிறார்கள் திகைந்துவிடும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இன்று முதலே ஜானு வேறு ஒருவனுக்குச் சொந்தம்!”
கூடத்திலே சுவாமி அலமாரிக் கெதிரிலே, கையில் ஒரு பழைய பத்திரிகையுடன் நின்று கொண்டிருந்த ஜானகியின் காதில் இந்த வார்த்தைகள் தெளிவாக விழுந்தன. முக்கியமாக அந்தக் கடைசி வாக்கியம்…. “ஜானு இன்று முதலே வேறு ஒருவனுக்குச் சொந்தம்” என்கிற வாக்கியம்- அவள் மனசிலே ஆழ்ந்து பதிந்தது.
அப்பா தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள் ஜானகி. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விடலாமா என்று ஒரு வினாடி யோசித்தாள். ஆனால், நகரவில்லை. அங்கிருந்து நகரவே சக்தியற்று நின்றாள் அவள்.
ஜானகியின் தாயார் பார்வதியம்மாள் கூடத்திற்கு வந்தாள், தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள்: “எழுந்திருந்து பல் தேச்சுக் காப்பி சாப்பிடுங்களேன். போட்டு ஆறிப்போறதே! தவிரவும் இன்னிக்குத் தலைக்கு மேலே காரியம் இருக்கே” என்றாள்.
அப்பாவும் அம்மாவும் தன்னைப் பற்றி ஏதாவது பேசுவார்கள் என்று ஜானகிக்குத் தெரியும். அங்கு நிற்க வேண்டாம், கொல்லைத் தாழ்வாரத்திற்குப் போய்விடலாம் என்று எண்ணி ஜானகி கிளம்ப யத்தனிக்குமுன் அவள் தகப்பனார் எழுந்து வந்து அவள் தப்பிப் போய்விட முடியாமல் இடது கையால் அவள் தோளைப் பிடித்துக் கொண்டார். வலது கையால் அவள் தலைமயிரைக் கோதியபடியே அவர் சொன்னார்; “என்னவோ இவ்வளவு நாளாக நம்ம உடமையா வளந்தாச்சு. இனிமே இவ வேறு ஒருவனுக்குச் சொந்தமாய் குடித்தனம் நடத்தி….
பார்வதி அம்மாள் குறுக்கிட்டாள். “இன்னிக்கு வரானே வந்து பார்க்கட்டும் பாத்துப் பிடிச்சிருந்தால்…” என்று இழுத்து நிறுத்தினாள். தெய்வமோ விதியோ குறுக்கிட்டுக் காரியத்தைச் கெடுத்து விடக்கூடாதே என்கிற பயம் அவளுக்கு.
“நம்ப ஜானகியை வந்து பார்த்துவிட்டுப் பிடிக்கலைன்னு கூடப் போய்விடுவானா ஒருத்தன்?” என்று தன் பெண்ணின் அழகிலே பெருமை கொண்டவராகச் சொன்னார் விசுவநாதய்யர்.
‘அது சரிதான், ஆனால்- நான் மட்டும் அழகில்லையா? உங்களுக்கு முன்னாடி ரெண்டு பேர் வந்து பார்த்துவிட்டு வேண்டாம்னு போய்ட்டாளே!’ என்றார் பார்வதியம்மாள், முகத்திலே லேசான புன்னகை படர.
“என் அதிர்ஷ்டம் அது” என்று சொல்லிச் சிரித்தார் விசுவநாதய்யர்.
பேச்சு, தன்னைவிட்டு நகர்ந்து விட்டது என்கிற தெம்பிலே ஜானகியும் கலகலவெனச் சிரித்தாள்.
விசுவநாதய்யர் காப்பி சாப்பிட்டுவிட்டு நடக்க வேண்டிய சாரியங்களைக் கவனிப்பதில் ஈடுபட்டார்.
அன்று மாலையில் பிள்ளையும் பிள்ளை வீட்டாரும் வந்து பெண்ணைப் பார்த்தார்கள். அவர்களுக்குப் பெண்ணைப் பிடித்திருந்தது.
‘லௌகீகமும்’ ஏதோ பேசி ஏற்பாடான பிறகு கல்யாணம் நிச்சயமாயிற்று. இருதரப்பாருக்கும் சௌகரியமாக இருக்கும் பொருட்டு முகூர்த்தத்தை நாலைந்து வாரங்களுக்குப் பிறகு வைத்துக் கொள்வது என்றும் ஏற்பாடாயிற்று.
2
அன்று ஆனித் திருமஞ்சனம்.
கல்யாணமாகிக் கணவனுடன் கிளம்பிவிட்டால், டெல்லியோ, சங்கத்தாவோ, பம்பாயோ, பூனாவோ, சென்னையோ?- எங்கேயோ யார் கண்டது மறுபடியும் சிதம்பரம் வர எவ்வளவு நாள் பிடிக்குமோ, யார் சொல்ல முடியும்? சிதம்பரத்தில் இருந்து கொண்டு ஆனித் திருமஞ்சனத்துக்கு கோயிலுக்குப் போகாமல் இருப்பது என்னவோ போல இருந்தது ஜானகிக்கு.
கல்யாணம் நிச்சயமான நாள் முதலாகவே எப்படியோ ஜானகி மாறிப் போயிருந்தாள். ஒரே நாளில், ஒரே வினாடியில் அவள் அறிவு பெற்றுவிட்டாள். ஏதோ பழைய காலத்துக் கோஷா போல ஆகிவிட்டாள் அவள். சூரிய சந்திரர்கள் கூடப் பார்க்கக் கூடாது என்பார்களே அந்த மாதிரி ஆகிவிட்டாள். அவள் அப்படித்தான்நடந்து கொள்ள வேண்டும் என்று வீட்டிலோ வெளியிலோ யாரும் அவளைக் கட்டாயப் படுத்தவில்லை. அவள் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட கட்டாயம் அது.
கிழிசல் பாவாடை ஒன்றை இடுப்பிலே சுற்றிக் கொண்டு ஊரெல்லாம் திரிந்தலையத் தயங்காத ஜானகி இப்போது பதினாறு முழம் துணியை இடுப்பிலே வரிந்து சுற்றிச் சுமந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தாள். தெருத்திண்ணையில் கூட அவள் முன்போலெல்லாம் நிற்பது கிடையாது. ஒவ்வொரு சமயம் தன்னையும் மறந்து வேடிக்கை பார்க்கத் திண்ணைக்குப் போவாள். தெருவோடு போகிறவன் யாராவது திரும்பிப் பார்ப்பான் அவ்வளவுதான். அவள் உடனே உள்ளே சென்றுவிடுவாள். முன்னெல்லாம் திண்ணையிலே உட்கார்ந்து ஜானகி கழக்கேடி ஆடுகிறாள் என்றால் தெருவே அதிரும். இப்பொழுது வீடு அதிரப் பேசுவதையும் ஆர்ப்பாட்டங்கள் செய்வதையும் மறந்து விட்டாள் அவள்.
அவளுடைய அப்பா அன்று ஒருநாள் சொன்னதை அவள் அடிக்கடி ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்ளவாள்…. தான் ஒருவருடைய உடைமை என்பதிலே பெருமை கொள்ளத் தொடங்கினாள் அவள். தன் கணவனாகப் போகிறவரைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் உடல் பூரித்துப் புளகாங்கிதம் அடையும்.
அந்தக் கணவனை உருவகப்படுத்திக் கொண்டு ஆனந்தம் எய்துவாள் அவள். ஆனால், அவருடைய உருவம் அவளுடைய மனசிலே வெகு லேசாகத்தான் பட்டிருந்தது. பெண் பார்க்க அவர் வந்து போன தினத்தன்று ஓரக்கண்ணால் அரைக் கணம் பார்த்ததுதான். அவர் உருவத்தை உரிமையுடன் நிமிர்ந்து நேருக்கு நேர் நோக்கித் தன் கண்களுக்கு விருந்தளிக்கும் நாள் நெருங்கிச் கொண்டிருந்தது என்று எண்ணி அவள் மகிழ்வெய்திச் கொண்டிருந்தாள்.
முன்னெல்லாம் என்றால் அவள் கோவிலோ, குளமோ, தேரோ திருவிழாவோ, தனியாகப் போய்வர அஞ்சவே மாட்டாள். சிதம்பரத்திலே அவளுக்குத் தெரியாத ஆசாமிகள் கிடையாது. அவள் போகாத இடமும் கிடையாது.
ஆனால். சில நாட்களாக-அவள் தன் மனம் வாக்கு, காயம் மூன்றையும் ஒருவருடைய உடைமையாக்கிய பின்-வேறு அயல் புருஷர்கள் முன் செல்லவோ நிற்கவோ கூடக் கூசினாள்.
ஆனித் திருமஞ்சனத்துக்குக் கோயிலுக்குப் போகாமல் இருக்கவும் அவளுக்கு மனசில்லை. அம்மா வந்தால் அவளுடன் போகலாம் என்று எண்ணி அம்மாவை அழைத்தாள். ஆனால், அன்றைக்கென்று பார்வதியம்மாளுக்கு வேலை ஏகமாக இருந்தது. யாரோ விருந்தாளிகள் வேறு மத்தியானம் சாப்பிட இருக்கிறார்கள்.
பார்வதியம்மாள் சொன்னாள்; “நீ போய்ப் பார்த்து விட்டு வா, அம்மா ஜானகி. நான் சிதம்பரத்திலேயே இருக்கிறவள். பிழைத்துக் கிடந்தால் அடுத்த வருஷமும் பார்த்துக்கலாம். அடுத்த வருஷம் நீ எங்கே இருப்பாயோ? நீ போய்ப் பார்க்காமல் இருக்கப்படாது. போய்ட்டு வா” என்றாள்.
“தனியாகவா?” என்று அதைப் பற்றிச் சிந்திக்காத ஜானகி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“நன்னாருக்கடி நீ நிக்கற நிலை! பேஷ்! கோஷா எல்லாம் உங்கிட்ட தோத்துப் போயிடுவா போல இருக்கே!” என்று சொல்லி உரக்கச் சிரித்தாள் பார்வதி அம்மாள்.
அப்படி அம்மா நகைத்தது என்னவோபோல இருந்தது ஜானகிக்கு. “எனக்குத் தனியாகவா கோயிலுக்குப் போகச் சொல்றே?” என்று ஆச்சரியத்துடன் மீண்டும் கேட்டாள் அவள்.
“ஏன்? தனியாகப் போனதே கிடையாதோ நீ! ஏது ஏது’ என்று ‘நாப்பு’க் காட்டினாள் பார்வதி அம்மாள்.
“நீயும் என்னோடு வாயேன்” என்று ஜானகி தன் அம்மாவை அழைத்தாள்.
பிறகு பார்வதியம்மாள் சற்று நேரம் யோசித்தாள். சொன்னாள்: “அப்படித் துணை வேணுமானால் அடுத்தாத்து மீனாவை அழைச்சிண்டு போயேன்” என்றாள்.
“மீனாவையா?” என்றாள் ஜானகி. ‘மீனாவையா?’ என்றாள் மீண்டும் ஒருதரம் சற்று நேரம் கழித்து.
அந்த மீனாவை அழைத்துக் கொண்டு போவதைவிடத் தனியாகவே போய்விடலாம் என்று தோன்றிற்று ஜானகிக்ககு,
மீனா ஒரு காலத்தில்-அதாவது இரண்டொரு வாரங்கள் முன் வரையில் – ஜானகியின் உயிர்த் தோழியாக இருந்தவள். வாய்த் துடுக்கிலும் வெடுக்குப் பேச்சிலும் இரண்டொரு வாரங்களுக்கு முன் வரையில் அவளை ஜானகிக்கு இரண்டாவதாகவேதான் சொல்லியிருக்க வேண்டும். இப்போது என்னடா என்றால் அந்த மீனாவைத் தன் தோழி என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருந்தது ஜானகிக்கு. அவளோடு போகலாமா என்றிருந்தது! தெருவோடு போகிறவர்கள் ஒவ்வொருவரையும் ஏதாவது வம்புக்கு இழுத்து மானத்தைக் கப்பலேற்றி விடமாட்டாளா அவள்!
“அந்த வம்புக்காரத் தொம்பையுடனா போகச் சொல்லுகிறாய்?” என்று கேட்டாள் ஜானகி மீண்டும்.
“வம்புக்காரத் தொம்பையா?” என்றாள் பார்வதி அம்மாள் தன் பெண்ணின் மனசில் கல்யாணம் என்கிற லட்சியக் கனவு காரணமாக ஏற்பட்டிருந்த மாறுதல்களை அறிய முயன்றாள் தாய், பலன் அளித்தது என்று அவள் முயற்சி அவ்வளவாகப் சொல்வதற்கில்லை. சற்றுநேரம் மௌனமாக இருந்துவிட்டுப் பிறகு சொன்னாள். கோயிலுக்குப் “யாரும் துணை வேண்டாம். போறதுக்கு என்ன வந்தது ?. நீ பாட்டுக்குப் போய்ட்டுவா கும்பலாகத்தான் இருக்கும் ஜாக்கிரதையாக போய்ட்டுவா” என்றாள்
அப்படியும் ஜானகி தயங்கினாள். ஆனால், அவள் அம்மா இரண்டு மூன்று தரம் வற்புறுத்தியதன் பேரில் கிளம்பினாள்.
சிதம்பரம் ஆனித் திருமஞ்சனத்தில் கும்பலுக்குக் கேட்பானேன்? கும்பலில் இடிபடாமல் ஒதுங்கி நின்று சுவாமி தரிசனம் செய்தாள், ஜானகி. தெய்வத் திருமணக்கோலம் அவள் மனசிலே கணக்கற்ற இன்ப அலைகளை எழுப்பியது. திவ்விய தரிசனம் ஆனபிறகு, கூட்டம் கலையுமுன் இடிபடாமல் திரும்பிவிட வேண்டும் என்று ஜானகி அவசரம் அவசரமாகக் கிளம்பினாள்.
அவள் நடந்து கொண்டிருந்த இடத்திலே அவ்வளவாகக் கும்பலும் இல்லை. ஜானகியும் சற்று ஒதுக்குப்புறமாகவேதான் நடந்தாள். குனிந்த தலை நிமிராமல் நடந்தாள்.
திடுதிப்பென்று ஒரு வாலிபன்-அப்படி என்ன அவசரமோஅவனுக்கு, தெரியவில்லை- குறுக்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். ஜானகி அவன் வந்ததையும் கவனிக்கவில்லை, போனதையும் கவனிக்கவில்லை, ஆனால், அவன் தன்மேல் இடித்துக் கொண்டு போனதை உணர்ந்தாள்.
அவளுடைய எண் சாண் உடலும் ‘வேறு’ புருஷன் தீண்டியதால் கூசிக் குறுகிற்று.
இந்தக் கூச்சத்திற்கு மாறாக அடுத்த விநாடியே கோபம் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. தீ கக்கும் கண்களுடன் அந்த அவசரக்கார வாலிபன் போன பக்கம் திரும்பி, “கொஞ்சமாவது புத்தியிருக்கா! காலிப்பசங்க! கோயிலுக்குச் சாமி பார்க்கவா வரான்கள்! காலிப்பசங்க!” என்று சற்று உரத்த குரலிலே சொன்னாள்.
அவளைத் தாண்டி நாலடிகளே சென்றிருந்த அந்த வாலிபன் ல் அவள் சொன்ன வார்த்தைகள் தெளிவாகவே விழுந்திருக்க வேண்டும் அவசரமாகப் போயக் கொண்டிருந்தவன் சட்டென்று நின்று திரும்பி அவளைப் பார்த்தான்.
அந்த வாலிபனுடைய முகம் தெரிந்த முகமாகப் பட்டது ஜானகிக்கு. ஒரு விநாடி தயங்கினாள். அடுத்த விநாடி அது தன் கணவனாகப் போகிறவர் என்று அறிந்து கொண்டாள். அவள் முகம் குப்பென்று சிவந்தது.
அவனும் அவளை அறிந்து கொண்டுவிட்டான் என்பதை அவன் முகத்திலே அரும்பிப் படர்ந்த புன்னகை அறிவுறுத்தியது.
தெய்வத் திருமணக்கோலம் நிறைந்திருந்த அவள் உள்ளத்திலே இப்போது வேறு பலதரமான சிந்தனைகள் கொந்தளித்துக் குமுறின. எப்படியோ சமாளித்துக் கொண்டு குப்பென்று சிவந்த தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு வீடுநோக்கி நடந்தாள். அந்த வாலிபன்- தன் அவசர காரியங்களை எல்லாம் மறந்துவிட்டு அவளையே பார்த்துக் கொண்டு, அவள் கண்ணுக்கெட்டாமல் மறையும் வரையில் நின்றார் என்று அவள் எப்படியோ அறிந்து கொண்டாள். ஆனால், வெகு சிரமத்துடனேதான் திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.
அவரை அப்படிக் கோயிலில் தான் திட்டியதின் விளைவாக என்ன நடக்குமோ என்று ஜானகிக்குப் பயம்தான். ஆனால், அப்படி ஒன்றும் நடந்துவிடாது என்றும் அவளுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.
ஆனால் கோயிலில் நடந்ததைப் பற்றி அவள் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.
ஜானகியின் நம்பிக்கையே வென்றது. குறிப்பிட்ட முகூர்த்தத் திலே உரியபடி சிறப்பாகவே கல்யாணம் நடந்தேறியது.
கழுத்திலே தாலி ஏறிய உடனே சற்றுத் தைரியத்துடன் தலை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி. அப்படி அவள் பார்த்ததும், அவள் கண்களைக் கண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த வர் போல, மாப்பிள்ளையின் கண்கள் அவளை விழுங்கிவிட விரும்பியதுபோல மலர்ந்திருந்தது கண்டு வெட்கத்துடன் ஜானகி தலைகுனிந்தாள். ஆனால், ரெண்டு நிமிஷங்கள் கழித்து மீண்டும் தலை நிமிர்ந்தாள். இந்தத் தடவையும் அவர் தன்னையேதான் கவனித்துக் கொண்டிருந்தார் என்று கண்டாள்.
“மாப்பிள்ளையும் பெண்ணும் இன்று சாயங்காலம் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிண்டு….” என்று சாஸ்திரிகள் ஏதோ சொல்லத் தொடங்கினார்.
மாப்பிள்ளை குறுக்கிட்டார்: “இந்த நாளிலே கோயில்களிலே காலிப் பசங்க கும்பலே அதிகம், தவிர, உண்மைப் பக்தர்கள் குறைவுதான்” என்றார்.
“அப்படிச் சொல்லலாமா” என்று சாஸ்திரிகள் ஏதோ ஆட்சேபம் சொல்லத் தொடங்கினார்.
ஆனால், ஜானகி அறிந்துகொண்டாள் – அவர் அப்படிச் சொன்னது தனக்காகத்தான் என்று வெட்கத்தையும் விட்டுவிட்டு, முகத்திலே ஒரு மோகனப் புன்னகை அரும்பி மலர, அவள் தன் கணவனை நிமிர்ந்து நோக்கினாள். அவர் கண்கள் அவள் கண்களைச் சந்தித்தன.
\”நான் சொல்றது சரியா தப்பா என்று சந்தேகமாயிருந்தால், இதோ என் ஆம்படையாளைக் கேளுங்கோ” என்று மாப்பிள்ளை சாஸ்திரிகளிடம் சொன்னார்.
வந்த சிரிப்பை ஜானகியால் அடக்க முடியவில்லை. சுவீரென்று உரக்கவே சிரித்து விட்டாள்.
மாப்பிள்ளையும் கூடச் சேர்ந்து சிரித்தாள்.
மற்றவர்களுக்கு விஷயம் தெரியாது. ஆனால் அவர்களும் சிரிப்பிலே கலந்து கொண்டார்கள்.
க.நா.சு. /காவேரி மடத்துக் கிழவர் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “க.நா.சு. /கல்யாணப் பெண்”
Comments are closed.