சீவ.தீனநாதன்/ஸ்ரீ ரமண விருந்து

  1. தற்பெருமை

(‘சுவாமி! நான் சீக்கிரம் புறப்படவேண்டும். அதற்கு முன்பாகத் தங்களிடம் பேச விரும்புகிறேன்’)

1930-இல் ஒருநாள்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் பகவானைக் காண திருவண்ணா மலைக்கு வந்தார்; பகவான் சன்னிதானத்தில் பகவானுக்கு முன்பாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். ‘பகவானே! நான் இன்னார், என் பெயர் இன்னது; சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பதவியில் இருக்கிறேன்.’ சற்று நிறுத்தினார்.
பகவானோ மௌனமாக அமர்ந்திருந்தார்.

நீதிபதி தொடர்ந்தார், ‘சுவாமி! நான் தங்கள் உபதேசத்தை விரும்பிப் படிக்கும் ஒரு அடியான்; தங்கள் புத்தகங்களில் இரண்டினை மிகவும் ஊன்றிப் படித்திருக்கிறேன்.
பகவான் மௌனம் . . .

நீதிபதி தொடர்ந்தார், ‘சுவாமி! எனக்கு வேலை பளு மிக அதிகம்; என் பதவி அப்படிப்பட்டது; என்றாலும் எப்படியோ சமாளித்து நேரம் மிச்சம் தங்கள் புத்தகங்களைப்
படித்து வருகிறேன்… (சற்று நிறுத்தினார்) பகவான் மேலும் மௌனம்.

நீதிபதி பேசினார், ‘சுவாமி! இன்றுதான் தங்களைத் தரிசிக்க எனக்கு நேரம் கிடைத்தது; நான் அதிக நேரம் இங்கு தங்குவதற்கில்லை. என் அவசர ஜோலியுடன், அவசர அவசரமாக இங்கு இன்று வந்திருக்கிறேன். வேதாந்தம், தத்துவம் பற்றி ஒன்றிரண்டு சந்தேகங்களைக் கேட்க விரும்புகிறேன்.

பகவான் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவர் ஸ்வரூபத்தில் லயித்தவராய், அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்
ஹாலில் அடியார்களும் அவ்வண்ணமே மெளனமாக உட்கார்ந்திருந்தனர்.

நீதிபதி பேசினார், ‘சுவாமி! நான் சீக்கிரம் புறப்பட வேண்டும்; அதற்கு முன்பாகத் தங்களிடம் பேச விரும்புகிறேன்’.
பகவான் தனது மௌனத்தைக் கலைக்கவில்லை. பதில் ஏதுமில்லை.

நீதிபதி எழுந்து, ‘பகவானே! நான் விடை பெறுகிறேன்’ என்று கூறி நமஸ்கரித்துச் சென்றார். பகவானின் மௌனத்தின் ரகசியம் என்ன? காரணம் தான் என்ன?

தற்புகழ்ச்சி, தற்பெருமை உள்ளவர்களுக்குப் பகவானிடமிருந்து எவ்விதமான பதிலும் வராது. ஆர்வம்,பக்தி சிரத்தை, பணிவு உள்ளவர்களுக்கே பகவானது அனுக்கிரகம் கிட்டும்.

சிவ.தீனநாதன்/ரமண விருந்து – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)