
ராம் குமாரின் கறுப்பு ஆடு – க. சீ. சிவகுமாரின் சிறுகதை –ஒரு பார்வை.
குறைந்த வயதிலேயே இறந்து போய்விட்ட தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் குறிப்பிடத் தக்கவர் எழுத்தாளர் க. சீ . சிவகுமார். அவரது “என்றும் நன்மைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “ ராம்குமாரின் கறுப்பு ஆடு “ எனும் சிறுகதை பற்றிய ஒரு பார்வை இந்த உரை.
எள்ளலும், கிண்டலும், மெல்லிய நகைச்சுவையும் இழையோட கதைகள் சொல்கிற சிவகுமாரின் இந்தக் கதை சிறுகதை என்கிற இலக்கணத்தின்படி ஒரு சிறுகதை எனச் சொல்ல இயலாது. நடைச் சித்திரம் போல , ராம்குமார் என்கிற சராசரி கிராமத்து வேலையற்ற இளைஞனைப் பற்றிய சித்தரிப்பு இது. தலைப்பு “ ராம்குமாருடைய கறுப்பு ஆடு” என இருந்தாலும், இந்தக் கதை ராம்குமாரைப் பற்றியது.
மூக்குதரிச்சாம் பாளையம் என்கிற ஊரில் ( பெயரில் உள்ள வன்முறை ஊரில் இல்லையென சிவகுமார் நடுவே சொல்கிறார்.) வாழ்கிற ராம்குமாரை, அவன் அம்மா “ராம்குமாரு” என்றும் , செல்லமாக “ராமுக்குட்டீ” என்றும் அழைப்பாள்.. கோவையில் பி. காம் படித்து முடித்த ராம்குமார் , இந்த நாட்டின் இலட்சக்கணக்கான இளைஞர்களைப் போல, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறான். அவனை விடவும் , அவன் அப்பா கருப்பு சாமி இன்னும் ஒரு படி மேலே போய், தனது பிள்ளைக்கு , பக்கத்திலேயே மூலனூர் யூனியன் ஆபிசிலோ, அல்லது தாராபுரம் தாலுக்கா ஆபிசிலோ வேலை கிடைக்கும் என்று நம்புகிறார்.
ஆனால், அவன் அம்மா, அனைத்து தமிழக கிராம அம்மாக்களைப் போல, வேறு ஒரு வழி யோசித்து வைத்து இருக்கிறாள். அவனும் அம்மாவும் மூலனூர் சந்தைக்கு காய்கறி விற்றுவிட்டு வரும் போது , அம்மா நூறு ரூபாய் கொடுத்து ஒரு கறுப்பு ஆட்டுக்குட்டி வாங்குகிறாள். அதுதான் தலைப்பில் சொல்லப்படுகிற கறுப்பு ஆடு. அவள் வாங்கியதன் நோக்கம் , அவர்கள் குல தெய்வத்துக்கு நேர்ந்து கொள்வதற்காக. ராம்குமாருக்கு வேலை கிடைத்த இரண்டாம் செவ்வாய்க்கிழமை கிடா வெட்டுவதாக அம்மா வேண்டிக் கொள்கிறாள்.
அவன் அப்பா கருப்பசாமி விவசாய வேலைகளில் ராம்குமாரை அனுமதிப்பதில்லை. ஜில்லாவை பராமரிக்க வேண்டிய கைகள் மண்வெட்டி பிடிக்க ஏலாது என நினைக்கிறார் அப்பா.
மழை இல்லாத கோடை நாட்களில், அம்மா சித்தாள் வேலைக்குப் போக நேர்கிற போது, ஆடு பாராமரிக்கிற பொறுப்பு ராம்குமாருக்கு வந்து விடுகிறது. அந்த கறுப்பு ஆட்டுக் குட்டியை பற்றி மனம் மகிழ்வு கொள்கிற மாதிரி விவரிக்கிறார் சிவகுமார். அதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரின் சொற்களில் ,” அவனது காலருகே வந்து ஆடு படுத்தது. மேகங்களூடே ,சூரியன் எட்டிப் பார்த்த போது, அதன் சுருள முயலும் கறுப்பு ரோமங்களின் மீது நூறு நூறு வானவில்கள் பொடித்து பிரகாசித்தன. அதன் இளமேனியில் புழுதி பரவலாயும், புழுக்கைகள் ஆங்காங்கேயும் ஒட்டியிருந்தன, மேகம் சூரியனை மறைத்து கருக்கு கவிந்த போது, அதன் நீள்வட்டக் கண்கள் கிரகத்திலிருந்து வந்த காதலியின் கண்கள் போலிருந்தன.”
அந்த கறுப்பு ஆட்டுகுட்டி கறுப்பு ஆடாக மாறி வளர்ந்த பின் , அதனை மேய்ச்சலுக்கு அழைத்துப் போகிற முழு பொறுப்பும் ராம்குமாருக்கு என்று ஆனது. பிற்கு ராம்குமாருக்கு இணை போல ஆனது அந்த கருப்பு ஆடு. காலை எழுந்து வெந்ததையோ அல்லது இரவு மீந்து நைந்ததையோ தின்று விட்டு, ஆட்டைப் பிடித்துக் கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பிப் போகிற ராம்குமார் , கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு நண்பனைப் போல, அந்த ஆட்டுடன் பேசுகிறான்.
இப்படி ஆரம்பித்த பேச்சு, ஆடு இல்லாத போதுகளில், ராம்குமார் தனியாக பேசிக் கொள்வதாகத் தொடர்கிறது. ஊர்ச் சனங்கள் “கருப்புசாமி மவனுக்கு லேசா தடுமாறத் தொடங்கிட்டப்புல இருக்குதப்போ ” என சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
ராம்குமாரின் அம்மா, இப்போது குலதெய்வ வேண்டுதலை மாற்றி, ராம்குமாருக்கு கல்யாணம் கூடிட்டா கிடா வெட்டுவதாக மாற்றிக் கொள்கிறாள். பி. காம் படித்த ஒரு கிராம இளைஞனுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் , தன் சொந்த ஊரில் ஆடு மேய்க்க நேர்கிற அவலத்தை , எள்ளல் , கேலி , கிண்டல் ,வலியோடு சொல்கிறார் சிவகுமார். கிடா வெட்டப்படாமல் ஆடு இயற்கை மரணம் எய்திவிட்டால, குலதெய்வ வேண்டுதல் நிறைவேற்ற முடியாமல் போகும், அதன் பின் ராம்குமாரின் கதி என்னவாகும் ? நினைப்பே பயமுறுத்துகிறது. ராம்குமாரின் அம்மா கிடா பலி கொள்கிற தன் குல தெய்வத்திடம் எப்படி “ஆட்டின் ஆயுளை அதிகப்படுத்து” என்று கேட்பாள்? அவளுக்கு அப்படி கேட்கத் தெரியாது என்பது வாசகனுக்கு வலியோடு புரிகிறது. ராம்குமாருக்கு வேலையே கிடைக்காது என்கிற நிதர்சனம் ஆட்டின் ஆயுளை அதிகரிப்பதே வழி என சொல்ல வைக்கிறது. இந்த அவlல நிலைமை கிராமங்களில் மாறியிருக்குமோ? தெரியவில்லை . சிவகுமார் இருந்தால் நிச்சயம் எழுதி இருப்பார்..
. 02.08.2024.
