
- மகாத்மாவுக்குப் பின்னால்
பொதுவாக, அரசாங்கத்துக்கு இரண்டு கடமைகள் உள்ளன. மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பதும் சமூகக் கட்டுக் கோப்பு குலையாமல் சட்டத்தையும் நீதியையும் பராமரிப்பதும் முதல் கடமை. மக்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி, அறம் முதலிய எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காண உதவி புரிவது இரண்டாவது கடமை. இவ்விரு கடமைகளும் ஒன்றோ டொன்று இணைந்தவை. ஆங்கிலேயர்கள் தங்கள் லாபத்தைக் கருத்தில்கொண்டு இந்நாட்டை ஆண்டவர்கள்; எது செய்தாலும் ‘இங்கிலாந்துக்கு இதனால் லாபம் உண்டா?’ என்று கணக்கிடுவதே அவர்களுக்கு இயற்கை ஆயிற்று. இதனால் நாட்டில் வறுமை, அறியாமை, நோய் முதலியவைகளின் ஆதிக்கமே வலுத்திருந்தது. ஆகையால், இந்தியாவில் காங்கிரஸை நிறுவியவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய அரசாங்கத்தைத் தூண்டவேண்டும் என்ற எண்ணமே கொண்டிருந்தார்கள். ஆனால், காலத்தோடு மக்களின் தேசியவுணர்ச்சி மிகுந்தது; மாற்றான் ஆட்சியில் மக்களுக்கு நன்மை ஏற்படாது என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.
1906ஆம் ஆண்டு, கல்கத்தா காங்கிரஸில் தாதாபாய் நவ்ரோஜி முதல் முறை ‘சுயராஜ்யம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் பாரதம் சுயாட்சி நடத்திக்கொள்ள வேண்டும் என்பதே இந்தச் சுயராஜ்யத்தின் பொருள். 1920ஆம் ஆண்டுவரை இந்தக் குறிக்கோளுக்காகவே கிளர்ச்சிகள் நடந்தன.
ஆனால், தேசியவுணர்ச்சி மிகுந்ததும், நல்லதோ கெட்டதோ நம் ஆட்சியே சிறப்பானது, மாற்றான் ஆட்சி அவமானகரமானது என்ற தெளிவு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அரசியல் அறிஞர்களின் நூல்களும் கோட்பாடுகளும் மக்கள் மனத்தைப் பண்படுத்தின; ‘நல்லாட்சியைவிடச் சுயாட்சியே சிறப்புடையது’ என்று அவர்கள் எண்ணலாயினர்.
ஆக, ஆட்சியில் சீர்திருத்தம் கோரும் மிதவாதிகளின் கட்சி பலவீனமுற்று வந்தது; திலகர், தாஸ், காந்தி அடிகள் முதலிய தலைவர்களுடைய தீவிரக் கருத்துகளின் வழியே நாடு செல்லலாயிற்று.
பால கங்காதர திலகருக்கு வயதாகிவிட்டது. அவர் தமக்குப் பிறகு நாட்டுக்குத் தலைமை ஏற்கத் தக்கவர் காந்தியடிகளே என்று பலமுறை குறிப்பிட்டுவிட்டார். இந்திய அரசியலில் மகாத்மாவின் ஆட்சி தொடங்கியது. இந்நாட்டின் ஆன்மிகத் தன்மைக்கேற்ப அவர் போராட்டத்தை நடத்தினார். வன்முறை வாயிலாக விடுதலை பெற முயலுவது இந்நாட்டுக்கு அறமாகாது என்றார் அவர். அஹிம்சையால் சுதந்தரம் பெற முடியும் என்று உறுதியாக நம்பினார். மற்றத் தலைவர்கள் முதலில் அவருடைய கருத்துகளை ஏற்கத் தயங்கினர்; என்றாலும், சிறிது சிறிதாக அவர்கள் அனைவருமே காந்திஜியின் ஆன்ம பலத்துக்குப் பணிந்தார்கள். மகாத்மாவின் தலைமையை நாடு முழுவதுமே ஏற்றது; இந்திய அரசியலில் காந்தி யுகம் தொடங்கியது.
1920 செப்டம்பரில் கல்கத்தாவில் கூடிய விசேஷ காங்கிரஸ் காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்தை ஏற்றது. அடுத்த மாதங்களில் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தல்களைக் காங்கிரஸ் பகிஷ்கரித்தது. பல வாக்காளர்கள் வாக்களிக்கவே இல்லை; பல தலைவர்கள் தேர்தல்களில் கலந்துகொள்ளவில்லை. தொடக்கத்தில், சித்தரஞ்சன் தாஸ் ஒத்துழையாமையை ஏற்கவில்லை; பின்னர், காந்தியடிகளுடன் விவாதித்து இருவரும் சமரசமானார்கள். 1920ஆம் ஆண்டு, நாகபுரியில் நடந்த காங்கிரஸில் தாஸ் ஒத்துழையாமைத் திட்டத்தை மிக வன்மையாக ஆதரித்தார்.
1921ஆம் ஆண்டு பெஜவாடாவில் காங்கிரஸ் கூடியது; ஒத்துழையாமைக்குப் புதிய திட்டம் ஒன்று தயாரித்தது. அதன்படி,
ஒரு கோடித் தொண்டர்களைத் திரட்டுவது என்றும், ‘திலகர் சுய ராஜ்ய நிதி’க்கு ஒரு கோடி ரூபாய் திரட்டுவது என்றும், இருபது லட்சம் இராட்டைகள் இயங்கவேண்டும் என்றும் முடிவாயிற்று. அயல்நாட்டுத் துணிகளைப் பகிஷ்கரிப்பதெனவும் தீர்மானித்தனர்.
சித்தரஞ்சன் இவ்வேலையில் முனைந்தார். வங்காளம் முழுவதும் சுற்றித் தொண்டர்களைத் திரட்டிச் சந்தாவும் சேர்க்கலானார். தொண்டர்களின் பெரிய அணி உருவாகியது. இதனால் அரசாங்கம் அச்சம் கொண்டது; தொண்டர்கள் ஸ்தாபனங்கள் சட்டவிரோதமானவை என்று அறிவித்தது. வங்காளத்திலும் பாரத நாடெங்கும், சட்டங்களை மீறி ஆயிரக்கணக்கானோர் சிறை செல்லலானார்கள். சித்தரஞ்சனின் மனைவியும் சகோதரியும் கதர் விற்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார்கள்.
1921ஆம் ஆண்டின் ஒத்துழையாமைக் கிளர்ச்சி நாடு முழுவதையும் ஒற்றுமைப்படுத்தித் தேசிய உணர்ச்சியைத் தூண்டி விட்டது. ஆனால், மகாத்மா விரும்பியவாறு மக்கள் எல்லா இடங் களிலும் அஹிம்சையைக் கடைப்பிடிக்கவில்லை. சில இடங்களில் மக்களும் போலீஸாரும் மோதிக்கொண்டனர். கோரக்பூர் ‘சௌரி சௌரா’வில் கூட்டத்தினர் பல போலீஸ்காரர்களைக் கொலை புரிந்ததோடு ஸ்டேஷனுக்குத் தீ வைத்தனர். இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் மகாத்மா ஒத்துழையாமைக் கிளர்ச்சியை நிறுத்திவிட்டார். காங்கிரஸ் ஆக்கவேலைகளில் ஈடுபட்டது; உறுப்பினர்களைச் சேர்ப்பது, கதர், சர்க்கா பிரச்சாரம், தேசியக் கல்விக் கூடங்களை அமைத்தல், தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு ஆகிய வேலைகளில் தேசபக்தர்கள் கவனம் செலுத்தலாயினர்.
1922ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சித்தரஞ்சன் ஆறு மாதக் காவல் தண்டனை விதிக்கப்பட்டார்; அவ்வாண்டு மார்ச் மாதம், காந்தி அடிகள் ஆறு ஆண்டுச் சிறைத்தண்டனை பெற்றார்; அவர் சிறை புகுந்ததும், அவருடைய திட்டத்தை நிறைவேற்றக்கூடிய தலைவர்கள் யாரும் வெளியில் இல்லை.
1923ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருந்தன. சிறையிலிருந்த சித்தரஞ்சன் யோசனை செய்தார். சட்ட மன்ற உறுப்பினர், அமைச்சர் என்ற பதவிகளைக் காட்டி வெள்ளை அரசாங்கம் இந்தியர்களை ஏமாற்றிவந்தது; சிங்கத்தை அதன் குகையில் சென்று தாக்குவது போல் அப்பதவிகளை நாமே என்பதே கைப்பற்றி அரசாங்கத்தை ஆட்டிப்படைத்தால் என்ன?
அவர் யோசனை. சிறையிலிருந்து வெளிப்பட்டதும் அவர் தம் யோசனையைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸுக்குள் சட்டமன்றப் பிரவேசத்தை ஏற்கின்ற ஒரு குழு உருவாகியது; அதற்குத் தாஸ் தலைவரானார்.
