அழகியசிங்கர் கவிதைகள்

இன்று கவிதை வாசிக்கலாம் கவி அரங்கத்தில் அழகியசிங்கர் வாசித்த கவிதைகள் (15.11.2024 )

  1. பொதிசுமக்கும் நாற்காலி

என் வீட்டில் நாற்காலியும்
புத்தகங்களைச் சுமக்கின்றன.

அதற்கும்
தெரியும் அவற்றின் வாசனை

அதனால்தான்
என் இல்லத்தில்
நாற்காலியும்
பேசத் தொடங்கும்

கவிதை வாசிக்கும்
கதைகள் சொல்லும்
பட்டிமன்றப் பேச்சாளர்
மாதிரி இலக்கியம்
பேசும்பொதிசுமக்கும் நாற்காலி

  1. மடிப்பாக்கம் பூங்கா

மடிப்பாக்கம் வந்தவுடன்
பக்கத்திலுள்ள
பூங்கா வரவேற்கும்

நான்
போகும் காலை நேரத்தில்
யாரும் தென்பட மாட்டார்கள்

அஞ்சலி என்ற பெண் காவலாளி எப்போதும்
பூங்காவைச் சுத்தம்
செய்து கொண்டிருப்பாள்

நடந்து போகும் நடைபாதையில்
மஞ்சள் நிறப் பூக்கள்
என்
கால்களில் மிதிப்படாமலிருக்க

ஒதுங்கி
ஒதுங்கி

  1. வெளிச்சம்

காலையில்
சூரியனைப் பார்த்து
சிரம் தாழ்த்தி
வணங்கினேன்

ஒளியை
உலகத்துக்குத்
தந்தவன்

அவன்தான்
உலகத்தை ஆள்கிறான்
அவன்
கருணையால் நாமெல்லாம்

வெளிச்சம்
என்ற ஒன்றில்லாவிட்டால்
நாமெல்லாம்
ஒருவரைவொருவர்
பார்த்துக்
கொண்டிருக்க மாட்டோம்

உண்மையில்
இருட்டு குறைந்த
வெளிச்சம்

  1. கடற்கரை

கடற்கரைப் போய்
நின்று கொண்டிருந்தேன்
காலை நனைத்தது
அலை

வா வா என்றது
அலை..

வீரியமாகப்
பொங்கி எழும்
அலையைப் பார்த்து
கையால் கும்பிட்டேன்