க.நா.சு. /அலமேலு

தனக்கு அலமேலு என்ற பெயர் வைத்திருந்தது பற்றி அவளுக்கு அளவு கடந்த கோபமும் ஆத்திரமும் வந்தது. ஆனால், வந்து என்ன செய்வது? பெயர் என்னவோ வைத்துவிட்டார்கள். இனி அந்தப் பெயர்தான் நிலைக்கும்.
அலமேலு என்கிற பெயருடன் தற்காலத்துக்கேற்ற நாகரிகமான வாழ்க்கை நடத்த முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.
பெயர் வைக்கிற அன்று அவளுக்குச் சுயப்பிரக்ஞையும், பின்னால் இருந்த அறிவும் மட்டும் இருந்திருந்தால், அவள நிச்சயமாக அந்தப் பெயரை ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டாள் அலமேலுவாம்! அலமேலு!
பெண்களுக்கு இடுவதற்கென்று எவ்வளவோ அழகான பெயர்கள் இருந்தனவே! அவற்றில் எதையாவது அவளுக்கிட்டிருக்கக் கூடாதா? மனோரமா, சரோஜா, சுசீலா, பவானி, லீலா- நூற்றுக் கணக்கில், ஏன் ஆயிரக் கணக்கில் என்றுகூடச் சொல்லலாம், நல்ல பெயர்கள் இருந்தனவே!
ஆனால் ஒன்று அலமேலு என்கிற பெயரைத் தவிர மற்ற பெயர்களெல்லாம் நல்ல பெயர்கள்தான் என்றே அலமேலு நினைத்தாள். காமாட்சி என்று பெயர் வைத்திருந்தால்கூடச் சகித்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று எண்ணினாள்.
இந்தப் பெயரில் உள்ள குறையை அவள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து இரண்டொரு வாரங்களுக்குள்ளாகவே உணரத் தொடங்கி விட்டாள். பள்ளிக்கூடத்திலே அவளைத் தவிர இன்னும் இரண்டொரு அலமேலுகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பக்கம் யாரும் போவதில்லை; இந்த அலமேலுவைப் போல அவர்களுக்கும் அழகும் கிடையாது-கோபம் வந்தால் முகம் சிவப்பதும் கிடையாது. இதைக் கவனித்த அலமேலுவின் சக மாண மாணவிகள் அவளை வழக்கத்துக்கு அதிகமாகவே சீண்டிக் கோபமூட்டத் தொடங்கினார்கள்.
“அம்புலு!” என்று ஆரம்பிப்பாள் எட்டு வயசு இன்னும் நிரம்பாத வனஜா!
“வானஜாவாம்! வஜனா! பேரைப்பாரு!” என்பாள் அலமேலு, வனஜா என்கிற பெயர் நல்ல பெயராகத்தான் மனசிலே பட்டது அலமேலுக்கு. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளலாமா?
“அலமு!” என்று கேலி அன்பு ததும்பும் குரலில் கூப்பிடுவான், ராமசாமி என்கிற பையன். அவனுக்கு வயசு ஆறுதான் இருக்கும்.
அவன் குரலில் இருந்த கேலியைக் கேட்டவுடனேயே அலமேலுவுக்கு முகம் சிவக்கத் தொடங்கிவிடும்… கண்கள் நிறைந்து விடும்போல இருக்கும்.
“கட்டேலே போறவனே!” என்று ஆரம்பிப்பாள் அலமேலு. ஆனால் அவள் எதுவும் சொல்லி முடிக்கும்வரையில் காத்திருக்க மாட்டார்கள் அவள் நண்பர்கள்.
“அலுமினியப் பாத்திரம் கடையில் கிடைக்கும்” என்று பாடம் படிப்பான் ஒரு பையன்.
“அலமேலு மங்கைத் தாயார்” என்று தேவியின் பெயரைச் சொல்லுகிற பக்தியுடன் சொல்லுவாள் ஒருத்தி.
இதற்குள் அலமேலுவின் கண்கள் நிறைந்தே விடும். ஆனால் அவளைச் சுற்றியிருந்தவர்கள் சிறுவர் சிறுமியர்-அந்த வயசிலே பரிதாபம் என்கிற தத்துவத்தையே அறியாதவர்கள்.
இப்படி இரண்டு மூன்று தரம் நடந்த பிறகு, ஒரு நாள் வீட்டிற்குப் போனதும் அம்மாவுடன் சண்டை பிடித்தாள் அலமேலு ஆத்திரம் தீர.
“நன்னாருக்குடி நன்னாருக்கு” என்றாள் அவள் தாயார் கல்யாணி அம்மாள், விஷயத்தை அறிந்தவுடன்.
“வேறு என்ன பெயர் வேணுமானாலும் வைத்திருக்கப் படாதோ எனக்கு?” என்று குறைப்பட்டாள் அலமேலு.
“அலமேலு என்கிற பெயருக்கென்னடி? நல்ல பெயராச்சே?” என்றால் கல்யாணி அம்மாள்.
‘உனக்கு நல்ல பெயராகப் படறது. எனக்கோ என்னோடே பள்ளிக்கூடத்தில் படிக்கறவாளுக்கோ அப்படிப் படல்லியே!’ என்றாள் அலமேலு.
‘அவாளுக்கெல்லாம் எப்படிப் பட்டால் என்ன? நாளைக்கு ஒருத்தன் வருவான்-அவனுக்குச் சரின்னு பட்டால் சரிதான்” என்றாள் கல்யாணி அம்மாள்.
“போடியம்மா!” என்று சொல்லிவிட்டு அலமேலு நகர்ந்து விட்டாள்.
ஆனால் ஒரு நாள் அவள் அப்பா ராமநாத ஐயர் ஆபீசிலிருந்து திரும்பியதும், அவரிடமும் அலமேலு விஷயத்தைப் பிரஸ்தாபிக்காமல் இல்லை. பள்ளிக்கூடத்துப் பையன்களும் பெண்களும் எப்படித் தன் பெயரை வைத்துக் கேலி பண்ணுகிறார்கள் என்று சொன்னாள்.
“கேலி பண்ணினா என்ன? பண்ணட்டுமேடி மேலே காச்சுத் தொங்குமா என்ன?” என்றார் ராமநாத ஐயர். தன் பெண் இவ்வளவு அசடாயிருக்கிறதே என்று அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வக்கீல் தொழில் பண்ணுகிறவர். நாலு பேர் நாலு தினுசாகத்தான் சொல்லு வார்கள்-ஆனால் யார் என்ன சொன்னாலும் சிறிதும் நாணமில்லாமல், போகிற வழியே போக வேண்டும்-இல்லாவிட்டால் வாழ்க்கை பாழாகிவிடும் என்கிற கொள்கை உடையவர் அவர். பிறர் சொல்வதை எல்லாம் லட்சியமே செய்யாதவர் அவர். எதையும் துடைத்துவிட்டுச் செல்லலாமே தவிர, பாராட்டுவதற்கில்லை என்று எண்ணுபவர் அவர். அவருக்கு அலமேலுவினுடைய மனோபாவம் ஆச்சரியத்தைத் தருவதாக இருந்தது.
“அவா நாப்புக் காட்டறச்சே எனக்கு நாக்கைப் பிடிங்கிக்கலா மான்னு இருக்கு!” என்றாள் அலமேலு.
“என் பெண் இவ்வளவு அசடுன்னு எனக்கு இவ்வளவு நாளாகத் தெரியவில்லையே!” என்று கேலி விசனம் தொனிக்கச் சொன்னார் ராமனாத ஐயர்.
அலமேலுவுக்குப் பெயர்தான் சரியாக அமையவில்லையே தவிர, அந்த வயசிற்கு மீறிய சூடிக்கை இருந்தது. “அலமேலுன்னு பெயர் வைத்துவிட்டுச் சமத்தா இரு என்றால் எப்படியப்பா சமத்தாயிருக்க முடியும்?” என்றாள்.
வக்கீல் சிறிது நேரம் நகைத்தார். பிறகு தன் மனைவியை உரத்த குரலில் கூப்பிட்டு “ஏண்டீ! ‘ஏண்டீ! உன் பெண் சொல்றதைக் கேட்டியோ?” என்றார்.
கல்யாணி அம்மாள் சமையல் அறையில் கைக்காரியமாக இருந்தாள்-அடுப்புப் பற்றவில்லையோ என்னவோ, சற்று கோபமாகவே “உங்க பொண்ணோடே சமத்தே நீங்களே பாத்து ஆனந்தப்பட்டிண்டிருங்கோ. அது போதும்” என்றாள்.
“பிடிவாத குணமும் கோபமும் என் பெண்ணுக்கு எங்கிட்டே யிருந்து வரவில்லையே, யார்கிட்டே இருந்து வந்ததுன்னு ஆச்சரியப்பட்டுண்டிருந்தேன்; இப்பத்தான் தெரியறது” என்றார்
வக்கீல்.
இப்படி எல்லாம் அவர் பேச்சை மாற்றி மழுப்பி விட்டது அலமேலுவுக்குப் பொறுக்கவில்லை. தான் சொல்ல வந்த விஷயத்தை விடாப்பிடியாகச் சொல்லிவிட விரும்பினாள். ‘ஆனாவிலே ஆரம்பிக்கிற பெயராகத்தான் வேணும்னா கூட எவ்வளவோ நல்ல பெயரெல்லாம் இருக்கே!” என்றாள்.
“சொல்லு பார்க்கலாம்” என்று அவள் வாயைக் கிண்டினார் ராமநாத ஐயர்.
அநுராதா, அஞ்சனா, அம்புஜம்…” என்று ஆரம்பித்தாள் அலமேலு.
“அனாசிப்பழம், அதிரசம், அடுத்தாத்துக்காரி…என்று தொடர்ந்தார் ராமநாத ஐயர்.
“போ அப்பா! என்னவோ சொன்னா… அதிருக்கட்டும், எனக்கு என் அலமேலுன்னு பேர் வச்சே அதைச் சொல்லு முதல்லே” என்றாள் அலமேலு.
‘அப்படிக்கேளு, சொல்றேன். எனக்கு அம்மா இருந்தாளே, அவளை உனக்குத் தெரியாது. நீ பிறக்கறதுக்குப் பத்து வருஷத்துக்கு அவளைப் போலப் முன்னாடியே செத்துப் போயிட்டா. பொம்மனாட்டியே இருந்ததில்லேன்னு அந்தக் காலத்து இன்னமும் சொல்லிண்டிருக்கா. மனுஷாள்ளாம் சொல்லுவா. லட்சுமி மாதிரி இருப்பாளாம். அழகு, குணம் எல்லாத்திலேயும் அவள் மாதிரி…
அலமேலு குறுக்கிட்டாள் “அது சரி. ஆனால்….”
“அவள் பெயரைத்தான் உனக்கு வச்சிருக்கு. அழகிலே நீயும் அவமாதிரிதான் இருக்கே. குணத்திலே எப்படியிருக்கப் போறயோ, தெரியணும். உன் அம்மாவைக் கொண்டுட்டயோ என்னவோ!” என்று ராமநாத ஐயர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர் மனைவி அங்கு வந்துவிட்டாள்.
‘அனாவசியமாக என் மண்டை இங்கே என்னத்துக்கு உருளறது?” என்று கேட்டாள் கல்யாணி அம்மாள்.
“எங்கம்மாவைப் பத்திச் சொல்லிண்டிருந்தேன்” என்றார் ராமநாத ஐயர்.
அலமேலுவும் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்ததால் நிஜத்தைச் சொல்லவில்லை.
பாட்டி பெயரைத் தனக்கு வைத்தது நியாயம்தான் என்று அலமேலுவுக்கும் தோன்றிற்று. அன்று அவள் வேறு ஒன்றும் சொல்லவில்லை.
மறுநாள் பள்ளிக்கூடத்தில் வழக்கமான கேலிகள் நடந்த போது, அலமேலு என்பது தன் பாட்டியின் பெயர் என்றும், அவளைப் போலப் பெண்மணியே இருந்தது கிடையாது என்றும் சொல்லிப் பார்த்தாள் தன் தோழர்களிடமும், தோழிகளிடமும். ஆனால் அதற்காக அவர்கள் கேலியை நிறுத்துவதாக இல்லை. தங்கள் கேலிக்கு இன்னொரு விஷயம் கிடைத்து விட்டது என்று சந்தோஷப்பட்டார்கள். அலமேலுவை ‘அலமுப் பாட்டி’ என்றும் ‘அலமேலுக் கிழவி’ என்றும் சொல்லத் தொடங்கினார்கள்.
மறுநாள் சிவந்த கண்களுடன் திரும்பிய அலமேலு தன் தகப்பனார் வந்தவுடனே முதல் காரியமாக அவரிடம் தன் மனசிலிருந்ததைச் சொன்னாள். “பாட்டிக்குச் சரிதான்; எனக்குச் சரியில்லை” என்றாள் திடுதிப்பென்று, எவ்விதமான பூர்வ பீடிகையும் இல்லாமல்.
கோர்ட்டு வியவகாரம் எதையோ பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த வக்கீல் ராமநாத ஐயர் நிமிர்ந்து… “என்ன அலமு? பாட்டியைப் பத்தி என்னவோ சொன்னாயே; என்ன?” என்றார்.
“இல்லே! பாட்டி பெயரைத்தான் எனக்கு வச்சது என்று சொன்னயே! அதுக்குச் சொன்னேன். அந்தக் காலத்திலே…’ பாட்டிக்குச் சரியா இருந்த பெயர் பேத்திக்குப் பொருந்தவில்லை. என்றாள் அலமேலு.
‘அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் ரொம்பக் கண்டவள்தானா நீ! போடி கழுதை! சும்மா தொண தொணண்ணுண்டு! இவ்வளவு அசடாயிருந்தா நன்னாப் பரிகாசம் தான் பண்ணுவா எல்லோரும்” என்று கோபித்துக் கொண்டார் ராமநாத ஐயர்.
இது நடந்த போது அலமேலுவுக்கு வயசு ஒன்பது அல்லது பத்துத்தான் இருக்கும். ஆனால் அலமேலு என்று பெயர் வைத்துத் தனக்குத் தன் பெற்றோர் பெரிய அநீதி இழைத்து விட்டார்கள் என்கிற நினைவு அவள் மனசிலே ஊன்றிப் பதிந்துவிட்டது. அதற்குப் பிறகு அவள் அதைப் பற்றிப் பேசுவதில்லையே தவிர, மறந்தது கிடையாது.
அலமேலு பதினைந்தாவது வயதை எட்டி விட்டாள். எஸ்.எஸ்.எல்.சி. பரீக்ஷை பாஸ் செய்து விட்டாள். அதற்கு மேலே படிக்க வைக்க அவள் தகப்பனாருக்கு இஷ்டமில்லை. தாயார் மட்டும் படிக்கட்டுமே என்றாள். “ஒருவனைக் கல்யாணம் செய்து கொண்டு நான் படற மாதிரி அவளும் கஷ்டப்படுவானேன்? ஏதோ இந்த நாளிலே பெண்களெல்லாம் படிக்கறதும், வயசான பிறகு தானாப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்றதும் சகஜமாக இருக்கு. அப்படியே செய்து கொள்ளட்டுமே நம்ம அலமுவும்” என்றாள்.
“என்னைக் கல்யாணம் செய்துண்டு நீ அப்படி என்னடி அம்மா கஷ்டப்பட்டு விட்டே?” என்று கேட்டார் ராமநாத ஐயர்.
“சொல்ல வேறே சொல்லணுமாக்கும்! படறது போறாது- சொல்லி ஆனந்தப் படணுமாக்கும்!” என்றாள் கல்யாணி அம்மாள் அழுத்தம் திருத்தமாக.
அம்மாவும் அப்பாவும் இப்படிப் பேசிக் கொள்வதைக் கேட்டுக் கொண்டே நின்ற அலமேலு கலகல என்று சிரித்தாள். படிக்கிற பெண் அல்லவா? சற்றுத் தைரியமாகவே கேட்டாள். “நீங்க இப்படி என் முன்னாடியே சண்டை போட்டால் நானும் இனி வரப் போறவரோடு இப்படித்தானே சண்டை பிடிக்கணும்னு தெரிஞ்சுண்டு விடுவேன்” என்றாள்.
கல்யாணி அம்மாளும் ராமநாத ஐயரும் சிரித்து விட்டார்கள். ‘உன் பெண் இருந்தாலும் சமத்துத் தாண்டி. அவகிட்டேயாவது கொஞ்சம் கத்துக்கோயேன் நீ” என்றார்.
‘நீங்களும் கத்துக்க வேண்டியது நிறையவேதான் இருக்கு”, என்றாள் கல்யாணி அம்மாள்.
‘பாத்தியா! நீ சொன்னயே, அவள் இஷ்டப்படி படிச்சு விட்டு இன்னும் நாலு வருஷம் கழித்துக் கல்யாணம் பண்ணிக்கட்டும் அப்படின்னு-ஒரே வார்த்தையிலே அவ உனக்குப் பதில் சொல்லி விட்டாள்” என்றார் ராமநாத ஐயர்.
“என்ன?” என்று கேட்டாள் கல்யாணி அம்மாள்.
“வரப் போறவரைப் பற்றி ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டாளே; அதான் இப்பவே…” என்றார் வக்கீல்.
“போ அப்பா!” என்றாள் அலமேலு நாணத்துடன். அந்த நாணம் பாதி சுபாவமானது, பாதி செயற்கையானது.
ராமநாத ஐயர் புன்சிரிப்புடன் தன் மனைவியின் பக்கம் திரும்பி “உன்னுடைய முதல் பேத்தியின் பெயர் தெரியுமா உனக்கு?” என்றார்.
அலமேலுவுக்கு அங்கிருந்து ஓடிவிட இஷ்டந்தான். ஆனால் கேலிக்குப் பயந்து ஓடுகிறாள் என்ற பள்ளித் தோழிகள் சொல்வது போலச் சொல்லப் போகிறார்களே என்று நின்றாள்.
‘முதல் பேத்தியின் பெயர் அனுராதா, இரண்டாவது பேத்தியின் பெயர் அஞ்சனா. இப்படி அகர வரிசையிலே ஆரம்பிச்சு…” என்று சொல்லி நிறுத்தினார் ராமநாத ஐயர்.
நம்ம அலமு “நமக்கு ஒரு பெண் இருக்கு, அதுக்குப் பதில் சொல்லிச் சமாளித்துக் கொள்ளவே முடியவில்லை நமக்கு. இவ்வளவு பெண்களுக்கு பதில் சொல்லி எப்படிச் சமாளிக்கப் போகிறாளோ?” என்றாள் கல்யாணி அம்மாள்.
அலமேலுவுக்கும் சிரிப்பு வந்தது.
“ஏழெட்டு வருஷத்திற்கு முந்தி எங்கிட்ட வந்து இவ சொல்றா…” என்று ராமநாத ஐயர் ஆரம்பிக்கும் போதே எதைச் சொல்லப் போகிறார் என்று அலமேலுவுக்குத் தெரிந்து விட்டது.
அலமேலு என்கிற பெயரைப் பற்றி அவள் மனசில் இன்னமும் குறை இருந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அந்தப் பெயரும் அதைப்பற்றிப் பிறருடைய கேலியும் அவளுக்குச் சகஜமாகிப் போய்விட்டன. சில நாட்களாக அவள் அதைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. அப்பா இன்று அந்தப் பழைய புண்களைக் கிளறிவிடப் போகிறாரே என்று “போ அப்பா! நீயே கேலி பண்ணினால் நான் என்ன செய்ய?” என்றாள்அவள் .
“கேலி இல்லை. நிஜம்மாவேதான் சொல்றேன். நான் மாப்பிள்ளை பார்த்தாச்சு. இனிமே நீ அலமேலு என்ற பேரை மாத்திக்கலாம்” என்றார்.
“எப்படி மாத்திக்கிறதாம்?” என்றாள் கர்நாடகக் கல்யாணி அம்மாள்.
“நீ கூட வேணுமானாலும் பெயரை மாத்திக்கலாம்-மிஸஸ் ராமநாதன் என்று” சொல்லிச் சிரித்தார் ராமநாத ஐயர்.
“ஆம்படையான் பெயரை வச்சுக்கறதுதான் நாகரீகமாக்கும்” என்றாள் கல்யாணி அம்மாள்.
‘ஆகவே, இனிமேல் நம்ம அலமேலு, அலமேலு அல்ல. மிஸஸ் மாத்ருபூதம்” என்றார் ராமநாத ஐயர்.
மிஸஸ் மாத்ருபூதம் ஆகவிருந்த அலமேலு இன்னது சொல்வது என்று அறியாமல் ஸ்தம்பித்து நின்றாள் வெகுநேரம்.
1966

க.நா.சு/கருகாத மொட்டு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “க.நா.சு. /அலமேலு”

Comments are closed.