
அம்மா அப்பா ஆசான் தெய்வம்
நம்முயிர் நாடி நரம்பெலாம் கலந்த
பண்பின் சாரம்; பாமரன் கூடக்
கண்மணி போலக் கருதிடும் தேசம்;
குருவி காக்கை கொடும்விடப் பாம்பு
தெருவில் திரியும் நாய்பூனை மாடுகள்
ஒளிதரும் இரவி உறுமிடும் வானம்
களிதரும் மழலை கனிதரும் மரங்கள்
ஆலம் விதையாய் அமைந்த உறவுகள்
காலத்தி(ல்) உதவும் கையாய் நண்பர்
ஆண்பெண் திருநங்கை ஆனபேர் ஆயினும்
அத்துணை சீவனும் அன்பின் உருவென
நித்திரை நேரமும் நெஞ்சில் இருத்தி
எதிலும் இருக்கிறான் இறைவன் என்னும்
பதியம் போட்ட மனத்தினால் வாழ்கிறோம்!
எத்திசை வாழும் எல்லா உயிரையும்
சத்திய மனத்தால் சார்ந்தே அணைக்கிறோம்!
அந்த மனத்தில் அழுக்காம் தேச
நிந்தனை எப்படி நேருமோ ? நீசர்கள்
பணத்தால் நல்ல பாரத தேசநற்
குணந்தான் மாயுமோ? குற்றங்கள் செய்கிற
கூட்டசதி வெல்லுமோ? குலமே அழியினும்
நாட்டுப் பற்றுதான் நலிந்து போகுமோ?
அடிபல பட்டு அடிமையை மீட்டநம்
கொடிக்கொரு தீங்கு கூட லாகுமோ ?
அறிவும் அன்பும் ஆன்மிக நெறியும்
வெறித்தனப் பிரிவை விலக்கிடு மன்றோ?
இயற்கை வளமும் இளைஞர் வளமும்
இயற்கை யாகவே இருக்கிற பாரதம்
உலகிற் திலகம் உணர்ந்திட வேண்டும் !
கலகக் காரரின் கண்களைப் பார்த்தே
கவனமாய் இருந்து காப்போம்
தவத்தால் பெற்ற விடுதலை பேற்றை !
(14.08.2024 15.40 pm)

இப்படியொரு தேசபக்திக் கவிதையைப் பார்த்து ரொம்ப நாளாயிற்று நண்பரே!
நன்றி.