
மோமா குட்டி வந்தாள்
அவள் எனது மகளுடன்-
அவர்கள் வீட்டிற்கு வண்ணம்
பூசப்படுவதாலும்
குட்டிக்கு பெயிண்ட் வாச
ஒவ்வாமை இருப்பதாலும்
அவர்கள் வருவதற்கு முன்பே
என் மகள் சொல்படி
ஏக ஏற்பாடுகள்
என் வீட்டில் –
மோமோ குட்டியின் பாதுகாப்பு கருதி
அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டன
வேடிக்கை பார்த்துக் கொண்டே
மோமோ வெளியில் விழுந்து
விடுவாளோ என்று
வரவேற்பறை அலங்காரப் பொருட்கள்
அலமாரிகளில் தஞ்சம் புகுந்தன
அவர்கள் வந்து மூன்று நாட்கள் கழித்து தான்
என் மடியில் சற்று நேரம் அமர்ந்தாள்
மற்றபடி என் மகளின்
பின்னோடு தான் எந்நேரமும்
சமைக்கும் பொழுது கதவை உள்
தாழ்பாள் போட்டுக் கொண்டு
வியர்வை வழிய சமைத்தேன்
இல்லாவிட்டால்
சமையல் வாயு சிலிண்டர் அருகில்
சேட்டை செய்வாள்
இன்று சமையல் அறைக் கதவை
திறந்து வைத்துக் கொண்டு சமைக்கிறேன்
வரவேற்பறை அலங்காரப் பொருட்கள்
தத்தம் இடத்தில்
அனைத்து ஜன்னல்களும்
திறந்திருக்கின்றன
காற்றை வரவேற்றபடி
கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது
ஆனால் மனம் ஏங்குகிறது மோமோவின் “மியாவ்” ஒலிக்கு
