அதிரன்/அம்மாவின் பூனை

பூரணம் என அதற்கு
பெயர் வைத்திருந்தாள் அம்மா.
அவள் என்ன பேசினாலும்
புரியும் அதற்கு
அதுபோல்
அம்மாவிற்க்கு
அதன் “மியாவ்கள் “

ஒரு மியாவில் புரிந்து விடும்,
அதற்கு என்ன வேண்டும் என.

சில நேரம் பசி
சில நேரம் ஸ்பரிசம்.

பூரணத்திற்க்கு நாங்கள் எல்லாம்
ஒரு பொருட்டல்ல
அம்மா வீட்டில் இல்லை என்றால்
ஒவ்வொரு அறையாக
பார்த்து விட்டு
அடுப்படியில் முடங்கிவிடும்.

சில நாட்களாகவே அதை காணவில்லை
இரண்டு நாட்களுக்கு மேல் பூரணத்தை
காணவில்லை எனில்
வாடிவிடும் அம்மா முகம்.

பத்து நாட்கள் கழித்து பூரணம் மீண்டும் வந்தது வீட்டிற்குள்
முகம் வாடி
உடல் மெலிந்து உருக்குலைந்து.

அம்மாவைக் கண்டதும்
முகம் நோக்கி நீண்ட நேரம்
இடை விடாது “மியாவ் மியாவ்’ புலம்பல்.

அதன் வலி புரிந்து அம்மா
“ஒன்னும் இல்லடா செல்லம் “
” எல்லாம் சரியாகிவிடும்”
என்று அதன் தலைவருடி சமாதானம் செய்தாள்….

மெல்ல அவள் மடி சாய்ந்த பூரணம்
பிறகு
எழுந்திருக்கவேயில்லை.