க.நா.சு. /புளிப்பு

நண்பர் கடிதம் எழுதியிருந்தார் “தங்களுடைய கதையைப் படித்தேன்; மாயவரத்துத் திராட்சையின் புளிப்பை நானும் அனுபவித்திருக்கிறேன்; அந்தத் திராட்சையிலுள்ள ஒரே இனிப்பு, தங்கள் வர்ணனையில்தான் இருக்கிறது.”
எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. அந்த நண்பரிடம் எனக்கு ஏற்கெனவே நல்ல மதிப்பு உண்டு. சாதாரணமாகக் கதைகள் பிடிக்காது என்று படிக்காத நண்பர், என் கதையைப் படித்துவிட்டு, இரண்டணா செலவு செய்து கடிதம் வேறு எழுதியிருந்தார்.
தவிரவும் சாதாரணமாக யாரும் என் கதைகளைப் படித்து விட்டு என்னைப் பாராட்டி எனக்கு எழுதுவது கிடையாது. குறிப்பிட்ட நாலைந்து பேர்வழிகளைத் தவிர என் கதைகளை யாரும் படிப்பதில்லை. படித்தாலும் பாராட்டுவதில்லை என்றுதான் எனக்கு எண்ணம். (இந்த நாலைந்து பேர் வழிகளில் நான் என் மனைவியையோ, தகப்பனாரையோ சேர்த்துக் கொள்ளவில்லை. என் கதைகளைப் படித்து விட்டுப் பாராட்ட வேண்டியவர்கள்தான் அவர்கள். ஆனால் அவர்களுக்கு எப்பவுமே என் கதைகள் பிடிப்பதில்லை. என்ன எழுதியிருக்கே என்று என்னையே கேட்கிறார்கள்.)
சற்று பெருமையுடனேயே அந்த நண்பருடைய கடிதத்தை வேறு ஒரு நண்பரிடம் காட்டினேன். இந்த நண்பர் சாதாரணமாக என்கூடப் பழகுபவர்; என் கதைகளை ஆர்வத்துடன் படிப்பவர்.
நண்பரின் கடிதத்தைப் படித்துவிட்டு இரண்டாவது நண்பர் தன் அதிருப்தியைத் தெரிவித்தார். “இதென்ன இவர் இப்படி எழுதி விட்டார்?” என்று கேட்டார்.
“ஏன்? சரியாகத்தானே இருக்கிறது?” என்றேன்.
நண்பர் சற்று உற்சாகத்துடனேயே சொன்னார்: “சமீப காலத்தில் தாங்கள் எழுதிய கதைகளிலேயே மிகவும் சிறந்த கதை அதுதான். நான் சொல்லுவதை நீங்கள் நம்பலாம். நீங்கள் எழுதியது பூராவையும் நான் படித்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்”, என்றார்.
அவருடைய உஷ்ணம் எனக்குத் திகைப்பளித்தது. “உம்…” என்றார்.
‘இந்தக் கதையில் நீங்கள் சற்று ஆழமாக நமது சமூகத்தில் புரையோடி விட்ட ஒரு விஷயத்தை மிகவும் அழுத்தமாக வெளியிட்டிருக்கிறீர்கள்! கதையின் தத்துவத்தையே அறிந்து கொள்ளாமல், கேவலம் மாயவரத்துத் திராட்சையின் புளிப்பை மட்டும் குறிப்பிட்டிருக்கிறாரே இவர்…” என்றார் நண்பர்.
“அவரவர்களுக்கு உகப்பதையும் புரிவதையும் மட்டும்தானே அவரவர்கள் குறிப்பிடுவார்கள்?” என்றேன் நான்.
“அப்படியா? அப்படியானால் உகப்பதைத் தவிர வேறு எதையும் எந்த ஆசிரியனும் எழுதக் கூடாது என்று ஏற்பட்டு விட்டதா?” என்று கேட்டார் நண்பர்.
நான் பதில் சொல்லவில்லை.
நண்பர் தொடர்ந்தார்; “அவர் அப்படி எழுதினது பாதக மில்லை. ஆனால் அதைப் பற்றி நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்வதுதான் எனக்குப் பிடிக்கவில்லை- புரியவுமில்லை.’
‘அதிகமாகக் கதைகளே படிக்காதவர் அவர். எனக்காக அவர் கதையைப் படித்தது மட்டுமின்றி இரண்டணா செலவு செய்து ஒரு கடிதம் எழுதினார். அதில் திருப்தி அடைந்தேன்” என்றேன்.
“உங்கள் கணக்கில்கூடச் சேராத இரண்டணாவில் இப்படித் திருப்தி அடைந்து விடுகிறீர்களே!” என்று கேலி செய்தார் நண்பர்.
நான் சொன்னேன்; “இலக்கியாசிரியர்கள் என்று எழுத முன் வருபவர்கள் எல்லோருமே தங்கள் கதைகளில் என்னவெல்லாமோ சொல்லி வாழ்க்கையைப் புதுப் புதுக் கண்களுடன் நோக்கி, புதுப்புது உண்மைகளை மனித குலத்துக்கு ஊட்டி வருவதாகத்தான் எண்ணிக் கொண்டு வருகிறார்கள். அதெல்லாம் அவர்கள் எழுத்தில், வாசகர்கள் வரையில் எட்டுவதேயில்லை. அவர்கள் பிரும்மாண்டம் என்று எண்ணி எழுதுவதெல்லாம் வாசகர்களுக்குக் கட்டெறும்பாகக் காட்சி அளிக்கின்றன. அவர்களுடைய பஞ்ச கல்யாணிக் குதிரை களெல்லாம் கொல்லைக் குப்பை மேட்டில் ஊறும் நத்தைகளாகி விடுகின்றன வாசகர்களை அடையும்போது. அதெற்கென்ன செய்வது?”
“சொல்ல வந்ததை, சொல்ல விரும்பியதைச் சரியாகச் சொல்லி விடுபவன்தான் நல்ல இலக்கியாசிரியன், இல்லையா?” என்றார் நண்பர் பிடிவாதமாக.
அந்தக் கதையில் நான் சொல்ல வந்ததை, சொல்ல விரும்பியதை எல்லாம் பூராவும் சொல்லிவிட்டேனோ என்பது எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. ஆனால் என் நண்பர்….
நண்பர் தொடர்ந்து சொன்னார்: “ஓரளவு தமிழில் பூரணத்வம் பெறுகிற கதைகள் எழுதுகிற ஆசிரியர்கள் மிகச் சிலர்தான். அந்தச் சிலரில் நீங்களும் ஒருவர் என்பது என் அபிப்பிராயம்” என்று.
“உங்கள் அபிப்பிராயம் எனக்குத் திருப்தி தருவதாகத்தான் இருக்கிறது. சந்தோஷம்;” என்றேன்.
ஒரு விநாடி கழித்து ஆங்கிலத்தில் படித்த ஒரு வாக்கியத்தை அவரிடம் சொன்னேன்; “To strive for perfection is a human need; all effort however must end ludicrously short of the mark.” அதாவது பூர்ணத்வம் பெற முயல்வதென்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவான அவசியத் தேவை. ஆனால் நம்முடைய சிறந்த முயற்சிகள் எல்லாமேகூட, பரிகாசத்துக்கிடந் தருவனவாகத்தான் இருக்கின்றன.
“பூரணத்வம் என்கிற நோக்கமே இல்லாத ஆசிரியர்கள்தான் இன்று தமிழில் அமுல் நடத்துகிறார்கள்” என்றார் நண்பர்.
“அப்படியில்லை, பூரணத்வம் என்கிற ஆசை மனித ரத்தத்திலே ஓடுகிறது. எந்தக் காரியம் செய்தாலும் மனிதன் பூர்ணத்வத்தை மனசில் கொண்டுதான் செய்கிறான்” என்றேன் நான்.
“இவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறீர்களே? பின்… ஏன்..?”
‘அதுதானே சிருஷ்டி தத்துவம்! மேலும் மேலும் சிருஷ்டி சாத்தியமாகிக் கொண்டிருப்பதே மனித முயற்சியில் பூரணத்வம் அகப்படாத காரணத்தினால்தான்” என்றேன் நான்.
ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். நீங்கள் பேச்சை முடிவில்லாத் தத்துவ விசாரத்துக்குத் திருப்பி விட்டீர்களே!” என்றார் நண்பர்.
“எதைப் பற்றிப் பேச வேண்டும். சொல்லுங்கள்” என்றேன்.
‘அந்தக் கதையில் நாகரிகம் என்று சொல்லப்படுவதன் மேலெழுந்த வாரியான சில அம்சங்களை நன்றாக விளாசி யிருந்தீர்கள்….”
‘எந்தக் கருத்தை மத்தியாக வைத்து அந்தக் கதையை நான் எழுதியிருப்பதாக உங்களுக்குத் தோன்றியது?” என்று கேட்டேன்.
“முகம் தடிப்பேறி, தன் கட்சியே சரியானதென்ற எண்ணுகிற வாலிபனின்…
‘அதை நான் மத்திய கருத்தாகக் கருதி அந்தக் கதையை எழுதவில்லை.”
“எனக்காக, என் கட்சி தவறு என்று நிரூபிப்பதற்காக ஏதாவது சொல்லத் தொடங்கி விடாதீர்கள்” என்று நண்பர் எச்சரித்தார்.
“அப்படி எல்லாம் சொல்லமாட்டேன்; பயப்பட வேண்டாம்; நீங்களே வந்து மாட்டிக் கொள்கிறீர்கள்; அவ்வளவுதான். மாயவரம் திராட்சையின் புளிப்பைப் பற்றி அதை அனுபவித்தவர் எழுதினார். நீங்கள் என்னைப் போலவே தினசரி சவரம் செய்து கொள்ளாதவர்; மற்றும் சில இன்றைய ‘நாகரீக’ அம்சங்களில் நம்பிக்கை வைக்காதவர். அது உங்கள் மனசில் பட்டுத் தைக்கிறது. அதுவே மத்திய கருத்து என்று கருதுகிறீர்கள்,” என்றேன்.
“அப்படியானால் அந்தக் கதையை எழுதும்போது உங்கள் மனசில் இருந்ததுதான் என்ன? சொல்லுங்கள்” என்று சவால் கூறினார் நண்பர்.
“நாகரிகம் என்பது பற்றி மூன்று பேருக்கு மூன்றுவித அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஒன்று படிப்பவருடையது, இரண்டாவது ஆண்பிள்ளையினுடையது, மூன்றாவது அந்தப் பெண்ணினுடையது, இதில்…’
‘ஆணினுடைய அபிப்பிராயம் தவறானது; அவ்வளவுதானே?” என்றார் நண்பர்.
‘அந்த இடத்தில் நீங்கள் அப்படி முடிவுகட்டும்படியாக நான் எழுதியிருந்தேனானால், இந்தக் கதையைப் பற்றிய மட்டில் நான் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். கதையில் சொல்லியிருக்கிறதா அந்த ஆண்பிள்ளையினுடைய கட்சி தவறானது என்று? பெண்ணினுடையது சரி என்றும் சொல்லப்படவில்லை. இரண்டும், பார்ப்பவன் ஒருவனுடைய நோக்குடன், ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. இரண்டு கட்சியும் தவறாகவும் இருக்கலாம். இரண்டு கட்சியும் சரியானதாகவும் இருக்கலாம்…” என்றேன் நான்.
‘கதையில் இது அவ்வளவாகத் தெளிவாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கதாசிரியரின் அனுதாபம் பூராவும் பெண்ணிடம் இருக்கிற மாதிரி எனக்குப் பட்டது….” என்றார் நண்பர்.
“உங்கள் அனுதாபத்தைக் கதாசிரியனுடைய அனுதாபம் என்று தவறுதலாக எண்ணிக் கொண்டு விட்டீர்கள்?” என்றேன் நான்.
நண்பர் மௌனம் சாதித்தார்.
அந்த மௌனத்தைக் கலைக்க அங்கு வேறு ஒருவர் வந்தார், வந்தவர் யாரோ புதுசு. “ஸார் நீங்கள்தானே…” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்த அந்த வாலிபருக்கு என் நண்பர் என்னைச் சுட்டிக்காட்டினார்.
அந்த வாலிபர் என்னைத் திரும்பிப் பார்த்தார். “தெரிகிறது, தெரிகிறது. முதலில் பார்க்கவில்லை. நீங்கள்தான், அன்று நானும் என் மனைவியும் குத்தாலத்திலிருந்து திருவடமருதூர் போன போது எங்களுடன் ரெயிலில் வந்தீர்கள்….
“அப்படியா? சந்தோஷம். உட்காருங்கள்” என்று ஒரு நாற்காலியைக் காட்டினேன். என் வாசக நண்பரைப் பார்த்தேன். அவர் மௌனமாகவே இருப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் “மூன்றாவது வாசகர் ஒருவர் அந்தக் கதையைப் பற்றி அபிப்பிராயம் தெரிவிக்கப் போகிறார்” என்றார்.
‘அவர் வாசகர் மட்டும் அல்ல. கதாநாயகரே அவர்தான்” என்றேன் நான்.
ஏதடா யாரோ பைத்தியக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று யோசிக்கிறவர் போல அந்த வாலிபர் திருதிருவென்று முழித்தார். எங்கள் இருவரையும் மாறி மாறிப்
பார்த்தார்.
“என் பெயர் ராஜகோபாலன்,” என்றார்.
“சந்தோஷம்” என்றேன்.
“சீப்பு என்கிற உங்கள் கதையை என் மனைவி படித்துவிட்டு என்னிடம் காட்டினாள்; நானும் படித்தேன்! அவள் அம்மாவும் படித்தாள்….” என்றார் ராஜகோபாலன்.
“தவறுதலாக ஒன்றும் யாரும் நினைத்துக் கொள்ளும்படியாக நானும் எழுதவில்லையே!” என்றேன்.
“இல்லை இல்லை. தவறுதலாக ஒன்றும் இல்லை” என்று ராஜகோபாலன் ஒப்புக்கொண்டார்.
“சந்தோஷம்!” என்றேன்.
அவர் என் கதையின் நாயகர்… ஏதோ சொல்ல வந்திருக்கிறார் எப்படிச் சொல்வது என்று அறியாமல் சிரமப்படுகிறார் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அவனுக்கு உதவிசெய்ய நான் தயாராக இல்லை; தானாகவே தன் வழியிலேயே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.
“பாதி வரையில் நிஜத்தையே எழுதிக் கொண்டு வந்த நீங்கள்…” என்றார் ராஜகோபாலன்.
“கொஞ்சம் கைச் சரக்கும் சேர்த்தால்தான் கதை ருசிக்கும் என்று சேர்த்தேன்” என்று ஒப்புக்கொண்டேன்.
“என் மனைவிக்குத்தான் கொஞ்சம் வருத்தம்” என்று ஒரு அசட்டுச் சிரிப்புடன் கூறினார் அந்த வாலிபர்.
‘என்ன? ஏன்? என் கதையில் என் அனுதாபம் பூராவும் அந்தப் பெண்ணிடம்தான் இருக்கிறது என்று இந்த நண்பர் இப்பத்தான் கூறிக் கொண்டிருந்தார்!” என்றேன் நான், என் வாசக நண்பரைப் பார்த்துக் கொண்டே.
“அப்படித்தான் எனக்கும் தோன்றியது. ஆனால் என் மனைவி…”
“உங்கள் மனைவினுடைய அபிப்பிராயத்தையும் கூறிவிடுங் கள். கேட்டேனானால் எனக்கு லாபகரமாக இருக்கும்!” என்றேன்.
“அவள் அம்மா எங்களிரண்டு பேரையுமே பார்த்துச் சிரிக்கிறாள்” என்றார் ராஜகோபாலன்.
”உம்…’
“நாலு வருஷம் போராடி என் மனைவி-இதை அன்னியர்களி டம் எப்படிச் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. வெட்கமாகக்கூட இருக்கிறது…” என்றார் ராஜகோபாலன். மேலே சொல்லாமல் தயங்கினார்.
நான் புரிந்துகொண்டு விட்டேன். மனிதனுடைய சரித்திரமே இதுதான் – மனிதன் பேனுடன் பேராடி வெற்றி பெற்றதுதான் மனித குலத்தின் உண்மைச் சரித்திரம் என்று அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் Men, lice and History என்று ஆயிரம் பக்கங்களில் ஒரு புஸ்தகமே எழுதியிருக்கிறார்” என்றேன்.
“பேனைப் பற்றி எழுதியதுதான் அவளுக்கு ரொம்பவும் வருத்தம்” என்றார் ராஜகோபாலன்.
‘கதையை முடிப்பதற்கு ஒரு நல்ல விஷயமாகப் பட்டது எனக்கு, முடித்தேன். வேறு யாருக்கும் எப்படியும் வருத்தம் தருகிற உத்தேசமே கிடையாது எனக்கு” என்றேன் நான்.
“உத்தேசத்துக்கு என்ன ஸார்? பெரும்பாலான பேருக்கு நல்ல உத்தேசங்களுக்குக் குறைவே கிடையாது” என்றார் ராஜகோபாலன்.
இதற்குப் பதில் தேவையில்லை, என்று நான் பேசாதிருந்து விட்டேன்.
ஒரு நிமிஷம் கழித்து ராஜகோபாலன் கேட்டார்: “ஆமாம், பேனையும் சீப்பையும் புஷ்கோட்டையும் பற்றி ஏதோ கதை எழுதுகிறேளே….”
“காதலையும் சந்திரனையும் பற்றி எழுதத் தெரியாத தோஷம்தான்” என்றேன்.
உடன் இருந்த வாசக நண்பர் சிரித்தார்.
ஒரு நிமிஷம் மௌனமாக இருந்தார் ராஜகோபாலன். எழுந்தார்: “வரட்டுமா? நீங்கள் இந்த ஊரில் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். வந்த இடத்தில் உங்களைப் பார்ப்போம் என்று வந்தேன். வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை வரட்டுமா?” என்று கிளம்பினார்.
சலாம் வைப்பதற்குக் கை தூக்கினார். சலாம் வைத்து விட்டு அவர் திரும்பும் போது, கை அவரையும் அறியாமலே தலைக்குச் சென்றது. ஒரு விரலால் தலையைச் சொறிந்து கொண்டே போய் விட்டார்.
“பையன் தலையிலும் பேன்வைத்து விட்டது!” என்றேன் நான்.
‘கதை பூராவுமே கற்பனை என்றுதான் எண்ணினேன் நான்” என்றார் வாசக நண்பர்.
‘பூராவுமே கற்பனை என்று சொல்லக்கூடிய கதைகூட உண்டா என்ன? தவிரவும் கற்பனைக்கும் உண்மைக்கும் அப்படி என்ன பிரமாத வித்தியாசம்?” என்றேன் நான்.
“அப்படியா, முழுக் கற்பனையானால் அரிஸ்டாடிலில் தொடங்கி, புதுமைப்பித்தன் வரையில் சொல்லியிருக்கிற சிறுகதை திட்டமான சட்டங்களுக்கு அணிகளை வைத்துப் பார்க்கலாம். உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். உண்மையில் நடப்பதற்குச் சட்டம் பேச முடியாதே?” என்று குறைப்பட்டுக் கொண்டார் வாசக நண்பர்.
“அதனால்…” என்றேன்.
“உங்கள் கதைகளை நான் இவ்வளவு நாளும் ரசித்துப் படித்து வந்தது தவறு என்று ஏற்பட்டது” என்று கூறி நகைத்தார் நண்பர்.
“அப்படி எல்லாம் முடிவு கட்டி விடாதீர்கள்” என்றேன் நானும் சிரித்துக் கொண்டே,
வேறு ஒருவர் உள்ளே வந்தார். அவரை “வா மணி” என்று வரவேற்றேன்.
“நிற்க நேரமில்லை டாக்டரைப் பார்க்க வந்தேன் ஐயா” என்று கூறிக்கொண்டே உட்கார்ந்தார்.
“என் கதை-சீப்பு என்கிற கதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்” என்றேன்.
“சீப்பா? சீப்பு எந்தக் கதை. ம்… சீப்புத்தானே? நான்கூடப் படித்து விட்டேனே” என்றார் மணி.
வாசக நண்பர் கேட்டார், “அந்தக் கதையைப் பற்றி உங்கள் அபிப்பிராயம்…’
மணி சொன்னார்: “சுமாராக இருந்தது. ஆனால் இந்த மாதிரிக் கதைகளிலெல்லாம் ஒரு கெட்டிக்காரத்தனம் வீணாகி விடுகிறது என்பது என் அபிப்பிராயம்… ஆமாம் அழுத்தம் எல்லாம் மேலெழுந்த வாரியான வார்த்தைப் பந்தல்… வரட்டுமா ஐயா, டாக்டரைப் பார்த்துவிட்டு வரேன்” என்றார். கிளம்பி விட்டார்.
“ரசமான மனிதர்” என்றார் என் வாசக நண்பர்.
“அவர் எழுதற கதையே அவருக்குத் திருப்தியளிப்பது கிடையாது” என்றேன் நான்.
‘அதனால்தான் அவர் அதிகமாக எழுதுவதில்லை போலும்!” என்றார் நண்பர்.
‘ஒரு விஷயம் நன்றாக இருக்கிறது என்றும், நன்றாக இல்லை என்றும் நாம் சொல்லும்போது நம்முடைய நோக்கைக் கொண்டுதான்
சொல்லுகிறோம். அதாவது நமக்குப் பிடித்தமான விஷயத்தை அழுத்திப் பாராட்டியிருந்தால் பிடிக்கிறது.
அல்லது பிடிக்காத விஷயத்தைக் கண்டித்திருந்தால் பிடிக்கிறது. மற்றபடி கசப்பான விஷயங்களை ஒரு ஆசிரியன் எடுத்துக் கூறிச் சிலாகிக்கத் தொடங்கி விட்டானானால்….’
“கசப்பான விஷயங்கள் என்று சொல்வதைவிடப் புளிப்பான விஷயங்கள் என்று சொல்லுங்கள்” என்றார் நண்பர்.
இன்னொரு நண்பர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார்; ‘என்ன ஸார் வெளுத்துக் கட்டிவிட்டேளே. உங்க கதையைத்தான் சொல்றேன்…” என்றார் புதுசாக வந்தவர்.
“எந்தக் கதை” என்றேன்.
“சீப்புன்னு ஒரு கதை எழுதியிருக்கேளே! அதை என் பெண் இப்பத்தான் என்னிடம் காட்டினாள். படித்துப் பார்த்தேன். பேஷ்! கங்கிராஜுலேஷன்ஸ்” என்றார்.
“உட்கார். சொல்லு கேட்கிறேன்” என்றேன்.
என் வாசக நண்பர் எழுந்தார்.
கடைசியாக வந்தவர் சொன்னார்: “நீங்கள் தலை வாருவது கிடையாது. அதனால் சீப்பைக் கண்டால் உங்களுக்குப் பிடிக்காது. நான் தலைவார முடியாது, அதனால் எனக்கும் சீப்பைக் கண்டாலே பிடிக்காது” என்று கூறியபடியே தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார்.
வாசக நண்பர் சிரித்தார்; “வரட்டுமா” என்று கைகூப்பிவிட்டுக் கிளம்பினார்.

க.நா.சு. /அலமேலு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

2 Comments on “க.நா.சு. /புளிப்பு”

Comments are closed.