
நிவேதிதாவின் அந்தக்கேள்வி நித்யாவின்
மனதை உறுத்துவதாக இருந்தது.
அவள் கணவன் சாரங்கனுக்கு சிகாகோவில்
இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்து மகள் ஐஸ்வர்யா மற்றும்
மனைவிநித்யாவுடன் வந்து செட்டிலாகி
புதிய நாடு,ஊர்,புதிய கலாச்சாரம், பழக்கம்
இல்லாத வானிலை குளிர் காலத்தில் பிளந்து
கட்டும் பனிமழை என்று அனைத்தையும்
பழகிக்கொள்ள ஆரம்பித்தசமயத்தில்தான்
நிவேதிதா குடும்பமும் வர்ஜீனியாவிலிருந்து
இடம்பெயர்ந்து சிகாகோவுக்கு வந்தார்கள்.
நிவேதிதாவின்கணவன் சுரேஷும் சாரங்கன்
வேலைபார்த்த அதே மருத்துவமனையில்
பணியாற்றினான். மகள் சவிதா ஐஸ்வர்யா
படித்த பள்ளியில் அதே வ குப்பில் மாணவி
யாக சேர்க்கப்பட்டு,அடுத்த தெருவிலேயே
வீடு கிடைத்து குடிபுகுந்ததும் இரு குடும்பங்
களுக்கிடையில் உறவு நெருக்கமாயிற்று.
விடுமுறை நாட்களில் ஐஸ்வர்யா சவிதாவின்
வீட்டுக்கு விளையாடப்போவாளேதவிர சவிதா இவர்கள் வீட்டுக்கு ஒருநாள்கூட வந்தது கிடையாது. வராமலிருப்பதற்குக்
காரணமும் சொன்னதுகிடையாது.
மிஞ்சிப்போனால் “அம்மாவைக்கேளுங்க.
அவங்க சொல்லுவாங்க”சவிதா சொல்லும்போது கண்களை நீர்த்திரை மறை
க்கும்.
அது நித்யாவைத் திகைக்கவைக்கும்.
நிவேதிதாவை காரணம் கேட்டபோது அவள்
கேட்ட கேள்விதான் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“அப்படி என்னகேட்டுட்டா?” சாரங்கன்விளக்கம்
கேட்டான்.
“உங்க வீட்டுலே துப்பாக்கி இருக்கான்னு
கேட்டா”
“அதுக்கு நீ என்ன பதில் சொன்னே”?
“அதெல்லாம் வீட்டுலே வெச்சுக்கிற வழக்கம்
நமக்கு இல்லையே உனக்குத்தெரியாதா”?ன்னு கேட்டேன். அவள் கண்கலங்கிட்டு ரூமுக்கு போயிட்டா.”
“உனக்கு விஷயம் தெரியும்னு நினைச்சுதான்
நான் எதுவும் சொல்லல்லே. நிவேதிதா குடும்பம் வர்ஜீனியாவில் இருந்தபோது மூத்த
மகன்அசோக் தன்னோடுபடித்த ஜான் வீட்டுக்கு இன்னும் இரண்டு சினேகிதர்களுடன் விளையாடப்போயிருக்கான். அங்கே துப்பாக்கி இருந்திருக்கு. அமெரிக்காவில்
அது ஒண்ணும் புதிசில்லை.அசோக்அதை
கையிலெடுத்து விளையாட்டுத்தனமாக
அழுத்த அது வெடித்து அவன்மீதேபாய்ந்து
இறந்துட்டான்.தொடர்ந்து அங்கே இருக்கப்
பிடிக்காமல்தான் குடும்பமே இங்கே ஷிப்ட்
ஆயிட்டாங்க.நிவேதிதா இதைப்பத்தி எதுவும்
சொல்லலியா?”
அதிர்ச்சியிலாழ்ந்துபோன நித்யா ஸ்தம்பித்து
நின்றாள்.
