கலீல் கிப்ரான்/முறிந்த சிறகுகள்

மொழி பெயர்ப்பு : தங்கேஸ்

                       அத்தியாயம் 4

       வெண்ணிறச் சுடரொளி

நிசான் மாதம் இன்னும் கடந்து விடவில்லை
நான் தொடர்ந்து பாரிஸ் எபாண்டியின்
தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தேன்

என் செல்மாவுடன் சந்திப்புகள் சந்திப்புகள்
அடடா
அவள் அழகை ஆராதித்துக்கொண்டிருந்தேன்
அவள் அறிவுக்கூர்மையை துதித்துக்கொண்டிருந்தேன்
துயரத்தின் நிசப்தத்தை காதிலேயே
கேட்டுக்கொண்டிருந்தேன்

அவளுடனான ஒவ்வொரு சந்திப்பும்
அவளது அழகுக்கு புதுப்புது அர்த்தத்தை
கொடுத்துக்கொண்டிருந்தது

அவளது இனிமையான ஆன்மாவுக்கு
உள்ளொளியை பாய்ச்சிக்கொண்டிருந்தது

அவள் எனக்கொரு புனித புத்தகமானாள்
அந்தப்புத்தகத்தின் பொருளை
நான் அறிந்து கொண்டிருந்தேன்

அந்தப்புத்தகத்தின் புகழை
நான் பாடிக்கொண்டேயிருந்தேன்
ஆனாலும் அதை முழுமையாக
வாசித்து முடித்துவிடவே
முடியவில்லை என்னால்

அவளது புனிதமே
அவளது மெய்யை (உடலை)
மெய்யாய் வழங்கியிருந்தது
ஆன்மாவை இனிமையாக்கி
பொழிந்து கொண்டிருந்தது.
பாதி திறந்தும் பாதி மறைத்தும்
வைக்கப்பட்டபுனித இரகசியம்

அவளை அன்பினால் மட்டுமே
அறிந்து கொள்ள முடியும்
கற்பினால் மட்டுமே தீண்ட முடியும்
வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது
வர்ணித்தாலோ நீராவி போல
மறைந்து போய்விடுவாள்.

செல்மா கராமி உடலழகும்
ஆன்ம அழகும்
ஒருங்கே கொண்ட பேரழகி
அவளை அறியாதவர்களிடம் அவளை
எவ்விதம் விவரிக்க?
இறந்து போன மனிதன் ஒருவன்
இனிமையான நைட்டிங்கேல் பறவையின் பாடலை
நினைவு கூர்வானா?

ரோஜாவின் இனிய சுகந்தத்தை சுவாசிப்பானா?

சிற்றோடையின் பெரு மூச்சுக்களைத்தான் கேட்பானா?

இல்லை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால்
அடைபட்டுக்கிடக்கும் கைதிதான்
அதிகாலைப் பனித்தென்றலை பின்தொடர்ந்து
செல்வானா?

அமைதி!
மரணத்தை விடவும் வேதனையானது
உன்னதத்தின் கர்வமே
வெறும் வெற்று வார்த்தைகளால் அவளை தீட்ட
வெறுக்கிறதா?
தெய்வீக வண்ணத்தில் அவளை தீட்ட முடியாமல்
என் தூரிகை தோல்வியடைந்து விட்டதா?

என்னவென்று சொல்வேன்
சொர்க்கத்திலிருந்து அமுதமே
தாரைவார்க்கப்பட்டாலொழிய
பாலைவனத்தில் பசியால்
அலைந்து கொண்டிருக்கும்
ஒரு மனிதன் காய்ந்த
ஒரு ரொட்டித்துண்டைக்கூட
மறுத்து விடுவானா என்ன ?

வெள்ளைப்பட்டாடையில்
சன்னல் வழி ஊடுருவிப்பாயும் மெல்லிய
நிலவொறி போலவே
செல்மா எங்கும் நிறைந்திருப்பாள்

அவளது நடையோ
தாளலயம் மாறாத நளினம்
அவளது குரலோ
மெல்லிய இனிமை

காலை காற்றின் கரங்கள் அசைக்க
மலரின் இதழ்களிலிருந்து உதிரும் பனித்துளிகள் போல
வார்த்தைகள் அவள் உதடுகளிலிருந்து
மென்மையாக உதிர்ந்தன.

ஆனால் செல்மாவின் முகம்
எந்த வார்த்தைகளால் தான் அதை
வர்ணித்து விட இயலும் ?
உள்ளார்ந்த துயரத்தை
ஒரு முறை பிரதிபலித்தால்
சொர்க்கத்தின் உற்சவத்தை
மறுமுறை பிரதிபலிக்கிறதே

செல்மாவின் அழகு செம்மையானதா
அது ஒரு இரகசிய கனவின்
அபூர்வ வெளிப்பாடு
அளவிடவே முடியாதது
கட்டுக்குள்ளே அடங்கவே அடங்காது
எந்த ஓவியனின் தூரிகையும்
அதைப்பிரதியெடுத்து விட இயலாது
எந்தச் சிற்பியின் சிற்றுளியும்
அதை சிற்பமாக்கி விட முடியாது

செல்மாவின் அழகு
அவளது பொன்னிறக்கூந்தலில் இல்லை
ஆனால் அதைச்சூழ்ந்திருக்கும்
பொன்னிற ஒளிக்கற்றையின் புனிதத்தில்
பொதிந்திருந்தது

செல்மாவின் அழகு
அவளது அழகு அகன்ற கண்களில் இல்லை
ஆனால் அவற்றிலிருந்து வெளியேறும்
ஒளிச்சுடரில் இருந்தது

செல்மாவின் அழகு
அவளது செவ்விதழ்களில் இல்லை
ஆனால் அதிலிருந்து உதிரும்
தித்திக்கும் வார்த்தைகளில் இருந்தது

செல்மாவின் அழகு
அவளது தந்தக் கழுத்தில் இல்லை
அதுவே சற்று முன்புறம் வளைந்திருந்ததே
அங்கே இருந்தது.

செல்மாவின் அழகு
அவளது ஆகச்சிறந்த உருவத்தில் இல்லை
ஆனால் அது
அவளது மிக மேன்மையான ஆன்மாவெங்கும்
நிரம்பி வழிந்தது
அதுவே விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஒளிபாய்ச்சும் வெண்ணிறச்சுடரொளியாய்
சூழ்ந்திருந்தது.

அவளது அழகு ஒன்று தான்
கவிதைக்கே உன்னதமான கருப்பொருளாக திகழ்ந்தது
ஆனால் கவிஞர்களோ துயரம் மிக்கவர்கள்
அவர்களது ஆன்மா
எவ்வளவு உயரத்தில் பறந்தால் என்ன
கண்ணீரில் கட்டுண்டவர்கள் தானே அவர்கள் ?

செல்மா அதிகம் பேசுபவளல்ல
அதிகம் சிந்தனையில் தோய்ந்து விடுபவள்
அவளது அமைதி ஒரு மாபெரும் இசைக்கோர்வை
அதை கேட்கும் ஒரு மனிதனை
அது கனவுலகுள் அள்ளிச் சென்று அங்கே
அவனது இதயத்துடிப்பையே அவனுக்கு
கேட்க வைத்து விடும்

அவனது எண்ணங்களின் ஆவியுடலை
அவனுக்கு முன்னே நிறுத்தி
அவனது கண்களையே உற்று நோக்க வைத்து விடும்

அவளோ ஓர் ஆழ்ந்த துயரத்தையே
தன் வாழ்வின் ஆடையாக உடுத்தியிருந்தால் போலும்
அதுவே தான் அவளது அபரிதமான அழகை
அதிகப்படுத்திக்கொண்டேயிருந்தது.

அதுவே என் விழிகளை
அதிகாலைப் பனியின் ஊடாக
மலர்கள் நிறைந்திருக்கும்
ஒரு மரத்தினைப் பார்ப்பது போல்
அவ்வளவு வசீகரித்தது

துயரமே அவளது ஆன்மாவையும்
எனது ஆன்மாவையும் ஒன்றாகப் பிணைத்திருந்தது
அப்போது
ஒருவரின் இதயத்தில் படரும் உணர்வுகளை
நாங்கள் அடுத்தவரின் இதயத்தில்
படித்துக்கொண்டிருந்தோம் அப்போது

இருவரின் உடல்களையும்
இருவரின்ஆன்மாக்களையும்
ஒன்று போலவே கடவுள் படைத்துவிட்டார் போல
ஆனால் வேதனை மட்டும் வேறு வேறாகவே இருப்பதேன் ?

துயரம் கொண்ட இதயமொன்று
தன்னைப்போலவே மற்றொன்றை கண்டதும்
அதிலேயே லயித்து அமைதி கொண்டதோ?

அந்நிய தேசத்தில் அலையும் அந்நியனொருவன்
தன்னைப்போன்ற இன்னொருவனை
அந்நிலத்தில் கண்டதும்
எப்படி இணைவானா
அப்படியே இணைந்து விட்டோமோ
நாங்களிருவரும் ?

துயரத்தின் மொழியில் இணைந்த இதயங்கள்
ஓர் நாளும் மகிழ்ச்சியின் மொழியில் பிரியாது
தூய கண்ணீரால் சுத்திகரிக்கப்பட்ட
காதல் என்றென்றும் அழகானதும்
புனிதமானதும் ஆகும்

(தொடரும் )