க.நா.சு/ராஜா தேசிங்கு

குளக்கரையில் இருக்கும் ஜட்கா வண்டி ஸ்டாண்டில் தன் வண்டியை நிறுத்திவிட்டு, எதிரிலிருந்த பஸ்ஸ்டாண்டில்தான் அவன் வழக்கமாக நின்றிருப்பான். இடுப்பில் அழுக்கேறிய பச்சையும் சிவப்புமான ஒரு கைலி; பச்சைக் கலர் அரைக்கைச் சட்டைச் எண்ணெய் படாத கிராப்புத் தலை; காதில் ஒரு பீடி; கையில் ஒரு பீடி – இதுவே சாதாரணமாக அவன் தோற்றம். அவன் நடையிலும் பேச்சிலும் மட்டும் ஒரு கம்பீரம் இருந்தது. அவனுடைய பெயர் எனக்கு தெரியாது. என் மனசில் நான் அவனுக்கிட்டிருந்த பெயர்தான் ராஜா தேசிங்கு.
நான் என் பொழுதில் பாதியை அந்தப் பஸ்ஸ்டாண்டிலேயே கழிப்பவன். எனக்கு எங்கும் போகிற உத்தேசம் இராது; வீட்டை விட்டு வெளியேற மட்டும் ஆசையாக இருக்கும்; கிளம்பி விடுவேன்; பஸ் ஸ்டாண்டில் பிறர் படுகிற அவஸ்தைக் முதலியவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்குவேன்.
“சாமி! எங்கே போகணும்” என்று விசாரித்தான் ராஜா தேசிங்கு.
“சும்மா நிற்கிறேன். எங்கும் போக வேண்டாம்.”
“சந்தோஷமுங்க; பட்டணத்திலே எங்கேயும் போக அவசரப் படாதவங்களைப் பார்க்கறதே அபுரூவமிங்க.’
ஜட்கா வண்டிக்காரன்தான் என்றாலும் கெட்டிக்காரன்தான் என்று தீர்மானித்துக்கொண்டேன். சமயம் நேரும்போது அவனுடன் பேசுவேன். அவனும் என்னைப் போலவேதான். எங்கும் போக எவ்வித அவசரமும் இல்லாதவன்; நின்று பேசுவான். நன்றாகவே பேசுவான். உலகத்து விஷயங்கள் எல்லாம் தெரிந்தவன்போல ஓர் அலட்சியத்துடனும், ஒரு விசால மனப்பான்மையுடனும் பேசுவான் அவனுக்கு வேதாந்தம் வந்தது. அவன் பேச்சிலே சில சமயம்
கவிதை தொனித்தது. சில சமயம் அற்புதமாக எல்லோரையும் கிண்டல் செய்து பேசுவான். பெரிய பெரிய ஆசிரியர்களின் எழுத்துக்களைவிட அவன் பேச்சில் உயிர் இருப்பதுமாதிரி எனக்குத் தோன்றியது.
ஒரு நாள் வழக்கம்போல் பஸ் ஸ்டாண்டில் நான் நின்று கொண்டிருக்கும்போது ராஜா தேசிங்கு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான். வண்டியும் குதிரையும் சாதாரணமாக, பட்டணத்து வண்டி குதிரைமாதிரி இல்லை. ரொம்பவும் சுத்தமாக இருந்தது. குதிரை, ரேஸ் குதிரை மாதிரி கவனிப்புப் பெற்றிருந்தது.
‘ஏறுங்க சாமி. மவுண்டுரோடு போகலாம்.”
”மவுண்டு ரோடிலே வேலை இல்லையே!” என்றேன்.
‘இங்கே மாத்திரம் என்னாங்க வேலை? போவலாம் வாங்க. காசு இஸ்டமிருந்தா நாலணாக் கொடுங்கோ. இல்லாட்டி அதுவும் வேணாம்” என்றான்.
“குதிரையும், வண்டியும் நன்றாக வைத்திருக்கிறாயே!” என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறினேன்.
குதிரையை “ஹே! ஹே!” என்று ஓட்டிவிட்டு ஒரு விநாடி சும்மா இருந்தான் ராஜா தேசிங்கு. பிறகு சொன்னான். “நேத்து ராவிலே ஒரு விஷயம் நடந்து போச்சுங்க. முதல்லே அதை உங்சுகிட்டக்கூட நான் சொல்றதா இல்லேங்க. ஆனால் என் குதிரையும் வண்டியும் நன்னாருக்கு இங்கிறீங்களே; உங்ககிட்டே சொல்றேன்” என்றான்.
‘பீடிகை பலமாயிருக்கே; சொல்லு.’
ராஜா தேசிங்கு சொன்னான்:
“நேற்றிரவு நடந்தது இது. மணி பன்னிரண்டு அடித்து து என்று நினைக்கிறேன். நான் வழக்கம் போலவே குளக்கரை ஸ்டாண்டில் வண்டியை நிறுத்திவிட்டு வண்டியிலே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ மூன்று பேர் வந்து எழுப்பினார்கள். டவுனுக்குப் போக வேண்டும் என்றார்கள். இரண்டரை ரூபாய் கூலி கேட்டேன். பேரம் பேசாமல் ஏறிக் காண்டார்கள். அடடா! கூடக் கேட்காமல் இருந்து விட்டோமே என்று எண்ணிக்கொண்டே கிளம்பினேன்.
சூளையில் ஒரு குறுகிய சந்திலேயே வண்டியைத் திருப்பச் சொன்னார்கள். எனக்கு ஏதோ சந்தேகம் தட்டியது. ஆட்சேபித்தேன். என் ஆட்சேபங்களுக்கு அவர்கள் செவி சாய்க்கவேயில்லை. வேறு என்ன செய்வது? அவர்கள் காட்டிய சந்தில் திருப்பினேன். ஒரு பெரிய காடிகானாக் கதவண்டை நிறுத்தச் சொன்னார்கள், நிறுத்தினேன். மூவரும் இறங்கிக் கொண்டார்கள்; கூலியை வாங்கிக் கொள்ள நானும் இறங்கினேன்.
மூவரில் தலைவனாகக் மூவரும் ஒரு நொடியில் என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள் தப்ப வழி இல்லாமல். காணப்பட்டவன் சொன்னான் “இதோ பார்! பயப்படாதே! உனக்கு நல்லதுதான் நேரப்போகிறது…
“எனக்கு நல்லது நேரப் போகிறதோ இல்லையோ! உனக்கு நல்லது அல்லாததுதான் நேரப் போகிறது!” என்று சொல்லிக் கொண்டே அவன் முகத்தை நோக்கி ஓங்கி ஒரு குத்துவிட்டேன்.
என் கை ஏதோ ரப்பர்ப்பந்தில் பட்டமாதிரி இருந்தது. நாள் எதிர் பார்த்தபடி என் குத்தால் அவன் முகத்தில் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. ஒரு நிமிஷம்தான் தடுமாறிப் போனேன், சமாளித்துக் கொள்வதற்குள் மூவரும் சேர்ந்து என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டார்கள். அவர்கள் பிடியிலிருந்து தப்பவே வழி தெரியவில்லை எனக்கு. தலைவனாகத் தோன்றிவன் சொன்னான். “சிரமப்படுத்திக் கொள்ளாமல் வா, தம்பி” என்றான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. தப்பித்துக் கொண்டு ஓட வழியில்லை என்று கண்டதும் நான் கெஞ்சினேன்.
“அண்ணன் மார்களே! உங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. எங்கிட்ட என் குழந்தை குட்டி புள்ளே வைப்பு: காசு பணம் கிடையாது. உசிரு, ஆஸ்தி எல்லாம் இந்தக் குதிரையும் இந்த வண்டியும்தான் இதை வச்சுத்தான் ஏதோ நல்ல வழியிலே காலந் தள்ளிக்கிட்டு வரேன். நீங்க கூலிகீலி கொடுக்க வாண்டாமுங்க; வுட்டுடுங்க ஓடிப்போறேன்…” என்று கெஞ்சினேன்.
தலைவன் சொன்னான்: “உன்னை ஒருத்தரும் கஸ்டப்படுத்த மாட்டாங்க. நீ சும்மா பயப்படாமே வா, என்னோடே; உனக்கு லாபம்தான் காத்திருக்கு” என்றான்.
பேச்சுப் பேசுவானேன் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே அவர்களைப் பின் தொடர்ந்தேன்.
உள்ளே ஒரு விசாலமான கூடத்தில் நூற்றுக்கணக்கில் தீவட்டிகள் எரிந்து கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஒழுங்காக வரிசை வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். பயப்பிராந்தியோ அல்லது உண்மையிலேயே அப்படித்தானோ எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவருக்காவது முகம் தெளிவாக, மனிதர் முகம்மாதிரி தெரிய வில்லை. வெளிச்சம் என்னவோ நிறையத்தான் இருந்தது. எல்லோரையும்விடச் சற்று உயர்ந்த ஆசனத்தில் உட்கார்ந் திருந்த ஒருவன் முன் என்னைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
‘இந்தச் சபை நேற்றுக் கூடிய போது தீர்மானித்து, நாம் என்று சபைத் தலைவர் தேர்ந்தெடுத்த மனிதன் இவன்தானா? ‘ சபையோரை நோக்கி என்னைச் சுட்டிக்கேட்டார்.
‘ஆமாம்” என்று ஏககாலத்தில் பல குரல்கள் கூறின.
என் கால்களும் அவர்களுடைய குரல்கள் எங்கேயோ தூரத்திலிருந்து ஆழத்திலிருந்து ஒலிப்பது போல ஒலித்தன. கைகளும் வெடவெடவென்று நடுங்கின. என் பற்கள் தந்தி பேசின. எப்படி நான் நிமிர்ந்து நின்றேன் என்று எனக்குத் தெரியவில்லை.
சபைத் தலைவர் சபையை நோக்கிக் கூறினார். “குதிரைகளின் அன்பர்களே! இன்று குதிரைகளைப் பற்றிக் கவனிப்பவர்களேஇல்லாமல் போய்விட்டது. அதுவும் சென்னை ஜட்கா வண்டிக் குதிரை என்றால் மகாக்கேவலம் என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டது. இந்தக் கெட்ட பெயரிலிருந்து நம்மைக் காப்பாற்றத் தன்னாலானதைச் செய்து வருபவன் இதோ நம் முன் நிற்பவன். இவனுக்கு 1950ல் நமது குதிரை மெடலைத் தருவது என்று நாம் ஏகமனதாகத் தீர்மானித்தோம்….”
கூரையே தலைமேல் விழுந்து விடுமோ என்று பயப்படுகிற மாதிரி கை தட்டினார்கள் அங்குக்கூடியிருந்தவர்கள்.
எனக்குக் கொஞ்சம் தைரியம் பிறந்தது. நிமிர்ந்து நிமிர்ந்து கண்களைச் சபையில் நாலுபக்கமும் ஓட்டிப் பார்த்தேன்.
சபைத் தலைவர் சொன்னார்: “சாப்ஜானுக்கு நம்மையோ நம் குதிரை அன்பர்கள் சபையையோ பற்றித் தெரிய நியாயமில்லை. சென்னைப் பட்டணம் தோன்றிய நாள் முதல், அதாவது 1640 முதல் இந்த 310 வருஷங்களாகச் சென்னையில் ஜட்கா வண்டிகள் இருந்து வந்திருக்கின்றன. இந்த 310 வருஷங்களாகச் சென்னையில் ஜட்கா ஓட்டி, வண்டிகளையும் குதிரைகளையும் நன்றாக வைத்துக் கொண்டிருந்தது பெயரும் புகழும் பெற்ற ஜட்காவாலாக்கள் எல்லோரும் இங்குக் கூடியிருக்கிறார்கள். சாப்ஜான் என்று பெயருடையவர்கள் இங்கு நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களிடையே 1950ஆம் வருஷத்திலே சாப்ஜானை வரவேற்கிறோம். இச்சபை வருஷத்தில் இருமுறைகூடும். முதல் தடவை
யாருக்கு இந்த மெடலைத் தருவது என்று தீர விசாரித்துத் தீர்மானிப்போம். ரண்டாவது தடவை மெடலை அளிக்கக் கூடுவோம். அந்தக் குதிரை மெடலைப் பெற்றுக் கொள்ளத்தான் நீ இங்கு இன்று கொண்டுவரப்பட்டாய்….”
சென்னைப் பட்டணத்தின் 310 வருஷத்து ஜட்கா வண்டிக் காரர்களா? அப்படியானால் அங்கிருந்தவர்கள் மனிதர்கள் அல்லவா? ஆ!…. எனக்கு மீண்டும் நடுக்கல் எடுக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நடுக்கலும் பயமும், அந்தக் குதிரை அன்பர்களின் சபைத் தலைவர் என் சட்டையில் மெடலை மாட்டக் கையை நீட்டிய போது அதிகரித்தன.
அவர் கை ஒரே எலும்பாக இருந்தது. கையில் தசையோ ரத்தமோ, தோலோ இருந்த மாதிரியே தெரியவில்லை.
நான் மூர்ச்சையாகி விழுந்து விட்டேன்.
நான் மறுபடியும் கண் விழித்தபோது சூளை மெயின் ரோட்டில் என் வண்டியில் இருந்தேன்.
ராஜா தேசிங்கு தன் கதையை முடித்து விட்டு என்னைத் திரும்பிப் பார்த்தான்.
“மவுண்ட் ரோடு வந்து விட்டது” என்றேன்;
‘நான் சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கை விழவில்லை, இல்லையா?” என்றான் ராஜா தேசிங்கு.
“குளக்கரையில் காற்று ஜிலுஜிலு வென்று அடிக்கிறது. சுகமான கனவுகள் காண நல்ல இடம் அது” என்றேன் நான்.
“அப்படியா நினைக்கிறீர்கள்?
“கனவானால் எப்படி நான் கண் விழித்தபோது வண்டி சூளை மெயின் ரோட்டில் நின்றது?”
‘குதிரைகள் தாமாகவே சில சமயம் நடந்த தெருவோடு போய் விடுவது உண்டு இல்லையா? உன் தூக்கம் சூளை போய்க் கலைந்திருக்கும்.”
‘அதுவும் சரி, அப்படியானால் இந்த மெடல்….?”
அவன் எடுத்துக் காட்டிய மெடலைக் கையில் வாங்கிப் அரைப் பார்த்தேன். தங்க மெடல் மாதிரிதான் இருந்தது. பவுனாவது இருக்கும். இரண்டு பக்கங்களிலும் குதிரைத் தலை போட்டிருந்தது. 1950 என்று வருஷம் எழுதியிருந்தது. வேறு ஒன்றும் எழுத்துக் காணவில்லை.
சாப்ஜான், என் ராஜா தேசிங்கு, சொன்னான்: “முதலில் நானும் உங்களைப் போலவே எல்லாம் கனவு என்றுதான் நினைத்தேன். என் சட்டையில் இந்த மெடல் குத்தியிருந்ததைப் பார்த்த பிறகுதான் எனக்கே நம்பிக்கை பிறந்தது.
நான் பதில் என்ன சொல்வது என்று யோசிக்குமுன் “இங்கே இறங்கிக் கொள்கிறீர்களா?” என்றான் ராஜா தேசிங்கு.
மெடலை அவனிடம் கொடுத்துவிட்டு இறங்கினேன்.
1966

க.நா.சு./ சிரஞ்சீவி – விருட்சம் நாளிதழ்