நாகேந்திர பாரதி வாசித்த கவிதைகள்

மௌன சப்தம்

இலைகளின் மௌன சப்தம்
வேர்களை நீள வைக்கும்

மலர்களின் மௌன சப்தம்
வண்டினை வரவழைக்கும்

மலைகளின் மௌன சப்தம்
மரங்களைச் செழிக்க வைக்கும்

துளைகளின் மௌன சப்தம்
காற்றுக்குக் காத்திருக்கும்

இயற்கையின் மௌன சப்தம்
இறைவனைத் துணைக்கழைக்கும்

இறைவனின் மௌன சப்தம்
உலகினை இயங்க வைக்கும்

மௌனத்தின் மௌன சப்தம்
மனதினை மலர வைக்கும்


இருட்டின் வெளிச்சம்

வெளிச்சத்தைத் திருடியவன்
விட்டுச் சென்ற
அடையாளக் குறிகளாய்
ஆகாயத்தில் நட்சத்திரங்கள்

இருட்டு
இறைவன் போர்த்திக்கொண்ட
கனத்த போர்வை
அவனைத் தேடுபவர்கள்
இங்கே திண்டாடுவார்கள்
அவனைத் தெரிந்தவர்கள்
இதைக் கொண்டாடுவார்கள்

இது ஒரு
கருப்பு வெளிச்சம்
இது
அடையாளம் காட்டும்
அகங்கள் ஆயிரம்

இங்கே தொலைந்து போனவர்கள்
தங்களைத்
திரும்பப் பெற்றவர்கள்


அழுக்கின் அழுக்கு

அழுக்கின் அழுக்கிற்கு
ஆரம்பம் ஆராய்ந்தால்
அறியாமை இருளகற்றும்
தீக்குச்சி கிடைத்து விடும்

வன்முறை அழுக்கெல்லாம்
வேலையில்லாச் சகதியினால்
பெண்ணடிமை அழுக்கிற்குக்
கல்வியின்மை காரணமாம்

தீண்டாமை அழுக்கெல்லாம்
திருந்தாத சில பேரால்
ஜாதி வெறி மத வெறியோ
சாத்திரத்தின் கழிவுகளாம்

ஞானமழை பொழிவதற்கு
நல்லோர்கள் வந்து விட்டால்
தானாக மறைந்து விடும்
தாங்கி வந்த அழுக்கெல்லாம்

ஆனாலும் ஒரு கேள்வி
அடி மனதில் எழுவதுண்டு

அன்றாடம் சோறுக்கே
திண்டாடும் பூமியிலே
அடிப்படை வசதிக்கே
அல்லாடும் நாட்டினிலே

மன அழுக்கை நினைப்பதற்கு
நேரமுண்டா மக்களுக்கு

முதல் நாள் – கவிதை
———-

முரண்டு பிடித்து
முந்தானையை விடாது

அழும் பிள்ளையை
அதட்டி அனுப்பி விட்டு

வீடு திரும்பிப் பின்
மதியம் ஓடிப்போய்

மணி அடிக்கக்
காத்துக் கிடந்து

அழுதபடி வரும்
பிள்ளையை அணைக்கும்

அம்மாவுக்கும் பள்ளிக்கூடம்
அன்று மட்டும் பிடிக்காது

மயான மனத்தெளிவு
————-
பீமூத்திரம் எடுத்துப்
பார்த்தவர்க்குத் தெரியும்

பெரிதாகப் பீத்துவதற்கு
ஒன்றுமில்லை என்று

நாத்தள்ளும் நடுக்கத்தைப்
பார்த்தவர்க்குப் புரியும்

நாடகத்தின் முடிவு
ஒன்றேதான் என்று

தெரிந்தென்ன பயன்
புரிந்தென்ன பயன்

மயான மனத்தெளிவு
மறுநாளே மாறுமென்றால்

வாழ்க்கை இனிது

எடுப்பதில் இல்லை
என்றுமே இன்பம்

கொடுப்பதில் இருப்பதே
குறைவில்லா இன்பம்

எத்தனை காலம்
என்பது தெரியாது

எத்தனை மனிதர்கள்
என்பது தெரியாது

மனிதரும் காலமும்
மறக்க முடியாத

மகிழ்ச்சியைத் தந்து
மகிழ்வது இனிது

அழகியசிங்கரின் ‘ சொல் புதிது ‘ இன்றைய (15.11.2024) நிகழ்வில், வாசித்த கவிதைகள்