
கடல் ஊமையாய் இருக்க
அலைகள் பேசுகின்றன
பரந்து விரிந்த நீர்நிலை
ஒற்றை வானம்
கடலுக்கும் தெரிந்திருக்கிறது
குழந்தை பாஷை
தீண்டுவது தித்திக்கத்தான்
செய்கிறது
ஓய்ந்திருக்கிறது கடல்
மீதமிருப்பது காலடித்தடங்கள்
மட்டுமே
எத்தனை முறை பார்த்தாலும்
சலிப்பதே இல்லை
அள்ளி எடுத்துப் பார்த்ததும்
உள்ளங்கையில்
வண்ணத்தை இழக்கிறது
அழைக்கிறது கடல்
விலகிச் செல்கிறது கரை
கடலின் அழகை
அள்ளிப் பருகிக் கொண்டிருக்கிறது
நிலவு
ஒரு பேரலை என்பது
ஆயிரம் சிற்றலைகளை
உள்ளடக்கியது
குழந்தைகள் கரையேறுவது
கடலுக்குப் பிடிப்பதில்லை
கடல் எதனையும் தன்னிடத்தில்
வைத்துக் கொள்வதில்லை
கடவுளைப் போல!
