
பராசக்தி வடிவம்தான் பாரில் எல்லாம்
பக்குவமாய் அதுபுரிய வடிவம் கண்டார்!
நிராதரவாய் உணர்கின்ற உள்ளத் திற்கு
நிறைபலத்தைக் கொண்டுவர ஆன்ம சக்தி
வராததுபோல் வந்ததுதான் மூன்று சக்தி!
மாகாளி, இலக்குமியும், வாணி என்றே
மகாசக்தி தோற்றமுடன் கொலுவாய் நின்று
வரந்தரவே நவராத்ரி நாளில் வந்தார் !
படிப்படியாய் முன்னேறி வாழ்வில் ஒங்க
படியமைத்து அதில்தேவி, தேவர் என்றும்
நெடிதுயர்ந்த இமாலயத்துச் சிவனும் சக்தி,
விநாயகரும் முருகனுடன் நந்தி யாரும்,
வடிவழகன் விட்டுணுதான் இலக்கு மித்தாய்
மடியுறங்கும் மனைவளத்தின் தத்து வத்தை
கொடியுயர்த்திப் பிடிக்கின்ற கொலுவாய் வைத்து
குழந்தையுடன் பெரியோரும் மகிழும் நன்னாள்.
ஆன்மிகத்தின் ஆன்றோர்கள், தேச பக்தர்,
அற்புதமாய்க் கவிபாடும் கவிகள், சான்றோர்,
தேனினிக்கப் பாடுகின்ற பெண்கள், நாட்டின்
திக்கெல்லாம் காக்கின்ற வீர தீரர்,
தானெனுமோர் எண்ணத்தைச் சுட்ட ஞானி,
தவச்சீலர், உழைப்பாளி, தர்மம் காப்போர்,
வானுயரப் புகழ்பெற்றும் பணிவைக் கொண்டோர்
வரைசெய்து கொலுவைத்து பக்தி கொள்வோம்.!
(இன்று – 05.10.2024 – நவராத்ரி மூன்றாம் நாள்)
(பாவகை: எண்சீர் கழிநெடிலடி ஆசிரியர் விருத்தம் )
