க.நா.சு. /தகப்பனும் பிள்ளையும்

தகப்பனார் சொன்னார் :

ஆமாம் சார். எனக்கு ஒரே ஒரு பிள்ளைதான். வேறு குழந்தை குட்டி கிடையாது. உற்றார் உறவினர்கூடக் கிடையாது.
இந்தப் பிள்ளை தலைப்பட்டு எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. அவனை நம்பித்தான் நான் உயிர் வைத்திருக்கிறேன்.
ஆமாம். ஹானர்ஸ் வகுப்பில் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருக்கிறான். இந்த வருஷத்தோடு படிப்பு முடிந்து விடுகிறது.
கல்யாணமா? கல்யாணம் ஆகணும். யார் யாரோ பெண் தருகிறேன் என்று வருகிறார்கள். நிச்சயம் பண்ணி என்ன ஸார் பிரயோசனம்? பையன் சம்மதிக்க வேண்டுமே?
சம்மதிக்க மாட்டானா என்கிறேளா? சம்மதிக்க மாட்டான் ஸார், சம்மதிக்கமாட்டான். நான் சொன்னால் நிச்சயமாகச் சம்மதிக்க மாட்டான். நீங்கள் சொன்னால் சம்மதிப்பான். ஊரில் வேறு யாராவது சொன்னால்கூடச் சம்மதிப்பான். அவன் அப்பா சொன்னால் மட்டும் சம்மதிக்கவே மாட்டான்.
ஏன் என்கிறீர்களா? ஏனோ அப்படித்தான். இந்தக் காலத்தில் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது.
நான் ஏழை. பி.டபிள்யூ.டி. குமாஸ்தா. பத்தாம்பசலி ஆசாமி. நாற்பது ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்கி அறியாதவன். காலேஜ் படிப்பு என்கிற வாசனை அறியாதவன். நான் சொன்னால் ஹானர்ஸ் படிக்கும் என் பிள்ளை கேட்பானா?
நான் சொல்லுவதைத் தட்டி விடுகிறான், சரி; அம்மா சொல்லுவதையோ காதில் வாங்குவது கிடையாது.
நல்ல பையன் என்கிறீர்களா? நல்ல பையன்தான். யார் இல்லை என்று சொன்னது? எனக்கு அவனைப்பற்றி அளவற்ற பெருமை; அளவற்ற நம்பிக்கை. என் உயிரையே அவனிடம்தானே வைத்திருக்கிறேன்.
அதுசரி, செல்லப்பிள்ளை. செல்லப்பிள்ளைதான் ஸார். நாலைந்து குழந்தைகளை வளர்த்து இளவயசிலேயே சாகக் கொடுத்தவர்கள் நாங்கள். இந்தப் பையனைக் கையால் தொடக்கூட மனசு வந்ததில்லை. காற்றுக்கூட மேலே அடிக்காமல்தான் வளர்த்து வருகிறோம். எல்லாம் அதன் விளைவுதான்.
பணக் கஷ்டமோ சொல்லி மாளாது. நான் ரிடயராகி ஆறேழு வருஷமாயிற்று. இருபது இருபத்திரண்டு பென்ஷன் வந்ததே; அதை வைத்துக் கொண்டு ஏதோ காலம் கடத்தலாமே; முடிந்ததா? பத்து ரூபாயை கம்யூட் பண்ணிப் பையன் படிப்புக்கு உபயோகமாக இருக்குமே என்று வட்டி நிறையத் தருகிற பாங்கியில் கட்டினேன். பாங்கி மூழ்கிவிட்டதய்யா! என் அதிருஷ்டம் எப்படி?
ஆமாம். கிடைத்தது கிடைத்தது. இரண்டு வருஷங்களுக்குப் புறம் ரூபாய்க்கு ஒன்பதணா வரத்தான் வந்தது. நல்ல காலம்தான். ஒன்பது அணா வந்தது ஆறணாவாகவும் வந்திருக்கலாம். இல்லையா?
சாப்பாட்டுக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதனால் என்ன? எங்களுக்கிருக்கிறதோ இல்லையோ அவனுக்கு இல்லை என்கிற குறையே இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கவலை எல்லாம். இன்று கேட்டானானால் ஒரு சட்டை; நாளைக்கு ஒரு பைஜாமாஸ்; இன்றைக்கு ஹோட்டலுக்குச் சில்லறை; நாளைக்கு நண்பர்களுடன் க்ரூப் போட்டோவுக்குப் பணம்; எப்படியோ நானும் கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன்.
பத்திரிகைகளில் ஏதாவதொரு புதுப் புஸ்தகத்தைப் பற்றி நன்றாக இருக்கிறது என்று விமரிசனம் வந்திருக்கும். அதை உடனே வாங்கிவிட வேண்டும் என்பான். அவன் பாடத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற அவசியமே கிடையாது. இது அவசியமில்லையேடா உனக்கு என்றால் என்னிடம் கோபித்துக் கொள்ளுகிறான் ‘உனக்கு என்ன அப்பா தெரியும்’ என்கிறான்.
உண்மைதான். எனக்கு என்ன தெரியும். இதை எல்லாம் பற்றி? தெரியாது தெரியாமல்தான் நான் இப்படி இருக்கிறேன்.
குறையா? நான் குறைபட்டுக் கொள்ளுகிறேன் என்கிறீர்களா? எனக்குக் குறையே கிடையாது. அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு என்ன குறை? நீங்கள்தான் சொல்லுங்களேன்.
என் பையன் பெரியவனாகிக் கொண்டிருக்கிறான். அவனுக்கென்று எவ்வளவோ அதிருஷ்டம் காத்துக் கிடக்கிறது. எனக்கென்னவோ குறை என்கிறீர்களே! அதெல்லாமில்லை. எனக்கு ஒரு குறையும் இல்லை.
படிப்பா? அவன் படிப்பைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவனுடைய உபாத்தியாயர்கள் யாரையாவது பையன் எப்படிப் படிக்கிறான் என்று பார்த்தால் நான் கேட்பதுண்டு.. அவன் நன்றாகப் படிப்பதாகத்தான் அவர்கள் எல்லோருமே சொல்கிறார்கள். அவன் வகுப்பிலே அவன்தான் முதல் பையன். அதைப் பற்றிச் சந்தேகத்துக்கு இடமே கிடையாது.
இந்த நாலைந்து வருஷங்களில் அவனும் வருஷம் தவறாமல் படிப்பிலே சோடையில்லை; பரிசுகள் வாங்கி வருகிறான்.
ரொம்பவும் கெட்டிக்காரன்தான்.
படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டியதுதான். நல்ல இடமாகப் பார்த்து..
எனக்குத் தெரியாதா ஸ்வாமி? நீங்கள் சொல்ல வேண்டுமா?
பணக்கார இடத்தில் அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டேனானால் சிவசிவா! இதை நான் வாய்திறந்து சொல்லக் கூடாதுதான் பையனையே இழந்துவிட்ட மாதிரிதான் அதற்கப்புறம் நானும் அவன் தாயாரும் தேசாந்தரம் கிளம்ப வேண்டியதுதான். பிள்ளையை இழந்துவிட்ட மாதிரியேதான். நல்ல குலம், நல்ல குணம், நல்ல படிப்பு. அதில் சந்தேகம் என்ன? எல்லாம் பணத்தினிடம் என்ன ஸார் செய்துகொள்ள முடியும்?
இன்றைக்கு என்ன ஸார்? உலகம் தோன்றிய நாள் முதலே இப்படித்தான் ஸார் பணம்தான் பிரதானம். .மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இன்றைக்கென்று ஏற்பட்ட உண்மையா இது? மனுஷ்யன் தோன்றிய நாள் முதலே ஆட்சி செலுத்துகிற
தத்துவம்தானே இது!
பணமோ, பணத்தால் கிடைக்கிற வசதிகளோ இல்லாமல் அறுபது வருஷம் வாழ்ந்துவிட்டவன் ஸார் நான். எனக்கு நன்றாகத் தெரிகிறது, பணம்தான் மனிதனுக்கு மற்ற எல்லா லட்சியங்களுக்கும் அடிப்படையான ஆதாரமான லட்சியம் என்பது.
பெண்டாட்டி மூலம் பணம் கிடைத்துவிட்டால் அவன் என்னையும் அவளையும் திரும்பிக்கூடப் பார்க்கத்தான் மாட்டான். அதற்காக அவனுக்குப் பணம் கிடைக்கக் கூடாது என்று விரும்பலாமா நான்? கஷ்டமாகத்தான் இருக்கிறது, நினைக்கும் போதே அவனுக்குப் பணத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சுக சௌகரியங்கள் கிடைக்கக்கூடாது என்று அவன் தகப்பனாராகிய நானோ, அவன் தாயாரோ விரும்பலாமா? விரும்பமாட்டோம்.
தெய்வ சங்கல்பம் அப்படி இருந்தால் அப்படியே நடக்கட்டும் என்றுதான் நாங்கள் சொல்லலாம்.
தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தான் அவன் பிறந்த அன்றே பிறந்து வளரத் தொடங்கி விட்டதே! நானே இந்த வித்தியாசத்தையும் அதன் விளைவுகளையும் பூரணமாகத் தெரிந்துகொண்டுதானே அவனைப் படிக்கவைத்தேன். நாளுக்கு நாள், நாழிகைக்கு நாழிகை விநாடிக்கு விநாடி இந்த வித்தியாசம் வளர்ந்து கொண்டிருப்பது எனக்கும் தெரிகிறது.
உலகறிய அதுதானே?
இந்த நாட்களிலாவது ஏதோ தேவலை உங்களைப் போல யாராவது ஒருத்தர் இரண்டு பேர் என் கதையை அனுதாபத்துடன் கேட்கிறார்கள். ஆதரவாகப் பேசவாவது பேசுகிறார்கள். ஆரம்ப காலத்தில் இந்தப் பையனைப்பற்றி யாருடனும் பேசக்கூட எனக்குத் தைரியம் வராது. பெருமையாக ஏதாவது பேசிக்கொண்டால் கடவுள் அளவு மீறிச் சோதித்து விடுவாரோ என்று பயம்.
இப்பொழுது மட்டும் என்ன? பெருமையாக நான் எதுவும் பேசிவிடத் துணிவதில்லையே!
அந்த நாட்களில், பையன் எஸ்.எஸ்.எல.சி. பாஸ் பண்ணி, காலேஜ் சேருகிற சமயத்தில் நான் பட்ட கஷ்டம்…. அடடா. சொல்லி மாளாது. ஒன்றா இரண்டா? அல்பமா சொல்பமா?
இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது என் கஷ்டங்களின் முடிவை எட்டிவிட்ட மாதிரிதான் இருக்கிறது!
இன்னொன்று பாருங்களேன்! படிப்பை முடித்துக்கொண்டு பையன் மேல் படிப்புக்குச் சீமை அமெரிக்கா என்று போக ஆசைப்படுகிறான். போகாதே என்று எப்படிச் சொல்வது? “நான் கிழம்-என் சாவு இன்றோ நாளையோ… உன் அம்மாளுக்கு வயசாகாவிட்டாலும் வியாதி-போகாதேடா?” என்று சொல்வதா? அவனுடைய முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை நானேயா போடுவது.
என்ன என்று சொல்வது-தெய்வ சங்கல்பப்படியே எல்லாம் நடக்கட்டும் என்பதைத் தவிர என்ன சொல்வது?
உங்களிடம் தவிர வேறு யாரிடம் ஸார் இப்படி உள்ளத்தைத்திறந்து பேச முடியப் போகிறது? என் ஆற்றாமை பேசுகிறது. என்னவோ சில சமயம் நினைத்துக் கொண்டாலே வயிற்றைக் கலக்குகிற மாதிரியாயிருக்கிறது…
அதிருஷ்டக்காரர் என்கிறீர்களா? யாரை? என்னையா? எனக்கு என்ன ஸார் அதிர்ஷ்டம் வேண்டியிருக்கிறது?இந்த வயசிலே? பையனுக்கு ஒரு வழி பிறந்துவிட்டது என்று அறிந்த பிறகு கண்ணை மூடிவிட்டேனானால் நல்லதுதான். ஏதோ நல்ல வழி பிறக்கும் என்கிற நம்பிக்கைதான் இப்போது பிறந்திருக்கிறது.
இவ்வளவு செய்தும், இத்தனை பாடுபட்டும் கடைசியில் விதி ஏதாவது சதி செய்து விடுமோ என்று பயமாகத்தானே ஸார் இருக்கிறது. என்னைப் பாருங்களேன். எனக்குத் தெரிந்து என் ஆயுளில் நான் ஒருநாள்கூடப் பசி அடங்கக் கவலையின்றிச் சாப்பிட்டதாக ஞாபகம் இல்லை. உடம்பெல்லாம் ஆடிப் போச்சு. இப்பவெல்லாம் மணிக்கணக்குப் பேசுகிறார்கள். நான் வேலை பார்க்கும்போதெல்லாம் நாளில் பன்னிரெண்டு மணி நேரம் வேலை பார்த்திருப்பேன். அப்படியும் நான் ஒருநாள்
வியாதி என்று படுத்துக் கொண்டது கிடையாது. இந்தப் பையனுக்கு மாசத்துக்கு ஒருதரம் ஏதாவது உடம்புக்கு வந்து விடுகிறது. இந்த விஷயத்தில் அவன் தாயாரைக் கொண்டுவிட்டான். சம்ரட்சணையிலோ கவனத்திலோ குறை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று நான் படாதபாடும் படுகிறேன்.
அதுசரி, நீங்கள் சொல்கிறமாதிரி நம்முடைய ஜாக்கிரதை யெல்லாம் என்ன ஸார் இருக்கிறது? எல்லாவற்றிற்கும் மேலாக ஈசுவர கிருபை என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது?
சில சமயம் பையனாகச் செய்யத் தொடங்குகிற ஆர்ப்பாட்டம் தான் ஸார் சகிக்க முடிவதேயில்லை. ஏதாவது சின்ன விஷயத்தில் அவனுக்கு மறுத்துச் சொல்லிவிட்டால் போதும். ஆற்றில் விழுந்து விடுகிறேன்; குளத்தில் விழுந்து விடுகிறேன் என்கிறான்; யாரோ உபாத்தியாயர் சாப்பிட்டுவிட்டுச் செத்துப் போனாராமே- சையனைட்னு ஒரு மருந்து. அதைச் சாப்பிட்டு விடுகிறேன் என்கிறான்.
என் ஆற்றாமை ஏதோ உங்களிடம் சொல்லிவிட்டேன். இதை மட்டும் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள் ஸார். ஆமாம்; நான் உங்களிடம் இதைச் சொல்லிவிட்டேன் என்று அறிந்தால் அவ்வளவுதான், என்ன சொல்லுவான், என்ன செய்வான் என்று சொல்ல முடியாது.
அசட்டுப் பேச்சுத்தான், உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது. படித்துக் கரைகண்டு என்ன பலன்? அசட்டுத்தனம் அஸத்துத்தனம் அதிகமாகிற மாதிரிதான் படிக்கப் படிக்க உலகின் தோன்றுகிறது. ஆனால் எனக்குத் தோணுவதைப் பற்றி இப்பொழுது என்ன பேச்சு…!
எனக்கும் அவரைத் தெரியுமடா, என் கையில் பணம் இல்லை.. எப்பொழுது இருந்தது…? . நான் பார்த்து அவரிடம் சொல்லி விடுகிறேன். இரண்டொரு நாளில் கொடுத்துவிடலாம் என்றேன். கேட்டால்தானே; இப்பொழுதே கொடு, நான்தானே அவரிடம் வாங்கி வந்தேன்; நானேதான் அவரிடம் கொண்டு போய்க் கொடுப்பேன், கொண்டா ஐந்து ரூபாயை என்றான்… கொடுக்காவிட்டால் குளம் என்கிறான்; ஆறு
என்கிறான்; சையனனைட் என்கிறான்; கயிறு என்கிறான்… மேலே மேலே அடுக்கிக் கொண்டே போகிறான். அவன் இப்படிச் சொல்லும்போது எனக்கும் அவன் அம்மாவுக்கும் எப்படியிருக்கும் பாருங்களேன்.
வீட்டிலிருந்த எதையோ விற்றுச் சாயங்காலம் ஒரு ஐந்து ரூபாய் கொடுத்தேன். வேறு என்ன பண்ணுவது.
இன்னும் உங்களிடம் கொணர்ந்து தரவில்லையா? வருவான்; வருவான்; காலேஜ் விட்டு வர சமயம்தான் இது. நான் வரட்டுமா? பின்னர் வந்து பார்க்கிறேன்.
ஆனால் ஒன்று, ஸார்! நான் இந்தமாதிரி ஏதாவது உங்களிடம் சொன்னதாக அவனிடம் மட்டும் சொல்லிவிடர்தீர்கள்; கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
வரட்டுமா? வரேன்.
2
பிள்ளை சொன்னான்:

நேற்றே வரணும் என்று பார்த்தேன். வரமுடியவில்லை ஸார்.
இந்தத் தடவை சொன்ன கெடுப்படி பணம் கொடுக்க முடியவில்லை ஸார்; மன்னிக்க வேண்டும். ஏழெட்டு நாள் தள்ளிப் போய்விட்டது.
தள்ளிப் போனாலும் வந்ததே என்றீர்களா ஸார். அப்படிச் சொல்லலாமா? உயிர் போனாலும் நாணயம் தவறக்கூடாது ஸார்- கூடாது.
இந்தாருங்கள் நான் வாங்கிக்கொண்டு போன ஐந்து ரூபாய் கையோடு வரவு வைத்துக்கொண்டு விடுங்கள். மறந்துவிடப் போகிறது; ரொம்ப தாங்க்ஸ்.

“உட்காருகிறேன் எனக்கு எங்கே போக என்ன அவசரம்? யார் என்னை அழைக்கிறார்கள்? அதுவும் உங்களோடு பேசிக் கொண்டிருப்பதிலே எனக்கு ஒரு திருப்தி.
என்னதான் சொல்லுங்கோ? சொல்றதைப் புரிந்து கொள்கிறவர்களுக்கே பஞ்சமாயிருக்கு ஸார் இந்தக் காலத்திலே.
படிப்பா? படிப்பு என்ன? நன்றாகத்தான் நடக்கிறது. ஆனால் படித்தபிறகு என்பதுதானே முக்கியம்.
யாரு?
அப்பாவா?
எங்கப்பாவா வந்திருந்தார்! இப்பத்தான் போனாரா? அரை மணி பேசிக் கொண்டிருந்தாரா?
என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு. அவர் பாட்டுக்குத் தத்துப் பித்தென்று அசட்டுப் பிசட்டென்று ஸெமி மாதிரி பேத்திக் கொண்டேயிருப்பார்.
எனக்கு என்னவோ இந்த ஐம்பது வயசுக்கு மேல்பட்டவர்களை எல்லாம்….
அடடா! மறந்தே போய்விட்டேனே! மேலத் தெருவிலே ராமகிருஷ்ணய்யர் இருக்காரே, அவர் வரச் சொன்னார்.
வரட்டுமா?
வரேன்.
1966

க.நா.சு. / ஐந்து ரூபாய் – விருட்சம் நாளிதழ்

One Comment on “க.நா.சு. /தகப்பனும் பிள்ளையும்”

Comments are closed.