
மலைகளுக்கு கால்கள் உண்டு
என
அறிவித்திருக்கிறது மழை
அதற்கு கண்கள் இல்லை என்பதை
குவிந்துகிடக்கும்
உயிர்சடலனங்கள் மீது
எழுதியிருக்கிறது
நெடுநாள் பசிகொண்ட
அரக்கனைப்போல்
மனித உயிர்களை
அள்ளி விழுங்கி இருக்கிறது
அந்த மலை
கதைகளிலும்
கற்பனையிலும்
கண்டிராத
மலை விழுதல்
மழையாலா?
மனிதர்களாலா?
பட்டிமன்றங்கள்
நடந்தேறிக்கொண்டிருக்கிறது
இங்கு
மலையும்,மழையும்,
சேர்ந்து
வயநாட்டு மக்களுக்கு
வாக்கரிசி இட்டுயிருக்கிறது
மீட்பு பணிகள்
துரிதமாய் இயங்கினாலும்
அதை விட
துரிதமாய்
உயிர்களை
உரமாக்கி கொண்டிருக்கிறது
அந்த நிலம்
கருணை உள்ளம் கொண்டவர்களின்
கண்களிலும் மழை
காவுகொண்ட உயிர்களைக்
காணும்வேளையில்
நெஞ்சிலும் பார மலை
என்ன செய்வது?
இயற்கைக்கு முன்
அனைவரும் கையாலாகாதவர்கள்
என்பதை
ஒவ்வொருமுறையும்
மனசெவிட்டில் அறையும்படி
சொல்லிக்கொண்டேயிருக்கிறது
இயற்கை ஆர்வலர்கள்
தொண்டைக் கிழிய
உபதேசங்களை தந்த வண்ணம்
இருக்கின்றனர்
நாம் ஏனோ
இதுவும் கடந்துபோகும் வாக்கியத்தை
இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
நம் இறுதிச்சடங்கிற்கு
நாமே செல்லத்துணிந்துவிட்டோம்.
இயற்கையை கொஞ்சம் நேசி
என்பதை தவிர
வேறு என்ன சொல்லப் போகிறது
இக் கவிதை
