
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
மீண்ட உடல்கள் துயரைப் பெருக்கும்
பிழைத்தோரும் செத்தோரும் செய்தது என்ன
ஆண்டவா தண்டிக்கணும் உன்னை.
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
துவண்டு போயினர் மீட்புக் குழுவும்
வயநாடு வயமிழந்து வாழ்வற்றுப் போனது.
இழந்தோர்க்கு எது வாழ்வு?
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
குழந்தைகள் முதியோர் குடும்பமும் புதைந்தனர்
காக்கும் கடவுள் கொல்லுமா கூற்றுவனா
வாழக் கேட்டால் மரணமா?
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
என்ன கனவுகள் கண்டு படுத்திருப்பார்
கனவின் பலன் கலையாமல் கொலையா
கடவுள் செத்தே கல்லானது.
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
இருக்கும் உயிருள் சடலங்கள் புதையும்
இனிவரும் நாளெல்லாம் நரகத்தின் நாற்றம்
கடவுளைப் புதையுங்கள் எல்லோரும்.
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
இருக்கும் உயிர்கள் நடைப் பிணங்கள்
மீட்பு துயரின் மருந்தல்ல ஆறுதல்
ஆறுதல் வாழ்வல்ல வதை.
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
பார்க்கப் பார்க்கப் பதறும் உயிர்
வயநாடு சுடுகாடு ஆனது வெள்ளத்தால்
கல்லறைகள் நடுவில் உயிர்ப்பு.
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
தெய்வங்கள் திசைகளில் பேய்கள் ஆகட்டும்
காக்கும் கடவுள் கல்லறை புதைந்ததா
கடவுளின் பொருள் புதைகுழி.
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
இரவும் பகலும் இருளே இருக்கும்
இழப்பில் இதயங்கள் துடித்துச் சுருங்கும்
வயநாடு மீளும் மீளும்.
தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்
நீயிருந்தால் வந்துவிடு கடவுளே வயநாட்டிற்கு
என்ன காரணம் சொல்வாய் கொடுமைக்கு
கண்ணீர்விடு அவர்கள் வாழட்டும்.
