க.நா.சு/கருகாத மொட்டு

தியாகராஜன் :

இன்று காண்டேகர் எழுதிய ‘கருகிய மொட்டு’ என்கிற நாவலைப் படித்து முடித்தேன். இப்பொழுதுதான் படித்து முடித்தேன். காண்டேகர் எழுதிய ‘பாரிஜாத மலர்’ என்கிற கதையைப் பலரும் படித்துவிட்டு, அபிப்பிராயம் எழுதித் தங்கள் தங்கள் கதையைச் சொல்கிற மாதிரியும், அந்தக் கதையைத் தொகுத்துத்தான் நாவலாக்கியிருக்கிற மாதிரியும் கதையை எழுதியிருக்கிறார், காண்டேகர்.
எனக்கும் என் கதையைக் கூறவேணும் என்று தோன்றுகிறது. ஆனால் நான் ஒரு ஆசிரியனே அல்ல. காண்டேகரோ ஒரு பாஷை தாண்டியும் பிரபலமடைந்துவிட்ட பெரிய இலக்கியாசிரியர். அவரை எதிர்த்து என் எழுத்து எடுபடுவதெப்படி என்றுதான் எனக்குத் தெரியவில்லை.
ஆனால் காண்டேகரை எதிர்த்துப் போட்டி போடும் உத்தேசம் எனக்குச் சிறிதும் இல்லை. நான் கதை எழுதவே விரும்பவில்லை. இந்தக் கதையைத் தவிர-என் கதையைத் தவிர வேறு கதை நான் எழுதுவேன் என்கிற நம்பிக்கையோ, ஆசையோகூட எனக்குக் கிடையாது.
பொய்யையும் உண்மையைப் போலச் சொல்லுகிறவனைத் ஆனால் உண்மையையே தான் உலகம் கலைஞன் என்கிறது. உண்மை போலச் சொல்லத் தெரியாத எனக்கு, பொய்யைத் திரித்து உண்மையாக்கக் கலைத்திறன் ஏது?
இல்லாதது நல்லதுதான்.
ஜானகியை நான் மனைவியாக அடைந்தது முதல் இன்றுவரை ஒரு இருபது வருஷத்திய கதையைக் கூறவே நான் விரும்புகிறேன். ஒரு கதைக்குத் கதையை என்று நான் கூறுவதுகூடத் தவறு. தேவையான மேடு பள்ளங்கள் எங்கள் வாழ்க்கையில் இல்லவே இல்லை. மேடு பள்ளங்கள் இல்லாத வாழ்க்கையும், ஒரு வாழ்க்கையா என்று நினைப்பதை நான் என் அனுபவத்தில் பலா மேடு பள்ளங்கள் அதிகமில்லாததை ஒரு கண்டிருக்கிறேன். சிறப்பாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறவர்கள், அதாவது என் போன்றவர்கள், உலகில் குறைந்து கொண்டிருப்பது போலத்தான் இருக்கிறது.
மேடு
இது விஷயத்தைத் தெளிவாக்கி விட்டேனோ என்பது எனக்கே தெரியவில்லை. மேடு பள்ளங்கள் என்றால் என்ன? பள்ளங்கள் வாழ்க்கைக்கு ஊறுகாயா, உணவேதானா? இதெல்லாம் பெரிய பெரிய ஆசிரியர்கள் சிந்தித்துச் சொல்ல வேண்டிய விஷயங்கள். அந்தப் பிரச்னை பற்றி நான் மண்டையை உடைத்துக் கொள்ள விரும்பவில்லை.
‘கருகாத மொட்டுகளும், உலகில் உண்டு’ என்கிற கட்சியை எடுத்துக்காட்ட எங்கள் வாழ்க்கை உதவினால் போதும்; எங்கள் வாழ்க்கை கருகாத மொட்டு.
‘கருகிய மொட்டு’ என்பது போன்ற எத்தனை நல்ல கதைகளைப் புஸ்தகங்களில் படித்தாலும், எனக்கென்னவோ மனிதர்களுடைய வாழ்க்கையில் கருகிய மொட்டுகள் அபூர்வம்தான். அவ்வளவாக மலர்ந்து பூரணத்துவம் பெறாவிட்டாலும், பலருடைய தாம்பத்ய வாழ்க்கை கருகாத மொட்டாகவே இருக்கிறது என்பது என் நினைவு.
அரபிக் கதையில் வருகிற ஸுல்தானின் நாவிதன் கதைதானோ என்னவோ என் கதையும்! தன் அனுபவம்தான் உலகத்தின் அனுபவமும் என்று மனிதன் நினைப்பது சகஜமே! என் கட்சியைப் பற்றி இக்குறையைக் கூறலாமானால், எதிர்க்கட்சியைப் பற்றியும் இதே குறை கூறலாமல்லவா?
போகட்டும்; ஜானகியைப் பற்றிக் கூறுகிறேன்.
ஜானகியை நானாகத் தேடிப் பிடித்துக் காதல் மணம் புரிந்து கொள்ளவில்லைதான். மிகவும் வைதிகமான முறையில் எல்லா விதமான பொருத்தங்களும் பார்த்து, பெரியார்கள்தான் உண்மையில் எனக்கும் ஜானகிக்கும் கல்யாணம் செய்து வைத்து ஆசீர்வதித்தார்கள். அவர்களுடைய ஆசீர்வாதங்கள் பலித்துவிட்ட மாதிரியேதான் எனக்கும் நினைப்பு.
நாகரிகமான முறையில்-அதாவது இருபது வருஷத்துக்கு முந்தியதான அப்போதைய நாகரிக முறையில்-நானும் என் தாயும் என் தங்கையும் போய் ஜானகியைப் பார்த்துவிட்டு வந்தோம். பார்த்தது முதலே எனக்குத் திருப்திதான். அம்மா மாநிறம் என்றாள்; தங்கை அசடு என்றாள். அவர்கள் இரண்டு பேருக்கும் பிடிக்காத காரணம்தான் எனக்கு ஜானகியை ஆரம்பத்திலே பிடித்திருந்தது போலும்.
எங்கள் கல்யாணம் எங்கள் ஸ்திதிக்கு ஏற்றவாறு விமரிசையாகவே நடந்தது. என் மனைவி அவ்வளவாக அழகியல்லவே என்று ஒவ்வோர் சமயம் எனக்குத் தோன்றும். ஆனால் மொத்தத்தில் சில வருஷங்களுக்குள்ளாகவே ஜானகி என் கண்களுக்கு அழகியாகக் காட்சி அளிக்கத் தலைப்பட்டு விட்டாள். அவளைவிட அதிக அழகு படைத்தவளைப் பற்றி நினைக்காதிருக்கவே நான் பழகிக் கொண்டேன். இதில் ஏக்கம் எதுவும் இல்லை. எட்டாததை எண்ணி ஏங்குபவன் எப்போதுமே துரதிருஷ்டசாலியாக இருக்கப் பிறந்தவன்தான் என்பது என் அனுபவ சித்தாந்தம்.
Marriages are made in heaven கல்யாணங்கள் தெய்வ சித்தத்தால் நடப்பவை என்கிற சித்தாந்தம் வாழ்க்கையில் பலிக்கிற மாதிரி, தாம்பத்ய வாழ்க்கையில் பலிக்கக்கூடிய வேறு எந்தச் சித்தாந்தத்தையும், எவ்வளவு தீவிரமான சீர்திருத்தவாதியும்இனி, கண்டுவிட முடியாது என்பதுதான் என் தீர்மானம். புதிருக்குப் பதில் புதிர்களைக் கூறி, பிரச்னைக்குப் பதில் பிரச்னைகளை வீசி, எல்லோரையும் திக்குமுக்காடச் செய்வது பிரமாதமான கலையாக இருக்கலாம். ஆனால் சமுதாய வாழ்க்கை ஒருநிலை கொள்வது இப்படியல்ல. தவறோ, சரியோ நியாயமோ, அநியாயமோ, ஒரு புதிரை விடுவித்து, ஒரு பிரச்னைக்குப் பதில் தந்து முடிவு கண்டு சொல்பவனே, மனித குலத்துக்கு நல்லது செய்தவன் ஆவான்.
ஆனால் இதெல்லாம் பெரிய விஷயங்கள். மிகவும் சின்ன மனிதனாகிய எனக்கும் இவற்றிற்கும் சம்பந்தமில்லைதான். ஜானகி படித்திருந்தும் அதிகம் இல்லை, ஐந்து வயதிலிருந்து பத்துப் பதினொரு வயதுவரையில் பள்ளிக்கூடம் போய் வந்திருந்தாள். ஆனல் பி.ஏ. பட்டதாரியான என்னையும்கூட அவள் அறிவாளி என்று அறிந்துகொள்ள எனக்கு அறிவிருந்தது. புத்திசாலித்தனமாக எதையும் கவனிக்கவும் ஆராயவும் அவளுக்கு அறிவு இருந்தது. நான் எதைப்பற்றியும் மேலெழுந்த வாரியாகச் சிந்திப்பவன். பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிச் சிந்திக்க நேரும்போதெல்லாம் திறமை காரணமாக மட்டுமின்றி, அவசியம் இல்லை என்றும் ஒதுங்கிப் போகிறவன் நான். அவள் யோசனையின் முடிவு அப்படியில்லை. ஆழ்ந்து யோசிப்பாள்.
கையிலுள்ள காரியத்துக்குக் குந்தகம் விளைவிப்பதாக இருந்தால் மனசிற்குள்ளேயே புதைத்து விடுவாள். வெளியிட மாட்டாள். இனிமையான வாழ்க்கை சாத்தியமாவது, இந்த மாதிரி உள்ளதற்கு விரோதமான முடிவுகளை மறக்க முயலும்போதுதான் என்று ஆங்கிலத்தில் (Compromise) எனக்குத் தோன்றுகிறது. என்கிறார்கள். சமுதாய வாழ்க்கை சாத்தியமாவது (Compromise) என்கிற ஒரு தத்துவத்தினால்தான்.
ஜானகியின் அறிவுக் கூர்மை எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. அப்படிப் பெருமைப்படுவது தவறு என்று எனக்கு அப்போதும் தோன்றவில்லை; இப்போதும் தோன்றவில்லை. நாகரிகம் முதிர்ந்து வருகிற காலத்திலே நான் நாகரிகமற்றவன்தானோ என்னமோ! அப்படியும் என் வாழ்க்கை இன்பமயமானதாகத்தான் இருந்திருக்கிறது.
மற்றபடி எத்தவறு சொன்னாலும் நான் இன்பகரமான வாழ்க்கை நடத்துவது தவறு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இல்லையா?
காண்டேகரின் ‘கருகிய மொட்டில்’ வருகிற கதாநாயகிகளும் நாயகர்களும் தங்கள் குணங்களைக் கூறிக்கொள்ளுகிறார்கள். பெருமைகளைக் கூறிக் கொள்ளுகிறார்கள். விசேஷ அம்சங்களைப் பாராட்டிக் கொள்ளுகிறார்கள். எதிரி புருஷன் மனைவியை எதிரிகள் என்று கூறுவதே நியாயம் அல்ல என்றுதான் என் போன்றவர்களுக்குத் தோன்றும்-எதிரிகளின் குணங்கள், பெருமைகள் விசேஷ அம்சங்கள் அவளுடைய கண்களில் படுவதேயில்லை.
காதல் என்பதற்குப் புதுவிதமான அர்த்தம் சொன்னால்தான் அது விசேஷிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. எதிரியினுடைய குற்றங்களையும், சிறுமைகளையும் மறந்துவிடச் செய்வதுதான் காதல் என்று சொல்வதில் தவறில்லை.
ஆனால், ஆண் பெண் உறவு பற்றிச் சிந்திக்க அறிவுமட்டும் போதாது-அனுபவம் மட்டும் போதாது-இரண்டும் இருந்தாலும்கூடப் போதாது என்றுதான் தோன்றுகிறது.
தாம்பத்ய வாழ்க்கையில் உடல் ஓங்க வேண்டுமா, உள்ளம் ஓங்கவேண்டுமா?
‘யாருக்குத் தெரியும்?’ என்று பதில் கேள்விதான் கேட்கலாம் தவிர ஒன்றும் சொல்லமுடியாதுதான்.
கிடக்கட்டும் பிரச்னைகள். பிரச்னைகளைவிட வாழ்க்கைதான் முக்யம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்ளத்தானே செய்வார்கள்!
பிரச்னைகளைக் கிளப்புவதென்றால் 328 பக்கங்கள்தானா? 3,28,000 பக்கங்களும் எழுதிக் கொண்டேயிருக்கலாமே!
அதனால் பலன் என்ன? நானும் பெரிய ஆசிரியனாகி விடலாம்! அதைத்தவிர வேறு பலன் கிடையாது!
ஆனால், என் ஜானகியின் கதையைத் தொடர்ந்து சொல்லி முடித்துவிடுகிறேன்.
காண்டேகரின் கதாநாயகர் கதாநாயகி போல நாங்கள் இருவரும் கல்யாணமான புதுசில் மட்டும் மிதமீறிய விஷய சுகத்தில் ஈடுபட்டுவிடவில்லை. தனியாக honeymoon கொண்டாடுகிற வேகம் எங்களுக்குத் தோன்றவில்லை . அந்த வேகத்தின். பிரதிபலிப்பான சலிப்பும் கசப்பும் தோன்றவில்லை. இந்த விஷயத்திலும் நாங்கள் பாக்கியசாலிகள்தான். ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்களாகிய எங்களுக்குச் சுகத்திலும் துக்கத்திலும் பங்கிருந்தது. நாங்கள் தனிப்பட்ட தம்பதிகள் அல்ல; ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள். எங்கள் எதிர்காலம் குடும்பத்தில் இருந்தது. எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் எங்களிடம் இருந்தது.
விஷயசுகம், உள்ளம் இரண்டுக்குமுள்ள முரண்பாட்டையே சொல்லுகிற கதாநாயகன், கதாநாயகியின் குடும்பங்களுக்கும், அவர்களுக்கும் இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் எதிர் காலத்திலும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாதா?
எங்கள் உடல் உறவில் திளைப்பு ஏற்படவில்லை என்று சொன்னேனல்லவா; எங்கள் உள்ளங்களின் உறவும், சிறுசிறு தியாகங்களாலும், பரஸ்பர உதவிகளாலும், குடும்பம் என்கிற லட்சியப் பண்பாட்டினாலும் உறுதிப்பட்டது.
தாம்பத்ய வாழ்க்கையில் அதிருப்தி எப்படித் தோன்றுகிறது? உடல் அடங்காவிட்டால் உடலை அடக்க வேண்டும். உள்ளம் அடங்காவிட்டால் உள்ளத்தை அடக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியுண்டு என்று நினைக்கத் தொடங்கியிருப்பதுதான் இன்றையத் தலைமுறையின் துரதிருஷ்டம் என்று நான் எண்ணுகிறேன்.
வேறு வழியிருக்கலாம் என்பது தவறான யோசனை. சமூகத்துக்கே நாசகரமானது.
வேறு வழியுண்டென்று நினைப்பது அதிருப்தியை வளர்க்க வழியே தவிர, வேறு அல்ல.
மனிதன் அதிருப்தியை வளர்த்துக்கொண்டு தன்னையும் பிறரையும் சங்கடத்தில் ஆழ்த்துவதற்கே பிறந்திருக்கிறான் என்கிற சித்தாந்தத்தை என்னால் நம்பத்தான் இயலவில்லை.
ஜானகியின் மனசில் என்ன இருக்கிறதோ எனக்குத் தெரியாதுதான். ஆனால் அதிருப்தியில்லை என்று மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
தாம்பத்ய வாழ்க்கையில் இந்த நிச்சயத்துக்குத்தான் காதல் என்கிற பெயர் கொடுக்கவேண்டும்.
முன்னெல்லாம் சொர்க்கப்படம் என்று ஒன்று ஆடுவார்கள். பாம்புகளின் வாயில் அகப்பட்டுக் கொள்ளாமல் ஏணிகளில் ஏறிச் சொர்க்கத்தை எட்டிவிட வேண்டுமென்று ஒரு லட்சியம்.
இப்பொழுதும் சொர்க்கப் படங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் லட்சியம் சொர்க்கம் அல்ல. ஆட்டத்தின் முடிவு மொட்டைத் தாதன் விழுந்த குட்டை அல்லது சமையலறையைவிடச் சுத்தமாக இருக்கிற கூச்சல்.
கக்கூஸ் சுத்தமாகச் சுத்தமாகச் சமையலறை அசுத்தமாகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இரண்டும் சுத்தமாகி விட்டால்தான் தேவலையே!
சொர்க்கத்தை ஒரு லட்சியமாகக் கொள்ள என்னால் முடிகிறது. மொட்டைத்தாதன் விழுந்த குட்டை ஒரு லட்சியமா?
விஷயத்தை இன்னும் தெளிவிக்க எனக்குத் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ரஸமான விஷயத்தை விரஸமாக்கு பவன்தான் ஆசிரியர் என்பது சரியல்ல. ரஸமான விஷயத்தில் ரஸம் கூட்டவேணும். ரஸம் கூட்ட முடியாவிட்டால் சும்மா யிருப்பதே நல்லது அல்லவா?
எங்களுக்கு நாலு குழந்தைகள் இருக்கின்றன மூன்று பெண்கள், ஒரு பிள்ளை.
காண்டேகரின் ‘கருகிய மொட்டில்’ எழுகிற பிரச்னைகள், புதிர்கள் எவையும் எங்கள் குழந்தைகளைப் பாதிக்காது என்பதில் தான் ரொம்பவும் திருப்தியாயிருக்கிறேன்.
நல்லவேளை, அதிர்ஷ்ட வசமாக அவர்கள் எங்கள் குழந்தைகள்…

ஜானகி :

ஏதோ இன்று காலையிலெல்லாம் அவர் ஏதோ எழுதிக் கொண்டேயிருந்தார். ஆபீஸுக்கு நேரமாகிவிட்ட அவசரத்தில் என்னிடம்கூட வழக்கப்படி பேசாமல், சற்று அவசரமாகவே சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார்.
அவர் போனபின் நானும் சாப்பிட்டு விட்டு அவருடைய மேசைமேல் கிடந்த புஸ்தகத்தையும், அவர் முடிக்காமல் விட்டிருந்த எழுத்தையும் படித்தேன்.
காகிதப் பூவை யாராவது மலரென்று எண்ணிக் கூந்தலில் அணிவார்களோ? இந்த நாளில் அதுவும் உண்டுதான் போலும்.
நான் வாசமில்லாத மலரைப் பறிக்க வேண்டும் என்றுகூட நினைக்காதவள்-எனக்கு என்ன தெரியும். காகித மலர்களைப்
பற்றி…
அவருக்கே சரியாக எழுதத் தெரியாது என்கிறாரே எனக்கு என்ன தெரியும்?
முன்னெல்லாம் மதுரைக் குஸும்பாப் புடவையுண்டு. அது ரொம்பவும் நன்றாக இருக்கும். ஆனால் என்னைப் போல நினைப்பவர்கள் மிகவும் குறைவு என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். அந்தப் புடவையே ஒரு தலைமுறைக்கும் அதிகமாகவே காணப்படவில்லையே!
நான் குஸும்பாப் புடவைக்காரி. ஜார்ஜெட் புடவை உடுத்தி, கை நகங்களுக்குச் சிவப்புத் தீட்டி, உதட்டுக்கு ரத்தம் தோய்த்து நடமாடுகிற ஸ்திரீ ரத்னங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?
ரத்னங்களில், இந்த நாட்களில் போலிகள்தான் அதிகம் என்பதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது.
ஆனாலும் ஒன்று. நானும் பெண்தான். பெண்களின் திருப்தி அதிருப்தி, லட்சியம் அலட்சியம், சுகம் துக்கம் எல்லாவற்றிலும் எனக்குரிய பங்கை எடுத்துக்கொண்டு, பூர்ண வாழ்வு வாழ்ந்து விட்டவள் நான். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.
எங்கள் குடும்ப வாழ்க்கை – தாம்பத்ய வாழ்க்கை, கருகாத மொட்டு என்கிறார் அவர். அதுகூடத் தவறு என்று நான் சொல்லுவேன்.
எங்கள் தாம்பத்ய வாழ்வு மணமுள்ள மலர்.
என் குணங்கள் அவருக்குத் தெரியுமோ தெரியாதோ- எனக்குத் தெரியாது. அவர் கு அவர் குணங்கள் பூராவும் எனக்குத் தெரியும். குற்றங்கள் எதையும் அவர் அறிந்து கொண்டுவிடக் கூடாது என்று, அவர் மனம் நோகாதிருப்பதற்காக நான் என் ஆயுள் பூராவும் பாடுபட்டிருக்கிறேன்.
எங்களுடைய இருபது வருஷக் குடும்ப வாழ்க்கையை இருபது வருஷங்களாய் ஆகிவிட்டது- எண்ணிப் பார்க்கும்போது மணம் வீசுகிறது.
உள்ளத்தில் மட்டும் அல்ல-உடலில்கூடத் திருப்தி நிறைந்துதான் இருக்கிறது.
நான் அதிர்ஷ்டக்காரி. எனக்கு இவ்விஷயம் வாய்த்தது என்று என்னைப் போன்ற அதிர்ஷ்டசாலிகள் நினைப்பது சரியல்ல. நம்மிடையே நிறையப் பேர் இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
….நேரமாகிவிட்டது. அவர் வந்துவிடுவார். காபி தயாராக வேணும்….)
திரௌபதிக்கு ஐந்து கணவன்மார்கள் இருந்தும், ஆறாவது கணவனாகக் கர்ணனை எண்ணி ஏங்கினாள் என்று கூறியவனும் ஓர் இலக்கியாசிரியன்தான்…. (அதோ… அவர் வந்தே விட்டார்).

தியாகராஜன் :

பேஷ்! வேறு எழுதுவானேன்?
இந்த இலக்கியாசிரியர்களிடமிருந்து ஈசுவரன் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேணும்.

1966

க.நா.சு. /முதற் சுடர் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “க.நா.சு/கருகாத மொட்டு”

Comments are closed.