
ஆமாம், ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன், எனக்குக் கதை கிதை புனையத் தெரியாது. கதைகள் படிக்கக்கூடத் தெரியாது, பொய் சொல்வது பஞ்சமா பாதகங்களில் தலை சிறந்தது என்கிற கொள்கையை உடையவன் நான். கதை என்றால் பொய் என்கிற அசையாத நம்பிக்கையும் உடையவன் நான். ஆகவே, இதெல்லாம் கற்பனை என்று எண்ணி ஏமாந்துவிட வேண்டாம். .
இதில் துளிகூடக் கற்பனையே கிடையாது முழுவதும் உண்மை கலப்பில்லாத உண்மை. சத்தியம் வேண்டுமானாலும் செய்து சொல்லிவிடுகிறேன்.
அப்படி ஒன்றும் அசாதாரணமான அனுபவங்கள் வரக்கூடிய வழியிலே நான் நடப்பவன் அல்ல. மிகவும் சாதாரணமான ஏழைக் குமாஸ்தா நான். மாசம் முப்பத்து எட்டு ரூபாய்க்காக முப்பது நாளும், முப்பத்தோரு நாளும் மெய்வருந்த உழைப்பவன். எந்த விதத்திலும் கதாநாயகனாக இருக்க லாயக்கில்லாதவன் நான். ஆனால், இந்தக் கதை என்னைப் பற்றியதல்ல.
நான் தினமும் நம்மாழ்வார் தெரு வழியாகத்தான் ஆபீஸுக்குப் போவேன்; ஆபீஸிலிருந்து வீடு திரும்புவேன்: நம்மாழ்வார் தெரு, மனித நடமாட்டம் அதிகமில்லாத ஒரு அத்துவானம். அதிலே ஏழெட்டு வீடுகள்தான் இருக்கின்றன. வேறு வழியாக ஆபீஸுக்குப் போகலாம்; ஆனால் எனக்கு என்னவோ இந்த நம்மாழ்வார் தெருதான் பிடிக்கும்.
அன்று தெருவில் நான் கிழக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தேன். நான் நடந்து கொண்டிருந்த ஓரத்திலேயே வேறு ஒருவன் மட்டும் நடந்து வந்து கொண்டிருந்தான். நான் அவன்மேல் படாமல் ஆனால், அவள் வந்து ஒதுங்கிப் போகத்தான் முயன்றேன். என்மேல் மோதிக் கொண்டு, “மன்னிக்கணும்” என்றான்.
“கண் தெரியாதா உனக்கு?” என்று கேட்க எனக்கு ஆவல் துடித்தது. ஆனால் நானும் “மன்னிக்கணும்” என்றேன் – மேலே
நடந்தேன்.
குனிந்த தலை நிமிராமல் நான் நடந்து வீடு சென்றடைந்தேன். என் கவலைகள் எனக்கு. என் மனைவி கர்ப்பிணி. இன்னும் இரண்டு மாசத்திற்குள் அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்க, குழந்தைகளைக் கவனிக்க, எல்லாம் ஏற்பாடாக வேண்டும். பிறக்கப் போவது என் நாலாவது குழந்தை. இத்தனை நாளும் எப்படியோ ‘மானேஜ்’ பண்ணியாகி விட்டது; இந்தத் தடவை ‘மானேஜ்’ பண்ணுவது சிரமமாக இருக்கும் போலிருந்தது. என்ன செய்வது?
மனைவி ராஜம் அவள் பெயர்-கொணர்ந்து தந்த குளிர்ந்த ஜலத்தைச் சாப்பிட்டு விட்டுக் கோட்டைக் கழட்டினேன். அப்பொழுதுதான் கவனித்தேன்-என் கோட்டு வழக்கத்துக்கு மாறாகக் சனமாக இருந்தது என்று. ஆச்சரியத்துடன் ஒவ்வொரு பையாகத் துழாவினேன்.
வலது கீழ்ப் பையில் எனக்குச் சொந்தமில்லாத ஒரு ‘பர்ஸ்’ காணப்பட்டது. முதலில் கடவுள் கொடுத்தது என்று தோன்றியது. கடவுள் கொடுத்ததுதான் என்றாலும், எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்று பார்க்க வேண்டாமா? ‘பர்ஸ்’ நிரம்பியிருப்பது போலத்தான் இருந்தது. திறந்து பார்த்தேன். பர்ஸின் ஒவ்வொரு அறையிலும் பணம் நிறைந்திருந்தது. புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுகள் ஆறு; பத்து ரூபாய் நோட்டுகள் ஒரு பன்னிரண்டு-சில்லறை சொச்சம் எவ்வாமாக முப்பத்திரண்டு ரூபாய் ஆறணா-ஆக ரூ.752-6-0 அதில் இருந்தது.
என் மனைவி அந்தப் பர்ஸையும் அதில் இருந்ததையும் பார்த்துப் பரக்கக் கண் விழித்தாள். “ஏது இவ்வளவு பணம்? எங்கே கொள்ளையடித்தீர்கள்?” என்று கேட்டாள்.
“அதுதான் தெரியவில்லை. என் கோட்டுப் பையில் இது எப்படி வந்தது, எப்போது வந்தது என்றே தெரியவில்லை!” என்றேன்.
“கடவுள் நம் கஷ்டம் பார்த்துக் கண் திறந்து கொடுத்திருக்கிறார் என்று எண்ணினாலும்கூடப் பயமாக இருக்கிறது. கள்ள நோட்டாக இருந்துவிட்டதானால் என்ன பண்ணுவது?” என்றாள் என் மனைவி.
சுபாவத்திலேயே பயந்தவன் நான்; நாணயஸ்தன். இப்படிக் கற்பனையுடன், என் மனைவி என்னைப் பயமுறுத்தவே நான் பதறிப் போய்விட்டேன். பர்ஸுடன் பணத்தை அப்படியே ஆற்றில் தூக்கி எறியும்போது யாராவது பார்த்து விட்டார்களானால் ஆபத்து. பர்ஸின் சொந்தக்காரரைத் தேடி அவரிடமே கொடுத்து விடுவது தான் நல்லது. ஆனால் எப்படிக் கண்டுபிடிப்பது அவரை?
அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது-நம்மாழ்வார் தெருவில் என்மேல் வந்து மோதிக் கொண்டுவிட்டு ‘மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ஆசாமி’ யைப் பற்றி. அவர்தான் என் கோட்டுப் பையில் அந்தப் பர்ஸைப் போட்டிருக்க வேண்டும். ஏன்? எதற்காக?
பர்ஸைப் போலீஸில் ஒப்புக்கொடுத்து விடலாம். ஆனால், போலீஸார் கேட்கக்கூடிய கேள்விகளுக்கெல்லாம் யாரால் பதில் சொல்லமுடியும்? நிஜமே சொன்னாலும்கூட அதைப் பொய்யாகத் திரித்து விடுவார்களே?
பர்ஸை மீண்டும் ஒருமுறை காலி செய்து பார்த்தேன். பணம் சில்லரை எல்லாம் முன் எண்ணியபடிதான் இருந்தது. ஆனால், ஒரு அறையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு துண்டுக் கடிதம் கண்ணில் பட்டது. அதில் ’21 நம்மாழ்வார் தெரு, ராகவன்’ என்று எழுதியிருந்தது. பர்ஸ் அவருடையதாகத்தான் இருக்கும். அவரைப் பார்த்து வருவதென்று முடிவு செய்தேன்.
அன்றிரவு சரியாகத் தூங்கினேன் என்று சொல்ல முடியாது. நான் நாணயஸ்தன்தான். ஆனாலும் எழுநூற்றுச் சில்லறையைத் தியாகம் செய்துவிடச் சுலபத்தில் மனசு வரவில்லை. இரவு பூராவும் தூக்கமும் விழிப்புமாகப் படுக்கையில் புரண்டு விட்டு, அதிகாலையிலேயே எழுந்து, குளிக்காமல் பல் தேய்க்காமல், ’21, நம்மாழ்வார் தெரு, ராகவனைத் தேடிக் கொண்டு கிளம்பி விட்டேன்.
“நீங்கள்தான் ராகவனா?” என்று கதவைத் தட்டி எழுப்பி நான் கேட்டபோது, “ஆமாம்” என்றார் ஒருவர். அவருக்கு வயசு அறுபத்தைந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அவருடைய கண்கள்… கண்களில் தோன்றிய ஒளி ரொம்பவும் அசாதாரணமான ஒளியாக இருந்தது.
“என்ன விசேஷம்? உள்ளே வாருங்களேன். நான் மட்டும்தான் இந்த வீட்டில் தனியாக இருக்கிறேன்” என்றார் ராகவன்.
நான் உள்ளே போனேன்; ரொம்பவும் பெரிய வீடு. மேஜை நாற்காலியும் அலங்காரப் பொருள்களுமாக நிறைந்திருந்தன. பணக்கார மனிதன் என்று எண்ணினேன். அவருக்கு எழுநூறு ரூபாய் ஒரு பிரமாதமல்ல என்று ஒரு ஞாபகம் தொடர்ந்து வந்தது. ஆனால் அவரைப் பார்த்துக் கொண்டே “இந்தப் பர்ஸ் உங்களுடையதுதானா?” என்று, முதல் நாள் என் கோட்டுப்பையில் கிடந்த பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தேன்.
வாங்கித் திறந்து பார்த்தார். ஒவ்வொரு அறையாகத் திறந்து காலிசெய்து எண்ணிப் பார்த்துவிட்டுப் பிறகு நெடுநேரம் என்னையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சமையற்காரனாக இருக்க வேண்டும் ஒருவன்; எங்களிருவருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தான்.
காப்பி சாப்பிட்டானதும் ராகவன் சொன்னார்; “இந்த மாதிரி இருபத்து நாலு பர்ஸுகள் தயாரித்தேன் நான்!”
இதேதடா கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதே என்று திடுக்கிட்டுப் போனேன் நான். அவசரம் அவசரமாக நான், “என் கையில் இது ஒன்றுதான் கிடைத்தது, ஐயா! அதில் உங்கள் விலாசமி ருந்ததால் போலீஸாரிடம் போகாமல் உங்களிடமே கொண்டு வந்து வந்து விட்டேன்; அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” என்றேன்.
என் பதட்டத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் ராகவன். ‘ஒரு பதினைந்து நாட்களாக எனக்கு இதுதான் வேலை. அந்த இருபத்திநாலு பர்ஸுகளையும் தெருவோடு போய்க் கொண்டிருந்த இருபத்துநாலு நபர்களின் சட்டைப் பையில் நானேதான் போட்டேன்” என்றார்.
எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை; பேசாமல் இருந்துவிட்டேன்.
‘கடைசியாக நேற்று உம் பையில் போட்ட அந்த இருபத்து நாலாவது பர்ஸ் திரும்பி வந்திருக்கிறது. அப்படியே மற்றப் பர்ஸுகள் போனதுதான்” என்றார் ராகவன்.
அவர் நான் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்க வில்லை என்று தோன்றிற்று.
“உம்மைப் போன்ற ஒரு நாணயஸ்தரைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். கண்டு பிடித்து விட்டேன்” என்றார் ராகவன்.
நான் எழுந்தேன்; “எனக்கு ஆபீஸ் ஒன்பது மணிக்கு. நான் போகவேண்டும். வீட்டு வேலைக்குக்கூட அவளுடன் கூடமாட ஒத்தாசையாகச் செய்யவேண்டும்” என்றேன்.
“ஏன்? வீட்டிலே உடம்பு சரியாக இல்லையோ?’
“அதில்லை; என் மனைவி கர்ப்பிணி. வீட்டிலே நாலைந்து குழந்தைகள் இருக்கின்றன!” என்றேன்.
“அப்படியா? சந்தோஷம். உம்மோடு சாவகாசமாகப் பேச வேண்டும்!” என்றார் ராகவன்.
‘எனக்குச் சாவகாசம் குறைவு” என்றேன் நான்.
ராகவன் இரண்டொரு நிமிஷங்களுக்குள்ளாகவே என் பெயர், தொழில், நிலைமை எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டு விட்டார். பிறகு “இப்போது போங்கள், ஞாயிற்றுக்கிழமையன்று நான் சாவகாசமாக உங்களுடன் பேச விரும்புகிறேன், பார்க்கலாம்’ என்றார்.
திருப்பிக் கொணர்ந்து கொடுத்ததற்கு இனாமாக ஏதாவது கொஞ்சம் ரூபாயைத் தருவார் என்று எண்ணினேன்; அவர் தரவில்லை.
அன்று செவ்வாய்க்கிழமை. தினமும் நம்மாழ்வார் தெருக் கோடியிலிருந்து என் ஆபீஸ் வரையில் என் ஆபீஸிலிருந்து நம்மாழ்வார் தெருக்கோடி வரையில் ராகவன் என்னுடன் வருவார். இது ஞாயிற்றுக்கிழமை வரையில் நடந்தது. யாரோ பணக்காரர்- உற்றார் உறவினர் யாருமில்லை போலிருக்கிறது. என் குழந்தை களில் யாரையாவது ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டாலும் எடுத்துக் கொள்வார் என்று எண்ணினேன் நான்.
ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. அன்று விடியற்காலையிலேயே எழுந்து, ராகவன் வீட்டுக்குப் போனேன்.
காப்பி சாப்பிட்டானதும் ராகவன் கேட்டார், “எனக்கு எத்தனை வயசிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்று.
“ஐம்பதிலிருந்து அறுபது இருக்கலாம்!”
“நான் பைத்தியமில்லை என்று உங்களுக்குத் தெரியு மில்லையா!”
‘இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி?”
ராகவன் சொன்னார்: “நான் இப்போது சொல்லப்போவது ரொம்பவும் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குப் படலாம்; பொறுமையாகக் கேட்கவேண்டும். உங்கள் உதவி எனக்குத் தேவை. அந்த உதவிக்குத் தக்கபடி நான் தங்களுக்குக் கைம்மாறு செய்வேன்.”
சற்று நேரம் ராகவன் மௌமாக இருந்தார். நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அவர் தொடர்ந்தார். “எனக்கு இப்போது நூற்று ஐம்பத்தெட்டு வயதாகிறது” என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது; திடுக்கிட்டேன். ராகவன் தொடர்ந்தார்;
‘முழுவதும் கேளுங்கள். நான் தஞ்சாவூரில் சரபோஜி ராஜா ஆண்டு கொண்டிருந்த போது பிறந்தேன். அரண்மனையில் உத்தியோகம்.
என் தகப்பனாருக்கு கும்பினியார் தஞ்சாவூரைப் பிடித்துக் கொண்டது எனக்குத் தெரியும். சரபோஜியின் மரணம், என் சுயசரிதத்தை எழுதினேன் என் கண்முன் நடந்த சம்பவம்.
என்றால், அது ஒரு நூற்றாண்டுச் சரிதமாகவே இருக்கும். குறிப்புக்கள் எழுதி வைத்திருக்கிறேன்; ஆனால் அதற்கு இன்னும் காலம் வரவில்லை” என்றார் ராகவன்;
நான் திறந்த வாய் திறந்திருக்க, பதில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ராகவன் சொன்னார்;
‘அதற்கெல்லாம் இப்பொழுது பொழுதில்லை. சித்த வைத்தியர் கந்தப்பிள்ளையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்”.
நான் கேள்விப்பட்டதில்லை, அதனால் என்ன? ராகவனுக்குப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன்.
‘அந்தக் கந்தப் பிள்ளையிடம் நான் வைத்தியம் கற்றுக்கொண்டேன். முப்பது வருஷங்கள் நான் கந்தப் பிள்ளையுடன் இருந்து வைத்திய சாஸ்திரத்தைக் கரை கண்டு விட்டேன். அவர் இறந்த பிறகு அவருடைய அற்புதமான சுவடிகள் பல என் கையில் கிடைத்தன.
‘அந்தச் சுவடிகளைப் புரட்டியபோது சிரஞ்சீவி மூலிகையும் அதன் பக்குவமும் எனக்குக் கிடைத்தன. சிரஞ்சீவியாக வாழும் வழி தெரிந்த பிறகு அந்த வழியைக் கடைப்பிடிக்கத் தைரியம் வரவில்லை. ஆனாலும், என் எழுபதாவது வயசில், சிரஞ்சீவித் துளிகளைத் தயார் செய்து சாப்பிட்டு விட்டேன்.
சிரஞ்சீவித் துளிகளின் குணம் என்னவென்றால் எந்த மனிதன் அவற்றை எந்த வயசில் சாப்பிட்டாலும் சரிதான், உடனேயே அதாவது மூன்றே முக்கால் நாழிகை நேரத்துக்குள்ளாக, அவனை ‘அன்று பிறந்த’ குழந்தையாக்கி விடும். பேசும் சக்தி போய்விடும். ஆனால் ஞாபகம் மட்டும் மறையாது. ‘குவா குவா’ என்று கத்துகிற குழந்தையாகத் தொடங்கி, அவன் மறுபடி வாழ்க்கை நடத்தலாம். மறுபடி எந்த வயசில் வாழ்க்கை நடத்தலாம். மறுபடி எந்த வயசில் வேண்டுமானாலும் சிரஞ்சீவித் துளிகளைச் சாப்பிட்டு மீண்டும் குழந்தையாகி விடலாம்; மீண்டும் வாழத் தொடங்கலாம். உமக்கு நம்பத் தோன்றாதுதான். எனினும், நான் அந்தச் சிரஞ்சீவித் துளிகளை இரண்டு தரம் சாப்பிட்டுப் பார்த்து விட்டேன்; முதல் தடவை எழுபதாவது வயசில் சாப்பிட்டேன். இரண்டாவது தடவை எண்பத்தெட்டாவது வயசில்-அதாவது, இரண்டாவது பருவத்தில் அப்படிச் சாப்பிட பதினெட்டாவது வயசில் சாப்பிட்டேன். நேர்ந்ததற்குக் காரணம் இதுதான்.
“என் எண்பத்து எட்டாவது வயசில் நேர்ந்த ஒரு விபத்தில் என் கால் முறிந்து விட்டது. நொண்டியாக வாழ்க்கை நடத்த விருப்பமில்லாமல் நான் மீண்டும் சிரஞ்சீவித் துளிகளைச் சாப்பிட்டு மீண்டும் அன்று பிறந்த குழந்தையாக வளர்ந்து, இப்போது இந்த அறுபத்தொன்பதாவது வயதை எட்டியிருக்கிறேன். மூன்றாவது பருவத்தில் இந்த இருபத்து ஒன்பது வருஷங்களில் நான் நிறையவே பொருள் ஈட்டிவிட்டேன். சிரஞ்சீவித் துளிகள் உருவத்தையும் பருவத்தையும் மாற்றுமே தவிர ஞாபக சக்தியை மாற்றாது என்று சொன்னேனல்லவா? நான் கந்தப் பிள்ளையிடம் கற்றுக் கொண்ட சித்தவைத்தியம் என் தொழிலாக அமைந்தது. சரபோஜி, சிவாஜி, காலத்தில் அரண்மனையில் புதையல்கள்
புதையுண்ட விவரங்கள் சில எனக்குத் தெரியும். 1890, 1895 வாக்கில் பத்துப் பேர் திடீர்திடீரென்று பணக்காரர்களான சம்பவங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் பிரசித்தமில்லையா? புதையல்களைப் பற்றி என் ஞாபகங்களை உபயோகப்படுத்திக் கொண்டு அந்தப் பத்துப் பேருடன் பதினோராவது ஆசாமியாக நானும் புதையல் எடுத்துப் பணக்காரனானேன்.
“இப்போது என்னிடம் பத்துப் பன்னிரண்டு லட்சத்துக்கு ஆஸ்தி இருக்கிறது. வயசும் ஆகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் நான் அந்தச் சிரஞ்சீவித் துளிகளை உபயோகிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. முந்திய நாட்களில் நாள் சொத்துச் சேர்த்து வைக்க வில்லை; சுகபோக வாழ்வுக்குப் பழக்கப்படுத்திக் கொள்ளவும் ல்லை. சிரஞ்சீவித் துளிகளைச் சாப்பிட்டுவிட்டு எங்கேயாவது போய்ப் படுத்துவிடுவேன். யாராவது புண்ணியவதி எடுத்து வளர்த்து விடுவாள். பிறகு மீண்டும் வாழ்க்கைப் போரைத் தொடங்குவேன். ஆனால் இந்தத் தடவை ஒரு திட்டத்துடன் எல்லா வற்றையும் செய்வது என்று தீர்மானித்திருக்கிறேன். அதற்காகத்தான் பத்து வருஷமாக ‘நாணயஸ்தன்’ என்று சொல்லக்கூடிய ஒரு மனிதன் அகப்பட மாட்டானா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
நீர் கிடைத்தது என் அதிர்ஷ்டம். நான் எதிர்பார்த்ததைவிட நல்ல நாணயஸ்தர் நீர். என் திட்டத்தில் உதவுவதற்குத் தங்களுக்குச் சன்மானமாக என் சொத்தில் பாதியைத் தங்களுக்குத் தந்து விடுவேன்”.
ராகவன் கதையை இந்த இடத்தில் நிறுத்தினார். “பத்துப் பன்னிரண்டு லட்சத்தில் பாதி, ஆறு லட்சம்-அடேயப்பா!” என்று எண்ணிக் கொண்டே அவரை ஆவலுடன் பார்த்தேன்.
“உம் மனைவி பிரசவிக்கிற சமயத்தில் நான் என் சிரஞ்சீவித் துளிகளைத் தயார் செய்து சாப்பிட்டு விடுகிறேன். உம் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகச் சொல்லி என்னையும் உம் குழந்தைகளுடன் வளர்த்துப் பெரியவனாக்கி விடும். பத்து வயது வரையில் வளர்த்து விட்டால் போதும். பிறகு நானே தலைப்பட்டுப் பார்த்துக் கொள்வேன்” என்றார் ராகவன்.
“உம்” என்றேன்.
“சிரஞ்சீவித் துளிகளைச் சாப்பிடுமுன் என் ஆஸ்தி, இந்த வீடு, என் சொத்துக்கள் பூராவையும் உமக்கு எழுதி வைத்து விடுகிறேன், ‘நான் கண்ட ஒரே நாணயஸ்தன்’ என்று. பணக்காரப் பிரபுவின் பைத்தியக்கார உயில் என்பதாக இது நாலு வாரம் பத்திரிகைகளில் அடிபடும். அதனால் யாருக்கும் நஷ்டமில்லை. நான் வளர்ந்து பெரியவனான பின், அதாவது என் நாலாவது வயசில் என் சொத்தில் பாதியைக் கேட்டு வாங்கிக் கொண்டு நான் நகர்ந்து விடுகிறேன்!” என்றார் ராகவன்.
சரியான யோசனைதான்! ஆனாலும், ‘அவளைக் கேட்க வேண்டும்” என்றேன்.
‘அதில் தவறு இல்லை.
எனினும் ரகசியத்தைக் காப்பது நல்லது. அவசியமானால் ஒழிய உம் மனைவிக்கும் இது தெரிய வேண்டாமே!” என்றார் ராகவன்.
அதுவும் நியாயமே என்று தோன்றியது. இன்னும் ஒரு ஆக்ஷேபம் மட்டும் இருந்தது. “இரட்டைப் பிள்ளை பிறந்தது என்று சொன்னால் அவள் நம்பவேண்டுமே! கூட இருப்பவர்கள் நம்ப வேண்டுமே!” என்று ஆட்சேபித்தேன் நான்.
“அது அந்தச் சமயத்தில் தோன்றுகிறமாதிரி செய்து கொள்ளலாமே. அவசரம் என்ன? இரண்டு குழந்தைகள் இருக்கும் போது யாரும் சுலபமாக நம்பி விடுவார்கள்” என்றார் ராகவன்.
“இருந்தாலும், நான் பொய் சொன்னதே இல்லை. எனக்குப் பழக்கமே கிடையாது!” என்றேன் நான்.
“பேசாமல் இருந்துவிடும். அவர்கள் ஸ்திரீகள், இரட்டைக் குழந்தைகளைப் பற்றி என்ன முடிவுக்கு வேண்டுமானாலும் வரட்டும். அதுபற்றி உமக்கென்ன?” என்றார் ராகவன்.
உண்மைதான், இது விஷயம் பூராவையும் ரகசியமாக வைத்துக் கொள்வது என்ற தீர்மானத்துடன், பணக்கார சித்தத்துடன் வீடு திரும்பினேன்.
ராகவன் போட்ட திட்டப்படியேதான் சகலமும் நடந்தது. உயில் எழுதி வைத்துவிட்டார். நான்கூட அதற்கப்புறம் குமாஸ்தா வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஹாய்யாக வீட்டிலே, நம்மாழ்வார் தெருவிலேயே குடியேறி விட்டேன். ராகவனையும் என்னையும் பற்றி ஊரார் வம்பளந்தார்கள். அதைப் பற்றிப் பணம் கிடைத்த பிறகு எனக்கென்ன கவலை? என் மனைவியின் பிரசவத்திற்கு இரண்டொரு வாரங்களுக்கு முன்னதாக ராகவன் காசி யாத்திரை கிளம்பினார். பகலில் கிளம்பினார். இரவில் யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் ரகசியமாக.
அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு என் மனைவி பிரசவித்து விட்டாள். சிரஞ்சீவித் துளிகள் சாப்பிட்ட ராகவனாகிய குழந்தையும் தயாராகவே இருந்தது. ஆனால் திட்டம் ஒருவிதத்தில் தவறி விட்டது.
என் மனைவிக்கு அந்தப் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்து விடவே, ராகவன் மூன்றாவது குழந்தையானார். அப்பொழுதே பிறந்த மற்ற இரண்டு குழந்தைகளுக்குப் போட்டியாகவே ராகவனும், ‘குவா குவா” என்று கத்தினார் என்பதைக் காண எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
இதெல்லாம் நடந்து இப்போது கிட்டத்தட்ட ஒரு வருஷமாகி விட்டது.
ராகவனாகிய குழந்தை இன்னும் பேசத் தொடங்க வில்லை. இப்போது அந்த மூன்று குழந்தைகளில் யார் ராகவன் . என்பது எனக்கே நிச்சயமாகத் தெரியவில்லை. தெரிந்தால்…
தெரிந்தால்….?
யார் சொல்ல முடியும்? நான் இப்போது பணக்காரன்; லட்சாதிபதி! பழைய நாணயஸ்தன் அல்ல.
என்ன செய்வேன் என்று யார் சொல்ல முடியும்?
என் குழந்தையைக் கொன்று விடப்போகிறேனே என்கிற பயம் ஒன்றுதான் என்னை இப்போது தடை செய்கிறது; ஆறு லட்சம் இல்லையா நஷ்டம்? ஆனால், என்ன செய்வது?
ஒத்து வளர்ந்து தவழ்ந்து கொண்டு கிடக்கிற மூன்று குழந்தைகளையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக் கிறேன்.
என் மனசில் நடக்கும் போராட்டம் என் மனைவிக்குக் கூடத் தெரியாது!
1966

2 Comments on “க.நா.சு./ சிரஞ்சீவி”
Comments are closed.