
நான் இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் மாம்பலத்தில் குடியிருந்தேன். அப்போதெல்லாம் சிரமத்தைப் பார்க்காமல் ‘பஸ் டர்மினஸுக்குப் போய்த்தான் பஸ் ஏறுவேன். நடு ஸ்டாப் எதிலும் பஸ் கிடைக்காது. பஸ்ஸுக்கு அப்படியும் தினம் காத்திருக்கத்தான் நேரும். அப்படிக் காத்திருக்கும் நேரங்களில் ஒரு பிச்சைக்காரன் என் கண்ணில் படுவான்-இரண்டு கால்களும் அற்ற முடவன் வேலை எதுவும் கிடைக்காது அவனுக்கு என்பதனால் பிச்சை எடுக்கிறான் என்கிற நினைப்பு எனக்கு. ‘ஐயோ பாவம்’ என்று எப்பொழுதாவது கையில் காசு இருக்கும்பொழுது காலணா, அரையணாக் கொடுப்பேன்.
அவனுக்கு வயது ஐம்பதிருக்கலாம். முகத்திலே தனியாக ஒரு களையிருந்தது. என்னைப் போல் அவனிடம் பரிதாபம் கொண்டு பலரும் சப்தம் போடுகிற பிச்சைக்காரர்களை விட்டுவிட்டு அவனைத் தேடி வந்து காலணா, அரையணா கொடுப்பார்கள். அந்த நாட்களில் பிச்சைக்காரர்களும் இத்தனை அதிகம் இல்லை; இப்பொழுது போலப் பணநெருக்கடியும் அவ்வளவாக இல்லை;
பஸ்ஸுக்காகச் சிலநாள் அதிக நேரம் காத்திருக்க நேர்ந்து விடுகிற சமயங்களில் நான் அந்தப் பிச்சைக்காரனுடன் பேச்சுக் கொடுத்துப் பார்ப்பேன். அப்படியாக அவனிடமிருந்து எதுவும் விஷயம் கிரஹித்துக் கொண்டு விடும்படியாக அவன் பேசிவிட மாட்டான். பஸ்ஸில் கிளீனராக அவன் ஒரு காலத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் பஸ் ஏறி அவனுடைய இரண்டு கால்களும் அவனுக்குப் போய்விட்டன என்றும் தெரிந்து கொண்டேன். பெண்டாட்டி பிள்ளைகள் எல்லோரும் இருந்தார்கள். வேறு பல வேலைகளில் எல்லாம் சிரமப்பட்டு வராமற் போகவே பிச்சை யெடுக்கக் கிளம்பிவிட்டான்.
அவன் பெண்டாட்டி நாலு வீடுகளில் வேலை செய்து ஏதோ சம்பாதித்து வந்தாள். கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்தில் அவனுடைய குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தன. இவ்வளவுதான் அவனைப்
பற்றிப் பலநாட்களில் நான் தெரிந்து கொண்ட விஷயம்.
தினமும் அவனைப் பார்ப்பது என்று ஏற்பட்டு விடவே, அவனை எதிர்பார்ப்பது என்றும் நாளடைவில் ஏற்பட்டு விட்டது. தெருவில் பஸ் நிற்கிற இடத்துக்குப் பத்தடி தள்ளி, ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருப்பான் அவன். சில சமயம் பக்கத்தில் இருந்த ஒரு குட்டிச்சுவரில் சாய்ந்திருப்பான்.
திடீரென்று ஒருநாள் அந்தப் பிச்சைக்காரனை அவனுடைய இடத்தில் காணவில்லை. அன்று எனக்கு என்னவோ போலிருந்தது. எனக்குச் சந்தேகம்கூட வந்துவிட்டது- வழக்கமான பஸ் டர்மினஸுக்கும் போகாமல் வேறு புது இடத்துக்கு நாம்தான் வந்துவிட்டோமோ என்று என் கலவரத்தில், கிடைத்திருக்கக் கூடிய ஒரு பஸ்ஸைக்கூட விட்டுவிட்டேன். ஒரு நிமிஷத்தில் வந்து விடுவான் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு பத்து நிமிஷம் காத்திருந்து பார்த்தேன்- அவன் வரவில்லை. பக்கத்திலிருந்த ஹோட்டல்காரரை விசாரித்தேன்.
“அந்தப் பிச்சைக்காரன் முடவன்…’
ஹோட்டல்காரர் சொன்னார், “இந்த ஹோட்டல் திறந்து மூன்று வருஷங்களாகிறது. இந்த மூன்று வருஷங்களில் முதல் தடவையாக இன்றுதான் அவனைக் காணவில்லை” என்று.
“ஏன் வரவில்லை?”
“எனக்கும் தெரியவில்லை. என்னவோ? ஏதோ?’
அடுத்த பஸ்ஸையும் விட்டுவிட்டால் ஆபீஸுக்கு நேரமாகி விடும் என்று ஏறிக்கொண்டு கிளம்பினேன். அந்தப் பிச்சைக்காரன் ஏன் அன்று வரவில்லை என்று தெரிந்துகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பவே எனக்கு மனசில்லைதான். ஆனால் அதற்காக ஆபீஸில் லீவு எடுத்துக் கொள்வது சரியல்ல என்றும் தோன்றியது. இருந்தாலும் அன்று எனக்கு என்னவோ போலத்தான் இருந்தது.
மாலையில் மற்ற காரியங்களில் அவனை நான் மறந்தே போய்விட்டேன். தவிரவும் பஸ்ஸில் டர்மினஸ் வரையில் போக வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. இரண்டு ஸ்டாப் முன்னாடி பார்க்கிலே இறங்கி விடுவேன். அவனைப் பற்றி மாலையில் ஞாபகம் இருந்திருந்தால் டர்மினஸ்வரையில் கூடப் போய்ப் பார்த்திருப்பேன்-ஞாபகம் வரவில்லை. ஆனால் அதற்கு மறுநாள் நான் வழக்கப்படி பஸ் டர்மினஸுக்குப் போனபோது அவன் அவனுடைய இடத்தில் உட்கார்ந்திருந்தான் என்று கண்டதும் எனக்குதான் நிம்மதியாக இருந்தது. அவனிடம் ஒரு அரை
அணாவை எடுத்துக் கொடுத்து விட்டு, “என்னப்பா நேற்று உன்னைக் காணவில்லையே?” என்றேன்.
வழக்கம் போல இல்லை அவன் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு, லேசாக முணுமுணுத்தான்.
“உடம்புக்குச் சுகமில்லீங்க” என்றான். அவன் குரலில் தொனித்த துயரம் என் உள்ளத்தை உருக்கியது.
“உன் பெயர் என்ன?’
“என் பெயருக்கு என்னங்க? பிச்சைக்காரன்” என்றான் அவன்.
“பிச்சைக்காரனாக இருந்தால் என்ன? உனக்கும் ஒரு பெயர் உண்டு இல்லையா?”
“முனிசாமிங்க?”
“உடம்பு சுகமில்லையானால் நேற்று வரவு ஒன்றும் இல்லையா உனக்கு ?” என்று கேட்டேன்.
“கடவுள் கொடுப்பாருங்க.”
‘இதையும் வச்சுக்கோ” என்று ஒரு இரண்டணாக் காசை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.
முனுசாமி ஏதோ முணுமுணுத்தான்-அது சரிவர என் காதில் விழவில்லை. பஸ்ஸும் வந்துவிடவே நான் ஆபீஸுக்குக் கிளம்பி விட்டேன்.
அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவன் அங்கு தென்பட வில்லை. மூன்றாம் நாள்தான் காணப்பட்டான். அப்பொழுதும் கூட நான் டர்மினஸுக்கு வரும் வரையில் அவன் காத்திருக்க வில்லை. என்னைத் தூரத்தில் கண்டவுடனேயே அவசரம் அவசரமாக நகர்ந்து பக்கத்துத் தெருவுக்குள் மறைந்து விட்டான். என்னைப் பார்த்துவிட்டுத்தான் மறைந்தானா? ஏன்? எதற்காக? இன்னும் இரண்டு நாட்கள் கழித்துக் கண்ணில் பட்டால் எட்டணாவாக வாங்கிக் கொள்ளலாம் என்கிற எண்ணமோ? பிச்சைக்காரர்களே அயோக்கியர்கள்தான் என்று எண்ணினேன் நான்.
இந்த மாதிரியே ஒரு வாரம் பத்து நாள் சென்றது. முனிசாமி என் கண்ணில் படுவதே கிடையாது. தூரத்தில் என்னைப் பார்த்த வுடனேயே மறைந்து விடுவான். தப்பித் தவறி என்றாவது நான் வருவதைக் கவனிக்காமல் இருந்து விட்டானேயானால் நான் கொடுக்க வருகிற அரையணா, காலணாவை வாங்கிக் கொள்ளக் கூடத் தாமதியாமல் நகர்ந்து விடுவான். எதுவும் விசாரிக்க எனக்கு இடம் தருவது கிடையாது. ‘இதென்ன இது ஆச்சரியமாக இருக்கிறதே’ என்று எண்ணுவேன் நான். ஆனால் பெரிய விஷயமாக இந்தப் பிச்சைக்கார முனிசாமியைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன என்று எண்ணி நான் அதைப் பற்றிச் சிந்திப்பதையே நிறுத்தி விட்டேன். அவனைப் பற்றி இரண்டொரு மாதங்களில் எனக்கு மறந்துகூடப் போய் விட்டது.
மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு அவன் தன்னுடைய பழைய இடத்தில் உட்கார்ந்திருந்ததைத் தூரத்திலிருந்தே கண்ட நான், “என்னைக் கண்டவுடன் நகர்ந்து விடுவான்” என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டே பஸ் டர்மினஸை அடைந்தேன். வழக்கத்துக்கு விரோதமாக அவன் அன்று நகர்ந்துவிடவில்லை. என் வரவை எதிர்பார்ப்பவன் போல உட்கார்ந்திருந்தான்.
“என்ன முனிசாமி! உன்னை ரொம்ப நாளாக உன் இடத்திலே காணவேயில்லையே, என்ன?” என்று கேட்டேன்.
“வேறு இடத்திலே போய்ப் பிச்சை எடுத்துண்டிருந்தேனுங்க’ என்றான்.
“இதைவிட நிறையக் கிடைக்கிற இடமா?”
‘இந்த மாதிரி நல்ல இடமில்லேங்க அது!”
“பின் ஏன் அங்கே போய்ப் பிச்சை எடுத்தாய்!”
ஒரு நிமிஷம் மௌனமாக இருந்தான் முனிசாமி. பிறகு என்னை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான்: “உங்கள் கண்ணில் படாமல் இருக்க வேணுமின்னு அங்கே போனேன்!” என்றான்.
“அட பாவமே! நான் என்னப்பா பண்ணினேன் உன்னை?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன் நான்.
“நான் ஒரு தப்புச் செய்து விட்டேன். உங்களுக்கு ஒரு அநீதி இழைச்சுப்புட்டேன்” என்றான் முனிசாமி.
“எனக்கா? தப்பா? அநீதியா? என்னப்பா பெரிய பெரிய வார்த்தையாச் சொல்றயே!” என்றேன்.
“சொல்றேன் கேளுங்க, ஐயா! நான் செய்த அநீதியைப் பொருட்படுத்தாமல் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நாலு மாசங்களுக்கு முன் ஒருநாள் நீங்கள் எனக்கு ஒரு அரையணாக் கொடுத்தீர்கள்…. ஞாபகம் இருக்கிறதா?”
“சொல்லு.”
‘ அன்று உங்களுக்கு அது ஞாபகம் இல்லை. ஆனால் அன்றைய தினத்தை நான் உயிருள்ள அளவும் மறக்கமாட்டேன். வெள்ளிக்கிழமை. அன்று பஸ்ஸில் ரொம்பவும் கூட்டமாக முதல் பஸ்ஸில் முண்டியடித்துக் கொண்டு நீங்கள் ஏறப் பார்த்தீர்கள்-இடம் கிடைக்கவில்லை. குறுக்கும் நெடுக்கும் பத்துத் தடவை நடந்துவிட்டு அடுத்த பஸ்ஸில்தான் போனீர்கள். இவ்வளவையும் நான் கவனித்தேன்.’
இருந்தது.
“அதற்கென்ன இப்போது?” என்றேன் நான், பொறுமையை இழந்தவனாக.
இங்கு வந்தவுடனேயே எனக்கு ஒரு அரையணாவை எடுத்துக் கொடுத்துவிட்டீர்கள். இரண்டாவது பஸ் கிடைப்பதற்கு முன் நீங்கள் உங்கள் சட்டைப் பையலிருந்து ஏதோ ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தீர்கள்; அந்தக் கடிதத்தைத் தேடும்போது உங்களுடைய பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டுக் கீழே விழுந்தது; அதை நான் உங்களிடம் திருப்பிக் கொடுத்து விடுவது என்ற உத்தேசத்துடன்தான் என் கையில் எடுத்தேன். ஆனால் கையில் எடுத்த பிறகு அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றே தோன்றவில்லை எனக்கு. நோட்டையும் உங்களையும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன் நான்.ப ஸ் வந்தது. நீங்கள் ஏறிக்கொண்டு போய் விட்டீர்கள். .”
அந்த ஐந்து ரூபாயைப் பற்றி அவன் சொன்ன பிறகு எனக்கும் ஞாபகம் வந்தது. ஆனால் அதை நான் கெட்டுப் போக்கி விட்டதாக எனக்கு ஞாபகமே இல்லை. அன்று ஏதோ சாமான் வாங்கிவர வேண்டும் என்று அம்மா சொன்னாள்! ஒரு ஐந்து ரூபாய் நோட்டை என் சட்டைப் பையில் போட்டதாகவும் சொன்னாள். நான் அந்த தோட்டைப் பார்க்காத குற்றத்தால் அது என் சட்டைப் பையில் இல்லை என்று அம்மாவிடம் சொல்லிச் சாதித்து விட்டேன். இப்போது ஞாபகம் வந்தது எனக்கும்.
முனிசாமி தொடர்ந்து சொன்னான்: “பஸ் கிளம்பியவுடன்தான் இனக்கு நான் செய்துவிட்ட பெரிய தவறு தெரிந்தது. காலற்ற நான் பஸ்ஸைத் தொடர்ந்து எப்படி வருவது? கூச்சல் போட்டுக்கூடப் பார்த்தேன்-பஸ் நிற்கவில்லை. இந்த ஹோட்டல் முதலாளி வந்து ‘என்னப்பா?’ என்று கேட்டார். ‘பிச்சை கேட்டேன்’ என்றேன். நான் வாய்திறந்து கூவிப் பிச்சை கேட்டதே இல்லை என்று அறிந்த அவர் என்னை ஒரு தினுசாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டார். அன்று நானும் இங்கு வெகுநேரம் உட்கார்ந்திருக்க வில்லை. ஆனால் நான் போகும்போது அந்த ஐந்து ரூபாய் தோட்டை அப்படியே மறுநாள் காலையில் உங்களிடம் கொண்டு வந்து தந்துவிடுவது என்று எண்ணிக்கொண்டுதான் போனேன்!”
முனிசாமி சற்று நிறுத்தினான். “அப்புறம்?” என்று கேட்டேன்.
வீட்டிலே சோறாக்க அரிசியில்லை என்று அழுது கொண்டிருந்தாள் அவள். பட்டினி கிடந்த குழந்தைகளைக் கட ண்தும் எனக்குத் தாங்கவில்லை. அந்த ஐந்து ரூபாய் நோட்டைப் பெண்சாதியிடம் கொடுத்து விட்டேன். ‘எங்கேயாவது திருடிக் இட்டு வந்தாயா பாவி!’ என்று கேட்டாளே தவிர, அதை மாற்றி அரிசி பருப்பு வாங்கிட்டு வந்து விட்டாள். அந்தச் சோற்றைத் தின்ளவே எனக்கு மனது வரவில்லை. ஆனால் மறுநாள் நான் இந்தப் பக்கம் வரவேயில்லை.’
“…. உம்…” என்றேன் நான்.
‘அதற்கு மறுநாள் நான் இங்கு வந்தபோது நீங்கள் என் வாவில்லை என்று விசாரித்தீர்கள். அரையணாக் காசும் கொடுத்தீர்கள்! உடம்பு சுகமில்லை என்று புளுகியும் வைத்தேன், பாவம்; நேற்றுச் சம்பாத்தியமேயில்லையே என்று நீங்கள் இரண்டணாக் கொடுத்தீர்கள். அந்த இரண்டணா என் கையைத் தீப்பொறி மாதிரி சுட்டது. அந்த விநாடி முதல் எனக்கு நிம்மதியேயில்லை. ‘தவறு செய்துவிட்டேனே, பாவி நான்’ என்று எனக்குள்ளேயே பல தடவைகள் சொல்லிக் கொண்டேன். உங்கள் பணம் ஐந்து ரூபாயையும் உங்களிடம் திருப்பிக் கொடுத்துவிடுவது என்று தீர்மானித்தேன் என் பெண்ஜாதியிடம் உண்மையைச் சொல்லிப் பார்த்தேன். உங்களுக்கு அஞ்சுக்குப் பத்தாகக் கடவுள் கொடுத்து விடுவார் என்றாள் அவள். தவிரவும் அந்த அஞ்சு ரூபாயில் நாலணாக்கூட அவளிடம் மிச்சமில்லை. குழந்தைகளுக்குப் பூநூலும் சோப்பும்கூட வாங்கிவிட்டாள் அவள். திருப்பிக் கொடுத்துவிடத்தான் வேணும் என்று நான் சொன்னதும் அவள் ‘சம்பாரிச்சுக் கொடுத்துவிடு’ என்று கேலியாகச் சொல்லுகிற மாதிரி சொல்லி விட்டாள். அவள் கேலியாகத்தான் சொன்னாள். ஆனால் சம்பாரிச்சுக் கொடுத்துவிடுவது என்று நான் தீர்மானித்து விட்டேன்.’
இரண்டாவது பஸ்ஸும் வந்து போய் விட்டது. அவன் கதையை முடிக்கட்டும் என்று காத்திருந்தேன். ஆபீஸுக்குப் பத்து நிமிஷம் லேட்டாகப் போனால்தான் என்ன குடியா முழுகிவிடும்?
முனிசாமி தொடர்ந்து சொன்னான்: “உங்கள் கண்ணில் படக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன். நான் போன இடத்தில் அவ்வளவாகப் பிச்சை கிடைக்கத்தான் இல்லை; இருந்தாலும் அந்த அஞ்சு ரூபாயையும் சேர்க்காமல் உங்கள் கண்ணில் படுவதில்லை என்று தீர்மானித்தது முதல் எனக்கு நிம்மதியாக இருந்தது. அஞ்சு ரூபாய் சம்பாதிக்க எனக்கு நாலு மாசம் ஆச்சு! நேற்றுத்தான் சரியாக அஞ்சு ரூபாய் ஆச்சு. எண்ணிப் பார்த்தேன். பணம்-எடுத்துக் கொள்ளுங்கள்.
இதைச் சொல்லிக் கொண்டே பிச்சைக்கார முனிசாமி தன் கந்தல் உடையிலிருந்த ஒரு முடிப்பை அவிழ்த்தான். காலணாவும் அரையணாவும் ஓரணாவுமாகப் பல காசுகள் இருந்தன. ஐந்து ரூபாய் இருக்கும் எண்ணிப் பார்த்தேன் என் று சொல்லுகிறானே! ஐந்து ரூபாய் இருக்கும்.
அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளக் கை நீட்டாமல் நான் சும்மா நின்றதைப் பார்த்ததும் முனிசாமி சொன்னான்: “நான் செய்துவிட்ட தப்புக்குப் பிராயச்சித்தம் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் எனக்கு இந்த நாட்களில் நிம்மதி அளித்தது. இந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளமாட்டேன் என்று நீங்கள் சொன்னால்எனக்கு நிம்மதி இராது. என் மன நிம்மதிக்ாக இதை வாங்கிக் கொண்டு விடுங்கள்” என்று கெஞ்சினான் முனிசாமி.
கையை நீட்டி நான் அந்தக் காசுகளை வாங்கிக் கொண்டேன். வேறு என்னதான் செய்வது? சொல்லுங்களேன்!
க.நா.சு./ சிரஞ்சீவி – விருட்சம் நாளிதழ்
–

One Comment on “க.நா.சு. / ஐந்து ரூபாய்”
Comments are closed.