இலத்தூர் கி.சங்கர நாராயணன்/இதயமே இந்தியா

இந்திய மண்ணை நினைந்து விட்டால்
இந்தியர் உள்ளம் இணைந்து விடும்
சிந்திய ரத்தம் சிந்தனை வடிவாய்
முந்தையர் நினைவை முடிக்கி விடும்

கட்டப் பொம்மனை நினைந்து விட்டால்
கட்டுடல் மீசை நினைத்து விட்டால்
கட்டிளங் காளையர் நாட்டைக் காக்க
கயத்தாறு நாடிக்
கவனம் கொள்வர்

போர்பந்தரிலே காலடி வை
புண்ணிய மண்ணை நெற்றியில் வை
சீர்மிகு வாழ்வில் சீதனம் வேண்டி
நேர்மைக் காந்தியை நாவில் வை

முத்துக் குளித்த தூத்துக்குடியை
சித்தம் குளிர நினைத்துவிட்டால்
வித்தகர் சிதம்பரம் பிள்ளை மகிமை
இத்தரை பெருமை இயம்புதல் அறிவாய்

கீதாஞ்சலி எனும் கவிதை தந்த
மேதகு தாகூர் மேன்மை தாங்கும்
கல்கத்தா நகர் சுபாஷின் கவனம்
நம்மிடம் வருமே
நன்மை தருமே

பஞ்சாப் சென்றால் பகத்சிங் பாரு
பஞ்சாய்ப் பறக்கும் பிரிவினை பாரு
வஞ்சம் எல்லாம் விலகும் பாரு
அஞ்சாச் சிங்கம் அழகைப் பாரு

காஷ்மீர் ரோஜா கண்கவர் நேரு
காலம் போற்றும் காவலன் பாரு
வாஞ்சி நாதன் மணியாச்சி
ஜான்சி ராணி சாகா மதிப்பு

பற்பல தலைவர் பாரத நாட்டைச்
சிற்பமாய் வடித்த
சீரிய பணியை
அற்பமாய் நினைத்தால்
அழிவோ உறுதி
பொற்பதம் போற்று
பெறுவாய் தகுதி.

One Comment on “இலத்தூர் கி.சங்கர நாராயணன்/இதயமே இந்தியா”

Comments are closed.