அஞ்சலி
லெனின் சுந்தர்
(செப் 1, 1968 – ஜுலை 27, 2024)

வீதியே கதி கலங்கிப் போகிற அளவு கதறியழுத மங்களாபுரம் பகுதியைச் சார்ந்த இருதயராணி அவர்களது துக்கம் நூற்றுக் கணக்கில் வந்துபோய்க் கொண்டிருந்த எல்லோரது தொண்டையையும் சேர்த்து அடைத்தது போலிருந்தது. அவர் கட்சி தோழர் அல்ல. ஆனால் கட்சிக் குடும்பத்தவர். தனது சமையல் பக்குவத்தைக் கொண்டாடி வந்து சாப்பிட்டுவிட்டுத் தனது பேரக் குழந்தைகளோடு சரிக்கு சரி அமர்ந்து விளையாடிவிட்டுப் போகும் ஒரு தோழனைப் பறிகொடுத்துவிட்ட பெருஞ்சோகம் அது. மிகுந்த சிரமங்களோடு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மாற்றுத் திறனாளி சசி, ’37 வருச பழக்கம், என் தோழனைப் பார்க்காமல் எப்படி இருப்பேன்!’ என்றார். ஓமியோபதி மருத்துவர் எஸ் ஜெகதா, மரணமடைந்தவரை அத்தனை நெருக்கமாக அறிந்தவரில்லை தான், ஆனாலென்ன, ஊரே கொண்டாடும் இப்பேற்பட்ட ஒரு தோழரை இந்த வயதில் பறிகொடுத்து விடுவது எத்தனை வேதனையானது என்று மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்.
‘முன்னூறுக்கு மேல இருக்கும்ப்பா பூ மாலை …..அகற்றிக் கொண்டே இருந்தோம், கண்ணாடிப் பேட்டி மேலே துடைத்துக் கொண்டே இருந்தோம்…..” என்று சொல்லிக் கொண்டிருந்தான் எங்கள் மகன் நந்தா. புராணங்கள், இதிகாசங்கள் குறித்தெல்லாம் ஒரு மாற்றுப் பார்வையைத் தனக்கு எடுத்துச் சொன்ன அத்தையின் கணவரை இழந்துவிட்ட வருத்தம் அவனை நிலை குலைய வைத்திருந்தது. மார்க்சிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக் குழு உறுப்பினர் – சிஐடியு வடசென்னை மாவட்ட செயலாளர் லெனின் சுந்தர் மறைவு எண்ணற்றோர் மனங்களை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.
1996இல் சென்னை கேரள சமாஜத்தில் கட்சி சிறப்புப் பேரவைக் கூட்டம். தீக்கதிர் குறித்துத் தோழர்களது கருத்தறியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் தீக்கதிர் உள்ளடக்கம், வடிவமைப்பு, செய்தி வழங்கும் தன்மை, தலைப்புகள், விநியோக முறைமை, சந்தா விரிவாக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை மிகக் கூர்மையான பார்வையில் விமர்சன தளத்தில் நேரிய மொழியில் முன் வைத்த அந்த வசீகர இளைஞர் மேடையிலிருந்து படியிறங்கி வரும்போதே அருகே சென்று கைகளைப் பற்றி அன்பு பரிமாறி வாழ்த்துகள் சொன்னேன், பரஸ்பர அறிமுகத்தில் சுந்தர் என்றார் தனது பெயரை, அருகிருந்த வேறொரு தோழர் இன்னும் திருத்தமாக அறிமுகம் செய்வித்தார் லெனின் சுந்தர் என்று.
பிறகு ஒரு நாள் என் அன்புத் தந்தையை தொலைபேசியில் அழைத்துப் பேசும்போது, என் தங்கை ஆண்டாள் திருமண விஷயமாக நேரில் பார்த்துப் பேசப் மாப்பிள்ளை வீட்டார் அன்று மாலை நேரில் வருகிறார்கள் என்ற சேதி சொன்னார். நானும் என் இணையர் தோழர் ராஜியும் எங்கள் பெற்றோர், தம்பி தங்கைகள் வசித்து வந்த கோடம்பாக்கம் இல்லத்திற்குச் சென்று நுழையும் நேரம் தன்னோடு பேசிக் கொண்டிருந்த ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்திய தந்தை, அவர் தான் மாப்பிள்ளையின் தந்தை திரு சுவாமி என்று எனக்குச் சொன்னார். இவர் தான் மாப்பிள்ளை என்று அருகே இருந்த இளைஞரின் தோள் தொட்டுத் திருப்பி, பெயர் சுந்தர் என்றார்.
என் பக்கம் திரும்பியவரது முகம் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த நான், ‘சுந்தரா, லெனின் சுந்தரா?’ என்று கேட்கவும், அவரும் என் முகத்தைப் பார்த்து, “தோழர்…நீங்களா!” என்று வினவ, “போச்சுடா…குடும்பத்துல இன்னொரு தோழரா…” என்று என் தந்தை தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்ல, தோழர் லெனின் சுந்தர் எங்கள் வீட்டு மாப்பிள்ளையாகிப் போனார். மட்டுமல்ல, என் தந்தையின் உள்ளத்தில் அம்சமான இடத்தையும் பிடித்தார்.
சுந்தரும் அவருடைய தந்தை சுவாமியும் டிராக்டர் நிறுவனமான டஃபே நிறுவனத்தில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். திரு சுவாமி அருமையான மனிதர். சுந்தரின் பொதுவுடைமை தத்துவார்த்தத் தேடலை ஆர்வத்தோடு கொண்டாடியவர். சுந்தர் – ஆண்டாள் இணையருக்கு இந்திய சுதந்திரத்தின் பொன் விழா நாளான ஆகஸ்ட் 15, 1997இல் பிறந்த மகளுக்கு சுதந்திரா என்று பெயர் வைத்துக் கொண்டாடினர். செல்லப் பேத்தி மூன்று மாதக் குழந்தையாக இருக்கையிலேயே திரு சுவாமி வேலையிலிருந்து வீடு திரும்பிய ஒரு மாலை நேரம் மாரடைப்பால் காலமானார். எல்ஐசி ஊழியரான தம்பி, தொடர் பராமரிப்பில் இருக்க வேண்டிய தங்கை, இன்னுயிர் அன்னை என்று குடும்பத் தலைவரை இழந்து பரிதவித்த குடும்பப் பொறுப்புகளை ஒரு தூணாக நின்று எதிர்கொண்டவாறே தோழர் சுந்தர், முழு நேர இயக்கப் பணிகளுக்கான அர்ப்பணிப்பும் துணிவும் மிக்க முடிவை நோக்கி நகர்ந்தார். அவ்வண்ணமே ஒரு குறிப்பிட்ட தொழிலகத்தின் வேலையிலிருந்து வெளியேறி எண்ணற்ற வேலைகளில் உழல்வோருக்கான உரிமைப் போருக்குப் புத்துணர்வுமிக்க முகமாக, புரட்சிகர கடமைக்கான மொழியாக, உடலாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டே உயர்ந்து வந்தார்.அதனால் தான் அவரது மறைவின் பேரதிர்ச்சி தாங்கமாட்டாது வெடித்தழுதனர் உழைப்பாளி மக்கள்.
வீட்டின் வரவேற்பறையில் வைக்க இடமின்றி அலமாரி முழுக்க நிறைந்திருந்த புத்தகங்கள் பார்த்தீர்களா என்று சுந்தர் மறைந்த அன்று இரவு என்னைக் கேட்டார் தோழர் ராஜி. அரசியல் தத்துவார்த்த புத்தகங்களோடு அற்புதமான இலக்கிய வரிசைகள், வரலாற்று ஆய்வுத் திரட்டுகள், குழந்தைகளுக்கான நூல்கள், மொழி பெயர்ப்பில் வெளியான அரிய தொகுப்புகளோடு பண்பாட்டு ஆராய்ச்சிக் களஞ்சியங்களும் அவரது வாசிப்பின் அடர்த்தியை, அவரது புன்னகையின் உட்பொருளை, ஆழமான விஷயங்களைக் கூட எளிதாக விளக்கும் அவரது உரைகளை எல்லாம் பிரதிபலிப்பதாக இருந்தது.
வெறும் வாசிப்பு மட்டுமல்ல, இளைஞர் முழக்கம், பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி, தமிழ் மார்க்சிஸ்ட் இதழ்களில் எழுதியது மட்டிலும் கூட அல்ல, தத்துவார்த்த வெளிச்சத்தை பாட்டாளிகள் வாழ்க்கையிலிருந்தும், அவர்களது விடுதலைக்கான இயக்கங்களிலிருந்தும் பருகுவதில் அவரது முன்னுரிமை இருந்தது. அதுவே விளிம்புநிலை மக்களது குடிமனை பட்டாக்கள், மருத்துவக் காப்பீடு, தொழிலகங்களில் மகளிருக்கான தனி சுகாதாரமான கழிப்பறைகள், விபத்துக்கு நஷ்ட ஈடு என்று பல்வேறு உரிமைகளில் பெற்றுத் தருவதில் அவரது இடையறாத பங்களிப்பு இருந்து கொண்டே இருந்தது.
அதன் நீட்சி, தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ளச் சென்றிருந்த மருத்துவமனை ஊழியர்களது பணி நிலைமைகள் குறித்துக் கேட்டு வழிகாட்டுதல்கள் சொல்வதில் வெளிப்பட்டது. தனது நோய்மையின் வலிகளை ஒருபுறம் தாங்கிக் கொண்டே, மருத்துவமனையில் அடுத்தடுத்த படுக்கைகளில் இருந்த நோயாளிகளுக்குத் தெம்பூட்டிப் பேசவும், நகைச்சுவை இழையோட அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் வாய்த்திருந்தது அவருக்கு என்று அவரது பெருமையை இடையறாது சொல்லிக் கொண்டே இருக்கிறாள் ஆண்டாள். தனது மாமனாரை இந்தக் கால இடைவெளியில் இன்னும் நெருக்கமாக உணர வாய்த்த தருணங்களில் மேலும் நெகிழ்ந்து போயிருந்தார் மருமகன் ஹரி.
தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதையும், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் விரைவில் குணம் பெற்றுப் பணிகளுக்குத் திரும்புவேன் என்றும் ஜூலை இரண்டாம் வாரத்தில் முக நூலில் தோழர் சுந்தர் செய்திருந்த பதிவு பரவலாகச் சென்றடைந்திருந்தது. தொழிலாளர்களுக்கான நியாங்களைப் போராடிப் பெற்றுத் தருவதில் அசாத்திய பங்களிப்பு செய்திருப்பவர் சுந்தர், அவரது பதிவைப் பார்த்து அதிர்ந்து போனேன், உடல் நலம் குணம் பெற்று இயல்பான பணிகளுக்கு விரைந்து வரவேண்டும் என்று அரசின் தொழில் துறை அதிகாரி ஒருவர் தன்னிடம் பேசுகையில் சொன்னதாகக் குறிப்பிட்ட சிஐடியு துணை பொதுச் செயலாளர் தோழர் எஸ் கண்ணன், அருமையான தோழரை இழந்துவிட்டோமே என்று வேதனைப் பட்டார்.
வைதீக முறைப்படி தான் தோழர் சுந்தர் திருமணம் நடைபெற்றது. மகளது திருமணத்தைத் திட்டமிடுகையில் சம்பந்தி வீட்டாரிடம் நெடுநேரம் புராண இதிகாசங்களின் பின்னணி பற்றியும் சடங்கு சம்பிரதாயங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் பொருளையும் விரிவாக விளக்கிச் சொல்லி அவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது விஷய ஞானத்தைக் கண்டு வியந்த அவர்கள், வழிவழியாக வந்தவற்றிலிருந்து விடுபட இயலாத சூழலில் ஒரேயடியாக முடியாது, ஓரளவு குறைத்துக் கொள்வோம் என்று கேட்டுக் கொண்டனர். தனது கொள்கையை அங்கீகரித்துத் தன்னை நோக்கி நடந்து வரும் தூரத்திற்கு ஏற்பத் தானும் அவர்களை வரவேற்கக் கொஞ்ச நடை நடப்போம் என்று உணர்ந்து ஏற்றுக் கொண்டார் சுந்தர். உறவும் நட்பும் தோழமையும் வாழ்த்த மகள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. மகன் கீர்த்திவாசன் பட்டப்படிப்பில் இருக்கிறார். தமது குழந்தைகளோடு இடதுசாரி முற்போக்குக் கருத்தியல் குறித்த உரையாடல்கள் நேர்த்தியான முறையில் நடத்திக் கொண்டே இருந்தார் சுந்தர்.
ஜூன் 19 தாக்கிய இருதய நோயிலிருந்து அவரைப் பாதுகாக்கக் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் அவரைப் பறிகொடுத்துவிட்ட துயரச் சூழலிலும், மகள் சுதந்திரா, எந்தச் சடங்கு சம்பிரதாயங்களும் இன்றி அவரது இறுதி நிகழ்ச்சிகள் அமையட்டும் என்று தானே தனது குடும்பத்தாரிடம் முன் மொழிந்தார். சுந்தரின் அன்புத் தாய், தம்பி உள்ளிட்டுக் குடும்பத்தில் எல்லோரது இசைவும் எளிதில் வாய்த்தது. அதற்கு அடுத்த கட்டமாக, இன்னும் உயர்ந்த முடிவை நோக்கியும் குடும்பத்தைச் செலுத்தியதில் அவரது பங்கும், சுந்தருடைய இணையர் ஆண்டாள் பாத்திரமும் மகத்தானது. உடல் தானம் செய்யலாம் என்று தோழர் ராஜி மேற்கொண்ட முன்னெடுப்பை குடும்பத்தின் இளைய தலைமுறை மட்டுமல்ல, துக்கத்தில் தோய்ந்து திண்டாடிக் கொண்டிருந்த மூத்த மனிதர்களும் உளமார ஏற்றுக் கொண்ட தருணம் சிலிர்க்க வைப்பது. உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்குவது, சமூகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வாழ்வின் நிறைவு என்று உணர்ந்து கொண்டிருந்தனர் அவர்கள். கரைந்து உருகிப் போயினர் சம்பந்தி வீட்டார்.
ஞாயிறு (ஜூலை 28) காலை பத்தரை மணிக்கு அவரது இல்லத்திற்கு அருகே வீதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவரது வீரஞ்செறிந்த களப்பணிகளைப் பலரும் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் தன்னைச் செயல்பட வைக்குமாறு வலியுறுத்திக் கொண்டிருந்தார் சுந்தர் என்றார் மாவட்ட செயலாளர் தோழர் எல் சுந்தரராஜன். மார்க்சிய தத்துவார்த்தத்தை உறுப்பினர்களுக்கு எளிதில் கொண்டு சேர்த்தவர் என்றார் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி ராமகிருஷ்ணன்.
‘கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் எளிதில் கிடைப்பார்கள், ஊழியர்கள் கிடைக்க மாட்டார்கள், கட்சி ஊழியர்கள் தங்களது உடல் நலத்தை அலட்சியப்படுத்தக் கூடாது, ஃபாசிச சக்திகளுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டக் களத்தில் இருக்கும் காலத்தில் இப்படியான அகால மரணங்களை கட்சி எதிர்கொள்ள முடியாது, உடலியல் உளவியல் ஆரோக்கியத்தைப் பேணுவது குறித்துத் தோழர்களும் இயக்கமும் முழு கவனம் செலுத்திட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார் ஓமியோபதி மருத்துவர் பிவி வெங்கட்ராமன்.
சரியாகக் காலை 11 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வாகனம் தோழர் லெனின் சுந்தர் உடலை மிகுந்த மதிப்போடு தன்னுள் வாங்கிக் கொள்ள, திரண்டிருந்த தோழர்களது செவ்வணக்க முழக்கம் வீதி நெடுக எதிரொலித்துக் கொண்டே இருந்தது. வாகனம் புறப்பட்டுச் சென்ற தருணத்தில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் வந்து நின்று அந்தத் திசையே பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த எங்கள் அன்னை மைதிலி, ‘என்னிடமும் மைக் எடுத்துக் கொடு, என் மாப்பிள்ளைக்கு நானும் செவ்வணக்கம் சொல்கிறேன்…அவரது அருமையை இப்போது தான் முழுதாகப் புரிந்து கொள்கிறேன்…யூனியன் யூனியன் என்று போகிறாரே..ஏதோ சில வேலைகள் இருக்கும், யாரோ சிலருக்கு ஏதோ உதவிகள் செய்கிறார் என்று மட்டும் நினைத்துக் கொண்டு விட்டேனே…எத்தனை எத்தனை ஜனம்…எத்தனை எத்தனை மாலைகள்… செவ்வணக்கம் சுந்தர்….உங்கள் புகழ் ஓங்கட்டும்’ என்று உரக்கக் குரல் கொடுத்தது பார்த்தோர் அசந்து நின்றனர்.
தென்னாற்காடு பண்ருட்டி கோட்லாம்பாக்கம் அருகே ஒரு சிற்றூரில் ஏழை வைதீகக் குடும்பத்தில் பிறந்த ஏழு சகோதரிகளில் ஒருத்தியாக, பள்ளிக்கல்வி கூடப் பெரிதாக வாய்க்காது, வாழ்க்கையின் ஓட்டத்தில் அனுபவக் கல்வியைத் திரட்டிக் கொண்டிருக்கும் அவருள் இப்பேற்பட்ட கனல் வீசும்படி சத்தமின்றித் தனது பங்களிப்பைச் செய்துவிட்ட சுந்தர் அமைதியாக வாகனத்தில் போய்க் கொண்டிருந்தார்.
*******

தினமும் காலையில் எழுந்ததும் வாட்ஸ் அப் பார்ப்பேன். 27/07/24காலை 6/25மணி [அமெரிக்காநேரப்படி]என் இளவல் தேசிகனின்போன், வழக்கப்படி என் மனைவி அமெரிக்காவிலுமா உன்நண்பர்களுடன் அரட்டை காலையிலேயே வா என்றதற்கு,போனில் கேட்ட செய்தியை என் மனைவியிடம் சொல்லவே 5நிமிடமானது,ஆம் சுந்தர் காலமாகி விட்டார். நான் ஏப்ரல் 10
அமெரிக்கா வந்த பிறகு கேட்ட இரண்டாவது மரணம். மனது முழுக்க சுந்தரை ப்பற்றிய நினைவுகள். சென்ற டிசம்பர்[2023]முதல் வாரத்தில் வருண பகவான் காட்டிய பேய்மழயில் காலை தன்மகன் கீர்த்தியுடன்கிளம்பி பால் பாக்கெட் வாங்கி அவரின்
அம்மாவீட்டில் கொடுத்து விட்டு நேராக என் வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டு
உங்களுடைய மகள், பேத்தி வந்திருக்கிறார்கள் என்பதற்காக என்று சொல்லி சென்றார். நாங்கள் ஊருக்குகிளம்பும் முன் வந்து நிறைய நேரம் பேசிச்சென்ற தோழரை த்தேடுகிறேன்.
கண்ணீர் அஞ்சலி. வீர வணக்கம். மிகப்பெரும் இழப்பு எஸ்விவி அவர்களுக்கு.