ஜெயம் பாட்டி பல வருடங்களாக காஞ்சி ஸ்ரீ மட விசுவாசி. நினைத்த நேரத்திற்கு பரமாச்சார்யாளை தரிசனம் செய்ய வந்து விடுவாள். பெரியவருக்கும் மடத்து கைங்கர்யக்காரர்களுக்கும் பரிச்சயமானவள் . ஸ்ரீ பெரியவரின் அருளைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவள்.
ஸ்ரீ மடம் பாலு ஒரு நாள் அவள் வாயைக் கிளறினார்.
"ஜெயம் . நீயும் வருஷக் கணக்கா பெரியவா தரிசனம் பண்ண வர்றே. என்ன பிரயோசனம்? நேத்திக்கு இன்னைக்கு வர்றவங்க எல்லாம் பெரியவா பாதுகையைக் கேட்டு வாங்கிண்டு போறா . உன்கிட்ட ஒரு ஜதையாவது இருக்கா?"
"இல்லை . ஆனா பெரியவா கிட்ட நாமா எதுவும் கேட்கக்கூடாதே . அவா சர்வேஸ்வரர் இல்லையா ? "
"அதெல்லாம் இருக்கட்டும். உன்கிட்ட ஒரு ஜதை கூட இப்ப இல்லை. பூஜைக்கு ஒரு ஜதை கொடுங்கோன்னு போய் கேளு . உனக்குக் கொடுக்காமயா இருப்பார்?"
ஜெயம் பாட்டிக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பெரியவர் முன்னாள் போய் நின்றாள் . பெரியவா அர்த்தபுஷ்டியுடன் பாலுவைப் பார்க்க (அந்தப் பார்வைக்கு அர்த்தமாவது :`பாட்டியைக் கிளப்பி விட்டுட்டே . பாதுகையையும் நீயே கொண்டு வா ') பாலு உள்ளே சென்று ஒரு ஜோடி பாதுகை கொணர்ந்தார் . பெரியவா அந்தப் பாதுகைகளைப் போட்டுக் கொண்டார் . ஆனால் ரொம்ப நேரம் கழட்டவே இல்லை .
பாலு ஜெயத்திடம் சென்று "பெரியவா பாதுகையைக் கழட்ட மாட்டேங்கறா . போய் நீயே கழட்டிக்கோ " என்றார். ஜெயம் அலறினாள்."ஐயோ முடியாது " . பாலு : "அப்ப பெரியவா முன்னால போய் நில்லு . இப்படியே இருந்தா என்ன அர்த்தம் ?" பாட்டி பெரியவர் முன்னால் நின்றாள். பெரியவர் சற்று பொறுத்து தன் கால்களைத் தூக்கினார் . பாடி பாதுகையைக் கழற்றி சற்று நேரம் அவற்றையே ஆராய்ந்தாள் .
பெரியவர் :"இடது கால் சின்னதாத்தான் இருக்கும். போ போ " பாட்டிக்கு இப்போது அர்த்தம் புரிந்தது . பின்னர் பாலு பாதுகைகளை ஆராய்ந்தபோது "அடேடே . அவசரத்தில் பாதுகை ஜோடி மாறிடுத்து போல இருக்கு . இருங்கோ சரியாய் ஜோடி தேடறேன்."
பாட்டி "மாமா . புரியலையா ? பெரியவா அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் . அம்பாள் பாதம் சின்னது. மட்டுமில்லை. வலது கட்டை விரல் பாருங்கோ . குமிழ் பெரிசா முரட்டுத் தனமா இருக்கு. இடது கட்டை விரல் குமிழ் நளினமா , சின்னதா, பெண்மையோட இருக்கு . சர்வேஸ்வரன். என் சர்வேஸ்வரன் பாதுகை அருளியிருக்கான் . அர்த்தநாரீஸ்வரர் பாதுகை. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்?" என்று மாய்ந்து போனாள் .