
வாழை படம் பார்த்துவிட்டேன். இது உண்மை கதை என்று இயக்குனர் முதலிலே title கொடுத்துவிட்டார். 1999 இல் வாழைக்காய் ஏற்றிச் சென்ற லாரி திருவைகுண்டம் அருகில் உள்ள பேட்மா நகரத்தில் நடந்த விபத்தில் 27 பேர் இறந்து போகிறார்கள். அதில் இயக்குனர் மாரி செல்வராஜின் அக்காவும் ஒருவர். அன்றைய தினம் மாரி செல்வராஜ் லாரியில் பயணம் செய்யாததால் உயிர் பிழைக்கிறார்! இது உண்மை சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. உண்மை சம்பவத்தை இப்படி காட்சி ஊடகத்தில் கலைப்படமாக அற்புதமாக எடுத்திருக்கிறார் இயக்குனர். எளிய மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தான் கதை முழுவதும் பின்னப்பட்டிருக்கிறது. படம் பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் பின்னோக்கிய வாழ்க்கை கொஞ்சம் எட்டிப் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பசியோடு இருப்பதும் அதன் வேதனை எவ்வளவு தீவிரமானது என்பதும் காட்சிப்படுத்திய விதம் அழகு! சில இடங்களில் மௌனமாகவே காட்சி நகர்கிறது. ஆழமான சிந்தனையோடு எடுக்கப்பட்ட இப்படத்தை நான் பார்க்கும் பொழுது சின்ன வயதில் கோவில்பட்டி பகுதியில் வாழ்ந்த வாழ்க்கை கண் முன்னே வருகிறது.
எல்லோரும் கஷ்டப்பட்டு தான் மேலே வருகிறோம். 90 சதவீத மக்களின் வாழ்க்கை எளிமையானது தான். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஜென்மம் பத்தாது. யாரும் ஜமீன்தார் வாழ்க்கையை வாழவில்லை!
கோவில்பட்டி பகுதியில் அந்தக் காலத்தில் தீப்பெட்டி தொழில் தான் பிரதானம். தலையில் கட்டைகளை சுமந்து நடக்கும் சிறுவர்களை பார்க்கும்போது வாழையை சுமப்பது போல தான் இருந்தது. அவ்வளவு வேதனைகளை சுமந்து தான் கடந்து வந்திருக்கிறோம்.
சாதாரணமாக முதலாளிகள் கூலியை கூட்டி தர மாட்டார்கள் அட்வான்ஸ் கேட்டால் கூட இழுத்தடிப்பார்கள்!. அந்தக் கூலி வேலைகளை செய்து தான் பல குடும்பங்கள் வாழ்ந்தன! ஏன் பள்ளி கட்டணம் கூட தீப்பெட்டி கட்டைகள் சுமந்து அதில் வரும் வருமானத்தை வைத்து தான் படித்திருக்கிறார்கள். தீப்பெட்டி கட்டைகளுக்கு பதிலாக இங்கே வாழைத்தார் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவர் மனதில் உள்ளே ஆயிரம் கதைகள் இருக்கும் இருந்தாலும் காட்சி உலகத்தில் அந்த படத்தோடு நம்மை ஒன்ற வைத்த போது ஒரு சிலிர்ப்பு ஏற்படத்தான் செய்கிறது.
இந்தப் படத்தில் சாதிய குறியீடுகள் ஏதுமில்லை! ஆனால், நடித்தவர்கள் எல்லோரும் நடிகர்களாக தெரியவில்லை! அந்த புளியங்குளம் கிராமத்தைச் சார்ந்தவர்களாக அதாவது இயக்குனர் ஊர்க்காரர்களாக தெரிகிறது! எந்த இடத்திலும் சாதி பற்றி பேசவில்லை ஒரே ஒரு இடத்தில் வாழைப்பழத்தை அந்தப் பையன் திருட்டுத்தனமாக சாப்பிட்டதால் தாக்கப்படும்போது ஒரே ஒரு வசனம் நீ எந்த ஊரு பையன்! புளியங்குளத்து பையனுக்கு இவ்வளவு கொழுப்பா? என்ற ஒற்றை வரி மட்டும் வருகிறது! மற்றபடி படத்தில் மிக மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமே படம் பிடித்து காட்டியுள்ளது. அந்த வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக வாழ்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் காட்சிப்படுத்தி இருக்கிறார்! வாழ்த்துக்கள்! இவரைப் போன்ற வாய்ப்பு மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை! படம் பார்க்கலாம்! கடைசி காட்சியில் கண்ணீரை வரவழைத்து சத்திய ஜித்ரே அளவுக்கு கொண்டு போய்விட்டார்! படத்தில் டீச்சர் பாத்திரம் அருமை! சின்ன வயதில் அழகான டீச்சரிடம் மாணவன் தன்னை இழப்பது அது காதல் அல்ல அதிகமான பாசம் என்பதை சொல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார் மற்ற டீச்சர்களையும் அந்த பணிக்கேற்றவாறு காண்பித்திருக்கிறார் அதுதான் எதார்த்தம். ஒரு ஆசிரியை மேல் பிரியம் ஏற்பட்டு அதற்காக எத்தனை இழப்புகளை தாங்கி ஒரு மாணவன் நகர்கிறான் என்பதை மென்மையாக எடுத்திருக்கிறார். எனக்கு கூட நான் சிவகாசி சித்ராஜபுரத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது ஜெயலட்சுமி டீச்சர் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய அன்பான பேச்சிலும் சொல்லிக் கொடுப்பதிலும் இன்னும் மறக்கமுடியாமல் இருக்கிறேன் என்றால் ஒவ்வொரு சிறு வயது மாணவருக்கும் ஒரு ரோல் மாடல் கிடைத்திருக்கும். சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இப்படிப்பட்ட உண்மை சம்பவத்தை எடுக்கும் பொழுது ஏற்கனவே வெளிவந்த சோ தர்மன் வாழையடி கதை இதைப்பற்றி எழுதியது தான் என்று சொல்லும் போது எனக்கு என்ன தோன்றியது என்றால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்கள் மற்றவர்களுக்கும் தோன்றி இருக்கலாம் தவறில்லை! எனக்கு இந்த வாழைத்தாருக்கு பதிலாக தீப்பெட்டி கட்டைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.
