
ஒரு அமெச்சூர் பறவையியலாளனான (ornithologist) எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஆங்கில இந்து செய்தித்தாளில் முதல்பக்கத்தில் Great Indian Bustards (GIBs) பறவைகள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டனவா என்ற தலைப்புடன் வந்திருந்த செய்தி கவர்ந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த சையது ரிஸ்வான் மெஹ்பூப் கிப்ஸ் பறவைகளை பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் பிராந்தியத்தில் படம் பிடித்து புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டதைத் தொடர்ந்து அவை பாகிஸ்தானுக்குப் போய்விட்டனவா என்ற கேள்வியுடன் செய்தி வெளியாகியிருந்தது. கிப்ஸ் பறவைகள் அழிந்து வரும் பாலைவனப் பறவைகள்; இந்திய பாலைவன சரணாலயத்தில் 150 மட்டுமே இருக்கின்றன. இந்திய பறவைகள் பாதுகாப்பாளர்கள் ராஜஸ்தான் ஜய்ஸல்மேர் பகுதியை ஒட்டிய ராஜஸ்தான் பாலைவனத்தில் கிப்ஸ் பறவைகளின் ஐந்து முட்டைகளைக் கண்டெடுத்து அவற்றை அடைகாத்து குஞ்சு பொறிக்கச் செய்தார்கள் அந்த ஐந்து குஞ்சுகளும் இந்திய பறவை பாதுகாப்பாளர்களின் மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. இப்போது அப்படி எங்கே பாகிஸ்தானுக்குப் போய்விட்டன இந்த கிப்ஸ் பறவைகள் என்று பார்த்தால் ராஜஸ்தான் பாலைவனத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு நீட்சிக்கு அவை சென்றிருக்கின்றன. பறவைகள் அறியுமா தேச எல்லைகளை?
கிப்ஸ் பறவைகள் எடை மிகுந்தவை நீண்ட கால்களை உடையவை அவற்றின் இறைச்சி சுவை மிகுந்தது என்பதால் வேட்டையாடப்படுகின்றன. அவற்றை வேட்டை விளையாட்டுக்களுக்காகவும் கொல்கிறார்கள். அரேபிய ஷேக்குகள் கிப்ஸ் வேட்டைக்காகவே வருவார்கள் என்று நான் ஜய்சல்மேர் சென்றபோது கேட்டிருக்கிறேன். கிப்ஸ் ஆண் பறவைகள் காதல் வயப்படும்போது தங்களின் நீண்ட கால்களால் மிக அழகாக நடனமாடும். அப்படி ஆடுகின்ற பறவைகளை மனிதர்கள் விட்டு வைப்பார்களா?
