செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

  1. சென்னை வாஸம்

சிறுவயதில் சென்னையில் உல்லாஸமாகக் காலங்கழித்த ஞாபகம் வந்தவுடன் அங்கு சென்று வஸிக்க வேண்டுமென்ற ஆவல் பாரதியாருக்கு உண்டாயிற்று. தெய்வாதீனமாக அவர் நோக்கத்திற்கிணங்க சென்னையில் பிரபல தினசரி பத்திரிகையான ‘சுதேசமித்திர’னில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் பாரதியார் தமது அரிய பெரிய நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கான சாதனங்கள் கிடைக் காமல் ரொம்பவும் கஷ்டப்பட்டார். பழைய நண்பர்களான ஸ்ரீவ.வே.சு.அய்யர், ஸ்ரீனிவாஸாச்சாரியார், ஆர்யா, ஸ்ரீ.எஸ்.துரைஸ்வாமி ஐயர் முதலியவர்களுடன் மறுபடியும் நெருங்கிப் பழகி அவர்களுடன் ஏதோ ஒருவாறு மனத்திருப்தி யுடன் காலங்கழித்தார்.

தம்புசெட்டித் தெருவில் தபால் இலாகாவைச் சேர்ந்த ஸ்ரீ.வே.நாராயணய்யருடன் சில மாதங்கள் குடியிருந்தார். ஸ்ரீ நாராயணய்யரும் இவரிடம் அன்பு காட்டி வந்தார். என்றாலும், அதிக காலம் அவருடன் குடியிருக்க முடியவில்லை. காரணங்கள் பல; அஸௌகர்யங்கள் பல; கடைசியாக திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலுள்ள பெரிய மாடி வீட்டில் குடிபுகுந்து சேர்ந்தோம். அங்கு குடியிருந்த அனேகரும் பாரதியாரிடம் தேவதா விசுவாஸம் கொண்டவர்கள் அவர்களில் ஸ்ரீ குவளைக்
கண்ணனும் ஒருவராவர். அவர் கோயில் திருப்பணியில் ஈடுபட்டவர். பெருமாளுக்கு நிவேதனம் ஆனவுடன் சர்க்கரைப் பொங்கல் முதலிய ப்ரஸாதங்களுடன் ஸ்ரீ பாரதியார் முன் ப்ரஸன்னமாவார். ஸ்ரீ பாரதியார் அவைகளைத் தாம் மாத்திரம் ஏற்றுக் கொள்ளாமல், அன்பர்களான காக்கை குருவிகளுக்கும் சமர்ப்பிப்பார். அவைகள் உண்டு களிப்பதில் ஸ்ரீ பாரதியாருக்குப் பேரானந்தம்.

பழைய நண்பர் ஒருவர் ஒருநாள் ஸ்ரீ பாரதியாரிடம் வந்து, என்ன ஸ்வாமிகளே ! இப்படிப் பாட்டுப் பாடிக் கொண்டு காலம் கழிக்கின்றீர்களே! நான் வாழ்நாள் முழுவதும் பாரதநாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்று படாத பாடெல்லாம் பட்டாயிற்று. இன்று எனக்குச் சாப்பாட்டிற்கு வழியில்லை. வயிற்றுக் கொடுமை ஸஹிக்காமல் ஏதேனும் கொடிய செயலில் இறங்க மனம் தூண்டுகிறது. தர்ம சிந்தனையினால் பசி ஆறாது. இது திண்ணம். எங்காவது திருட்டோ, கொள்ளையோ செய்யத் துணியட்டுமா?” என்று பொறுமையை இழந்த த்வனியுடன் வினவினார்.

அதைக் கேட்டதும் ஸ்ரீ பாரதியாருக்கு ரத்தம் கொதித்தது. அவரிடம் காசில்லை. என்ன செய்வது? பக்கத்து வீட்டாரிடம் சிறிது தொகை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு, ‘பாரத ஸமுதாயம்’ என்ற பாட்டைப் பாடிக் காண்பித்து ஒருவாறு சமாதானப்படுத்தினார். நண்பரும் வயிறும், மனமும் குளிர்ந்து சென்றார்.

“தனியொருவனுக் குணவில்லை யெனில் ஜகத்தினை யழித்திடுவோம்” என்று சொல்வதற்கு எவ்வளவு உணர்ச்சியும் துணிச்சலும் வேண்டும்? கடற்கரைப் பிரஸங்கம் ஒன்றில் இப்பாடலை அன்புருகப் பாடி ஜனங்களுக்கு அறிவுறுத்தினார்.

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)