ஜெயதேவன் கவிதை

கடலிலிருந்து ஒரு சொம்பு
தண்ணீரைக் கொண்டுவந்து
நடுஹாலில் வையுங்கள்
வீடெங்கும் கேட்கும் அலையோசை

காட்டுப்பூவை அதன்
காம்பு நோகாமல் பறித்துவந்து
பூஜை அறையில் வையுங்கள்
காட்டின் பாடல் அதில் கேட்கும்

ஒற்றை இறகுகூட ஒரு பறவையை
ஒற்றை சதங்கைகூட
ஒரு நாட்டியக்காரியின்
மென்மயிர் பாதத்தையும் நினைவூட்டலாம்

தனித்திருக்கும் ஒரே ஒரு நாற்காலி சொல்லிவிடுமே
குழந்தைகள் அற்ற வீடு அது என்பதையும்
குதூகலமற்ற மனிதன
அவன் என்பதையும்

ஒத்தை தபேலாவில்தான்
தொடங்குகிறது
ஆஸ்கரை வென்ற
அந்த இசையமைப்பாளரின்
உலக மகா பாடல்கள்
என்பது உங்களுக்குத் தெரியுமா?

கழற்றிவைக்கப்பட்ட உறைதானே
வீணையின் இசையை வைத்திருந்தது.பத்திரமாக

மிக பத்திரமாக

One Comment on “ஜெயதேவன் கவிதை”

Comments are closed.