
‘பில்லி சூன்யம், மந்திரம், மாயம் இதிலெல்லாம் என்னவோ பாட்டி எனக்கு நம்பிக்கையே வருவதில்லை’ என்றேன் நான்.
சுந்தாப் பாட்டிக்குக் கோபம் வந்தது. ‘பி.ஏ. படிச்சுவிட்ட யோல்லியோ, உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை வராதுதான்- வராதுதான்’ என்றாள்.
“பி.ஏ. படிச்சதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்”‘ என்றேன் நான்.
“முன்னெல்லாம் தங்களுக்குத் தெரியாத விஷயங்களை எல்லாம் தெரியாதுன்னு சொல்ல மனுஷ்யாளுக்குத் தைரியம் இருந்தது; ஒப்புக் கொண்டு விடுவார்கள். இப்போ ஒரு விஷயமும் தெரியறது இல்லை-ஆனால் எல்லாம் தெரிஞ்சுவிட்டமாதிரிதான் பேச்செல்லாம்” என்றாள் சுந்தாப்பாட்டி.
‘”அப்படியானால், இந்த மந்திரம் மாயம் என்கிறதெல்லாம் உண்மைதான் என்கிறாயா நீ?” என்றேன் நான்.
“உண்மை எது? எது உண்மையில்லை என்று வீணாக விவாதம் எதற்கு? பேசிப் பேசி முடிக்க இது அன்றாடம் தோன்றி, அன்றாடம் மறைந்து விடுகிற அரசியல் காரியம் அல் ஏதோ நமக்குத் தெரியாத-நமக்குப் புரியாத-ஒரு உண்மை எங்கேயோ இருக்கிறது. ‘இதுதான் நிஜம்” என்றாள் சுந்தாப்பாட்டி.
“அப்படியானால் உண்மை நமக்குத் தெரியாமல் எங்கேயோ எப்படியோ இருந்துவிடலாம் என்பதற்காக, எது காதில் விழுந்தாலும் ஒப்புக் கொண்டுவிடலாம் என்று சொல்கிறாயா நீ?’ என்றேன் நான்.
“பாட்டி கதை சொல்லுவாள்; பேரன் கேட்பார், ராத்திரி வேளையிலே எனக்குப் பயமாக இருக்கும், நான் போய்ப் படுத்துக்கப் போறேன் மாடிக்கு” என்று கிளம்பினாள் ராஜி.
“‘பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்” என்று முணுமுணுத்துக் கொண்டே மாடிக்குப் போய்விட்டாள் ராஜி.
“சரி. பேரன் ஆம்படையாள் கூடப் போய்ட்டாள். கதையைச் சொல்லு பாட்டி’ என்றேன் நான்.
கதை சொல்ல என்றைக்குமே சுந்தாப்பாட்டிக்கு பிரியம்தான். “என்ன கதையடா’ இருந்தாலும் கிராக்கி பண்ணிக்கொண்டாள்.
சொல்ல இப்ப? கதை சொல்றதாமே கதை” என்றாள்.
‘கிடக்கு, சொல்லு பாட்டி. மந்திரம் மாயம் இந்த மாதிரி; நீ நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டதைச் சொல்லு பார்க்கலாம்’ என்றேன்.
‘நான் சொன்னால் நீ என்ன நம்பிவிடப் போறாயா? ஏதோ அசட்டுக் கிழம் சொல்றதுன்னு உன் தோஸ்துகளோடே போய்க் கேலி பண்ணப் போறே!’ என்றாள் சுந்தாப்பாட்டி.
‘நீ சொல்றதை நான் கேலி பண்றதா? எப்பவுமே பண்ணின நில்லையே’ என்றேன் நான்.
‘கேளு’ என்றாள் சுந்தாப்பாட்டி. ‘இது என் கண் முன்னாலேயே நடந்தது; நான் நேரிலே பார்த்தேன். அதனால் இதைப் பூராவும் நம்பலாம்?’ என்றாள் பாட்டி.
‘சொல்லு.’
‘முன்னெல்லாம் ராஜயோகி, ராஜயோகின்னு ஒருத்தர் நம்மாத்துக்கு வருவார் வானப்பிரஸ்தர்; உங்கப்பா அவரைத் தன்னுடைய குரு என்று சொல்லுவான்.’
எனக்குக்கூட ஞாபகம் இருந்தது. ஆமாம். தாடி வளர்த்திண்டிருப்பார். ஓயாமல் சளசளவென்று பேசிக் கொண்டிருப் பார். நவராத்திரி சமயத்தில் வீட்டிலே இரண்டொருதரம் வந்து பூஜை செய்திருக்கிறார்.
‘அவரை எனக்குக் கூட ஞாபகம் இருக்கிறதே!’ என்றேன்.
‘அவர்தான். உங்கப்பா விஜயபுரத்தில் வேலையாயிருந்து லீவு எடுத்துக்கொண்டு அக்கிரஹாரத்தில் வந்தபோது நடந்தது இது. நானே நேரில் பார்த்தேன்’ என்றாள் சுந்தாப்பாட்டி.
‘அப்போத்தான்…’
‘நீ கோயமுத்தூரில் படிச்சிண்டிருந்தே; சொல்றேன் கேளு.’
சுந்தாப்பாட்டி சொன்னாள்:
‘ராஜயோகியார் பாம்பு கடிக்கென்று ஒரு மருந்து கொடுத்திருந் தார். உங்கப்பா அதை கேட்பவர்களுக்குக் கொடுப்பான். பாம்பு ஆனால், சுற்றுவட்டத்தில் கடிக்கு மந்திரம் மருந்து இரண்டும் உபயோகமாகும். சில சமயம் பலிக்கும்; சில சமயம் பலிக்காது. எங்கேயாவது பாம்பு கடி என்றால் உடனேயே உங்கப்பா ஆபீஸுக்குக் கொணர்ந்துவிடுவார்கள்.
உங்கப்பா லீவிலிருந்த சமயம் என்று சொன்னேனில்லையா. அக்கிரஹாரத்தில் மேலண்டைக் கோடி வீட்டை வாடகைக்கு லீவில் எடுத்துக் கொண்டிருந்தான். பொழுதுபோக வேண்டுமே; பேராக . சீட்டாடுவதுதான் காரியம்; ஆறேழு உட்கார்ந்து ‘ஹோவென்று தெருவெல்லாம் கேட்கும்படியாக இரைந்து கொண்டு சீட்டாடுவார்கள். மத்தியானம் சாப்பிட்டுவிட்டுச் சீட்டாட உட்கார்ந்து . விட்டார்களானால் விளக்கேற்றி வைக்கும் வரையில் அவர்களுடைய லயம் கலையாது. சீட்டாட்டத்தின் மத்தியில் காப்பி சாப்பிட்டது காபி சாப்பிடாததுகூடத் தெரியாது.
இப்படி ஒரு சமயம், அன்று ராஜயோகியும் வந்திருந்தார். அவரும் சீட்டாட்டத்தில் கலந்து கொண்டார். அவருக்கு இங்கிலீஷ், தமிழ், ஹிந்தி எந்த மொழியிலுமே பயிற்சி குறைவு. ஆனால் எந்தப் பாஷையையும் வெகு உத்ஸாகமாகப் பேசுவார். குரல் பெரிசு;
எப்பவுமே உரக்கத்தான் பேசுவார்; வீடு கலகலவென்றிருக்கும். சீட்டாட்டம் அன்று வழக்கத்தைவிட அதிக உத்ஸாகத்துடனேயே நடந்து கொண்டிருந்தது.
சாயங்காலம் மணி மூன்று இருக்கும்; மூணரையும் இருக்கலாம். அந்தச் சமயம் உன் அப்பாவைத் தேடிக்கொண்டு ஆபீஸுக்குப் போய்விட்டு, அங்கு விசாரித்துக் கொண்டு அக்கிரஹாரத்துக்கு ஹரிஜனங்கள் பத்துப்பேர் வந்துவிட்டார்கள். அவர்களில் ஒருவனை அதிகாலையில் பாம்பு தீண்டி விட்டது. இரண்டு மணிக்குமேல்தான் விஷயம் அவர்களுக்கே தெரியும். அதற்குப் பிறகுதான் விசாரித்து விஜயபுரம் வந்திருந்தார்கள். பாம்பு கடித்து மூர்ச்சையாகி இருந்தவனையும் உடன் கொண்டு வந்திருந்தார்கள். அக்கிரஹாரத்துத் திருப்பத்தில் அவனைக் கிடத்திவிட்டு, ‘சாமி! சாமி!’ என்று கூக்குரல் கொடுத்தார்கள்.
கவனித்தானோ கவனிக்கவில்லையோ. உன் அப்பா பேசாதிருந்துவிட்டான். தவிரவும் தனது குருவே உடன் இருக்கும் போது தான் எதுவும் செய்யக்கூடாது என்கிற ஞாபகமாகவும் இருக்கலாம்.
ஆனால் அந்த குரு, ‘பிடி எல்லாத்தையும்’ என்று பிடி ஆட்டத்தில் இருந்தாரே தவிர, வேறு எதையும் கவனிக்கிறமாதிரி இல்லை. பாம்பு கடித்தவனைத் தூக்கி வந்தவர்களும் கூக்குரல் கொடுப்பதை நிறுத்தவில்லை. மூர்ச்சை போட்டிருந்தவனை- அவன் உடலெல்லாம் லேசாக நீலம் பாய்ந்திருந்தது-முன்னால் கிடத்திவிட்டு, “சாமி! சாமி!” என்று குரல் கொடுத்தபடியே ஆண் பெண் இரு பாலரும் பத்துப்பேர் பின்னால் அர்த்த சந்திர வளையமாக நின்றார்கள். அவர்களுடைய கூக்குரல் அக்கிரஹாரம் பூராவையும் கூட்டிவிட்டது.
பதினைந்து இருபது நிமிஷங்களுக்குப் பிறகுதான் ராஜயோகியார் நிமிர்ந்து அந்தப் பக்கம் பார்த்தார். “என்னடா அது அங்கே சப்தம்?” என்று அதட்டலாகக் கேட்டார். உடனேயே கூக்குரல் அடங்கிவிட்டது. அவர் குரலிலே எப்பவுமே ஒரு கம்பீரம் உண்டு. அந்தக் கம்பீர்யம் அவர் அதட்டுகிற சமயங்களில் ஒரு விசேஷ பாவத்துடன் இருக்கும். சாதாரணமாக யாரும் அவருக்கு அந்த மாதிரி சமயங்களில் பதில் சொல்ல அஞ்சுவார்கள்.
கூக்குரல் அடங்கியதும் அங்கு வந்திருந்த ஹரிஜனங்களில் ஒருவன், கிழவன் சொன்னான். ‘பாம்பு கடிச்சுடுச்சுங்க… நீங்கதான் காப்பாத்தணுங்க’ என்று.
ராஜயோகியார் அவன் கூறியதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அடுத்த பிடியாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். பத்து நிமிஷ நிசப்தத்துக்குப் பிறகு மீண்டும் அந்த ஹரிஜனங்களின் கூக்குரல் அங்குக் கேட்கத் தொடங்கிவிட்டது.
ராஜயோகியார் சீட்டாட்டத்தில் ஏமாந்துவிட்டார். நாலு சீட்டுப்பிடி ஒன்று அவர் கையில் மடங்கிவிட்டது. அந்தக் கோபம் வேறு சேர்ந்து கொள்ள கூக்குரல் போட்டவர்களைப் பார்த்து, இங்கென்னடா! கூச்சல்-போங்கடா போங்கடா!” என்றார்.
“நீங்க இப்படிச் சொன்னால்…” என்று முணுமுணுத்தான் ஹரிஜனக் கிழவன்.
“பாம்புமாச்சு கடியுமாச்சு, போங்கடா போங்க” என்றார் ராஜயோகியார்.
மறுபடியும் ஒரு ஐந்து நிமிஷம் அங்கு நிசப்தம் நிலவியது. மறுபடியும் நம்பிக்கை இழந்தவர்களாக, பாம்பு கடித்துக் கிடந்தவனைக் கொண்டு வந்தவர்கள் கூக்குரலிட்டார்கள்.
இந்தத் தடவை ராஜயோகியின் கையில் பெரிய பிடியாகச் சேர்ந்துவிட்டது. ஆட்டத்தில் கோட்டைவிட்டு விட்ட கோபத்துடன் திரும்பிக் கத்தினார் ராஜயோகி “போங்கடா! போங்கடா! ஏண்டா இங்கே வந்து கூச்சல் போடுறீங்க” என்றார்.
கடைசியாக அவர் போட்ட “போங்கடா!” கூச்சலில் பயந்தவர் களாகப் பாம்பு கடித்தவனைக் கொண்டு வந்தவர்கள் பத்துப் பேரும் மூர்ச்சை போட்டுக் கிடந்தவனை அங்கேயே விட்டுவிட்டுப் பின்னடைந்தார்கள். ‘என்ன நடக்குமோ, ஏதாவது நடக்க வேண்டுமே’ என்று பிரார்த்தித்தவர்களாகச் சந்தடி செய்யாமல் நின்றார்கள்.
மறுபடியும் சீட்டாட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் . வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அலுத்துப் போய் வீடு திரும்பினார்கள் ஒவ்வொருவராக. நான் ரேழியில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன்.
தூரத்திலிருந்தபடியே அந்த ஹரிஜனக் கிழவன்-அவன் உண்மையிலேயே தைரியஸ்தன்தான் – மீண்டும் ஒருதரம் “சாமி” என்று குரல் கொடுத்தான்.
ராஜயோகியாருக்குப் பிரமாதமாகக் கோபம் வந்துவிட்டது. “என்னடா நான் சொல்றேன். சாமி சாமின்னு… போடா போ…’ என்றார் உரத்த குரலில்.
ஒரு நிமிஷம் திரும்பிப் பார்த்தார். அக்கிரஹாரத்துக் கோடியில் புழுதியில் கிடந்த உருவம் தெரிந்தது. இன்னும் கோபமாகவே சொன்னார், ‘சொல்றேன், சொல்றேன் கேட்காமே படுத்திருக்கயா? எழுந்திருடா! போ! போ!” என்றார்.
ஆழ்ந்த தூக்கத்திலிருப்பவன் சட்டென்று ஏதாவது சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு எழுந்திருப்பதுபோல, பாம்பு கடித்து நீலம் பாய்ந்து மூர்ச்சை போட்டுப் புழுதியில் கிடந்தவன், எழுந்தான். தலையை ஒருதரம் ஆட்டிக்கொண்டு கண்களில் ஒரு பிறகு தன்னுடன் பிரமையுடன் நாலு பக்கமும் பார்த்தான். வந்தவர்களை நோக்கி முதலில் தடுமாற்றத்துடனும் பிறகு சாதாரணமாகவும் நடந்தான். நடந்து போய்விட்டான்.
“போய்ட்டானா?” என்று முணுமுணுத்துக் கொண்டே ராஜயோகி மீண்டும் சீட்டாட்டத்தில் இறங்கிவிட்டார்.
“அவ்வளவுதான் கதை. இதை நேரிலேயே நான் பார்த்தேன். இல்லாவிட்டால் நான்கூட, யாராவது சொன்னால் நம்பியிருக்க மாட்டேன்” என்றாள் சுந்தாப்பாட்டி.
என்ன சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் இருந்தேன். நான் பிறகு சொன்னேன்: “அப்பொழுதெல்லாம் நான் ரொம்பச் சின்னவன், இல்லாவிட்டால் ராஜயோகியையே நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பேன்” என்று.
“என்னத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பாய்? தன் சக்தியின் காரண காரியம் எதுவுமே அவருக்குக்கூடத் தெரியுமோ என்கிறது சந்தேகம்தானே!” என்றாள் பாட்டி.
“அப்படியா? இருந்தாலும்….”
“நீயும் கேட்பாய்-அவரும் சொல்லுவார்! இதிலெல்லாம் கேட்கவோ, சொல்லவோ ஒன்றும் கிடையாது” என்றாள் சுந்தாப் பாட்டி, தீர்மானமாக.
‘அது சரி! இப்ப சொன்னயே அது மந்திரமா, மாயமா, தந்திரமா? என்ன?” என்று கேட்டேன் நான்.
“மந்திரமோ மாயமோ எனக்குத் தெரியாது. அது நடந்ததென்னவோ உண்மை. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்!’ என்றாள் சுந்தாப்பாட்டி.
க.நா.சு. /தகப்பனும் பிள்ளையும் – விருட்சம் நாளிதழ்
1966
