ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன்

6.

நீலவானம் எத்தனை தெளிவாக இருக்கிறது! விரிந்து, பரந்து, காலங்கடந்திருக்கும் அதன் அழகே அழகு! தூரமும் வெளியும் மனதின் அனுமானங்கள். இவ்விடம் மற்றும் தூரத்திலிருக்கும் அவ்விடம் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், ஆசையின் தூண்டுதலால், அவை உளவியல் விஷயங்களாகி விடுகின்றன.-
மனம், ஒரு விசித்திரமான விஷயம் பல்வேறு தடங்களைக் கொண்டிருக்கும் சிக்கலான ஒன்றாக அது இருப்பினும் அடிப்படையில் மிக எளிமையான ஒன்றாகவும் மனம் இருக்கிறது. இத்தகைய அதன் பண்புகளால்தான், போராட்டம், வேதனை, எதிர்ப்புணர்வு மற்றும் சேகரித்தல் போன்றவை நிகழ்கின்றன. போராட்டம், வேதனை, போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வோடு, அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் அவற்றைப் போக விடுவது என்பது மிகவும் சிரமமான விஷயம். வாழ்க்கை, விரிந்து பரந்து ஓடும் நதியைப் போன்றது.
மனம், தனது வலையை வீசி, நதியிலிருந்து சிலவற்றைப் பிடித்துக் கொள்கிறது, சிலவற்றைக் கழித்து விடுகிறது. காலத்தாலும் வெளியாலும் ஆனது இந்த வலை. இவ்விடம் என்றும் அவ்விடம் என்றும், சந்தோஷம் என்றும் துக்கம் என்றும் நம்முள் எண்ணங்களை உருவாக்குவதும் இந்த வலைதான். எனவே வலை என்று எதுவும் இருக்கக் கூடாது.
கர்வம் என்பது ஒரு விநோதமான உணர்வு. சிறிய விஷயங்களில் கர்வம்! பெரிய விஷயங்களில் கர்வம்! நம் சொத்து சுகங்களில், நம் சாதனைகளில், நம் குலப் பெருமைகளில், நம் வம்சாவளியில், நம் பரம்பரைப் பெருமைகளில், நம் செல்வாக்கில், நம் புறஅழகில், நம் விஷயஞானத்தில் நமக்குத்தான் எவ்வளவு கர்வம்! ஒன்று, இவ்விஷயங்களைக் கொண்டு நாம் நம் கர்வத்தை வளர்க்கிறோம், இல்லையெனில், தன்னடக்கத்தை நாடி ஓடுகிறோம்.
தன்னடக்கம், கர்வத்தின் எதிர்மறை இல்லை தன்னடக்கம் என்று அழைக்கப்படுகிறதே தவிர, அதுவும் கர்வமே: தன்னடக்கத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வானது, கர்வத்தின் வகைப்பட்டதே. மனம், ‘இது’வாகவோ அல்லது ‘அது’வாகவோ இருக்கப் போராடுகிறது. அது, சூன்யநிலையில் இருக்கமுடியாது, ஏதோ ஒன்றாக இருக்க விரும்புகிறது. சூன்யநிலை என்பது ஒரு புதிய அனுபவம் என்றால், அதையும் அடைந்துவிட மனம் முயற்சி செய்கிறது. அத்தகைய முயற்சியும் ஒரு விதத்தில் அனுபவச் சேகரிப்பே. மனம், முயற்சிகள் செய்வதிலிருந்து விடுபட்டு அப்பால் சென்றால் தான்…..
பல தரப்பட்ட நடவடிக்கைகளினால் நிரப்பப்பட்டும், வியாபாரம், ஊகம், தியானம், துக்கம், களிப்பு போன்றவற்றால் நிரம்பியும் உள்ள நம் வாழ்க்கையின் சாராம்சமோ வெற்றுத் இனமாய் உள்ளது. ஒருவரின் பதவியை, அதிகாரத்தை, செல்வத்தை அவரிடமிருந்து பறித்து விடுங்கள் – இப்போது, அவர் யார்? பணம், பதவி, அதிகாரம் என்று அவரிடத்தில் வெளிப்புறப் பகட்டுகள் இருந்தன. உள்முகத்தில் வெற்றுத்தனமும் குறுகிய மனோபாவமும்தான் இருந்தன. உள்முகச் செல்வத்தையும் புறஉலகச் செல்வத்தையும் ஒருசேர ஒருவரால் பெற்றிருக்க முடியாது.
உள்முக நிறைவு, வெளியுலகச் செல்வத்தை விட பன்மடங்கு உயர்வானது. வெளியுலகச் செல்வம் கொள்ளை போகலாம், மிகுந்த கவனத்துடன் நிர்மாணிக்கப் பட்டவைகள், வெளியுலக நிகழ்வுகளால் சிதைந்துப் போகலாம். ஆனால், உள்முகச் செல்வம், கறைபடாதது, எதனாலும் தீண்டமுடியாதது. காரணம், அது மனதினால் விளைந்ததல்ல.
விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்ற தீவிர ஆசை, மக்களிடம் இருக்கிறது; தம் குறிக்கோளை என்ன விலை கொடுத்தும் பெற்றுவிட முயற்சிக்கிறார்கள். எல்லா தடங்களிலும் மற்றும் அனைத்து திசைகளிலும் செய்யப்படும் அதற்கான முயற்சி, மக்களை வீழ்ந்து விடாமல் தாங்கிக் கொள்கிறது. ஒரு திசையில் மனோரதம் நிறைவேற வில்லையென்றால், மற்றொரு திசையில் முயற்சியை திருப்புகிறார்கள். ஆனால், நிறைவேற்றுதல் என்று ஏதேனும் உள்ளதா?
விருப்பம் கைகூடினால், திருப்தி கிடைக்கிறது. ஆனால், விரைவில் திருப்தி மறைகிறது, நாமும் புதிய வேட்டையில் இறங்கிவிடுகிறோம். விருப்பத்தைப் பற்றிய புரிதல், நிறைவேற்றல் என்ற பிரச்சினையை முழுவதுமாக தீர்த்து விடுகிறது. விருப்பம் என்பது விரும்பிய வண்ணம் ஆவதற்கான முயற்சி. ஆவதற்கான முயற்சி முடிவுறும்போது, நிறைவேற்றல் என்ற போராட்டம் ஓய்கிறது.

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)