ஆறாவது மாடி!

ஜெ.பாஸ்கரன்

அந்த ஆறு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தனியாக – ஆமாம் நேற்றுவரை அப்படித்தான் – குடியிருக்கிறேன்! இரவென்றாலே, பேய், பிசாசுக் கதைகள், பாம்புக் கண்களோடு சீரியல் வில்லிகள் எல்லாம் நினைவில் வந்து மிரட்டும்!

இரண்டு நாட்களாய்த் தலையில் மிதிப்பதைப் போல் காலடிச் சத்தம், விட்டு விட்டு கேட்கிறது. ‘ராவுலெ இங்க பேய் நடமாட்டம் உண்டு’, கதை சொன்ன பக்கத்து வீட்டு வாட்ச்மேன் போன வாரம் இறந்து போனது நினைவுக்கு வர, ஜன்னல்களையும், கதவுகளையும் உட்பக்கம் தாளிட்டு, படுக்கையில் எனக்கு இடது பக்கம் ஒரு ஜோடி செருப்பையும், வலது பக்கம் துடைப்பத்தையும் வைத்து, அணைத்தாற்போல் படுத்துக் கொண்டேன். வித்தியாசமான புகையிலை மணம் வந்தது – மன பிராந்தியோ? பாட்டி சொன்ன ‘கொள்ளிவாய்க் கட்டைப் புகையிலைப் பிசாசு’ மொட்டை மாடியில் உலா வருதோ – பயத்தில் நெஞ்சு ‘திக்’ ‘திக்’ – அப்படியே தூங்கினேன்.

காலையில் என் வீட்டு வாட்ச்மேன் கிழவனும், ‘இருக்கும் தம்பி, சாக்கிரதையா கதவ சாத்திப் படுத்துக்க’ என்று பேய் முழி முழித்தான். அவன் கால்களில் கொசுக் கடியும், வாயில் அந்தப் புகையிலை மணமும் தெரிந்தது – ‘திருட்டு தம்’ கிழவனோ அது?

அவசரத்தில் கிழவன் கால்கள் தரையைத் தொடாமல் நின்றதைக் கவனிக்க வில்லை!

2 Comments on “ஆறாவது மாடி!”

  1. ஆகா… சுருக்கமாக (ஆவியோடு பழகியதை விவரிக்காமல்) முடித்து விட்டீர்களே .
    ஆறாவது மாடி 2 அடுத்த இதழில் வருமா?

Comments are closed.