க.நா.சு/கண்ணன் என் தோழன்

1

பத்து வயசுப் பையன், தனியாகத் திண்ணையில் படுக்கிறேன் என்று பாயைத் தூக்கிக் கொண்டு கிளம்பியவுடனே பாட்டிக்குப் பயமாகத்தான் இருந்தது.
கையில் மண்ணெண்ணெய் விளக்குடன் வாசலுக்கு வந்தாள் பாட்டி. “பாயைத் தட்டிவிட்டுப் போடு. ஏண்டா இப்படிச் சொன்னதைக் கேட்காமல் நடமாட்டமே இல்லாத தெருவில் தனியாகத் திண்ணையில் படுக்கிறாய்? உங்கப்பன் வந்து கேட்டால் நான் என்னடா சொல்வேன்?” என்று அழாத குறையாகக் கேட்டாள் பாட்டி.
“சொன்னேன்: கேட்கவில்லை என்று சொல்லேன் பாட்டி. உன் பொறுப்பு அத்தோடு விட்டது” என்றான் பையன் வயசை மீறிய தீர்மானத்துடன்.
“என்னடா கண்ணா, பேச்சு இது. நல்லதுக்கில்லை?” என்றாள் பாட்டி.
யாரோ கலீரென்று உலகமெல்லாம் ஒலிக்க நகைப்பது போல இருந்தது பாட்டிக்கு. உண்மையிலேயே அச்சிரிப்பு அவள் காதில் விழுந்ததா? அல்லது அது வெறும் மனப்பிராந்தியா? தன் பேரப் பிள்ளைதான் சிரித்தானா? அவனைப் பார்த்தாள். தலையணையைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். கை விளக்கை உயரத் தூக்கிப் பார்த்தாள். ஒளிவட்டத்தின் ஓரத்திலே கறுப்பான ஒரு உருவம், கண்ணன் வயதேயான ஒரு உருவம் தெரிவது போல இருந்தது. ஒரு விநாடிதான். அதற்குப் பிறகு அந்த உருவம் இருட்டில் மறைந்துவிட்ட மாதிரி இருந்தது.
உலகில் மனிதன் எப்பவாவது தனியாக இருக்கிறானோ? என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் பாட்டி. பிறகு உரக்க ‘யாருடா புதுச் சிநேகிதன்? முன் எங்கோ பார்த்தமாதிரி இருக்கே?’ என்றாள் பாட்டி.
கண்ணன் பாயைப் போட்டுவிட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து நாலா பக்கமும் பார்த்தான். ‘கிருஷ்ணன்’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான். பிறகு “இங்கு உன்னையும் என்னையும் தவிர வேறு யாருமில்லையே பாட்டி” என்றான்.
பாட்டிக்கு என்னவோ சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்து பயங்கள் எல்லாம் தெளிந்துவிட்ட மாதிரி இருந்தது. யாரோ கலீரென்று மறுபடியும் நகைப்பது போல இருந்தது. காதும் கண்ணும் ஏமாற்றத் தொடங்குகிற வயசுதான் அவளுக்கு. கைவிளக்கைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே ஒரு நிமிஷம் நின்றாள். பையன் பிடிவாதக்காரன்தான்-அவனோடு சரிக்குச்சரி விவாதித்துக் கொண்டு எவ்வளவு நேரம் சமாளிக்க முடியும் அவளால் “ஈசன் இருக்கிறான்’ என்றாள் கிராமியமாக.
“ஆமாம், இருக்கிறான்” என்றான் கண்ணன்.
“அப்பாவும் அம்மாவும் என்னிடம் ஒப்புவித்துப் போய் இருக்கிறார்களே என்கிற பொறுப்புதான் நாலு நாளில் அவர்கள் வந்து விடுவார்கள்” என்றாள் பாட்டி.
“நீ கவலைப்படாதே பாட்டி. போய்த் தூங்கு.’
பேசியது கண்ணன்தானா? பாட்டி சிந்தித்துக் கொண்டே உள்ளே போய்விட்டாள். கதவைத் தாளிட்டுக் கொண்டு, படுத்து உடனே நிம்மதியாகத் தூங்கியும் விட்டாள். நள்ளிரவில் ஒரு தரம் விழித்துக் கொண்டு எழுந்து வந்து பார்த்தாள். பையன் சாந்தமாகத் தூக்கிக் கொண்டிருந்தான்.
விளக்கு வெளிச்சத்தில் ஒரு நிமிஷம் தன் பேரப்பிள்ளையைப் பார்த்துக் கொண்டே நின்றாள் பாட்டி. பின்னர் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டு தூங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் பாட்டியின் மூத்த பேரன் சாமா தான் செய்தி கொணர்ந்தான்; “பாய் சுற்றித் திண்ணையில் வைத்திருக்கு- எங்கே கண்ணனைக் காணவில்லை?” என்றான்.
பாட்டிக்குத் திடீரென்று ராத்திரித் தோன்றிய மாதிரியே கவலைகள் தோன்றின. மறுபடியும் எங்கே கண்ணன்? என்று கேட்டுக் கொண்டே அவள் வரவும், வாசலில் அவளை நோக்கிக் கண்ணன் வரவும் சரியாக இருந்தது. கண்ணனின் முகத்திலேதான் என்ன களை? முகத்திலே சந்தனமும் குங்குமமும் அசாதாரணமாகப் பொலிவுடன் இருந்தன. ஸ்நானம் செய்ததற்கு அடையாளமாகத் தலை ஈரம் சொட்டிற்று. அவன் கண்களிலே ஒரு தீக்ஷண்யம் வெட்டி மின் பாய்ச்சியது.
“விடியற்காலம்பற எங்கேடா எழுந்து போனே?” என்று குரலில் பிதுங்கிய பதட்டத்தை அடக்க முயன்றவளாகக் கேட்டாள் பாட்டி.
“கோயிலுக்குப் போயிருந்தேன் பாட்டி” என்றான் கண்ணன் கள்ளம்கபடில்லாமல்.
கோயில் என்றால் சுற்றுப் பக்கத்திலே ஈசுவரன் கோயில் என்றுதான் அர்த்தம். அது அங்கிருந்து இரண்டொரு மைலுக்கப்பால் இருந்தது. இடையே ஒரு ஆறு இருந்தது. இந்த நாளிலே அந்த ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடந்தால் ஊர்ச் சுடுகாடு. அதைத் தாண்டிக் கோயிலுக்குப் போக நிர்மானுஷ்யமான வரப்புப் பாதையிலே ஒரு மைல் நடக்க வேண்டும். பாடல்கள் எல்லாம் பெற்ற கோயில்தான் அது என்றாலும், இப்போது அதை ஏனென்று கேட்பார்கூட இ குருக்களையா சரியாகப் பதினொரு மணிக்கு ஒரு சுட்ட கல்லை ஈரத் துணியைப் போட்டு மூடிக் கொணர்ந்து ஆவி பரக்க ஈசுவரன் முன் வைத்து நிவேதனம் செய்துவிட்டு, உடனே கோயிலையும் பூட்டிக்கொண்டு போய்விடுவார். அந்தக் கோயிலில் சந்தனம் பிரசாதமாகத் தந்ததாகப் பாட்டி என்றுமே தன் வாழ்நாளில் கேள்விப் பட்டதில்லை.
“ஈசுவரன் கோயில் இந்த நேரத்துக்குத் திறந்துங்கூட இராதேடா கண்ணா” என்றாள் பாட்டி.
“திறந்திருந்தது பாட்டி, கோயில் சந்தனம்தான் பாட்டி இ துளசி தளம்கூடக் கொடுத்தாரே அர்ச்சகர் இதோ!” என்று காட்டினான் கண்ணன்.
‘ஆற்றைக் கடந்து” இருட்டிலே தனியே நீ போகலாமாடா கண்ணா ” என்றாள் பாட்டி.
“தனியாகப் போகவில்லை பாட்டி” என்றான் கண்ணன். ‘அவனும் வந்தான்” என்று சொல்லிக் கொண்டே தன் பள்ளிக் கூடத்துப் பாடங்களைப் படிக்கப் போய்விட்டான்.
பாட்டிக்கோ என்ன சொல்வது, அதை எப்படிச் சொல்வது ன்று தெரியவில்லை. எப்படிச் சொன்னாலும் கண்ணன் கேட்கவும் மாட்டான், பையனை நல்லபடியாகப் பெற்றோர் வரும்போது ஒப்புவிக்க வேண்டுமே என்றிருந்தது அவளுக்கு.

2

ஏதோ கல்யாணத்துக்காகச் சென்னை போயிருந்த கண்ணனின் பெற்றோர்கள் ஒரு வாரம் கழித்துத்தான் திரும்பினார்கள் புளியங்குடிக்கு. அந்த ஒருவாரமும் பாட்டி மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருந்தாள். கண்ணனுக்கு ஒன்றும் தீங்கு தேர்ந்துவிடாது என்று அவள் மனசில் அடித்தளத்தில் ஒரு நம்பிக்கை இருந்தாலும் அவளுக்குப் பயமாகவேதான் இருந்தது.
அந்த ஒரு வாரமும் இரவில் திண்ணையில்தான் படுத்தான் கண்ணன். ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் பாயைச் சுருட்டித் திண்ணையில் வைத்திருப்பான். சூரியோதயமானபின் ஒரு நாழிகை கழித்துத்தான் திரும்பி வந்தான். தினமும் நெற்றியிலே சந்தனமும், குங்குமமும் பளபளக்க வந்தான். அதற்குமேல் அசாதாரணமாக ஒன்றும் நடந்துவிடவில்லை.
தன் பிள்ளை வந்ததும் அதிகமாக மிகைப்படுத்தாமல் பாட்டி கண்ணனைப் பற்றிய இந்தச் செய்திகளை அவனிடம் தெரிவித்தாள். ராமநாதன் பொறுமைசாலி; தவிரவும் கண்ணனிடம் அவருக்கு அலாதியான பிரியம் உண்டு. சாதாரணமாக அவன் பொய் சொல்ல மாட்டான் என்பது தெரியும் அவருக்கு. கோபித்துக் கொண்டு அடித்து ஆர்ப்பாட்டம் என்று ஒன்றும் செய்துவிடமாட்டான் அவன் என்று தெரியும் பாட்டிக்கு.
கண்ணன் ஸ்கூலிலிருந்து வந்ததும் ராமநாதன் அவனைக் ப்பிட்டு “என்னடா இது கண்ணா?” என்று விசாரித்தார்.
தன் பாட்டியின் சுபாவம் தெரியும் கண்ணனுக்கு. அப்பா எதைப்பற்றிக் கேட்கிறார் என்று அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு கணமே பிடித்தது.
“காலையில் நானும் அவனும் தினமு ம் ஈசுவரன் கோயிலுக்குப் போய்வருகிறோம் அப்பா. ஒரு வாரம், பத்து நாளாகப் போகிறோம்” என்றான் கண்ணன் அடக்க ஒடுக்கமாக இதில் ஒன்றும் தப்பில்லையே என்று கேட்டது போல இருந்தது. அவன் பார்வை.
“யாரடா அவன்?” என்று கேட்டார் ராமநாதன் சற்று அதட்டலாக.
பையன் சற்றுத் தயங்கினான். பிறகு, ‘கிருஷ்ணன்’ என்று பெயர் சொன்னான். ‘அப்பா, என் வயசுதான் இருக்கும் அவனுக்கும். நம் ஊர்ப் பையன் இல்லை அப்பா. மிகவும் நல்ல பையன்” என்றான் கண்ணன்.
தன் பிள்ளை கண்ணனின் மனசை இவ்வளவு தூரம் கவர்ந்து விட்ட பையன் நல்ல பையனாகத்தான் இருக்க வேண்டும் என்று ராமநாதனுக்குத் தெரியாதா? ‘எந்த ஊர்? அவனை எத்தனை நாளாகத் தெரியும்?” என்றார் அவர்.
“தன் ஊர் பிருந்தாவனம் என்று சொன்னான். முதல் நாள் அவனைப் பார்த்தப்பவே எனக்கு அவனைப் பிடித்திருந்தது அப்பா ‘பத்து நாள்தான் இந்த ஊரில் இருப்பேன். தினமும் காலையில் இரண்டுபேரும் கோயிலுக்குப் போகலாம் வரயா’ என்று அவன் தான் கேட்டான் அப்பா. வரேன் என்றேன். ஆற்றிலே குளித்து விட்டுப் படகில் ஏறி அக்கரை போவோம். வழி நெடுகக் கதைகள் பல சொல்லிக்கொண்டு வருவான் அவன். எவ்வளவு அழகாள கதைகள் சொல்லுகிறான் தெரியுமோ அவன்? கேட்டால், நீ நாள் பூராவும் அவன் கதைகளைக் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருப்பாய் அப்பா” என்றான் கண்ணன்.
“அவனைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்” என்றார் ராமநாதன்:
“நாங்கள் போய்ச் சேருகிற சமயம் கற்பூர ஆரத்தி நடக்கிற சமயமாக இருக்கும். அர்ச்சகரையும், எங்களையும் தவிர கோயிலில் யாரும் அப்போது இருக்கமாட்டார்கள். ஆனந்தமாகத் தரிசனம் செய்துகொண்டு திரும்புவோம். பாதி வழிதான் என்னுடன் இருவான் அவன். அதற்குப் பிறகு தன் வீடு எதிர்ப்பக்கத்தில் இருக்கிறது என்று வாய்க்கால் மதகடிப்பாதையில் திரும்பி விடுவான்” என்றான் கண்ணன்.
இவ்வளவு ஜோடித்துப் புளுகத் தன் கண்ணனுக்கு வராது து ராமநாதனுக்குத் தெரியும். ஆனாலும் கேட்டார்: “படகுக் காரன் இருட்டோடு வரமாட்டானே. தவிரவும் அவ்வளவு அதிகாலையில் ஈசுவரன் கோயிலும் திறந்திராதே!” என்றார். ஆனால் அவர் குரலில் முன்போல ஒரு நிச்சயம் இல்லை.
‘நாங்கள்’ குளித்துக் கொண்டிருக்கும்போதே படகுக்காரன் வந்துவிடுவான் அப்பா” என்றான் கண்ணன்.
மறுநாள் காலையில் அவனுடன் தானும் போவது என்று தீர்மானித்துக் கொண்டார் ராமநாதன். அன்றிரவு அவரும் கண்ணனுடன் அவனுக்குத் துணையாகத் திண்ணையில்தான் படுத்தார். சாதாரணமாக அவர் லேசாக அரைக்கண் விழித்த படியே ங்குகிறவர் தான். ஆனால் அன்று விடியற்காலையில் அவரையும் அவர் அறியாமலே அவர் காடாந்தரமாகத்தான் தூங்கிவிட்டார்.
விழித்துப் பார்த்தபோது கண்ணனின் படுக்கை வழக்கம் போலச் சுற்றித் திண்ணையில் வைக்கப்பட்டிருந்தது. காணவில்லை.
கண்ணனைக்
ராமநாதனுக்குக் கவலைதான். தன் இரண்டாவது பிள்ளையிடம் அவருக்கு உயிர் என்று சொன்னால் மிகையல்ல. அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே பசி, தாகம் எல்லாம் பறந்துவிடுமே என்பார். மனசிலே கவலையுடன் கோயிலிலிருந்து திரும்புகிற அவனை எதிர்கொண்டழைக்க அவரே ஆற்றங்கரைக்குப் போய்விட்டார்.
அங்கே தருமத் தோணித் துறையில் படகோட்டி முருகையன் பல் துலக்கிக் கொண்டிருந்தான். படகு எதிர்த்துறையில் ஆளில்லாமல் நின்று கொண்டிருந்தது.
“ஏலே முருகையா? நம்ம பையனைப் பார்த்தாயா?” என்று விசாரித்தார் ராமநாதன்.
தருமத் தோணிக் காரியத்துக்கு அதிகாரி புளியங்குடியில் ராமநாதன் தான். ஆகவே முருகையன் சற்று பணிவாகவே பதில்
அளித்தான்: ”சின்ன யசமான் வர்ற சமயந்தானுங்க. பல் துலக்கி விட்டு நான் நீந்தி எதிர்த்துறைக்குப் போவதற்கு எசமான் வருவதற்கும் சரியாக இருக்கும்”. முகத்தைக் கழுவிவிட்டு முண்டாசு கட்டி விட்டுத் துணியை எடுத்துத் துடைத்துக் கொண்டான்.
‘கண்ணனோடு துணைக்குப் போனது யாருடா முருகையா? நம்ப பக்கத்துப் பையன்தானா.” என்று மனசிலுள்ள கவலையைக் காட்டிக் கொள்ளாமல் விசாரித்தார்.
முருகையன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான். “அது எப்படிங்க எனக்குத் தெரியும். நான் இப்பத்தானே எழுந்து வரேங்க. ஒரு வாரம் பத்து நாளாகப் படகு தினமும் காலையிலே எதிர்க் கரையிலே கட்டியிருக்குங்க. நான் நீந்திப் போய்ப் படகில் கால் வைக்கிற போது சின்ன எசமான் கோயிலிலிருந்து வரும். அது நெற்றிச் சந்தனத்தைப் பார்த்தாலே பாவம் தீருமுங்க” என்றான் முருகையன்,
‘படகை நேற்றிரவு எங்கேடா கட்டினே?” என்று கேட்டார் ராமநாதன்.
“இந்தத் துறையிலே இந்த மூலையிலே தானுங்க. வழக்கம் போல. ஏனுங்க” என்றான் முருகையன்.
“பின் எப்படிடா படகு எதிர்க்கரைக்குப் போச்சு?’
தலையைச் சொறிந்தான் முருகையன்: “சின்ன யசமான்…’
அவனால் மறுப்பதற்கில்லை. பத்து வயசுப் பையன், தனியாக இருட்டில், முப்பது பேர் செல்லக்கூடிய படகைத் தள்ளிக் கொண்டு போவதென்றால்… என்று தன்னையே கேட்டுக் கொண்டார் ராமநாதன்.
இதற்குள் எதிர்க்கரையில் வந்து நின்ற கண்ணன் “முருகையா!” என்று குரல் கொடுத்தான். அந்தக் குரலைக் கேட்டவுடனே பிரும்மானந்தமாக இருந்தது ராமநாதனுக்கு. அந்தக் குரலைக் கேட்டவுடனே முருகையன் கூடத் தன் அனுமதியை வேண்டாமல், தன்னை மறந்துவிட்டு ஆற்றில் குதித்து எதிர்க் கரைக்கு நீந்தத் தொடங்கிவிட்டான் என்று கண்ட ராமநாதனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. படகில் ஏறி உட்கார்ந்து வந்து சேர்ந்த பையனைப் பார்த்ததும், அவன் முகத்தில் ஒளிர்ந்த சந்தனப்பொட்டையும், முகத்தில்படர்ந்திருந்த அமைதியான பாவத்தையும் கண்டதும் அவர் கவலைகள் எல்லாம் பறந்து விட்டன. தன் கையில் தந்த துளசியைக் கண்ணில் ஒத்திக்கொண்டார். இன்றும் கோயிலுக்குத் தான் போயிருந்தாயா கண்ணன்” என்றார் ராமநாதன். “என்னையும் கூப்பிடக் கூடாதோ நானும் அத்திருப்பேனே” என்றார்.
‘அவனைக் கேட்கிறேன் அப்பா” என்று கணீரென்று பதில் அளித்தான் கண்ணன்.
அவன் என்று பேச்சு வந்ததும் ராமநாதனுக்குப் பழைய சந்தேகங்கள் எல்லாம் தலை தூக்கின! மறுபடியும் “இன்று யாரு கண்ணா காலையில் படகு தள்ளினது. முருகையன் வரவில்லை யாமே” என்றார் ராமநாதன்.
‘வரவில்லையா? அவன்தானே” என்று தயங்காமல் கூறினான்
“நானா சாமி.’ என்று முருகையன் தன் சின்ன யசமான் முகத்தில் வைத்த கண்களை வாங்காமல் கேட்டான்.
இருவரும் நிஜம்தான் சொல்கிறார்கள் என்கிற எண்ணம் ஏனோ உண்டாயிற்று ராமநாதனுக்கு. “இன்று அந்தக் கிருஷ்ணனும் வந்திருந்தானா?” என்று கேட்டார் ராமநாதன், பேச்சை மாற்றுகிற உத்தேசத்துடன் தனக்கு விஷயம் விளங்கிவிட்டது என்கிற மாதிரி ஒரு எண்ணம் ஏற்பட்டது அவருக்கு.
“வந்தானே!” என்று தன் நண்பனின் கதை சொல்லும் திறன், முக விலாசம், அழகு, அறிவு எல்லாவற்றையும் பற்றி உற்சாகமாய் பேசத் தொடங்கிவிட்டான் கண்ணன். ஏதோ காவியத்தைப் படிப்பது போல உணர்ச்சி வசப்பட்டவராகக் கேட்டுக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார் ராமநாதன்.
3
அசாதாரணமானது எதையும், எடுத்த எடுப்பிலேயே அசாதாரணமானது என்று ஏற்றுக் கொண்டு ஒதுங்கிப் போய்விடுகிற அறிவு, அறிவாளிகளுக்குச் சாதாரணமாக இருப்பதில்லை. ‘நமக்கு எட்டாதது இதில் ஏதோ இருக்கிறது’ என்று கண்ணன் கதையில் ராமநாதனுக்குத் தீர்மானமாக அதிக நேரம் பிடிக்கவில்லை. ஆனால் அதைக் கிண்டிக் கிண்டிப் பார்த்து லோகாயதமான உண்மையை அறிந்து கொண்டுவிட வேண்டும் என்று அவர் எண்ணினார்.
ஈசுவரன் கோயில் அர்ச்சகரையும் தேடிக்கொண்டு போய் அன்று மாலையே விசாரித்தார் அவர். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதுபோல் கோயில் பூசாரி தெய்வத்துக்கும் அஞ்சான், பக்திக்கும் பணியான் என்பது உலகப் பிரஸித்தம்தானே. அவன் ராமநாதனைக் கேலி செய்தான்.
“காலையிலா? பூஜையா? ஏனையா? இங்கு உச்சிக்காலம் ஒரு பூஜைக்கே ததிங்கிணதோம் போடுகிறது. ஒரு உண்டக்கட்டிக்கு வழியில்லை! பத்து வயசுப் பையன்களுக்காக அதிகாலையிலே கோயிலைத் திறந்து பூஜை செய்யறதாமே! பைத்தியக்காரரே! போம்” என்றான் கோயில் அர்ச்சகன்.
சந்தேகத்துக்கிடம் ஏதாவது இருந்துவிடப் போகிறதே என்று சாட்சியம் சேர்த்துச் சொன்னான். “நான் தினமும் எழுந்திருப்பது எட்டு மணி. எழுந்து அடுப்பு மூட்டி காபி டிகாஷனுக்கு ஜலத்தை அடுப்பில் போட்டுவிட்டு வந்து என் மனைவியை ‘அடியே’ என்று எழுப்புவேன். மூன்றாவது அடியேக்குதான் அவள் விழித்துக் கொள்வாள்” என்றான் அர்ச்சகன்.
இதெல்லாம் ஊரில் தெரிந்த விஷயம்தான். ஊர்ஜிதம் செய்து கொள்ளப் போய் ராமநாதன் பைத்தியக்காரப் பட்டம் கட்டிக் கொண்டதுதான் மிச்சம். அத்துடன் விட்டுவிடாமல் எதிர்ப்பட்டவர்கள் இரண்டொருவரையும் விசாரித்தார். இரண்டு பையன்களும் கைகோத்துக் கொண்டு, உல்லாஸமாகக் கதை பேசிக்கொண்டு கோயில் பக்கம் போவதை ஒருவர் பார்த்தாகவும் ஏற்பட்டது: ஒருவருக்குக் கண்ணனை இன்னார் என்றுகூடத் தெரியும். மற்றவன் கறுப்பாக, வசீகரமான முகத்துடன் இருந்தான் என்றும், அவன் குரலும் மிகவும் மதுரமாகவும் இருந்தது என்றும் சொன்னார் அவர். இந்தப் பக்கத்துப் பையனில்லை என்றார். கையில் புல்லாங்குழல் வைத்திருந்தான் என்றும் சொன்னார் அவர். அதற்கு மேல் சந்தேகத்துக்கு எதுவும் இடமிருப்பதாக ராமநாதனுக்குத் தோன்றவில்லை.
பதட்டத்துடன் வீடு திரும்பி உடனேயே கண்ணனைக் கூப்பிட்டு விசாரித்தார் அவன் தோழன் புல்லாங்குழல் வாசிப்பானா என்று:
“ஓ நன்றாக வாசிப்பானே” என்றான் கண்ணன். “முதல் தாள் பாட்டி கைவிளக்கின் வெளிச்சத்தில் அவனைக் கண்டுவிட்டாள் என்பதற்காக அவன் அதற்குப் பிறகு அங்கு வருவதேயில்லை. தினமும் தெருக்கோடியில் நின்று புல்லாங்குழல் வாசிப்பான். நான் அந்தச் சப்தம் கேட்டதும் எழுந்து போவேன்.”
அதற்குமேல் ராமநாதன் தன் பிள்ளையை ஒன்றும் விசாரிக்க வில்லை. மறுநாள் காலையில் வேணுகானம் கேட்க ராமநாதனும் தயாராக இருந்தார். வேணுகானம் அவர் காதிலும் விழுந்தது, விடிய நாலு நாழிகை இருக்கும்போது. ஆனால் அந்த வேணுகானம் அவரை மயக்கி அதிகமாக உறக்கம் தருவதுபோல இருந்தது நினைத்தபடி எழுந்து தன் பிள்ளையைப் பின்பற்ற அவரால் முடியவில்லை. ஏதோ கனவில் காண்பது போலத் தன் மகன் பாயைச் சுற்றி வைத்துவிட்டுக் கிளம்புவதைப் பார்த்துக் கொண்டு செயலற்றுப் படுத்திருந்தார்.
அன்று காலையில் கண்ணனைத் தேடிக்கொண்டு அவர் படகுத் துறைக்குப் போகவில்லை. உள்ளே போய்த் தன் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தார். “ஏன் அம்மா, அன்று முதல் நாள் நீ கண்ணனின் தோழனைப் பார்த்தாயாமே?”
“என்ன” என்று கேட்டாள் பாட்டி.
“முதல் நாள் கண்ணன் திண்ணையில் படுத்தபோது….”
“ஆமாம்! ஆமாம்!” என்றாள் பாட்டி. “இருட்டோடு இருட்டாக நின்றுகொண்டிருந்தான் அவன்.”
“எப்படியிருந்தான்?” என்று ஆவலுடன் கேட்டார் ராமநாதன்.
“கண்ணன் மாதிரியேதான் இருந்தான். கண்ணனைப் பார்த்தால் அவனைப் பார்க்க வேண்டாம்” என்றாள் பாட்டி.
அப்படித்தான் இருந்திருக்கும். எட்டாததை எட்டிப் பார்க்க மனிதன் அருகில் உள்ளதன் ஊன்றுகோல் துணையைத்தானே நம்ப வேண்டியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டே, வெளியே வந்த ராமநாதன் முன் கண்ணன் எதிர்ப்பட்டான். வழக்கத்துக்கு மாறாக அவன் நெற்றிச் சந்தனம் ஒளியிழந்திருந்தது. முகத்திலே உற்சாகம் குன்றியிருந்தது “என்னடா கண்ணா? என்னடா? என்று பதறிப்போய் அவனை அணைத்துக் கொண்டு கேட்டார் ராமநாதன்.
“அப்பா!” என்று கூப்பிட்ட கண்ணனால் மேலே பேச முடியவில்லை. நா தழுதழுத்தது. உதடுகள் கோணித் துடித்தன.
பிரபஞ்சமே வெடித்து அழிந்து விடுவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்பட்டு ராமநாதனுக்கு ‘என்னடா?’ கேட்டுக் கொண்டே தன் மகனை அரவணைத்துக் கொண்டு நின்றார் கூடத்தில்.
“அப்பா… அவன்… அவன்” என்று விசித்தான் கண்ணன், ஊருக்குப் போகிறானாம் அப்பா!” என்று சொல்லி மாளாத துயரத்துடன் அழத் தொடங்கினான் கண்ணன்.
விவரத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டிய அவசிய மில்லை ராமநாதனுக்கு. அவருக்குப் புரிந்துவிட்டது. சிறுவனின் துயரை என்ன சொல்லி எப்படி ஆற்றுவது என்று தெரியவில்லை அவருக்கு. குற்றம் செய்து விட்ட நெஞ்சம் பிளந்துவிடும் போல இருந்தது.
“நம்ப மறுத்த நான்தானடா பாவி-அவன் போவதற்குக் காரணமாகி விட்டேன்” என்றார் ராமநாதன் துயரம் நிறைந்த குரலில் “நீ பத்து நாள் பார்த்துப் பழக என்ன பாக்கியம் பண்ணிப் பிறந்தாயோ? நான்… நான்” என்று தன் பிள்ளையைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழவே தொடங்கிவிட்டார் ராமநாதன்.
அப்பா எதற்காக அழுதார் என்று தன் பிள்ளைக்குத் தெரியாது. தன் துன்பத்தைச் சிறிதே மறந்துவிட்டு அவரைத் தேற்ற முயன்றான்
கண்ணன்.

க.நா.சு. /கல்யாணப் பெண் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “க.நா.சு/கண்ணன் என் தோழன்”

Comments are closed.