
வாழ்க்கையிலே அவனுடைய கடைசி நாள் அது.
அதைக் கண்டாளா அவள்?
மலைச்சரிவில் காலை வேளையில், இரு சிறு கற்களை மாறிமாறித் தூக்கிப் போட்டுப் பிடித்து அவள் அம்மானை ஆடிக் கொண்டிருந்தாள்.
அவள் கையில் சிக்குண்ட கற்களைப் போலவே அவள் மனமும் தாவித் துடித்தது. கற்கள் திரும்பத் திரும்ப அவள் கைக்கே வந்து சேர்ந்தது போல, அவள் சிந்தனைகள் அவனிடமே சென்று லயித்தன.
குளிர், உஷ்ணம், பசி, தாகம், அவை அடக்கம், தற்காப்பு: ஸ்திரீ, புருஷ அவஸ்தை; இவை தவிர வேறு உணர்ச்சிகள்- மேன்மையான உணர்ச்சிகள் உண்டென்பதை அவள் அப்போதுதான் அறிந்தாள்.
காதலின் உதயம் அது.
வார்த்தைகளில்லை; தான் உணருவதைப் பிறரிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமே எழவில்லை அவளுக்கு.
தன் உணர்ச்சிகளை உணர்ச்சிகளாக அறிய, அறிந்து வருந்த அவளுக்கு மனமில்லை. கூடியவரையில் தன் சிந்தனைகளை, வியாகூலங்களை, மனோசாகர அலைகளைத் தன்னிடமிருந்தே மறைத்து வைத்துக் கொள்ள முயன்றாள்.
அவைகளைப் பரிபூரண உணர்ச்சிகள் என்று சொல்லுவதற்குமில்லை.
அவள் மனம் கொந்தளிக்கும் கடல். உணர்ச்சிக் கடல்தான்;
ஆனால், அவள் மனம் அவ்வுணர்ச்சிகளை ‘உணர’ மறுத்தது. அங்கீகரிக்க மறுத்தது.
கடலின் கொந்தளிப்பு ‘சலசல’வென்று ஓயாமல் குமுறி இசைக்கும். மனத்தின் குமுறலும் ஓரிசையை எழுப்பவல்லதுதான். ஆனால், அது எப்போதும் இன்னிசையாக இருப்பதில்லை.
மனித உள்ளத்தின் கொந்தளிப்பிலேதான் வார்த்தைகள் பிறக்கின்றன என்பது உண்மையாயின், பல புதுப்புது வார்த்தைகள் அவளால் அன்று உச்சரிக்கப்பட்டு உயிர் பெற்றிருக்க வேணும்; ஆனால், அப்படிப் பிறந்த வார்த்தைகளை வாய்விட்டுச் சொல்லவில்லை அவள். வார்த்தைகளின் அவசியம் அவளுக்குத் தெரியாது.
அது காதலின் உதயம்.
3
கால வரையறைக்கு எட்டாத காலம்.
மனித சரித்திரத்தின் முதல்படி.
அதிலே அவன் பல்லாயிரம் நூற்றாண்டுகள் முன்னேறிப் பிறந்தவன். உணர்ச்சி வேகத்திலே அன்று அவள் ‘புதுமைப்’பெண்.
அக்காலத்திய நாளாவிருத்தி காரியங்களுக்கு மட்டுந்தான் வார்த்தைகளுண்டு. அவள் மனக் கொதிப்பிற்கேற்ற வார்த்தைகள் இக்காலத்தவர்க்கும் அகப்படுவது அரிது.
‘காதல்’ என்ற வார்த்தை கிடையாது. காதல் அன்று; அதுவரையில், அவளைத் தவிர வேறு யாரையும் பாதித்ததில்லை. முதல் பெண் தெய்வம் அவள்.
அனன்யமான அன்பு – அதை அப்பெயரிட்டு அழைத்தா ளில்லை. தன் உணர்ச்சிகளுக்குப் பெயரிட வேணும், பெயரி முடியாது என்று அறிந்தாளில்லை அவள்.
அது காதலின் உதயம்.
4
அவன்-அவள்தான்.
கணவன் பெண்சாதி என்ற ‘வஸ்து’க்கள் அப்போது கிடையாது.
அவன் அவளுடைய அன்பை அறிய மாட்டாதவன். அவளுடைய அன்புக்குத் தக்க பாத்திரமில்லை.
அவன் தன் பௌருஷத்திலே பெருமை கொண்டவன்; வேறு பெருமை அறியாதவன்.
தன் மனதை அறியவே அவனுக்கு வசதி கிடையாது, விருப்பங் கிடையாது.
தன் சேர்க்கைக்கு உபயோகப்பட்ட ஒரு பெண்ணைத் தெய்வ மென்று அவன் அறியாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
தெய்வமாகும்போது பெண்ணுக்குத் தனிமனம் உண்டு; தீவிர, புது உணர்ச்சிகள் உண்டு என்று அவன் அறிந்து கொள்ளாததில் விந்தையொன்றுமில்லை.
அவன் உணர்ச்சிகளே அதிகமில்லை; குளிர், உஷ்ணம், பசி, தாகம், கட்டுப்பாடு, தற்காப்பு, புருஷ அவஸ்தை-இவைதான் அவன் அறிந்தது. இதிலும் பகுதிகள் கிடையாது. மேன்மை தாழ்வு
கிடையாது. கட்டை, ஸன்னம் கிடையாது.
இதே மாதிரிதான் அவளுக்கும் என்றே அவன் நம்பியிருந்தான்.
5
அவன் மேல் பிசகில்லை.
அவள் முதல் பெண் தெய்வம்.
அவன் அதை அறிந்துகொள்ளச் சக்தி அற்றவன்.
தான் ஒரு தெய்வம் என்பது அவளுக்கே தெரியவில்லை.
அவளைப் பற்றிய வரையில் அவளுக்கு உறைத்ததெல்லாம் அவள் நெஞ்சிலே இடைவிடாது குமுறிய தெய்வச் சுடர் ஒன்றுதான்.
அவன் மனக்கொதிப்பிலே காதல் வெறுப்பாக மாறியதையே அவள் உணரவில்லை.
உலகிலே பெண்களுக்கு வழிகாட்டி அவள். அவளைப் பின்பற்றியே இன்னும் பெண்கள் நடக்கின்றனர். வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
நடக்க
அவன் பேதை; ஒன்றும் அறியாதவன். அவன் அவளை அறிந்து கொள்ளாதது தவறில்லை. இன்று எல்லா நுட்பங்களையும் அலசி அலசி ஆராயும் நாம் கூட இதைப் பற்றிய உண்மைகளைப் பூரணமாக அறியத் தவிக்கும் போது-அவன்….
அம்முதற் சுடருக்கு இரையாகிவிட்டான்.
6
அவள்: அவன்.
அப்போது மனிதர்களுக்குத் தனித் தனிப் பெயரிட்டுப் பிரிக்கும் வழக்கம் ஏற்படவில்லை. ஆளைக் கண்டால் தான் எதிரே நிற்கும்வரையில் தான்-ஆள், அதற்கப்புறம் அவனை-அவளை பற்றிப் பேச சந்தர்ப்பம், அவசியம் கிடையாது.
கல்லைத் தேய்த்து கத்திமுனை ஈட்டி முனை செய்வதில் அவனைப் போல் சமர்த்தனில்லை; ஆனால், தன்னை அறிந்து கொள்ளச் சமர்த்துப் போதவில்லை.
வேட்டையிலே சூரன்.
மலையிலே, காட்டிலே வசித்த,
பெரிய பெரிய மிருகங்கள் அவனுடைய சிறிய கூர்ந்த கல்லம்புகள் முன் விழுந்து மாய்ந்தன.
ஆனால், நாரீஹ்ருதயத்தின், பெண்மையின் மூலை முடுக்குகளைக் காண அவனுக்குச் சமர்த்தில்லை.
7
அவன், அகஸ்த்மாத்தாக ஒரு நாள், அவனைத் தன் புருஷத் தன்மையால், புருஷ அவஸ்தையால் கட்டி எழுப்பிவிட்டான்- பெண் குலத்தின் தெய்வம் அன்று பிறந்துவிட்டதை அறியாத பேதை!
அவள், அவனுடைய முதல் ‘பெண்’ அல்ல-எத்தனையோ பென்களில் ஒருத்தி.
உடைமைகள் என்ற தளைகள் அன்று பிறந்திருக்கவில்லை. ஸ்திரீ புருஷ சுதந்திரம் கட்டுகளுக்கு அடக்க ஆரம்பிக்காத நாள்.
அவன் தன் அவஸ்தைகளைப் பல பெண்களுடன் பசியை, தாகத்தை, குளிரைத் தணிப்பதுபோல-தணித்துக் கொண்டவன். அவள் அதில் ஒருத்தி.
அந்த விநாடிக்குப் பிறகு அவன் மற்றவர்களைப் பற்றி எண்ணியது கிடையாது. அவளைப் பற்றியும் எண்ணவில்லை. உண்மையில் அதற்கப்புறம் பலநாள் அவள் ஞாபகமே அவனுக்கு இல்லை.
8
ஆனால் அவன் அவளுடைய முதல் புருஷன்.
உணர்ச்சி அலைகள் எழுந்துமோதின. அன்றே அவள் பெண்மைத் தெய்வமாகிவிட்டாள்.
அக்காலத்தவர்களின் எல்லைகளை மீறி எழுந்தது அவள் மனம்: காதல் ‘உரிமை’ உணர்ந்தான். உலகிலே அன்று அன்பின் விதைகள் விதைக்கப்பட்டன.
அவளின்றி மனிதவாழ்வு முன்னேறியிராது. அவளை ஆதர்சமாகக் கொண்டே, பின்னர் உலகில் பல ‘தேவியர்’ தோன்றினர்.
சமூக விதிகளில் முக்யமானது அவளால்தான சாத்தியமாயிற்று. ”கண்ணாலம்’ எனும் இந்த நாளைய சம்பிரதாய வழியைச் சொல்ல வில்லை. அது அத்தேவ விதியின் சாயையே தவிர வேறல்ல.
ஆனால் அத்தேவ விதி இன்னும் ஒரு சிலருக்கு மட்டும் மாற்றொணாத விதியாக இருப்பதை மறக்கமுடியாது.
9
அக்காலத்து வழக்கப்படி அவள் அவனுக்குப் பின் பல புருஷர்களுடன் கூடினாள். ஆனால், அதிலே அவன் மனமில்லை.
பெண் தெய்வம் அவனை மானஸீகமாகத் தன் புருஷனென வரித்து விட்டாள். அன்று இருவிதமான நெருப்புகள் பிறந்தன. ‘எதிர்க்கக்ஷி’ யைப் பற்றிச் சிந்தித்தாளில்லையவள்.
தான், தன் இனத்தவர்களில் மற்றவர்களைப் போல் ஏனில்லை யென்று அவள் அறிய முயலவில்லை. அந்த அறிவு அவளுக்கு அவசியமாகத் தோன்றவில்லை.
‘அதேன்?’ என்று என்னைக் கேட்டால்-
‘தெரியாது!’ என்று பதிலளிப்பதற்குப் பதில், நான் “மனித வர்க்கத்தின் முன்னேற்றத்திலே ஆர்வங்கொண்ட ஒரு பொருளின் காரியம். அது பரம்பொருளோ! ஜடவிதியோ!” என்று சொல்லுவேன்.
அவள் கண் திறந்தது. தன் காதல் திறம் அறிந்தாள். தான் தானல்ல; அவன் காதலி என்பதறிந்தாள்.
அவளுடைய அந்த ஞானம் மனித அறிவின் மடையைத் திறந்தது. அதனால் இருளடர்ந்த இவ்வுலகிலே ஜோதி வெள்ளம் பெருகிற்று….
அவளால்…
10
தன் சமூக வாழ்விலே அவளுக்கு ஆர்வமில்லை; கொஞ்ச் நஞ்சமிருந்த பிடிப்பும் அவன் பொருட்டுத்தான்.
கூரம்புகளாகத் தீட்டக் கற்கள் பொறுக்கி வருவர் பெண்கள்: தான் தேடியெடுத்த கற்களில் சிறந்தவற்றை அவனிடம் கொடுப்பாள் அப்படிக் கொடுக்கும்போது-அவள் உள்ளக் கிளர்ச்சிகளை அளந்து வெளியிட இன்னும் வார்த்தைகளில்லை.
அவன் உள்ளத்திலே எதிரொலியில்லை. அவள் காதல் ஒளி அவன் ஹ்ருதயத்திலே நிழலாகக்கூடப் படவில்லை.
பெரிய பிராணிகளின் மண்டை ஓடுகளில், சில பெரிய பழ ஓடுகளிலும் அருவி நீர் கொண்டு வருவாள்; அவன் தாகசாந்திக் பிற பெண்கள் கொண்டு ன்று பத்திரப்படுத்தி வைப்பாள். வந்த ஜலத்தை அவன் பருகுவதைக் காண அவள் மனம் பிளக்கும்.
வேட்டையாடிக் கொண்டுவந்த தோல்களை அவன் அவளுக்கென்று பத்திரப்படுத்துவது கிடையாது. சில சமயம், பிற பெண்களுக்குக் கொடுப்பது போல அவளுக்கும் கொடுத்ததுண்டு. அவள் மனமிருந்தபோது அதை அணிந்து கொள்வாள். புருஷர்கள் தந்த தோலை அவள் அங்கீகரித்தாலும் அணிந்ததே கிடையாது.
11
தன் இனத்தவர் பிறரைப் போலில்லை அவள். அதை அவள் அறிவாள்; பிறர் அறியார்.
ஆனால், தன் ‘தனிமை’யை அவனும் அறியவேணுமென்பதே அவள் ஆவல். அவனிடம் தெரிவிக்க அவளுக்கு வார்த்தைகள் இல்லை. அன்று மனித ஜாதியே ஊமை.
அன்றுதான் பரம்பொருளோ! ஜடவிதியோ! அதற்கு பாஷையின் அவசியம் தெரியவந்தது.
காதலால் தெய்வமாகத் துடித்துவிட்ட அவள், கேவலம் மனுஷ அவஸ்தையைக் கூடத் தணிக்கச் அவனுடைய சக்தியற்றவளாகி விட்டாள்.
அவனைக் காணும்போதெல்லாம் அவள் உடல் ஆசையால் துடிக்கும்; காணாதபோதெல்லாம் ஆசையும், மனமும் துடிக்கும்.
அவள் முற்றும் அறிந்தது உடல் ஒன்றுதான். அவளுக்கு மனம் அரைகுறையாகத் தெரியும். ஆத்மா தெரியவே தெரியாது.
12
தன் ‘தனிமை’யைத் தன் ‘காதலை’ அவனுக்குணர்த்த வழி அறியாது திகைத்தாள். அவளே பூரணமாக உணர வழியில்லையே! அவனுக்கும் உணர்த்துவது எப்படி?
கவிதையின் பிறப்பைச் சாத்தியமாக்க அன்று வார்த்தைகள் என்ற மருத்துவரில்லை. கவிதை பிறக்கவில்லை. அவள் உள்ளத்திலே ஊற்றுப் பெருகிற்று. வழிந்தோடவில்லை.
மனித முன்னேற்றத்திலே ஆவல் கொண்ட அது-ஜடவிதியோ! பரம்பொருளோ! அவளை மீட்க வழியறியாமல் தவித்தது பலநாள்…
நரபலி கொள்ளத் தீர்மானித்தது.
அக்னி தேவன் அவதரித்தான்.
அன்று
காதல் உள்ளத்தை எரிக்கப் பிறந்தது;
தீ உடலை எரிக்கப் பிறந்தது.
13
மலைச்சரிவிலே காலை நேரத்திலே நிற்கிறாள்.
பிறந்த மேனியாக; அன்று ஆடை ஆபரணாதிகளுக்கு அவசியம் ஏற்படவில்லை. மனித உடலுக்கு ஆடை ஆபரணாதிகள் ஏற்காத காலம்; குளிர், வெம்மை தாங்க மனித சரீரம் முழுவதும் மயிர் அடர்ந்திருந்த காலம்.
அழகியா அவள்? இல்லை.
குரூபியா? இல்லை.
அவள் பெண்; முதல் பெண் தெய்வம்.
மலைச்சரிவிலே, காலை நேரத்திலே அம்மானை ஆடி கொண்டு நின்றாள் அவள். அவள் கையிலிருந்த கற்கள் ஓய்வின்றி மேலும் கீழும் போய் வந்தன; சதா அலைந்து உழன்றன. அவை அவளுடைய மன அலைகளின் சின்னங்கள்.
அகத்திலே அலைகள் மோதின. காதல் பொறி பிறந்தது.
புறத்திலே கற்கள் மோதின; தீப்பொறி பறந்தது.
உலகிலே அது முதற்சுடர், முதல் தீச்சுடர்.
காதலிலே லயித்து வெள்ளை மனம் பறிகொடுத்திருந்த அவள் இப்பொறிகளைக் கவனிக்கவில்லை.
14
ஒரு தீப்பொறி பறந்து அருகில் இருந்த நாணல் புதரில் விழுந்தது. பின்னர் இன்னொன்று.
உலர்ந்த நாணல் பற்றி எரிய ஆரம்பித்தது.
முன்பின் தீயை யறியாதவர்கள் தீயின் குணம் அறிவதெப்படி?
அவள் உள்ளக் கனவை அறிந்து கொள்ள மாட்டாது திகைத்த மனிதகுலம் நாணல் சொக்கப் பானையைச் சூழ்ந்து நின்றது; அவளால் எழுப்பப்பட்ட தீயையும் அறியாமல் திகைத்தது.
ஆனால், அத்தீ அவளுக்குப் புதுமையாகத் தோன்றவில்லை. அக்னி தேவனை அவள் அங்கீகரித்தாள்.
உள்ளே குமுறிய ஏதோ புறத்திலும் பரவிவிட்டது என்றே அக்னி தேவனை அங்கீகரித்தாள்.
காணாது கண்ட திகைப்பு; ஆச்சரியம்; மூளைக்கெட்டாத புதுமை – அன்று மனிதகுலம் முதல் பெண் தெய்வத்தைப் போற்றவில்லை.
தீயில் விழுந்து அவள் தவித்தாள்.
தேடிக் கண்டு கொண்டதும் அவனை அழைத்தன அவள்
15
பெண்மையின் அழைப்பு!
முதல் பெண் தெய்வத்தின் அழைப்பை மீற அவனுக்கு சக்தியேது?
தப்ப வழி ஏது?
அவள் உடலுக்கு, அவள் உள்ளத்துக்குத் தன் ஆதரவு தேவை அது ஒன்றே அவள் என்று அறிந்தவன்போல் அவன் அவளை அணுகினான்.
அது ஒன்றேஅவன் என்று
தன் அணைப்பு ஒன்றே அவள் அச்சமயம் வேண்டினான் என்று அறிந்தவன்போல் அவன் அவனை அணுகினான்.
மனிதக் கூட்டம் வழிவிட்டு விலகி நின்றது.
அவளை அணுகியவன் முதலில் வெகுண்டு ஓடினான் அவளும் பின் தொடர்ந்தாள். அவன் திடீரென்று நின்றான்; அவளை வரவேற்றான்; மனக்குகையில் என்ன புதிய வெளிச்சமோ!
அவன் பௌருஷத்தையும் வீர்யத்தையும் எழுப்பியது யெனும் அப்புதுமை.
அக்னி தேவன் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தான்.
அவனும் பலி.
சொக்கப்பனை!
கடைசி உணர்ச்சியின்மையிலே அவள் உள்ளக் கொதிப்பும் உடற்கொதிப்பும் அடங்கிவிட்டன.
16
அன்று மனித உள்ளம் கண்ட கடைசி முடிவு காதல்,
அன்று மனித உடல் கண்ட கடைசி முடிவு தீ.
க.நா.சு/கண்ணன் என் தோழன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “க.நா.சு. /முதற் சுடர்”
Comments are closed.